காதலின் வலியைச் சொல்லும் இரு வேறு காட்சிகள்! இரு வேறு மொழிகள்! அனுபவம் மட்டுமே ஒன்று! 

சமீப தினங்களாக மொழிப் பாகுபாடின்றி, எனக்கு பிடித்தமான திரைப்பட காட்சிகளை
காதலின் வலியைச் சொல்லும் இரு வேறு காட்சிகள்! இரு வேறு மொழிகள்! அனுபவம் மட்டுமே ஒன்று! 

சமீப தினங்களாக மொழிப் பாகுபாடின்றி, எனக்கு பிடித்தமான திரைப்பட காட்சிகளை படங்களிலிருந்து தனியே வெட்டி எடுத்து மீண்டும் மீண்டும் அவைகளை போட்டுப் பார்த்து ரசித்து வருகிறேன். முழுப்படமாக பயணிக்கும்போது, எங்கோ ஓரிடத்தில் பொதிந்துக் கிடந்து, சட்டென்று மேலெழுகிற சமயத்தில் மனதை முற்றாக கொத்தி காயப்படுத்திவிடுகின்ற, உன்னதமான காட்சிகளை இப்படி தனியாக பிரித்தெடுத்துப் பார்ப்பதிலும் ஒரு கிளர்ச்சி இருக்கவேதான் செய்கிறது.

பாதி எழுப்பப்பட்ட வீட்டின் செங்கல் சுவரை தன் பிள்ளையைப்போல தொட்டு பரவசமடையும் 'வீடு' படத்தின் ஹென்னப்ப பாகவதரிலிருந்து, வன்முறை செரிக்க செரிக்க வாழ்ந்துவிட்டு இறுதி நாட்களில் தன் பேரனுடன் கொஞ்சி விளையாடும் 'காட்ஃபாதர்' மார்லன் பிராண்டோ வரை இரு தினங்களாக என் அறையை மொழி சிக்கலின்றி நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் இசை ஆழ ஊறிக் கிடப்பவைகளாகவே இருக்கின்ற என் விருப்பக் காட்சிகள் யாவுமே.

அதிலும் இரண்டு காட்சிகள் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். முதலாவது தமிழ் சினிமாவின் பெருமைமிகு இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள் படைத்த மூன்றாம் பிறையின் மனதை சல்லடையாக்கும் கிளைமேக்ஸ், மற்றது குழந்தைகளின் உலகத்தை திரையில் நுட்பமாக பதிவு செய்த ஈரானிய இயக்குனரான மஜீத் மஜிதியின் பரான் படத்தின் பிரிவுக் காட்சி.

என் பார்வையில் இரண்டுமே அன்பின் பெருவலியை அதனதன் இயல்பில் பதிவு செய்தவைகள்தான். தான் குழந்தையாக பாவித்து உயிரென நேசித்தப் பெண்ணொருத்தி சுய நினைவு திரும்பி, தன்னை இது நாள்வரையிலும் அடைகாத்தவனைக் குறித்த எவ்வித நினைவுமின்றி, அவனிடமிருந்து விலகி கரையும்போது, மனம் கடந்து துடிக்கும் உச்சபட்ச உணர்வு நிலையினை திரையில் அத்தனை இயல்பாக செய்துக்காட்டி எல்லோரையும் கலங்கடித்திருப்பார் கமல். வசூல் ராஜாவில் வருகின்ற ஒரு வசனத்தைப்போல 'உயிரை உருவி எடுத்திடும்’ காட்சி அது.

மற்றது பரான் படத்தின் பிரிவுக்காட்சி. ஆப்கான் அகதியாக ஈரான் மண்ணில் பிழைக்க வந்து, அங்கு வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் பெண்ணொருத்தியை, மனம் முழுக்க காதலை சுமந்துக்கொண்டு சுற்றிசுற்றி வரும் ஈரான் இளைஞனொருவன், அவள் அவ்விடத்தை விட்டு பெயர்ந்து செல்லும் ஒரு மழை நாளில், ஆறா மன வலியுடன் அவளுக்கு உதவிப்புரியும் காட்சியை எப்போது நினைத்தாலும் உள்ளம் சிதைந்துவிடும். அத்தனை உருக்கமாக மஜீத் மஜிதி அதனை படமாக்கி இருப்பார். இத்தனைக்கும் அந்த பெண்ணும் அவனை மனதார காதலிக்கத்தான் செய்கிறாள். ஆனால், அண்டிக்கிடக்க ஒரு கூரையற்ற அகதி வாழ்க்கை வாழும் அவள், தனது காதலை வெளிப்படுத்தவும் முடியாமல், அவனை இழக்கவும் மனமில்லாமல், அவனை வெறித்தபடி இயலாமையோடு ஈரானை விட்டு பிரிய நேர்கிறது. அகதி வாழ்வின் அவலங்களை அழுத்தமாக பதிவு செய்த மகத்தான படமது.

இன்னும் பார்க்க வேண்டிய காட்சிகள் நிறைய கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், மீண்டும் மீண்டும் இவ்விரு காட்சிகளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். 

காதல் வலியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com