சினிமா - 2017

மெரினா புரட்சி போராட்டத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா, நயன்தாரா உள்ளிட்டோர் நேரடியாக கலந்து கொண்டு ஆதரவளித்தனர்.
சினிமா - 2017

ஜனவரி
 15 மெரினா புரட்சி போராட்டத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா, நயன்தாரா உள்ளிட்டோர் நேரடியாக கலந்து கொண்டு ஆதரவளித்தனர்.
 21 கவிஞர் வைரமுத்து சிறுகதைகள் மலையாளத்தில் வெளியிடப்பட்டன.
 பிப்ரவரி
 22 ஃபெப்ஸி என அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தேர்வு செய்யப்பட்டார்.
 26 நகைச்சுவை நடிகர் தவக்களை காலமானார்.
 மார்ச்
 1 பெண்கள் நலனை முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக நடிகை வரலெட்சுமி சரத்குமார் தெரிவித்தார். இதன் மூலம் பெண்கள் நலனுக்கான தனி அமைப்பை உருவாக்க இருப்பதாகவும் அறிவித்தார்.
 1 சபாஷ் நாயுடு படப்பிடிப்புக்காக இங்கிலாந்து சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன் இங்கிலாந்து ராணியைச் சந்தித்து பேசினார்.
 7 வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளின் நலன் காக்க கலை நிகழ்ச்சிகள் நடத்துவேன் என்று அறிவித்தார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
 19 காப்புரிமை பிரச்னையால் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த பாடல்களை இனி பாட மாட்டேன் என்று பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்தார்.
 20 காப்புரிமை பிரச்னையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் நடவடிக்கை சட்டப்படி சரியானது என்று பாடலாசிரியரும், கவிஞர் வைரமுத்துவின் மகனுமான மதன் கார்க்கி தெரிவித்தார்.
 29 நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக இலங்கை செல்லவிருந்த ரஜினிகாந்துக்கு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து நேரம் கூடி வரும் போது சந்திப்போம் என இலங்கை தமிழர்களுக்கு ரஜினிகாந்த் கடிதம் எழுதினார்.
 31 தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
 ஏப்ரல்
 2 தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் வெற்றி பெற்றார்.
 8 திரைப் படங்களுக்கான 64 -ஆவது தேசிய விருதுகள் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்தார் ஏ.ஆர்.முருகதாஸ். தேசிய விருதுக் குழு ஒரு தலைபட்சமானது என்று அவர் அறிவித்தார்.
 21 பாகுபலி படத்துக்கு கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல என்று தெரிவித்தார் நடிகர் சத்யராஜ். கன்னட மக்களின் மனம் புண்படுவதாகப் பேசியிருந்தால், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 22 பாகுபலி 2 வெளியீட்டில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக நடிகர் சத்யராஜின் கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்தார்.
 மே
 1 தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழாவையொட்டி 100 மூத்த சினிமா கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் வீதம் தங்க நாணயத்தைப் பரிசாக வழங்கினார் நடிகர் விஜய்சேதுபதி.
 15 தனது ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் ரஜினி.
 ஜூன்
 2 சினிமா சூதாட்டம் போன்றது அல்ல; சினிமா என்பது கலை. எனவே ஜிஎஸ்டி (சரக்கு சேவை வரி) விதிப்பு விவகாரத்தில் திரைப்படத் துறையினரின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் நடிகர் கமல்ஹாசன்.
 12 தமிழக விவசாயிகளின் நிலையை புரிந்து கொள்வது அவசியம் என்று மத்திய அரசை அறிவுறுத்தினார் நடிகர் விஜய்.
 ஜூலை
 3 தமிழக அரசின் கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் அடைக்கப்பட்டன.
 6 திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், ஜி.எஸ்.டி. (சரக்கு சேவை வரி) அடிப்படையில் புதிய சினிமா டிக்கெட் விலை நிர்யணம் செய்யப்பட்டது.
 25 நடிகர் சங்க புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிக்கான இடைக்காலத் தடை நீங்கியதை அடுத்து நடிகர் சங்க கட்டடப் பணிகள் உடனடியாக தொடங்கும் என அதன் செயலாளர் விஷால் தெரிவித்தார்.
 ஆகஸ்ட்
 1 சம்பள பிரச்னையை முன் வைத்து ஃபெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 9 எக்காரணத்தைக் கொண்டும் பெண்களை தரக்குறைவாக விமர்சிக்க கூடாது என்று நடிகர் விஜய் தனது ரசிகர்களை அறிவுறுத்தினார். விஜய் நடித்த படங்கள் குறித்து பெண் பத்திரிகையாளர் வெளியிட்ட கருத்துக்கு அவரது ரசிகர்கள் எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்பை விஜய் வெளியிட்டார்.
 15 குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் காலமானார்.
 26 சண்டை கலைஞர்கள் சங்கத்தின் பொன் விழா கொண்டாடப்பட்டது.
 செப்டம்பர்
 13 ஃபெப்சி தொழிலாளர்கள் பிரச்னையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதால், இனி தடையின்றி படப்பிடிப்பு நடைபெறும் என ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்தார்.
 21 நடிகர் கமல்ஹாசனை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சென்னையில் சந்தித்து அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
 22 பிரமதர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
 அக்டோபர்
 3 திரையரங்குகள் மீது தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரி குறித்த திரை அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 8 கேளிக்கை வரியை முழுமையாக நீக்க வேண்டும் - தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை வைத்தது.
 25 தேசிய கீதம் விவகாரத்தில் என் தேசப்பற்றை சோதிக்க வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
 29 ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக நடிகர் விஷால் ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்தார்.
 நவம்பர்
 5 அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்று தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.
 16 ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.20 லட்சம் நிதி அளித்தார்.
 21 குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஐ.நா. அமைப்பான "யுனிசெஃப்'பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா அறிவிக்கப்பட்டார்.
 டிசம்பர்
 4 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வேண்டும் என சேரன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 5 தயாரிப்பாளர் சங்கச் செயலர் பதவியை ஞானவேல்ராஜா ராஜிநாமா செய்தார்.
 26 நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இரண்டாவது கட்டமாக சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். தனது அரசியல் பிரவேசம் குறித்து டிசம்பர் 31 - இல் அறிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com