நாகேஷ்: அற்புதக் கலைஞன்

நகைச்சுவை சக்ரவர்த்தி மறைந்த நாகேஷின் நினைவு நாள் இன்று.
நாகேஷ்: அற்புதக் கலைஞன்

நகைச்சுவை சக்ரவர்த்தி மறைந்த நாகேஷின் நினைவு நாள் இன்று. அவரைப் பற்றிய சில தகவல்கள்:

நாகேஷ் தமிழ்த்திரை உலகில் 50 ஆண்டுகள் கோலோச்சியவர். அவருடைய முதல் படம் “மனமுள்ள மறுதாரம்” வெளிவந்த ஆண்டு 19-09-1958. இப்படத்தில், மற்றுமொரு நகைச்சுவை நடிகர் “டணால்” தங்கவேலுவின் தங்கையைப் பெண் பார்ப்பதற்காக மாப்பிள்ளைப் பையனை தங்கவேலு வீட்டுக்குக் கூட்டிவரும் கல்யாணத் தரகராக புரோகிதர் வேஷத்தில் நடித்திருப்பார்.

நாகேஷ் நடித்த கடைசிப்படம் கமலின் தசாவதாரம். வெளிவந்த ஆண்டு 13-06-2008.

நாகேஷின் தந்தை பெயர் கிருஷ்ணராவ் – தாய் பெயர் ருக்மணி, நாகேஷுக்கு பெற்றோர் வைத்த பெயர் நாகேஷ்வரன். செல்லப்பெயர் – குண்டப்பா.

ரயில்வே சார்பாக நடைபெற்ற நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். நாடகத்தைப் பார்க்க மற்றும் தலைமை விருந்தினராக  வந்த எம்.ஜி.ஆர், நாடகத்தின் முடிவில், நாகேஷின் நடிப்புபைப் பார்த்துவிட்டு முதல் பரிசை வழங்கினார்.

நாகேஷின் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருந்தவர்கள் நடிகர் பாலாஜி, ஸ்ரீகாந்த் மற்றும் கவிஞர் வாலி

இந்தியத் திரை உலகில் பிணமாக நடித்த ஒரே நடிகர் நாகேஷாகத்தான் இருக்கமுடியும், நடித்த படம் – கமலஹாசன் தயாரித்த “மகளிர் மட்டும்”.

எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் ஒருவர்தான்., 44 படங்கள்.

“பார்த்த ஞாபகம் இல்லையோ” என்ற தமிழ்ப்படத்துக்குத் திரைக்கதை எழுதி இயக்கியும் உள்ளார்.

ஜெர்ரி லூயிஸ் நடித்த ஆங்கிலப்படங்களை அதிகம் விரும்பிப் பார்ப்பார்.

பாலசந்தர் எழுதிய “சர்வர் சுந்தரம்” நாடகத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்திருப்பார். இந்த நாடகத்தைப் பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அந்த நாடகத்தைப் படமாக தயாரித்தார். படத்திலும் நாகேஷ்தான் கதாநாயகனாக நடித்திருப்பார்.

“தில்லானா மோகனாம்பாள்” படத்தில் வரும் வைத்தி கதாபாத்திரம், “காதலிக்க நேரமில்லை” படத்தில் நடித்த கதை சொல்லும் செல்லப்பா கதாபாத்திரம், “திருவிளையாடல்” படத்தில் வரும் தருமி கதாபாத்திரம் போன்ற படங்கள் நாகேஷ் நகைச்சுவையில் உச்சம் தொட்ட படங்களுக்கு சில உதாரணம்.

எம்.ஜி.ஆர் நடித்த “எங்க வீட்டுப் பிள்ளை” படத்தில் சொற்களின் முதல் ஒலிகளைத் தவறுதலாக மாற்றி உச்சரித்து நடித்திருப்பார். இதை ஆங்கிலத்தில் Spoonerism  என்று சொல்வார்கள். தமிழ்த் திரைப்படத்தில் Spoonerism  பேசி நடித்த ஒரே நடிகர் நாகேஷாத்தான் இருக்க முடியும்.

ரஜினிகாந்த் நடித்த “தில்லு முல்லு” படத்தில் நடிகர் நாகேஷாகவே நடித்திருந்தார்.

நாகேஷின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்புக்குத் தீனி போட்டவர் இயக்குநர் பாலசந்தர். நகைச்சுவைக்கு அனுபவி ராஜா அனுபவி, பாமா விஜயம், கதை-வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் போன்ற படங்கள். குணச்சித்திர நடிப்புக்கு மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி, நவக்கிரகம் போன்ற படங்கள்.

கமலஹாசன், தன்னுடைய அபூர்வ சகோதரர்கள் படத்தில் நாகேஷை வில்லனாக நடிக்க வைத்திருப்பார்.

இவருடைய நடிப்புக்கு 1974-ம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. “நம்மவர்” படத்தில் நடித்ததற்காக துணை நடிகருக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டது.

இன்றைய மிமிக்ரி கலைஞர்கள், பல நகைச்சுவை நடிகர்கள் குரலில் பேசுவார்கள், ஆனால், நாகேஷ் குரலில் பேசுவது மிகவும் கடினம்.

நாகேஸூம் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் போல் தேசிய அளவில் அரசின் அங்கீகாரம் கிடைக்காமல் போன மறக்கப்பட்ட கலைஞனே. 

ஆனால், தமிழ் சினிமா இருக்கும்வரையில் நாகேஷின் நகைச்சுவை நடிப்புக்கு மாற்றுக் கலைஞன் யாருமில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com