நிவேதா தாமஸ்... அய்யோடா இந்த ‘மை டியர் பூதம்’ குட்டிப் பொண்ணு இப்போ சூப்பர் ஹீரோயினாக்கும் தெரியுமா?

நிவேதாவைப் பொறுத்தவரை 2107 ந் துவக்கமே அமர்க்களமாக இருக்கிறது. இந்த ஆண்டு நிவேதா மீண்டும் நானியுடன் நடித்த ‘நின்னுக் கோரி’ திரைப்படம் வெளிவரவிருக்கிறது. தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆருடன் ‘ஜெய் லவ குசா’
நிவேதா தாமஸ்... அய்யோடா இந்த ‘மை டியர் பூதம்’ குட்டிப் பொண்ணு இப்போ சூப்பர் ஹீரோயினாக்கும் தெரியுமா?

தமிழ் ரசிகர்கள் முதன் முதலில் இந்தப் பெண்ணை  ‘மை டியர் பூதம்’ தொடரில் குட்டிப் பெண்ணாகப் பார்த்து ரசித்திருப்போம். ஒரு அழகான சிறுமி, அவளது 4 நண்பர்கள் கூடவே மை டியர் பூதம். இந்த காம்போவை சனி, ஞாயிற்றுக் கிழமைகள் தவிர மற்ற எல்லா நாட்களிலும் மாலை வேளைகளில் கண்டு ரசிக்காத குழந்தைகளே இல்லை எனலாம். அந்தத் தொடரில் மை டியர் பூதம் அளவுக்கு குழந்தைகளின் மனம் கவர்ந்த மற்றொரு நபர் அப்போது குழந்தைக் நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்த இந்த நிவேதா தாமஸ்.

அந்தத் தொடர் முடிந்ததும் அடுத்ததாக பக்தி சீரியல்களில் ஒன்றான ‘சிவமயத்தில்’ சிறுமி பொன்னியாக நடித்தார். அதையடுத்து ராதிகாவின் ராடன் மீடியா வழங்கிய ‘அரசி’ தொடரில் சின்ன வயதுக் காவேரியாக சில எபிசோடுகளில் நடித்திருந்தார். அவ்வளவு தான் அப்புறம் இந்தச் சிறுமியை சில காலம் தமிழ் கூறும் நல்லுலக சீரியல்களிலோ, திரைப்படங்களிலோ காண முடியவில்லை.

கொஞ்சம் மறந்திருந்த வேலையில்... மீண்டும் சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘போராளிகள்’ திரைப்படத்தில் சிறுமியிலிருந்து குமரியாகியிருந்த நிவேதா இரண்டாம் நாயகியாக வந்தார். அந்தப் படத்தின் முதல் நாயகியான ஸ்வாதியை விட பெட்ரோல் பங்க் பணியாளராக ‘தமிழ்செல்வி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிவேதாவே பெரும்பான்மையான ரசிகர்களுக்குப் பிடித்தமானவராகிப் போனார். போராளிக்குப் பிறகு ‘ஜில்லாவில்’ மோகன் லாலின் பாசமகளாக, விஜயின் தங்கையாக வந்தார். அதற்குப் பிறகு தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நிவேதாவுக்கு ஒரு சிறு இடைவெளி. கிடைத்த அந்த இடைவெளியில் மலையாளத்தில் கவனிக்கத் தக்க நல்ல திரைப்படங்கள் சிலவற்றில் நிவேதா நடித்துக் கொண்டிருந்தார். அதில் ஜெயராமின் 14 வயதாக மகளாக நிவேதா நடித்திருந்த “வெறுதே ஒரு பார்யா”(சும்மா ஒரு மனைவி)  திரைப்படம் அவருக்கு ‘சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள மாநில திரைப்பட விருதைப்’ பெற்றுத் தந்தது. பிறகு மறுபடியும் தமிழில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நவீன சரஸ்வதி சபதம் என்றொரு திரைப்படத்தில் நடித்திருந்தார். 

அதன் பின்னர் மலையாளக் கரையோரம் ஒதுங்கி சில காலம் மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் மீண்டும் திருஷ்யம் மலையாளத் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசத்தில் கமலின் மூத்த மகளாக தமிழில் முகம் காட்டினார்.

இப்போது நிவேதா சிறுமி இல்லை. அழகான இளம் நடிகை. ஆனாலும் ஏனோ தமிழில் நிவேதாவுக்கு முழு நீளத் திரைப்படத்தையும் தாங்கி நிற்கும் ஒற்றைக் கதாநாயகி வேடங்கள் இன்னும் வாய்க்கவே இல்லை. அப்படியொரு வாய்ப்பு வந்தால் தாங்கக் கூடிய சக்தி இந்தப் பெண்ணுக்கு உண்டு என்று நம்பலாம். தமிழில் தான் அப்படியான வாய்ப்புகள் வரவில்லையே தவிர அக்கடபூமி இவரை பட்டுக் கம்பளம் விரித்து குதூகலமாக வாரிக் கொண்டதாகவே தெரிகிறது. முதலில் நானியுடன் காமெடி திரில்லர் வகைப் படமான ‘ஜெண்டில் மேனில்’ இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து 2016 ஆம் ஆண்டுக்கான SIIMA விருது விழாவில் சிறந்த புதுமுக நடிகைக்கான விருதைப் பெற்றார். அதே ஆண்டில், அதே படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதும் நிவேதாவுக்குக் கிடைத்தது.

முதலில் குழந்தை நட்சத்திரமாக சீரியல்களில் அறிமுகமாகி... பின்னர் வளர்ந்த சிறுமியாகச் சில படங்கள்... கதாநாயகன், நாயகிகளுக்கு தங்கையாகச் சில படங்கள், அப்படியே இரண்டாம் நாயகியாகச் சில படங்கள், என்று சிறுகச் சிறுக வளர்ந்து இன்று ஒரு சில திரைப்படங்களில் முழுநீள திரைப்படநாயகியாக நிவேதா தாமஸைப் பார்க்கும் போது ஒரு பக்கம் சந்தோசமாகத் தான் இருக்கிறது. ஏனெனில் தென்னிந்தியத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி வெற்றிகரமாகக் கோலோச்சிய அத்தனை சிறுமிகளும் வளர்ந்த பின்பு அப்படி ஒன்றும் பிரமாதமாகச் சோபித்து விடுவதில்லை. வெகு சிலரால் தான் கதாநாயகிகளாகவும் நிலைத்து நிற்க முடிகிறது. தெலுங்கில் தொடர்ந்து ஹிட் திரைப்படங்களில் நாயகியாக நடித்து வரும் நிவேதா தாமஸைப் பார்க்கும் போது அப்படி ஜெயித்த நடிகைகளில் இவரும் ஒருவராவார் என்று நம்பத் தோன்றுகிறது. தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு கிடைத்த சிறந்த மலையாள அறிமுகங்களில் மீரா ஜாஸ்மின், அசின், நயன்தாரா, கோபிகா உட்பட ஜீன்ஸ் மாட்டிய அல்ட்ரா மாடர்ன் மங்கையானாலும் சரி, தாவணி உடுத்திய கிராமத்துப் பட்டாம்பூச்சியானாலும் சரி கண்ணுக்கு அழகாகத் தோன்றுவதோடு மட்டுமின்றி நடிக்கவும் தெரிந்த நடிகைகள் லிஸ்டில் நிவேதாவுக்கும் சிறப்பான இடமுண்டு.

அதனால் தான் ‘நின்னுக் கோரி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஷோ பார்த்து விட்டு, பாகுபலி ஸ்டார் ராணா டகுபதி நிவேதாவின் நடிப்பைப் பாராட்டி தமது ட்விட்டர் பக்கத்தில் இப்படி எழுதி இருந்தார். ‘தெலுங்கில் சமீபத்திய புது அறிமுகங்களில் நிவேதா தான் பெஸ்ட்’ என.

நிவேதாவைப் பொறுத்தவரை 2017- ன் துவக்கமே அமர்க்களமாகத் தான் இருக்கிறது. இந்த ஆண்டு நிவேதா மீண்டும் நானியுடன் நடித்த ‘நின்னுக் கோரி’ திரைப்படம் முதலில் வெளிவரவிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆருடன் நாயகியாக நடித்த ‘ஜெய் லவ குசா’ திரைப்படமும் இந்த ஆண்டில் தான் வெளி வரவிருக்கிறது. இந்த 2 படங்களுமே அதன் நாயகர்களுக்கு மட்டுமல்ல நிவேதாவுக்கும் மிகச் சிறந்த வெற்றிப்படமாக அமையும் என நம்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com