ஓரம் போ, ஓரம் போ ஜெயமாலினி ரிட்டர்ன்ஸ்...

அன்றைக்கு எம்ஜிஆர், சிவாஜி, தெலுங்கில் என்டிஆர், ஏஎன்ஆருக்குத் திரண்ட ரசிகர்களைக் காட்டிலும் ஜெயமாலினிக்குத் திரண்ட ரசிகர் பட்டாளம் அதிகம். அதை அவரே நேர்காணலில் சொல்கிறார்.
ஓரம் போ, ஓரம் போ ஜெயமாலினி ரிட்டர்ன்ஸ்...

கடந்த வாரத்தில் ஒருநாள் யூடியூபில் மேய்ந்து கொண்டிருந்த போது ஜெயமாலினி கடந்த வருடத்தில் தனியார் தெலுங்குச் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலைக் காண நேர்ந்தது. அதில் அவர் பகிர்ந்து கொண்ட பல விஷயங்கள் வெறும் பகட்டுக்காக அன்றி தன் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பேசியதாகத் தோன்றியதால் அவரைப் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதும் ஆர்வத்துக்கு வித்திட்டது.

ஜெயமாலினி 70 களில் மொழி பேதமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என மிகப்பரந்த அளவில் ரசிகர்களைக் கொண்ட தென்னிந்திய கனவுக்கன்னி. அவரை கவர்ச்சி நடிகை என்று தான் அப்போதும், இப்போதும் பலர் குறிப்பிடக் கூடும், ஆனால் கதை கோருகிறது என்ற பெயரில் இன்றைய ஹீரோயின்களே ஜெயமாலினியைக் காட்டிலும் அதிகக் கவர்ச்சியான ஆடைகளிலும், கிளர்ச்சியூட்டும் முக பாவனைகளுடனும் நடிக்கையில் அன்றைய ஜெயமாலினிக்கு வயதாகி இன்று கெளரவத்திற்குரிய ஒரு காவல்துறை அதிகாரியின் இல்லத்தரசியாகவும் கல்லூரி செல்லும் மகனுக்கு தாயாகவும் பொறுப்பான குடும்பத் தலைவியாகவும் அவர் தனது கடமைகளில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கையில் அவரை நாம் கனவுக்கன்னி என்று விளிப்பதே சாலச் சிறந்தது. 

ஜெயமாலினியின் நிஜப்பெயர்...

வீட்டில் பெற்றோர் வைத்த பெயர் அலமேலு மங்கா, ஆனால் 13, 14 வயதில் விட்டலாச்சார்யா தனது திரைப்படங்களில் என்னை அறிமுகப்படுத்துகையில் பல மொழிகளில் நடிக்கும் போது அலமேலு மங்கா என்ற பெயர் பொருத்தமாக இருக்காது அதனால் ஜெயமாலினி என்ற பெயர் இருக்கட்டும், ஜெயம் என்றால் வெற்றி என்று அர்த்தம் என்றார். அப்படித்தான் நான் ஜெயமாலினி ஆனேன்.

70 களில் ஜெயமாலினிக்கு இருந்த கிரேஸ்...

அன்றைக்கு எம்ஜிஆர், சிவாஜி, தெலுங்கில் என்டிஆர், ஏஎன்ஆருக்குத் திரண்ட ரசிகர்களைக் காட்டிலும் ஜெயமாலினிக்குத் திரண்ட ரசிகர் பட்டாளம் அதிகம். அதை அவரே நேர்காணலில் சொல்கிறார்.

ஒருமுறை என் டி ஆரின் புராணப் படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக ஜெயமாலினி ஆந்திராவின் ஏதோ ஒரு நகரத்துக்குச் சென்று இறங்கி இருக்கிறார். ஜெயமாலினி படப்பிடிப்பில் கலந்து கொண்டதை அறிந்து அன்று படப்பிடிப்பு தளத்தில் கூடிய கூட்டத்தைச் சமாளிக்க படப்பிடிப்பின் போது வேடிக்கை பார்க்கக் கூடும் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் உதவியாளர்களுக்கு மிகக் கடினமாகி விட்டது. இதைக் கண்டு என் டி ஆர் சொன்னாராம், ‘ ஏம்மா, ஜெயமாலினி,  நீ வருவதற்கு முன் நேற்றிலிருந்து இங்கே படப்பிடிப்பு நடந்து கொண்டு தான் இருக்கிறது. நான் நடித்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் இன்றைக்கு உனக்காகத் திரண்ட கூட்டத்தைப் பார்’ எல்லாம் உன்னைப் பார்க்கத்தான்’ என்றாராம். 

அந்த அளவுக்கு; ஜெயமாலினி வெளிப்புற படப்பிடிப்பில் இருக்கிறார் என்று தெரிந்தால் போதும், மக்கள் தங்களது பயணத்தைக் கூட ஒரு பொருட்டாகக் கருதாது அவரை பார்க்காமல் போக விரும்பியதில்லை. ‘ம்மா ஜெயமாலினி உன் முகத்தைக் கொஞ்சம் காண்பியேன்... அட்லீஸ்ட் உன் கையையாவது இப்படி எங்களைப் பார்த்து அசைத்து விட்டுப் போயேன்... டிரெயினுக்கு லேட்டாச்சு, இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு டிரெயின் கிளம்ப... வாம்மா ஜெயமாலினி!’ என்றெல்லாம் தன்னைப் பார்க்க வரும் ரசிகர்கள் அன்புக் கோரிக்கை விடுப்பார்கள்... அதையெல்லாம் கேட்கும் போது மனதில்; நாம் இத்தனை பேரின் அன்புக்குப் பாத்திரமாகி இருக்கிறோம். ஏதோ ஒரு வகையில் இத்தனை பேர் நம்மை விரும்ப இந்த சினிமா தான் காரணமாகி இருக்கிறது என்று நினைக்கையில் திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாகவே நடித்துப் பெயரெடுத்திருந்தாலும் கூட எனக்கு அப்போது சந்தோசமாகவே இருந்தது என்கிறார் ஜெயமாலினி.

திரையில் அப்படி நடித்தேனே தவிர யதார்த்த வாழ்வில் ‘நல்ல பெண்’ என்ற பட்டம் எல்லோரிடத்திலும் எனக்கு இருந்தது!...

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளிலும் தொடர்ந்து இடைவெளி இல்லாது நடித்துக் கொண்டு அதாவது பாடல்களுக்கு ஆடிக் கொண்டே இருந்ததால் தான் நடித்த பாடல் காட்சிகளை திரையரங்குகளிலோ அல்லது வீட்டில் வீடியோ பதிவாகவோ கூட பார்க்க தனக்கு அப்போது நேரமே இருந்ததில்லை என்கிறார் ஜெயமாலினி. அன்று தான் நடித்த பாடல்காட்சிகளை இன்று ஐ பேடில் காணும் போது தான் தெரிகிறது அந்தக் காட்சிகள் எல்லாம் காமிராவில் இடுப்பசைவை மட்டுமே ஃபோகஸ் செய்து ஓவர் கவர்ச்சியாக காட்டப்பட்டுள்ள விதம்!

ஆனால், என்ன செய்ய? அப்போது எங்களுக்கு இந்த அளவுக்கு தொழில்நுட்ப அறிவோ, அல்லது எங்களுக்குத் தரப்படும் நடன அசைவுகளில் விருப்பம் இல்லையெனில் அதை பட அதிபர்களிடமோ அல்லது நடன இயக்குனர்களிடமோ மறுக்கும் சுதந்திரமோ இருந்ததில்லை. பணம் வாங்கிக் கொண்டு நடனமாட சம்மதித்து விட்டால் அவர்கள் எப்படி ஆடச் சொல்கிறார்களோ அப்படி நடனம் ஆடி விட்டு செல்ல வேண்டிய நிலையில் தான் அன்றைக்கு என்னைப் போன்ற நடிகைகளின் நிலை இருந்தது. நான் மறுத்தால் வேறு ஒரு நடிகை அதே நடனத்தை ஆடி விட்டுப் பணம் பெற்றுக் கொள்வார். பிறகு நான் எனக்கு வந்த வாய்ப்பை வீணடித்ததாக ஆகும். ஒருவேளை நன் மறுத்திருந்தால் இன்றைக்கு எனக்கு பதிலாக வேறு யாரோ எனக்கு கிடைத்த புகழை பெற்றிருக்கப் போகிறார்கள். அவ்வளவு தானே! அது மட்டுமில்லை திரைப்படங்களில் தான் நான் அப்படி நடனமாடினேனே தவிர யதார்த்த வாழ்வில் திரைத்துறையில் மட்டுமல்ல வெளியுலகிலும் ஜெயமாலினி என்றால் நல்ல பெண் என்ற பெயரே இருந்தது. அந்தப் பெண்ணா... அவருண்டு, அவர் வேலையுண்டு என்று இருப்பாரே... அவரால் படப்பிடிப்புக்கு எந்தத் தொல்லையும் இருந்ததில்லை’ என்ற நற்பெயரையே நான் இதுவரை சம்பாதித்திருக்கிறேன். அது போதும் எனக்கு! என்கிறார் ஜெயமாலினி.

சினிமாவில் மட்டுமே மயக்கும் ஜெகன்மோகினி நிஜத்தில் அமைதியான பெண்!

சினிமாவில் நான் வில்லியாகவோ அல்லது அல்லது பாடல்காட்சிகளில் வில்லனின் இணையாகவோ நடித்ததால் நிஜ வாழ்விலும் நான் வில்லியாகவே இருக்கக் கூடும் என்று பல பெண்கள் நினைத்தார்கள் அன்று, அதற்கொரு உதாரணம்; ஒருமுறை ஹைதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நாகேஸ்வர ராவ் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. படப்பிடிப்பை காண அவரது மனைவி வந்திருந்தார். அவர்கள் இருவரையும் தாண்டி நான் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது என்னை அழைத்த நாகேஸ்வர ராவ் அவர்கள்; ‘ஏம்மா, ஜெயமாலினி நீ ரொம்ப கெட்ட பொண்ணாமே.. என் மனைவி என்னிடம் சொல்கிறார். அப்படியா?’ என்றார் சிரித்துக் கொண்டே; நான் என்ன சொல்ல முடியும். நான் என் வழக்கப்படி அதற்கும் மெளனமாக சிரித்து வைத்தேன். அவர்கள் அப்படி நினைத்ததை தவறு என்று என்னால் சொல்ல முடியாது. அவர்களுக்கு அப்படி நினைக்க உரிமை இருக்கிறது என்றே நான் சொல்வேன். ஏனென்றால் திரைப்படங்களில் நடிப்பவர்கள் நிஜ வாழ்விலும் அப்படியே வாழ்வார்கள் என்று நம்பிய காலம் அது. எனவே எனக்கு அவரை நினைத்து சிரிப்பு தான் வந்தது. அன்றைய ஜெயமாலினி மிக மிக வெகுளியான ஒரு பெண். அவருக்கு தன்னைப் பற்றி ஊராரும், மக்களும் என்னவிதமாக நினைக்கிறார்கள் என்பதை விட கொடுத்த காசுக்கு நன்றாக நடித்தேனா? நடனம் ஆடினேனா? என்பதில் தான் கவனம் அதிகமிருந்தது. அதனால் தான் ரசிகர்கள் இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும் தன்னைப் ஞாபகத்தில் வைத்து மறவாது இருக்கிறார்களோ என்னவோ?! என்கிறார் ஜெயமாலினி.

உங்களது சமகால கிளாமர் நடிகைகளில் உங்களைக் கவர்ந்தவர்?

சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, அனுராதா, என் அக்கா ஜோதிலட்சுமி என எல்லோரையுமே எனக்குப் பிடிக்கும். ஆனால் நடனத்தில் எனக்கு இணையாக வேகமாக ஆடக்கூடிய திறமை அனுராதாவுக்கு உண்டென்று கருதுகிறேன். 

அன்று உங்களுக்கு ஜோடியாக நடித்தவர்களைப் பற்றி...

என்னுடன் நடித்தவர்களால் எனக்கு எப்போதும் எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. எல்லோருக்கும் தொழில் பக்தி இருந்தது. எதற்காக நாம் நடிக்க வந்திருக்கிறோம் என்ற உண்மையை எல்லோரும் உணர்ந்தே இருந்தார்கள். அவர்களுக்கு நடிப்பு தொழில்.  கேமராவுக்கு முன் இருக்கும் வரை தான் நடிப்பு, நடனம் எல்லாம். கேமராவை ஆஃப் செய்து விட்டால் எல்லோருமே இயல்பான சக மனிதர்கள்.
எனக்கு ஜோடியாக நடித்த வில்லன் நடிகர்கள் கூட திரையில் மட்டுமே வில்லன்கள். நிஜத்தில் அவர்களுக்கு மகன், கணவன், அப்பா, சகோதரன் என்று பல பொறுப்புகள் இருந்தன. 

திருமணம் குறித்து...

என் வீட்டில் நான் தான் கடைக்குட்டி. எல்லோருக்குமே திருமணமாகி விட்டது, நான் தான் கடைசி என்கையில் எனக்கும் சீக்கிரம் திருமணம் முடித்து நான் வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்று என் அம்மா விரும்பினார்.

திரைத்துறையில் இருந்து சிலர் காதலிக்கிறேன் என்று புரபோஸ் செய்தார்கள் ஆனால் எனக்கு ஏனோ அந்தக் காதலில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் இருந்ததால் அம்மா பார்க்கும் வரனையே மணந்து கொள்வது என்று முடிவு செய்திருந்தேன். என் கணவன் என் அண்ணனின் நண்பர், என்னை திரையுலகிற்கு அப்பாற்பட்டும் அவருக்குத் தெரியும். குடும்ப விழாக்கள், கோயில்களுக்குச் செல்கையில் நான் எப்படி உடையணிந்து கொண்டு செல்வேன், எனக்கு கடவுள் பக்தி அதிகம், என்பதெல்லாம் அவருக்கு முன்பே தெரியும். என்னைப் பற்றித் தெரியாத வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்வதென்றால் நிச்சயம் திரைப்படங்களில் நான் அணிந்த உடைகள், நடன அசைவுகள் காரணமாக எப்போதாவது வாழ்வில் கேள்விகள் முளைக்கும் அப்படியெல்லாம் இல்லாமல் என்னைப் பற்றி அறிந்த ஒரு நபரை எனக்குத் திருமணம் செய்து வைத்தால் என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என அம்மா நினைத்தார். அவர் நினைத்தபடியே நடந்தது. என் கணவர் எனக்கு கிடைத்த வரம்! அவருக்கும் நடனம் என்றால் கொள்ளை இஷ்டம். நாங்கள் இருவரும் குடும்பத்தினருடன் சந்தோசமாக இருக்கும் தருணங்களில் ஆடல், பாடல் என்று தூள் பரத்துவோம். காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் என் கணவரும் நன்றாக நடனமாடுவார். என்று சிரிக்கிறார் ஜெயமாலினி. திருமணப் பேச்சு வார்த்தையின் ஆரம்பத்தில் கணவரது சகோதரிகளுக்கு என் திரைப்படங்களைப் பார்த்ததால் என் மீது கொஞ்சம் ஆட்சேபணைகள் இருந்தது வாஸ்தவமே, ஆனால் அதெல்லாம் தீர்ந்து சீக்கிரமே அவர்கள் சரி என்ற பிறகே எங்கள் திருமணம் என் ஆஸ்தான தெய்வமான திருப்பதி ஏழுமலையான் சன்னதியில் வைத்து இனிதாக நடந்து முடிந்தது.

உங்களுக்குத் திருமணம் என்றதுமே உங்களது தீவிர ரசிகர்கள், அதெப்படி எங்கள் ஜெயமாலினிக்கு திருமணம் நடக்கலாம்? என்று கொதித்து எழுந்தார்களாமே?! நிஜமா?

தர்ம சங்கடமான புன்னகையுடன்... ‘எந்த ஒரு கிளாமர் நடிகையோ அல்லது மனதிற்குப் பிடித்த ஹீரோயினோ... அவர்களுக்குத் திருமணம் என்றதுமே ரசிகர்களின் மனநிலை இப்படியாகத்தானே இருக்கும்? இதை அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்கிறார்.

சரி, உங்களைப் பற்றி இப்போது உங்கள் ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

ஜெயமாலினி மீண்டும் நடிக்க வருவாரா? என்ற ஆவலான கேள்வி உங்களது பரம ரசிகர்கள் எல்லோரிடத்திலும் இருக்கிறது. அவர்களுக்கான உங்களது பதில் என்ன?

என் மகன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஒருவேளை நடிப்பில் ஆர்வமிருந்தால் மகனுக்காக நானும் திரையுலகுக்கு வரலாம். பார்க்கலாம் கடவுள் என்னைப் பற்றி என்ன நினைத்திருக்கிறார்? என்று தெரியவில்லை. விதி இருந்தால் வந்து விட வேண்டியது தானே! முன்பு என் குடும்பத்தின் முன்னேற்றத்துக்காக திரையுலகுக்கு வந்தேன். இன்று என் மகனுக்காக வரவேண்டியதாக இருந்தால் வந்து விட வேண்டியது தான். என்று சிரிப்பில் அதிரடிக்கிறார் நம் முன்னாள் கனவுக்கன்னி. 

Article courtesy: tv 5& tv 9 Jayamalini Interviews

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com