சர்வதேச அரங்கில் கவனம் பெறுமா தமிழ் சினிமா?

நவம்பர் 20 முதல் 28 வரை, 48-வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) கோவாவில் நடைபெற உள்ளது.
சர்வதேச அரங்கில் கவனம் பெறுமா தமிழ் சினிமா?

நவம்பர் 20 முதல் 28 வரை, 48-வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) கோவாவில் நடைபெற உள்ளது.  இதில் 'இந்தியன் பனோரமா' பிரிவில் ஒவ்வொரு ஆண்டும் வெளியான முக்கியமான இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்படும். இந்த ஆண்டு இதில் திரையிடப்படுவதற்காக 26 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 9 மராத்தி, 6 ஹிந்தி, 2 தெலுங்கு படங்கள் தேர்வாகியுள்ளன. தமிழில் இருந்து அம்ஷன் குமார் இயக்கிய 'மனுசங்கடா' என்ற ஒரே ஒரு திரைப்படம் தான் தேர்வாகி உள்ளது.

திரைப்பட ஆர்வலர்களுக்கு திருவிழா என்பது கோவா, திருவனந்தபுரம், மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்கள்தான். அதிலும் குறிப்பிட்டு கோவாவில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழா மிகவும் முக்கியமானது. அதற்கு முதல் காரணம் இது மத்திய அரசின் அங்கீகாரத்துடன் நடைபெறும் இரண்டாவதாக,  உலகின் பல்வேறு நாட்டிலிருந்து வருகைத் தரும் திரைக்கலைஞர்களின் நேரடி பங்களிப்போடு நடைபெறும் முக்கியமான திரை விழா இதுவாகும். உலகத் திரை ஆர்வலர்களால் கவனிக்கப்படும் மிக முக்கியத் திரைப்பட விழாவில், கடந்த சில ஆண்டுகளாக ஒரே ஒரு படம் மட்டும்தான் தேர்வாகி இருக்கும் நிலை மிகவும் வருத்தத்துக்குரியது.

தமிழ் சினிமாவில் உள்ள பிரச்னை என்னவெனில் வசூல் போன்ற விஷயங்களில் அது இந்திய சினிமாவின் மைய கவனத்தில் உள்ளது. தமிழ் படங்கள் பல உலக அரங்கில் மிகப் பெரிய வசூல் சாதனைகள் செய்து வருகின்றன. தொழில்நுட்ப ரீதியாகவும், இசையமைப்பிலும் உலகத் தரத்தை எட்டியிருந்தும், கதாநாயக வழிபாட்டை ஆதியிலிருந்தே பின்பற்றி வரும் சமூகம் இது.

கதையில் ஒரு நாயகன் என்பது மாறி, கதாநாயகனுக்காக கதை என்ற நிலையில் தான் இன்றளவும் உள்ளது தமிழ் சினிமா. இவை தவிர, போலச் செய்தல் என்பதும் தமிழ்த் திரையை சூழ்ந்துள்ள முக்கிய பிரச்னை. குறிப்பிட்ட ஒரு கதையம்சம் உள்ள படங்கள் வெற்றி பெற்றால் தொடர்ந்து அதே போல நிறைய படங்கள் வெளிவரும். பேய் படங்கள், நகைச்சுவை படங்கள், தாதா படங்கள், என்று ஒரு வகைமைக்குள் ஒரு காலகட்டம் சிக்கிவிடும் சூழலில் அதை மீறி யோசித்துப் படம் எடுக்கக் கூடிய சமூக அக்கறை உள்ள இயக்குநர்களை காண்பது அரிது. அவ்வாறே அவர்கள் சமூக நோக்கத்துடன் படம் எடுத்தாலும் அதில் செயற்கை சாயங்கள், வியாபார அம்சங்கள் சேர்த்துக் கூறும்போது மையக்கருத்து காணாமல் போய்விடும் அல்லது மழுங்கிப் போகும். 

நம்முடைய சங்க காவியங்கள் காதலையும் வீரத்தையும் மையப்படுத்தி அகம் புறம் என்று வகைமைப் படுத்தப்பட்டது போல, தமிழ் சினிமாவும் காதல் படங்கள் சண்டை படங்கள் என்ற இரட்டை குதிரையில் நீண்ட காலம் சவாரி செய்து வருகிறது. இதே போல பல படங்கள் வெற்றி பெற்றுவிட்டதால், கலை மற்றும் அது சார்ந்த உணர்வை நமது சினிமா கண்டடையவில்லை. வெகுஜன ரசனை என்ற பெயரில் தமிழ்ச் சினிமாவின் பயணம் திசை மாறிவிட்டது. இதற்கு எதிரான மாற்று சினிமாக்களோ ரசிகர்களின் கவனத்தை சிறிதும் கவருவதில்லை. காரணம் மலையாளம், வங்காளம், மராத்தி போன்ற மொழிகளில் பேசப்படும் பன்முகக் கதையம்சம், சமகால பிரச்னைகள் போன்றவற்றை தமிழ்ப்படங்கள் அந்தளவு தீவிரமாக பேசுவதில்லை (காக்கா முட்டை, விசாரணை, அறம் உள்ளிட்ட சில விதிவிலக்குகள் உள்ளன). எனவே பொது ரசனைக்கு எதிராக மாற்று திரை ரசனையை கட்டமைப்பது அத்தனை எளிதாக நடக்காது. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமான அதற்கான தேடலும், நல்ல திரைப்படங்களுக்கான வேட்கையும் உருவாகத் தொடங்கிவிட்டது உண்மைதான்.

இதன் முதல் கட்டமாக ரசிகர்கள் புதிய உத்வேகத்துடன், வித்யாசமான கதையம்சத்திலும், காட்சிப்படுத்ததிலும் பரீட்சார்த்தமான முயற்சிகளைச் செய்யும் படங்களுக்கு ஆதரவு கொடுப்பதுடன், அதன் சாயலில் வெளிவரும் நகல் படங்களை புறக்கணிக்க வேண்டும். சமூகம் சார்ந்து நல்ல கருத்துள்ள கதைகள் கொண்ட படங்களையும் வரவேற்க வேண்டும். வணிகம் சார்ந்து இயங்கும் படங்களும் தேவைதான். காரணம் அவை திரையரங்கிற்கு ரசிகர்களை வரச் செய்யும் முக்கிய காரணி. நல்ல திரைப்படம் எது, அல்லாதவை எவை என அன்னபட்சிப் போல ரசிகர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அதற்கு முதலில் நல்ல படங்களை உருவாக்க வேண்டும். சுமாரான படங்களை மட்டுமே பார்த்துப் பழகியவர்களுக்கு நல்ல திரைப்படங்கள் தரும் திருப்தியும் ரசனையை பழக்கப்படுத்த வேண்டும்.

விருது அங்கீகாரம் இவற்றை விட ரசிகர்களின் கலை உணர்வை மேம்படுத்த படங்களை உருவாக்க வேண்டும். அப்போது அவை அதன் தரத்துக்காக தாமாகவே உலக அரங்கைச் சென்றடையும். 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழிலிருந்து ஐந்து படங்களாவது கவனம் பெற்றால் இக்கட்டுரையின் நோக்கம் நிறைவேறும். காத்திருப்போம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com