இங்கே ஜோதிகா அங்கே தீபிகா! திரைப்பட நடிகர்கள் மீது தொடரும் சர்ச்சைகள்!

பிரிக்க முடியாதவை என்ன என்று கேட்கப்பட்டால், அந்த வரிசையில் பலவற்றை அடுக்க முடியும்.
இங்கே ஜோதிகா அங்கே தீபிகா! திரைப்பட நடிகர்கள் மீது தொடரும் சர்ச்சைகள்!

பிரிக்க முடியாதவை என்ன என்று கேட்கப்பட்டால், அந்த வரிசையில் பலவற்றை அடுக்க முடியும். அதில் சினிமாவும் சர்ச்சையும் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். அந்தளவு திரைப்படங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் சர்ச்சைகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. ஒரு சில படங்களைப் பார்த்த பின் ரசிகர்களிடையே சர்ச்சை எழுவதுண்டு. ஆனால் ஒரு சில படங்கள் வெளியாவதற்குள்ளேயே கடும் சர்ச்சைகளுக்குள்ளாகி விடும். இன்னும் சில படங்கள் வெளிவந்த பின்னர் அதில் ஆட்சேபணைக்குரிய காட்சிகள் இருக்கும்பட்சத்தில் அவற்றை நீக்கச் சொல்லி சர்ச்சைகள் உருவாகும். மாற்றங்களைச் செய்து மீண்டும் வெளியிடும் சம்பவங்களும் நடந்துள்ளன. ஆனால் அத்தகைய படங்களின் அசல்தன்மை இழந்து சாரமற்றுப் போய்விடும். 

திரைத்துறை சமூக மாற்றங்களை விளைவிக்கும் ஆற்றலை உள்ளடக்கிய துறை. காரணம் அது மனித மனங்களுக்குள் ஊடுறுவிச் செல்லக் கூடிய ஊடகம். திரைப் பாடல்கள் அதற்கும் ஒருபடி மேலே சென்று மக்களின் மனத்தில் நல்ல கருத்துக்களை பதித்துள்ளது. 'ஆளும் வளரணும் அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி’என்ற இந்த இனிமையான எளிமையான பாடல் வரி வளர்ச்சி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை தெள்ளந்தெளிவாக எடுத்துரைக்கிறது. அவ்வகையில் நமக்கு திரைப்படங்களும் திரைப் பாடல்களும் வாழ்வியலோடு ஒத்திசைவாய் இருந்து நம் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளது யாராலும் மறுக்க முடியாது. ஆகவேதான் ஆட்சேபணைக்குரிய விஷயங்களை திரையில் காட்சிப்படுத்தாமல் இருக்க சென்சார் அமைப்புக்கள் இந்தியாவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சென்சார் அமைப்புக்களுக்கும் இயக்குநர்களுக்கும் நடக்கும் சர்ச்சைகளை எல்லாம் மீறி ஒரு படம் திரைக்கு வருவதற்குள் அது பலவிதமான போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் இப்படிப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி, கடும் விமரிசனத்துக்கும் போராட்டத்துக்கும் உள்ளான படங்கள் நடிகர் கமல் ஹாசனின் விருமாண்டி, விஸ்வரூபம், விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி, தலைவா, ஜில்லா, புலி, மெர்சல், கார்த்தி நடிப்பில் கொம்பன் ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. இதில் சர்ச்சைகளின் நாயகன் என்று சொல்லும் அளவுக்கு நடிகர் கமலின் படங்கள் பல விமரிசிக்கப்பட்டும் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி வரும் நிலை தொடர்ந்து வருகிறது. சண்டியர் என்ற பெயர் வைத்த ஒரே காரணத்துக்காக அப்படத்தின் படப்பிடிப்பை தடை செய்யக் போராட்டினார்கள். குறிப்பிட்ட ஒரு சாதியினரை அந்தப் படம் காட்சிப்படுத்துகிறது எனவும் அது வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று ஒரு அரசியல் கட்சித் தலைவர் அந்தப் படத்தை கடுமையாக எதிர்த்து வந்தார். 

விருமாண்டி என்ற பெயர் மாற்றத்துடன் அப்படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது வேறு விஷயம். ஆனால் இந்தப் போராட்டத்தில் அவர் இழந்தது சண்டியர் எனும் தலைப்பு. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கிய விஷயம், 1995-ல் இயக்குனர் என். கே. விஸ்வநாதன் இயக்கத்தில் நடிகர்கள் பிரேம், குஷ்பூ ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படத்தின் பெயர் வாரார் சண்டியர் (வர்றாரு சண்டியரு). விருமாண்டி படம் வெளியான வருடம் 2004. விருமாண்டி வெளியாகி பத்தாண்டுகள் கழித்து (2014) வேறொரு படம் சண்டியர் என்ற பெயரில் வெளிவந்தபோது சிறிய அளவில் கூட சர்ச்சை எழவில்லை. இதற்கெல்லாம் காரணம் மிக வெளிப்படையானது. இது தலைப்பு சார்ந்த பிரச்னை இல்லை, கதை நாயகனான கமலுக்கான எதிர்வினை மட்டுமே.

அரசியல் பல்சக்கரங்களின் கூர்முனைகளை எதிர்த்து வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன காத்திரமான படைப்புக்கள். தடைக்கற்களை படிக்கட்டுகளாக மாற்றத் தெரிந்தவர் கமல் ஹாசன் என்றபடியால் அந்த சர்ச்சைகளை எதிர்த்து அன்று ஜெயித்தார் கமல். போலவே விஸ்வரூபம் படத்தின் பிரம்மாண்டத்தை விட அது எழுப்பிய சர்ச்சைகளுக்கு விஸ்தீரணம் அதிகம். கமல் போன்ற நட்சத்திர நடிகர்களுக்கே இத்திரையுலகில் இந்த நிலைதான் என்று மக்களிடையே ஒருவித அச்சுறுத்தல் மனநிலை அச்சமயத்தில் உருவானது உண்மைதான்.

நடிகர் விஜய் படங்களுக்கு பலவிதமான பிரச்னைகள் தொடர்வதற்கான அரசியல் காரணங்களை அனைவரும் அறிவார்கள். 

முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு எதிரான சர்ச்சைகள். போலவே கதாநாயகிகளும் சர்ச்சைகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது வேறு வகை. உடல் அரசியல், உடை அரசியல் என நீளும் பிரச்னைகள் பெரும்பாலனவை கலாச்சார நோக்கில் எழுந்தவை. திரிஷா, தமன்னா, நயன்தாராவை போன்ற நடிகைகள் இதில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அவற்றை புறம் தள்ளியதுடன் தங்களுடைய வேலையில் தீவிர கவனம் செலுத்தியதால் இன்றளவும் இந்தத் துறையில் வெற்றிகரமாக தங்களது பங்களிப்பை அவர்களால் தர முடிகிறது.

முன்னணி நடிகையாக இருந்த போதே திருமணம் ஆகி தன் வாழ்க்கையில் ஒன்றிவிட்ட நடிகை ஜோதிகா திருமணத்துக்குப் பின் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்திவிட்டார். அவரது மறுபிரவேசமாக அமைந்து 36 வயதினிலே மற்றும் மகளிர் மட்டும் ஆகிய திரைப்படங்கள் பெண் மையக் கருத்துக்களைளுடன் கவனிக்கத்தக்க வெற்றி பெற்றது. 

சமீபத்தில் பாலாவின் இயக்கத்தில் ஜோதிகாவின் நடிப்பில் உருவான நாச்சியார் படத்தின் டீஸர் இணையத்தில் வெளியானது. அதில் ஜோதிகா ஒரு கெட்ட வார்த்தையை பிரயோகித்துவிட்டார் என்று கடும் விமரிசனமும் சர்ச்சையும் இணையத்தில் ஏற்பட்டது. சமூக வலைத்தளங்கள் முழுவதும் இரு சார்பு எடுத்து இந்தப் பிரச்னையை அலசி அக்கு வேறு ஆணி வேறாக்கி, அவரவர் மனநிலைக்கு ஏற்றபடி எழுதியும் விவாதித்தும் வந்தனர். ஆனால் விமரிசனங்களுக்கு இடையே கவனம் பெற்ற ஒரு வாசகம், 'ஜோதிகாவே இப்படி சொல்லலாமா?’ என்பதுதான். ஜோதிகா ஒரு திறமையான நடிகை. ஒவ்வொரு நடிகைக்கு பின்னாலும் ஒரு இயக்குநர் உள்ளார். பாலா நடிக்கச் சொல்லும்போது அதை மறுக்க ஏன் ஜோதிகாவால் முடியவில்லை என்று கேட்கலாம். ஒரு நடிகை அந்தக் கதாபாத்திரத்துடன் கருத்தொன்றி நடிக்கையில், அது தரும் பலமும் ஆவேசமும் அவர்களுக்குள் நிச்சயம் ஒருவகை மாற்றத்தைச் செய்யும். நாச்சியார் என்ற கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கும் போது நாச்சியாரின் கோபம் ஜோதிகாவுக்கு ஏற்பட்டிருப்பது அவர் நல்ல நடிகை என்பதற்கான பிறிதொரு சான்றுதான். அதற்காக எந்த வார்த்தையும் அவர் விடலாமா அதுவும் ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணை சிறுமைப்படுத்தும் வசைச் சொல்லைப் பயன்படுத்தலாமா என்பதும் கேள்விக்குட்பட்டதுதான். 

வீட்டை விட்டு வீதியில் நடக்கும் போது இதே போன்ற வசைச் சொற்களை எத்தனை தடவை கேட்டிருப்போம்? அல்லது நாமே கூட ஒரு வாய்ச்சண்டையில் எத்தனை முறை கூறியிருப்போம். அப்போது எல்லாம் எழாமல் போன அறச்சீற்றம் ஏன் அது ஒரு திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் போது எழுந்துள்ளது? இதற்கு முன்னரே பல படங்களில் பலவிதமான வசைச்சொற்கள் சன்னமாக ஒலிக்கும் பீப் ஓசையை மீறி காதுகளில் விழுந்திருக்கிறது அல்லவா? இந்த எதிர்வினைக்கு ஒரு காரணம் நம்மால் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இருந்த இடத்திலிருந்து எதனையும் கேள்வி கேட்க முடியும் என்ற வசதி. இரண்டாவதாக ஒரு பெண். அவள் இப்படித்தான் இருக்க வேண்டும், இதை தான் பேச வேண்டும் என்ற பொதுபுத்தி.

மூன்றாவதாக திரைப்படங்களை விமரிசிக்கும் போதும் அது குறித்த விவாதத்தில் பங்கெடுத்தும் நம்முடைய புத்திசாலித்தனத்தை அல்லது சார்பை பொதுவெளியில் எடுத்துச் சொல்ல விரும்பும் தன்முனைப்பு. இந்த மீடியோகர் மனநிலை இருக்கும் வரை இது போன்ற வெட்டி விவாதங்களும் நேர விரயங்களும் தொடர்ந்து கொண்டிருக்கும். எதற்காக அவர் அந்த வசைச் சொல்லை டீஸரில் இயக்குநர் வெளியிட்டாரோ, அந்த நோக்கம் வெகு விமரிசையாக நடைபெற்று இன்று அது குறித்து பேசாத நபர் இல்லை எனும் அளவுக்கு சர்ச்சையை விரிவுபடுத்திவிட்டது. நிச்சயம் படத்தைப் பார்க்கும் மனநிலைக்கு நம்மில் பெரும்பாலானோர் வந்திருப்போம்.

தமிழ்த் திரை ரசிகர்கள் ஓரளவேனும் மென்மனத்தினர்கள். மெய்நிகர் உலகில் மட்டுமே நடிகர்களை கடும் விமரிசனம் செய்து வருகின்றனர். பத்மாவதி திரைப்படத்தில் நடித்த காரணத்துக்காக தீபிகா படுகோனின் தலைக்கு ஐந்து கோடி விலை வைத்திருப்பதும், இத்திரைப்பட இயக்குநரான சன்ஜய் லீலா பன்சாலியை உயிருடன் எரித்துக் கொல்ல வேண்டும் என்று முழங்கிக் கொண்டிருக்கிறனர் வடக்கத்திக்கார்கள். தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் மற்றும் பலர் நடித்துள்ள இந்தி திரைப்படமான 'பத்மாவதி' வெளிவருவதற்கு முன்பே கடுமையான சர்ச்சையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. 

எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் தரப்பிலிருந்து பார்த்தால் தலைமுறை தலைமுறையாக அவர்கள் கட்டிக் காத்து வந்த சில விஷயங்களை ஒரு திரைப்படம் மூலமாக மலினமாக்க அவர்கள் விரும்பவில்லை. மேலும் உண்மை எது புனைவு எது என படம் பார்ப்பவர்களால் பகுத்துணர முடியாது. வரலாற்று உண்மைகள் அழிக்கப்பட்டு, படத்தில் காட்சிப்படுத்த புனைவுகள் யாவும் உண்மை என ரசிகர்கள் நினைக்கக் கூடும். அதுவே ஊடகத்தில் தவிர்க்க முடியாத சக்தி. படப்பிடிப்பு ஆரம்பமான நாளிலிருந்து, தற்போது வரை கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகிறது பத்மாவதி. 

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி பெரும்பாலான சர்ச்சைகளுக்கு பதில் அளித்துள்ளார். 'பத்மாவதி' படத்தை பொறுப்புணர்வுடனும் நேர்மையுடனும் எடுத்துள்ளதாக தெளிவுபடுத்தினார். ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை, அவரது துணிச்சலையும், தியாகத்தையும் போற்ற விரும்பும் திரைப்படம்தான் இது என்று கூறினார்.

ஒரு சில வதந்திகளின் காரணத்தால், இந்தப் படம் விவாதத்துக்குரியதாக மாறிவிட்டது. படத்தில் மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்துமாறு ராணி பத்மாவதிக்கும் அலாவுதீன் கில்ஜிக்கும் இடையே எந்தவிதமான வரலாற்று திரிபுக் காட்சிகளும் இல்லை. மேலும் ராஜபுத்ரர்களின் கண்ணியத்தையும், மரியாதையையும் மனத்தில் வைத்தே இந்தப் படத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்திருந்தார் பன்சாலி. ஆனால் கர்னி சேனா அமைப்பின் ராஜஸ்தான் மாநில தலைவர் மஹிபால் சிங் மக்ரானா, பாரதிய சத்திரிய யுவ மகாசபை எனும் அமைப்பின் தலைவர் தாக்கூர் அபிஷேக் சோம் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு உள்ளிட்டோர் பத்மாவதி திரைப்படத்துக்கு எதிராக போர்க்கொடியை உயர்த்தியுள்ளனர்.

ஜோதிகா அல்லது தீபிகா அல்லது தங்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்கும் திறமையான நடிகைகள் யாராக இருந்தாலும் சரி, இயக்குநர் சொல்வதை தாண்டியும் தமது பங்களிப்பை  அந்தந்த கதாபாத்திரத்துக்கு செய்வார்கள். இதை ஒரு உதாரணம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலான் இயக்கத்தில் பேட் மேன் ட்ரையாலஜி வரிசையில் இரண்டாவது படமான, 'தி டார்க் நைட்' எனும் திரைப்படத்தில் ஜோக்கர் கதாபாத்திரத்தில் நடித்த ஹீத் லெட்ஜர் சந்தித்த பிரச்னையை நடிப்பை நேசிக்கும் ஒவ்வொரு நடிகரும் சிறிதளவேனும் சந்தித்திருப்பார்கள். டார்க் நைட் படத்தில் லெட்ஜரின் கதாபாத்திரத்தின் பெயர் ஜோக்கர் என்று அழைக்கப்பட்டாலும், கோமாளித்தனங்கள் அற்ற அதிபுத்திசாலி வில்லன். முகமூடியின் பின்னால் இருப்பதால் ஜோக்கர் என்று தன்னை சொல்லிக் கொள்ளும் ஒருவன். ஹாலிவுட் திரை விமரிசகர்கள் பேட் மேன் படத்தில் ஹீத் லெட்ஜர் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டு அப்படத்தை பார்க்க மாட்டோம் என்று கிண்டலாக எழுதினார்கள். ஹீத் லெட்ஜர் இதற்கெல்லாம் மனம் தளராமல் பல நாட்கள் தனிமையில் தன்னை ஒரு அறையில் பூட்டிக் கொண்டு ஜோக்கர் கதாபாத்திரத்துக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார்.

படப்பிடிப்பிலும் நோலானுடன் ஒத்துழைத்ததுடன் தன்னுடைய கதாபாத்திரத்தை மெருகேற்றும் விதமாக வசனங்களையும் உடல்மொழியையும் தானே அபாரமாக வடிவமைத்தார். ஜோக்கரின் ஒரு வசனம் யாராலும் மறக்க முடியாது 'Why so serious' என்பதுதான் அது. உயிரைக் கொடுத்து நடித்தேன் என்று சில நடிகர்கள் சொல்லக் கூடும், உண்மையில் இப்படத்துக்காக ஹீத் லெட்ஜர் தன் உயிரையே கொடுத்துவிட்டார். இப்படத்தின் எடிட்டிங் நடக்கும் சமயத்தில், தன்னுடைய அறையில் அதிகளவில் தூக்க மருந்தை எடுத்துக் கொண்டதால் மரணத்தை தழுவினார் ஹீத் லெட்ஜர். ஜோக்கரின் கதாபாத்திரம் தந்த கனம் தாங்காமல் மரணத்தை தனக்குப் பரிசாக வழங்கிக் கொண்டார் அவர் என்று சொல்பவர்களும் உண்டு.

படம் வெளிவந்து ரசிகர்கள் விமரிசகர்கள் என பல கோடி மக்கள் அவரின் நடிப்பை வானுயுர புகழ்ந்து தள்ளினார்கள். ஜோக்கரை இன்றளவும் கொண்டாடி வருகின்றனர் உலக சினிமா ஆர்வலர்கள். ஆஸ்கர், கோல்டன் க்ளோப், தங்கக் கரடி உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை ஜோக்கர் வேடத்துக்காக வென்றார் லெட்ஜர். ஆனால் அவற்றைப் பெற்றுக் கொள்ள அவர் உயிருடன் இல்லை. 28 வயதில் தனது பெயரை மட்டுமே என்றென்றும் நிலைக்கச் செய்துவிட்டது ஹீத் லெட்ஜரின் நடிப்பு. ஒரு நடிகருக்கு அது யாராக இருந்தாலும் சரி, நடிப்பு வேறு நாம் வேறு அல்ல என  அதுவாகவே மாறிவிட்ட தருணம் நிகழ்ந்துவிட்டதால் அவர்கள் இயக்குநர்களை தாண்டியும் கதையைத் தாண்டியும் இயங்குவார்கள். ஹீத் லெட்ஜரைப் போல காலத்தால் அழிக்க முடியாதவர்களாக நிலைத்து விடுவார்கள். 

ஒரு சிலர் திரைப்படத்தை பலமாக எதிர்க்கும் போதே, பலருக்கு அதில் அந்தளவுக்கு என்ன இருக்க முடியும் என்ற ஆர்வத்தை உருவாக்கிவிடும். அவ்வகையில் அந்தப் படம் வெற்றியடையலாம். ஆனால் கடுமையான சர்ச்சையையும் எதிர்த்து ஒரு படம் வெளியிடப்பட்டாலும் மக்கள் மனத்தில் அது எத்தகைய உணர்வுநிலையை ஏற்படுத்தும் என்று தெளிவாகச் சொல்ல முடியாது. காரணம் திரைப்படம் என்பது கால வரையறைக்கு உட்பட்ட ஒன்று.  வெகுநாள் காத்திருந்தும், கடுமையான சர்ச்சைகளுக்கு பயந்தும் தோற்றுப் போன படங்கள் பல உள்ளன.

பத்வாவதி சர்ச்சையை பொருத்தவரையில் எதிர்தரப்பினரின் கோபங்களில் நியாயம் உள்ளது, இல்லை என்பதைத் தாண்டி, அவர்களின் அதீத வன்மம் வெளிப்படையாகவே தெரிகிறது. நடிகர்களை இயக்குநர்களை எரிக்கிறோம் கொல்கிறோம் என்று பொதுவெளியில் கூறுவது திரைப்படங்களுக்கு எதிரான பயங்கரவாதம் அன்றி வேறெல்ல. ஒரு சாராரின் உணர்வுகள் காயப்பட்டிருக்கிறது என்றால் அவர்களுக்கு அப்படத்தை திரையிட்டுக் காண்பிக்கலாம். அந்தத் திரைப்படத்தைப் பார்த்த பின்பு தங்களுக்கு எதிராக அப்படம் இல்லை என்றானபின் இத்தனை ஆத்திரம் வீண்தானே? எனவே எதிர்ப்புணர்வு என்பதை எங்கே காட்ட வேண்டும், யாரிடம் போர் புரிய வேண்டும் என்ற புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும். 

Sensible என்று ஒரு வார்த்தை உண்டு. திரைப்டத்தை உருவாக்கும் இயக்குநர்களுக்கு, அதில் நடிக்கும் நடிகர்களுக்கு, விமரிசனம் செய்பவருக்கு இந்த விவேகம் மிக அவசியம். இணையத்திலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி நாம் பேசும் ஒவ்வொரு சொல்லுக்கும் நாம் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வகையில் நாம் செய்யும் செயல்களுக்கு நம்மை பதில் கூறுபவர்களாக நிலை நிறுத்திக் கொள்கின்றபோது, இதுபோன்ற சர்ச்சைகள் திரைத்துறையினருக்கு எதிராக என்றில்லை, தேவையின்றி யார் மீதும் சொல், கல் அல்லது கத்திகளை எறிய மாட்டோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com