சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஃப்ளாப் திரைப்படங்கள் எவை?

சூப்பர் ஸ்டார்கள் எப்போதும் வெற்றிப் படங்களில் மட்டும் நடித்தவர்கள் இல்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஃப்ளாப் திரைப்படங்கள் எவை?

சூப்பர் ஸ்டார்கள் எப்போதும் வெற்றிப் படங்களில் மட்டும் நடித்தவர்கள் இல்லை. யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல சில படங்கள் அவர்கள் திரைவாழ்க்கையில் தோல்வி அடைந்திருக்கும். வெற்றி தோல்விகளை சமமாக பாவிக்கும் கலைஞனாக சூப்பர் ஸ்டார் இருந்து வருவதால் அவ்வப்போது நிகழும் இத்தகைய வீழ்ச்சிகளுக்குப் பிறகும் மிகப் பெரிய உச்சம் தொடும் திறன் அவருக்கு உள்ளது.

கல்ட் க்ளாஸிக் என்று இந்திய திரையுலகமே கொண்டாடும் பாட்சா போன்ற படங்கள் ரஜினியின் மணி மகுடத்தை என்றென்றும் அலங்கரிக்கும். இன்றளவும் புதுமையை விரும்பும் ரஜினி எந்திரன், 2.0 என்று மின்னல் வேகப் பாய்ச்சலில் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். ரஜினியின் சூப்பர் ஃப்ளாப் படங்கள் என்பது மற்றவர்களுக்குத்தான். ரஜினி ரசிகர்களாகிய என் போன்றோருக்கு இந்தப் படங்கள் எல்லாம் ஃபீல் குட் திரைப்படங்கள்தான். பாக்ஸ் ஆபிஸ் வசூல்களிலும் விமரிசகர்களின் எதிர்வினைகளும் அதிகம் இடம் பெற்ற படங்கள் இவை.

1) அன்புள்ள ரஜினி காந்த் (1984)

இந்தப் படத்தின் தலைப்பைக் கேட்கும் போதே ‘ரஜினி அங்கிள் நான் இங்க இருக்கேன்...இங்க..(முத்து மணி சுடரே வா...முல்லை மலர்ச் சரமே வா’ என்ற பாடலில்) என்று தேவதை உடை அணிந்த பேபி மீனா சிரிக்கும் ஒரு பாடல் காட்சி நம் நினைவுக்கு வரலாம். 

இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தாகவே ரஜினி நடித்திருப்பார். குழந்தைகள் ஆசிரமத்தில் வாழும் சிறுமி ரோஸிக்கும் ரஜினி காந்துக்கும் இடையே உருவாகும் பாசப் பிணைப்புதான் கதை. வீல் சேரில் முடக்கப்பட்டு கேன்சரில் பாதிக்கப்பட்ட சிறுமி ரோஸியின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதை மிகவும் உருக்கமானது. அவளது தனிமை, ஏமாற்றம், கோபம், பிடிவாதம் என்று அவளைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும். இந்தப் படத்தின் கதையில் ரஜினி இருப்பாரே தவிர சூப்பர் ஸ்டாருக்கான கதை இல்லை இது. ஆறு நாட்களில் தனது காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டாராம் ரஜினி. இந்தப் படத்தை இயக்கியவர் கே.நட்ராஜ். அது அவரது முதல் படம். தோல்விப் பட வரிசையில் சேர்ந்தாலும், நிச்சயம் அவருக்கு மன நிறைவைத் தந்த படம் இது.

2) ஸ்ரீ ராகவேந்திரா (1985)

ரஜினியின் நூறாவது படம் இது. இயக்குநர் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவின் தயாரிப்பில் உருவான படமிது. மந்திராலய மகானின் வாழ்க்கை வரலாற்றை ரஜினியே திரைக்கதையாக எழுதினார். ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்புக்களிடையே வந்த படமும் இதுதான். ஆனால் பக்திப் படங்கள் என்னதான் நேர்த்தியாக உருவாக்கப்பட்டாலும், அது மற்ற கமர்ஷியல் படங்களின் வசூலை மிஞ்ச முடியுமா? அவ்வகையில் இந்தத் திரைப்படம் வசூல்களை வாரிக் குவிக்காவிட்டாலும் அது வெளியான பின்னர் ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்வாமியை மக்களுக்கு மீண்டும் நினைவு படுத்தும் விதமாக அமைந்தது எனலாம். அக்காலகட்டத்தில் சென்னையில் உள்ள ராகவேந்திரர் ஆலயங்களில் வியாழக்கிழமைகளில் கூட்டம் பெருகத் தொடங்கியது. நமது கலாசாரத்தையும் ஆன்மிகத்தையும் நினைவுபடுத்தும் விதமாக இப்படம் காலத்தை தாண்டிய புகழுடன் விளங்குகிறது.

இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த காட்சி, ‘அழைக்கிறான் மாதவன், ஆநிரை மேய்ப்பவன்... மணி முடியும்.. மயிலிறகும்...எதிர் வரவும்...துதி புரிந்தேன்.. மாதவா...கேசவா ஸ்ரீதரா... ஓம்’ தேடினேன் தேவ தேவா...தாமரைப் பாதமே....வாடினேன் வாசுதேவா... வந்தது நேரமே... ஞான வாசல் நாடினேன்... வேத கானம் பாடினேன்....கால காலம் நானுனை’ இந்தப் பாடலை எங்கு கேட்டாலும் அல்லது அதன் காணொலியை யூ ட்யூபில் போட்டுப் பார்க்கும் போதும் என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடும். அத்தனை உருக்கமும் நெகிழ்ச்சியும் நிறைந்த வரிகள் இவை. ரஜினி முதிர்ந்த ஞானியின் உடல் மொழியுடன் தன் சீடர்களுக்கு பிரியாவிடை கொடுத்து ஜீவ சமாதி அடையும் தருணம்...பாடலின் இடையே குருவே சரணம் என்ற உருக்கத்துடன் அப்பண்ணா தன் குருவை கடைசியாகக் காண்பதற்காக விரைந்தோடி வரும் போதும் மனம் நிலை கொள்ளாது தவிக்கும். நாம் பார்ப்பது ஒரு சினிமா அதில் நடித்திருப்பவர்கள் இவர்கள்தான் என்று அறிவு சொன்னாலும், மனம் ஒருபோதும் ஏற்காது நெகிழ்ந்து கரையும். இத்தகைய திரைத் தருணங்கள் வெகு சில படங்களில் மட்டுமே அமையும். அவை நம் உணர்வுகளுடன் கலந்து என்றென்றும் அழியாதவை. 

ரஜினியின் ஆன்மிகப் பாதையில் திருப்புமுனையை ஏற்படுத்தி அவரது அகவிழியைத் திறந்த படமிது எனலாம்.

3) விடுதலை (1986)

1986-ம் ஆண்டைப் பொறுத்தவரையில் ரஜினிக்கு இறங்குமுகம்தான். இந்தியில் வெளிவந்து பெரும் வெற்றிப்படமான குர்பானியின் தமிழ் ரீக்மேக்கான விடுதலை எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்த்தன் ஆகியோருடன் இணைந்து ரஜினி நடித்திருந்த அந்தப் படம் தோல்வியடைந்தது. குர்பானியில் இருந்த அசல்தன்மை அதன் ரீமேக்கில் இல்லாமல் போய்விட்டது. மேலும் ரஜினியை தனித்து பார்க்கவே அவரது ரசிகர்கள் விரும்புவார்கள். பெரும் நட்சத்திரங்களின் கூட்டணியில் அவரது தனித்தன்மை காணாமல் போய்விடும் என ரசிகர்கள் சில சமயம் நினைப்பதுண்டு. 

4) மாவீரன் (1986)

1986-ம் ஆண்டு தீபாவளி அன்று நடிப்பின் இரு துருவங்களாக விளங்கும் கமல் ஹாசனின் புன்னகை மன்னன் மற்றும் ரஜினியின் மாவீரன் ஆகிய படங்கள் வெளியானது. இதில் புன்னகை மன்னன் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படமாக மாறியது. துரதிர்ஷ்டவசமாக மாவீரன் படுதோல்வியைத் தழுவியதும் அல்லாமல் கடும் விமரிசனங்களையும் எதிர் கொண்டது. பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்து வெற்றிப் பெற்ற 'மர்த்’ என்ற படத்தின் ரீமேக் அது. ராஜசேகரின் இயக்கத்தின் உருவான மாவீரன் தான் 70 எம்எம் திரையில் வெளிவந்த முதல் தமிழ்ப்படம்.

5) நான் அடிமை இல்லை (1986)

துவாரகேஷ் இயக்கத்தில் ரஜினி ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த படம் இது. ரஜினி ஃபோட்டோகிராபராக நடித்திருப்பார். ஸ்ரீதேவி பணக்காரப் பெண். திருமணத்துக்குப் பிறகு அவர்களுக்கிடையே ஏற்பட்ட ஒரு பிரச்னையில் பிரிந்துவிடுவார்கள். அதீத நாடகீயத்துடன் தெலுங்குப் படம் போலவே இருந்ததால், தமிழ் ரசிகர்களைப் பெரிதாக இந்தப் படம் கவரவில்லை. ஆனால் அதில் இடம்பெற்ற ‘ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கிறது’ என்ற பாடல் மறக்க முடியாதது. கோலிவுட்டில் ஸ்ரீதேவி நடித்த கடைசி படம் இதுதான்.

6) சிவா (1989)

இதுவும் ஒரு இந்திப் பட ரீமேக் தான். அமிதாப் பச்சன் மற்றும் வினோத் கன்னா நடித்த கூன் பஸினா என்ற படத்தின் மறு உருவாக்கம்தான் சிவா. அமீர்ஜான் இயக்கத்தில் ரஜினியுடன் செளகார் ஜானகி, ரகுவரன் மற்றும் ஷோபனா நடித்திருப்பார்கள். ரகுவரனுக்கு முக்கியமான கதாபாத்திரம். ஹீரோவுடன் இணைந்து எதிரியை அழிக்கும் ரோல். தமிழ் மக்களின் ரசனை மற்ற மாநிலங்களை விட சற்று வேறுபட்டது. இதை ரஜினி நன்கு உணர்ந்திருந்தார். பழிவாங்கும் படங்கள் சில சமயம் வெற்றி பெறும் ஆனால் சில சமயம் சறுக்கிவிடும். சிவா பட விஷயத்தில் இரண்டாவதாக கூறப்பட்டது நடந்துவிட்டது.  ரஜினி ரகுவரன் என்ற இருவரின் சிறப்பான நடிப்பில் வெளிவந்தும் இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் தலைகாட்டவில்லை.

7) நாட்டுக்கு ஒரு நல்லவன் (1991)

ரஜினி ரசிகர்களையே சோதனைக்கு உட்படுத்திய ஒரு படம் எதுவென்றால் இதனைச் சொல்லலாம். இப்படத்தின் கதை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் எழுதப்பட்டு வெவ்வேறு நடிகர்களின் பங்களிப்பில் வெளிவந்தது. தெலுங்கில் இந்தப் படத்தில் நாகார்ஜுனா நடித்திருப்பார். வி.ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படத்தின் கருத்து நன்றாக இருந்தாலும் ஆனால் குழப்பமான திரைக்கதையால் எந்தத் தரப்பு ரசிகர்களையும் திருப்தி செய்ய முடியாமல் போய்விட்டது. 

8) வள்ளி (1993)

ரஜினி இந்தப் படத்தை தயாரித்ததுடன் அல்லாமல் திரைக்கதையும் எழுதினார். ஆனால் இந்தப் படம் படுதோல்வி அடைந்து அவருக்குப் பண நஷ்டத்தையும் ஏற்படுத்தியது. காரணம் இந்தப் படத்தின் கதை அரதப் பழசு. அதீதமான நாடகீயப் பாணியில் சாதாரணமான பழிவாங்கும் கதைதான் அது. மேலும் ரஜினி இதில் சிறிய ரோல்தான் செய்திருப்பார். சூப்பர் ஸ்டார் இமேஜிக்கு எதிராக அவரது கெட்டப் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. இந்தப் படத்தை இயக்கியவர் கே.நட்ராஜ். அவருக்கு உதவி இயக்குநராக ஹரி பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் இளையராஜாவின் பங்களிப்பு அபரிதமானது. ரொமான்ஸ் பாடல் வரிசையில் இசைஞானியின், 'என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம், எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம்போகும் தூரம்’ எனும் பாடல் நினைவில் நீங்காமல் இடம் பெற்றுவிட்ட பாடல். 

9) பாபா (2002)

ரஜினி படங்கள் தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பும் போது எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்ப்போம். அண்ணாமலை, பாட்ஷா, சிவாஜி என்று பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் ரஜினி ரசிகர்களே தெறித்து ஓடச் செய்துவிட்ட படம் எதுவென்றால் அந்தப் பெருமை பாபாவை மட்டுமே சாரும். 

இந்தப் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்துக்காக பின்னர் விநியோகிஸ்தர்களுக்கு பணம் கொடுத்தார் ரஜினி. பாபா படத்தின் கதையை எழுதியதுடன், ரஜினியே தயாரித்தார். அந்தப் படம் வெளியாவதற்கு முன் ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படத்தின் கதையோட்டம் தெளிவாக இல்லாமலும், அதிக அலைபாய்தலுடன் மையம் புரிபடாமலும், ஆன்மிகக் கருத்துக்களையும் உள்ளடக்கியதாகவும் இருந்ததால், இளைஞர்களை கவரவில்லை. 

ரஜினியே அவரது ரசிகர்களுக்கு நிகரற்ற பாபாவாக இருக்கும்போது, ரஜினி வணங்கும் பாபாஜியை அவரது ரசிகர்கள் நாடவில்லை. பாபா படத்தின் நினைவாக இப்போது ரசிகர்களின் மனதில் இருப்பது பாபா முத்திரை மட்டுமே.

10) குசேலன் (2008)

பி.வாசுவின் இயக்கத்தில் வெளிவந்த குசேலன் கதா பரயும்போள் எனும் மலையாளப் படத்தின் ரீமேக். கிராமத்து ஏழை ஒருவனுக்கும், பணக்கார புகழ்ப் பெற்ற நடிகன் ஒருவனுக்குமான நட்புதான் இந்தப் படம். இவர்கள் சிறுவயது நண்பர்கள். 25 வருடங்கள் கழித்து எதிர் எதிர் துருவங்களின் சந்திக்கும் போது அவர்களின் மனநிலை என்ன என்பதை எளிமையான திரைக்கதையில் கூறும் படம் இது. ரஜினி, பசுபதி, மீனா, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் சரியாக அதிக நாட்கள் ஓடவில்லை. நல்ல கதையம்சம் இருந்தாலும், இந்தப் படத்தில் ரஜினி சிறிது நேரம் மட்டும்தான் திரையில் தோன்றுவார். அவரது ரசிகர்களை இது ஏமாற்றத்துக்கு உட்படுத்திவிட்டது. 

2014-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான கோச்சடையான் மற்றும் லிங்கா ஆகிய படங்களும் தோல்வி அவருக்குத் தோல்விப் படமாகவே அமைந்தது. 

மேற்சொன்ன விஷயங்களை ஆராய்ந்து பார்க்கும் போது ரஜினி நடித்த சில ரீமேக் படங்களும், அவரே எழுதி தயாரித்துள்ள சில படங்களும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்திருகக்வில்லை. காரணம் அவர் அக்கதைகளில் தன்னை எதார்த்தமானவராகவும், எளிமையானவராகவும், ஆன்மிகப் பண்புகள் நிறைந்த ஒரு சராசரி மனிதராகவும் காண்பித்திருப்பார். ஆனால் ரசிகர்களுக்கு ரஜினியின் அந்த முகம் தேவையில்லை. அவர்கள் விரும்புவது ரஜினி எனும் அந்த மாபெரும் கலைஞனின் சூப்பர் ஸ்டார் அவதாரத்தைத்தான். ஷாரூக் கான் தீபிகா படுகோன் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான சென்னை எக்ஸ்ப்ரஸ் திரைப்படத்தின் முடிவில் ரஜினிக்கு மரியாதை செய்யும் விதமாக லுங்கி டான்ஸ் ஆடி சிறப்பித்திருப்பார்கள். இது இந்திய திரையுலகில் நடவாத ஒரு விஷயம். ஒரு சூப்பட் ஆக்டர் இன்னொரு மொழியில் உள்ள சூப்பர் ஸ்டாரை மெச்சி வியந்தோகுவது இந்தியத் திரையுலகில் ரஜினிக்கு மட்டும் அதிகளவில் நடந்துள்ளது. நடிகர்களுக்கே ஒரு ஆதர்சமாக விளங்குபவர் ரஜினி என்றால் அது மிகையாகாது.

ரஜினியின் படங்களில் டைட்டிலில் ஜேம்ஸ்பாண்ட் ம்யூசிக் இசைக்கப்பட்ட காலகட்டத்தில் ரஜினி ரகிகர்களின் மனவெழுச்சி சொல்லில் அடங்காதது. வேறெந்த நடிகருக்கு ரசிகராக இருந்தாலும் உங்கள் அறிவுக்கும் வேறு சில விஷயங்களுக்கும் தீனி கிடைக்கலாம். ஆனால் ரஜினி ரசிகர்களுக்கு ரஜினியின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் போதும். அது வெற்றிப் படமா தோல்விப் படமா என்பதெல்லாம் முக்கியமில்லை. அது ரஜினி படம் அவ்வளவே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com