‘ஆளவந்தான்’ கமல் ரசிகர்களின் மனதை மீண்டும் ஆள வருவானா?

Fantastic Fest என்கிற அமெரிக்காவில் நடக்கும் திரைப்பட விழாவில் கடந்த ஆண்டு 2016-ல் ஹாரர்
‘ஆளவந்தான்’ கமல் ரசிகர்களின் மனதை மீண்டும் ஆள வருவானா?

Fantastic Fest என்கிற அமெரிக்காவில் நடக்கும் திரைப்பட விழாவில் கடந்த ஆண்டு 2016-ல் ஹாரர் பட வரிசையில் ‘ஆளவந்தான்’ படம் திரையிடப்பட்டது. அங்குள்ள ரசிகர்களின் அப்படத்தை மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படம் என்று பாராட்டினார்கள். இந்த வரவேற்பை அறிந்த படத் தயாரிப்பாளர் ஆளவந்தான் படத்தை மீண்டும் தமிழகத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்தார்.

2001-ம் ஆண்டில்  அதிநவீன டிஜிட்டல், ஒலி, ஒளி தொழில்நுட்பத்தில், இன்றைய மதிப்பில் ரூ. 400 கோடி செலவில் உருவான 'ஆளவந்தான்' திரைப்படம் தமிழகம் முழுவதும் விரைவில் மீண்டும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளரான தாணு 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 'ஆளவந்தான்' திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். காரணம் எனக்கு எப்போதும் பிடிக்கும் பத்து படங்களில் வரிசையில் ஆளவந்தானும் ஒன்று. திரையரங்கில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் மீண்டும் ஒருமுறை இப்படத்தைப் பார்க்கலாம் என்பது உண்மையில் பாராட்டத்தக்க விஷயம்.

ஆளவந்தான் திரைப்படத்தின் கதை திரைக்கதை வசனம் கமல் தான். 1984-ம் ஆண்டு  கமல் எழுதிய ‘தாயம்’  என்ற கதையை மையமாக வைத்து, இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கினார் கமல். குடும்ப வன்முறை குழந்தைகளை எப்படி பாதிக்கும் என்ற ஒற்றை வரிக் கதையை முற்றிலும் புதுமையான திரைக்கதையால் மெருகேற்றியிருப்பார். இரட்டைப் பிறவிகளில் ஒருவன் நாடே போற்றி மகிழும் ராணுவ அதிகாரி. மற்றொருவன் அதே நாடு தேடிக் கொண்டிருக்கும் மனநோய்க்கூறுடைய குற்றவாளி.  கதாநாயகன் விஜய்குமார் எதிர்நாயகன் நந்தகுமார். இரண்டு கதாபாத்திரங்களின் உடல் மொழி, வசன உச்சரிப்பு, என ஒவ்வொரு அணுவிலும் வித்யாசம் காண்பித்திருப்பார் கமல். அதுவும் நந்துவின் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக வடிவமைத்த கமல், அப்பாத்திரத்துக்கு நியாயம் செய்யும் வகையில் மொட்டை அடித்ததுடன் தன் உடல் எடையையும் அதிகரித்திருப்பார் கமல். நந்துவுக்கு இடது கண்ணை விட வலது கண் சிறியதாக இருக்கும். இதற்காக பிரத்யேகமாக மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் கமல். ஒரு கதாபாத்திரத்துக்காக தன்னை சிதைவுக்கு உட்படுத்திக் கொள்பவர்களே அசல் கலைஞர்கள் எனலாம். தி மெஷனிஸ்ட் (The Machinist) என்ற திரைப்படத்துக்காக ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் பேல் தன் உடல் எடையை மிகவும் குறைத்து கிட்டத்தட்ட எலும்புக் கூடு போன்று தோற்றம் அளிப்பார். அவரது இந்த உருமாற்றம் தன் கதாபாத்திரத்துக்காக அவரது அர்ப்பணிப்பு. போலவே கமல், ஹாலிவுட் நடிகர்கள் யாருக்கும் குறைந்தவரல்ல. ஆளவந்தானில் மட்டுமல்ல, குணா, ஆபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, தசாவாதரம் எனப் பல படங்களில் தன்னை முற்றிலும் உருமாற்றி நடித்திருப்பார். தமிழில் பரிசோதனை முயற்சிகளை இன்றளவும் மிகத் துணிவாகச் செய்யும் ஒரே நடிகர் கமல்தான்.

ஆளவந்தான் ஒரு கல்ட் க்ளாஸிக் என்று சொல்லும் அளவுக்கு புதுமையான ஒரு படைப்பு. ஆளவந்தான் படத்தை பார்த்து அதில் உத்வேகம் அடைந்து கில்பில் அனிமேஷன் காட்சிகளை உருவாக்கியதாக உலகப் புகழ்ப்பெற்ற இயக்குனர் க்வென்டின் டரான்டினோ கூறியுள்ளார். இப்படிப் பல புதிய முயற்சிகளும், வித்தியாசமான திரைமொழியையும் கொண்ட ஆளவந்தான் ஏன் அது வெளிவந்த காலக்கட்டத்தில் பெரிதாக வரவேற்கப்படவில்லை என்பது இன்றளவும் புரியாத புதிர். ஆளவந்தான் மீண்டும் வெளிவந்தால் நிச்சயம் இம்முறை ரசிகர்கள் ஏமாற்றம் தர மாட்டார்கள் என்றே நம்புகிறேன். காரணம் காலம் தாண்டிய படைப்பாக அப்போது இருந்த ஆளவந்தான் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தொழில்நுட்பத்திலும் சரி நடிப்பிலும் சரி சம காலத்துக்கும் ஏற்ற வகையில் உள்ளதே காரணம். சில படங்களை ஒரு முறை கூடப் பார்க்க முடியாது, ஆனால் சில படங்களை நாம் மீண்டும் மீண்டும் விரும்பிப் பார்ப்போம். என்னளவில் ஆளவந்தான் இரண்டாம் ரகத்தைச் சார்ந்தது.

சீசோபெர்னியா எனும் மனப்பிறழ்வை மிக வித்தியாசமான கோணத்தில் பதிவு செய்த படம் ஆளவந்தான். படத்தில் நந்துவுக்கு அத்தகைய மனப்பிறழ்வு ஏற்பட்டு பதின்வயதில் செய்த குற்றத்துக்காக தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருப்பான்.  படத்தில் நந்து கூறும் கவிதைகள் அனைத்தும் அதிக கவனம் பெற்றவை. மறக்க முடியாத அக்கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் வைரமுத்து. காற்றில் பறக்கும் அந்த காகிதத்தை வைத்து விளையாடியபடி நந்து சொல்லும் கடவுள் பாதி மிருகம் பாதி கவிதை இன்றைய ரசிகர்களும் விரும்பும் வண்ணம் படமாக்கம் செய்யப்பட்டிருக்கும். ஒரு தாளுடன் லயத்துடன் அக்கவிதையைப் பாடிக் கொண்டே கமலின் நடனம் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒன்று. அப்பாடல் மூலம் நந்து மட்டுமல்ல ஒவ்வொருவரும் சுய பரிசீலினை செய்து கொள்ள உதவும் வரிகள் அவை.

‘கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம் உள்ளே கடவுள்
விளங்க முடியாக் கவிதை நான்
மிருகம் கொன்று மிருகம் கொன்று
கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்
ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று
மிருகம் மட்டும் வளர்க்கிறதே
நந்தகுமாரா நந்தகுமாரா
நாளை மிருகம் கொல்வாயா
மிருகம் தின்ற எச்சம் கொண்டு
மீண்டும் கடவுள் செய்வாயா
குரங்கில் இருந்து மனிதன் என்றால்
மீண்டும் இறையாய் ஜனிப்பானா
மிருக ஜாதியில் மிறந்த மனிதா
தேவஜோதியில் கலப்பாயா

கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்
காற்றில் ஏறி மழையில் ஆடி
கவிதை பாடும் பறவை நான்
ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு துளியும்
உயிரின் வேர்கள் குளிர்கிறதே
எல்லா துளியும் குளிரும் போது
இருதுளி மட்டும் சுடுகிறதே
நந்தகுமாரா நந்தகுமாரா
மழை நீர் சுடாது தெரியாதா
கன்னம் வடிகின்ற கண்ணீர் துளி தான்
வெந்நீர்த் துளி என அறிவாயா
சுட்ட மழையும் சுடாத மழையும்
ஒன்றாய் கண்டவன் நீ தானே
கண்ணீர் மழையில் தண்ணீர் மழையை
குளிக்க வைத்தவன் நீதானே'

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியானது இப்படம் என்றாலும் படம் நெடுகிலும் கமலின் உத்திகள், யோசனைகள், முயற்சி தலைதூக்கியிருப்பதை படம் பார்க்கும் ரசிகர்கள் உணர முடியும். இப்படத்தில் நந்து கதாபாத்திரம் திரையில் தோன்றியவுடன் படம் விறுவிறுப்பாகி விடும். பின்னணி இசைக்கு மகேஷ், பாடல் இசைக்கு சங்கர் எசான் லாய் என இருவரின் பங்களிப்பும் படத்தை வேறொரு தளத்துக்கு உயர்த்தி உள்ளன. இப்படத்தில் நந்துவுக்கு தோன்றும் இல்லூஷன் காட்சிகளும், மணீஷா கொய்ராலாவுடனான அந்த மழை நடனமும், கார்டூன் சண்டைகளும் வேறு எந்தப் படத்திலும் பார்த்ததே இல்லை. குறிப்பாக ஜோக்கர் தோற்றம் உள்ள ஒரு பொம்மையிடம் நந்து டைம் என்னாச்சு என்று கேட்பான். அதற்கு ஜோக்கர் டைமுக்கு என்ன ஆச்சு என்று பதில் சொல்லும். கனவின் தொடர்ச்சியாக கடைத் தெருவுக்குள் சென்று நந்து பார்க்கும் ஒவ்வொரு விஷயமும் அவன் மனத்தளவில் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்பதை வெகு நுட்பமாக விளங்கச் செய்துவிடும். இடைவேளைக்கு பிறகான படத்தின் பாய்ச்சல் அசத்தலானது.

ஆளவந்தானில் பல புதிய தொழில்நுட்பங்களைப் அறிமுகப்படுத்தி இந்திய சினிமாவுக்கே பெருமை தேடித் தந்துள்ளார் கமல். சில விமரிசகர்கள் இப்படத்தின் கதையை குறை கூறியுள்ளார்கள். தமிழ்ச் சூழலில் ஒட்டாத ஆங்கிலத் தன்மை மிகையாக உள்ளது என்றும், கமல் எனது சுய மேதமையை வெளிப்படுத்த முயற்சித்துள்ளதாகவும், ஹீரோ வில்லன் என இரண்டு கமலின் பாத்திரப் படைப்பும் முழுமையாக இல்லையென்றும் எழுதியிருந்தார்கள். ஆனால் இதைவிட தெளிவாக ஒரு பாத்திரப் படைப்பை எப்படி உருவாக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தளவுக்குக் கடுமையாக விமரிசனம் செய்யும் அளவுக்குப் படத்தில் எந்த லாஜிக் மீறல்களும் இல்லை. மேலும் இப்படத்தில் இருக்கும் புதுத்தன்மை (ப்ரெஷ்னெஸ்) இப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையிலும் அப்படியே உள்ளது. இன்றளவும் எடிட்டிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட பல விஷயங்களில் முன்னோக்கி இருக்கிறது.

இப்படத்துக்காக கார் சேஸிங் ஒன்றில், கார் ரவுண்ட் அடிப்பதையும் ஜம்பிங் பாய்ந்து போவதையும் டூப் இல்லாமல் உயிரையே பணயம் வைத்து நடித்துள்ளார் கமல். ஆசியாவிலேயே, முதன்முறையாக மோஷன் கிராஃபிக்ஸ் கேமிராவை பயன்படுத்தியதும் ஆளவந்தானில் தான். ஆளவந்தான் படத்துக்காக டெல்லியில் ராணுவ வீரர்களுடன் ஒரு மாத பயிற்சி எடுத்து அங்கேயே படப்பிடிப்பு நடித்தினர். இதுவரை அங்கு யாருமே படப்பிடிப்பு நடத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு படத்துக்காக ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் எடுத்து முழுக்க முழுக்க ரசிகர்களை திருப்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்ட படம் தான் ஆளவந்தான். எனவே படம் புரியவில்லை என்று எழுதப்பட்ட விமரிசனங்கள் உண்மையில் அவர்களின் போதாமையே தவிர, படமல்ல. 

ஒரே வரியில் சொல்ல வேண்டுமெனில், சினிமாவுக்காகத் தன்னை முழுவதும் அர்ப்பணித்த ஒரு கலைஞனின் கனவு தான் ஆளவந்தானாக உருமாறி உள்ளது. உலக சினிமாவுக்கு மாற்றுக் குறையாத தமிழ் சினிமாவை உருவாக்க வேண்டும் என்ற லட்சியக் கனவு அது. தமிழ்ப் படத்தின் தரத்தை உலக அரங்குக்கு எடுத்துச் சென்று சிறந்த அயல்மொழிப் திரைப்படம் என்ற அங்கீகாரத்தை இடைவிடாமல் ஆஸ்காரில் தேடிக் கொண்டிருக்கும் உன்னதக் கனவு அது. நிச்சயம் இக்கனவு வெகு விரைவில் நிறைவேறும். ஆளவந்தான் தவறவிட்டதை மருதநாயகமோ அல்லது இன்னொரு புதிய படத்தின் மூலமாகவோ உலக நாயகன் கமல் நிச்சயம் கைக்கொள்வார். அதற்கான முழுத் தகுதியும் அவருக்கு உண்டு என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com