சினிமா என்பது வெறும் காட்சிப் பொருளல்ல - ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் பேல் நேர்காணல்!

சினிமா என்பது வெறும் காட்சிப் பொருளல்ல - ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் பேல் நேர்காணல்!

தி மெஷினிஸ்ட் படத்திற்காகத் தனது உடல் எடையில் பெரும்பகுதியை (35 கிலோ) கரைத்துக் கொண்டு படுவிகாரமான தோற்றத்துடன் திரையில் பிணம்போல நடமாடிய கிறிஸ்டியன் பேலை பார்த்து மிரளாத ரசிகர்களே கிடையாது. எம்பயர் ஆஃப் சன், அமெரிக்கன் சைக்கோ, தி டார்க் நைட் போன்ற மாறுபட்ட கதாப்பாத்திரங்களால் பலதரப்பட்ட ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்ட அமெரிக்க நடிகரான பேல் முற்றிலும் வேறான ஒரு பரிணாமத்தில் நடித்தப்படம் ‘தி மெஷினிஸ்ட்’. இந்த ஒற்றைப் படத்திற்காக பேல் மேற்கொண்ட சிரத்தைகளும், அர்ப்பணிப்பும் சொல்லில் அடங்காதது. உலகின் பல்வேறு உயரிய விருதுகளையும், எண்ணற்ற ரசிகர்களையும் ஒருங்கே பெற்றுள்ள பேலிடம் மைக்கேல்.ஜே.லீ மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் வடிவம் இது. லீயிடம் அனுமதிபெற்று மொழிப்பெயர்க்கப்பட்டது.     

ஒரு கதாப்பாத்திரத்திற்காக உங்கள் உடலின் மொத்த எடையில் மூன்றில் ஒரு பங்கை குறைத்துக் கொண்டது அவசியம்தானா?

சில படங்களுக்கு நமது தோற்றம் ஒரு பொருட்டேயல்ல. அது முழுக்க முழுக்க நடிகர்களை சார்ந்திராமல் அழுத்தமான கதையோட்டத்தில் மையம் கொண்டிருக்கும். அத்தகைய படங்களில் திரைக்கதையைச் சுற்றித்தான் கதாப்பாத்திரங்கள் பிணையப்பட்டிருக்கும். ஆகவே, திரைக்கதைதான் அதில் நாயகன். ஆனால், மெஷினிஸ்ட் போன்ற ஒரு படத்திற்கு அதன் மையப் பாத்திரத்தின் தோற்றம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

மெஷினிஸ்ட்டின் நாயகன் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டவன். அதாவது, மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டிருப்பவன். மெஷினிஸ்ட்டின் இயக்குனர் ஆண்டர்சன் என்னிடம் கதையை விவரித்த போதே இது முழுக்க முழுக்க எனக்கு வேலை வைக்கக்கூடிய படம், என்னை சுற்றியே நகரும் படம் என்பதை புரிந்து கொண்டேன். அதனால், இயக்குனர் உருவாக்கிய கதாப்பாத்திரத்தை,  அவர் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்த வேண்டுமென்று முடிவு செய்தேன். எனினும், இத்தகைய பரிசோதனை முயற்சி சாத்தியம்தானா என்று பயந்தபடியேதான் சோதனையில் இறங்கினேன். ஆனால், இறுதியாக நான் நினைத்திருந்ததை விடவும், எனது உடல் மெஷினிஸ்ட்டாக கச்சிதமாக உருமாறி இருந்தது.  

கிராபிக்ஸ் உதவியுடன் உங்களின் தோற்றத்தை, கதையின் தேவைக்கு ஏற்றாற்போல் உருமாற்றி இருக்கலாமே? ஏன் பிடிவாதமாக இத்தனை சிரத்தையை மேற்கொண்டீர்கள்?

நேரடியாகவே சிலர் என்னிடம் இந்த யோசனையை முன்வைத்தார்கள். ஆனால் எனக்கு கிராபிக்ஸில் துளிக்கூட நம்பிக்கை இல்லை. அது பார்வையாளர்களை ஏமாற்றுவது போலாகிவிடும். சினிமா என்பது வெறும் காட்சிப் பொருளல்ல. அது உணர்வுகளுக்குள் ஊடுருவி பார்வையாளர்களை வேறான நிலைக்கு கடத்திச் செல்லக்கூடியது. தவிர, எனக்கு இந்த உருமாற்றம் மிகவும் பிடித்திருந்தது. அதை நான் எனக்கு வைக்கப்பட்ட சவாலாகவே கருதினேன்.

மெல்ல மெல்ல எனது உடல் வற்றிக் கொண்டிருப்பதை, மெளனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த உருமாற்றம் எனக்கு பழக்கமில்லாத ஒருவகை சாந்த நிலையை எனக்குள் உண்டாக்கியது. உடலில் சதைகளை முற்றாக காய்ந்து நடமாடும் எலும்புக்கூடைபோல மாறியப்பின் பேச்சுக்கு பொருளே இல்லாதது போலாகிவிட்டது. சிலர் எனக்கு சிரிப்பதற்குக்கூட சத்தில்லாமல் இருப்பதாக சலித்துக் கொண்டார்கள். எனினும், என் வாழ்நாளில் மறக்கவே முடியாத இனிமையான காலக்கட்டமாகவே அந்தக் குறுகிய நாட்கள் மனதில் தங்கிவிட்டன.

மெஷினிஸ்ட்டாக உங்களை தயார் செய்துக் கொண்டிருந்த நாட்களில்  எத்தகைய உணவுமுறையை கடைப்பிடித்தீர்கள்?

தினமும் சிறிது காபியும், ஒரு சில ஆப்பிள் துண்டுகளும்தான் எனது உணவுமுறையாக இருந்தது. படத்தில் இறைச்சித் துண்டொன்றை நான் சுவைப்பதைப்போல ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. அந்த காட்சியின்போது இறைச்சியை விழுங்கிவிடக்கூடாது என்று எனக்கு நானே பலமுறை சொல்லிக் கொண்டேன். ஏனெனில், நான் கடைப்பிடித்து வந்த உணவுமுறையில் சிறிய அளவு மாற்றம் நிகழ்ந்தாலும் எனது கன்னம் சட்டென்று உப்பிக் கொள்கிறது. இதனால் எனது உருமாற்றமே அர்த்தமில்லாமல் ஆகிவிடுகின்றது.

எனது மெலிந்த, நடமாடும் பிணம் போன்ற தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ள இந்த எளிய உணவுமுறையை நான் கடுமையாக பின்பற்ற வேண்டியது அவசியமாயிற்று.

அந்த காலகட்டத்தில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உங்கள் உடலை உட்படுத்திக்கொண்டீர்களா?

இல்லை. நிச்சயமாக இல்லை. என் மீது அக்கறைக் கொண்ட சிலர் நான் ஒரு மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென்று விரும்பினார்கள். ஆனால் எனக்கு அது அவசியப்படவில்லை. என் உடல் சீரான நிலையில் இருப்பதை நான் துல்லியமாக உணர்ந்தேன். ஊட்டச்சத்து மருத்துவர் ஒருவரிடம் மட்டும் அவ்வப்போது என் உடலில் குறைந்து கொண்டிருக்கும் வைட்டமின்கள் குறித்துத் தொடர்ந்து தகவல்களை அறிந்து கொண்டேன். அவர் சிலர் மாத்திரைகளை உட்கொள்ளும்படி ஆலோசனை வழங்கினார்.

மருத்துவரை நேரடியாக அணுகுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. நமது உடல் குறித்த அச்சம் மேலெழ வாய்ப்பிருக்கிறது. நான் அத்தகைய சூழலை வலிந்து உருவாக்கிக் கொள்ள விரும்பவில்லை. இதுவொரு முட்டாள்தனமான மனநிலைதான் என்றாலும், என்னால் இதனை எவ்வித சிக்கல்களும் இல்லாமல் கடந்துவிட முடியும் என்று முழுமையாக நம்பிக்கைக் கொண்டிருந்தேன். இனியொருமுறை வேறொரு படத்திற்கு இத்தகைய சிரமங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நிச்சயமாக மருத்துவரை அணுகுவது குறித்து சிந்திப்பேன்.

மெஷினிஸ்ட்டின் மையப் பாத்திரமான ட்ரெவர் தனது அடையாளத்துக்கு பின்னுள்ள புதிரை அறியாதவராக உருவாக்கப்பட்டுள்ளார். ஆனால், ஒரு நடிகராக நீங்கள் அந்த புதிர்களை முழுவதுமாக தெரிந்து வைத்திருப்பீர்கள். ட்ரெவராக நடிக்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

நான் அந்த புதிர்களை முற்றிலுமாக மறந்துவிட்டேன். மறதிதான் ட்ரெவரின் முக்கியப் பிரச்சனையாக படத்தில் கையாளப்பட்டுள்ளது. அவனால் நினைவு அடுக்குகளுக்குள் கொண்டு வந்து நிறுத்த முடியாத ஏதோவொரு சம்பவம்தான் அவனை ஒரு வருடத்திற்கும் மேலாக உறங்க விடாமல் தொடர்ந்து அலைக்கழிக்கிறது. அச்சம் கொள்ளச் செய்கிறது. அதனால், அந்த புதிர்களின் பின்னுள்ள மர்மத்தை சிந்தனையில் இருந்து அழித்து விடுவதன் மூலம்தான் என்னால் ட்ரெவரிடம் முழுமையாக ஒன்றி கலந்துவிட முடியும்.

படத்தின் இறுதியில் அந்த புதிர்கள் அவிழ்ந்து எல்லா மர்மங்களும் விலகும் தருணத்தை மிகச் சிறப்பாக உருவாக்கி இருந்தார்கள். அதனால், நானும் படத்தின் இறுதியிலேயே அதனை அறிந்து கொள்வதென்று முடிவு செய்தேன். அதனால்தான் ட்ரெவரின் கதாப்பாத்திரத்தை என்னால் சிறப்பாகச் செய்ய முடிந்தது. 

ஒரு நடிகராக நீங்கள் குற்றவியல் படங்களில் நடிக்க பெரிதும் விரும்புகிறீர்களா?

குற்றவியல் வகையைச் சார்ந்த படங்களில் எப்போதுமே ஒருவித ஈர்ப்பு இருப்பது உண்மைதான். ஆனால், நான் அப்படி குறிப்பட்ட வட்டத்துக்குள் என்னை குறுக்கிக் கொள்ள விரும்பவில்லை. எல்லா விதமான கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டுமென்றுதான் விரும்புகிறேன். ஒரு நடிகன் தன்னை அப்படியொரு சிறிய வட்டத்துக்குள் அடைத்துக் கொள்வது தவறானது.

அமெரிக்கன் சைக்கோ படத்தில் நடிப்பதற்கு முன்பு என்னிடம் பலரும் ஏன் எப்போதும் நல்லவராகவே நடிக்கிறீர்கள் என்று கேட்பார்கள். ஆனால் அமெரிக்கன் சைக்கோ என் மீதான பொதுப் பார்வையை முற்றிலுமாக மாற்றி அமைத்துவிட்டது. என்னுடைய படங்களில் அதிகம் பேசப்பட்டதும் அமெரிக்கன் சைக்கோதான். அதன் அழுத்தமான மையப் பாத்திரத்தால் என்னுடைய மற்ற படங்கள் அனைத்திலுமிருந்து அது தனித்து நிற்கிறது.

ஒடுங்கிய மனம்கொண்ட, தனக்குத்தானே சிலவற்றை உருவாக்கி அதனை நிஜமென்று நம்புகிற ட்ரெவரின் கதாப்பாத்திர உருவாக்கத்தால் உங்களது இயல்பு வாழ்க்கையில் ஏதேனும் சிக்கல்கள் இருந்ததா?  

ஆமாம், ட்ரெவரின் கதாப்பாத்திரத்தை ஏற்றுக்கொண்டபிறகு எனது இயல்பில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. அமைதி மனதில் நிரந்தரமாக குடிகொண்டுவிட்டது. நான் மெஷினிஸ்ட்டில் நடித்துக்கொண்டிருந்தபோது எனது சக நடிகர்களிடம்கூட ஓரிரு வார்த்தைகளை தாண்டி பேசவில்லை. மனத்தை எப்போதும் படப்பிடிப்பு தளத்துக்கு வெளியிலேயே உலவ விட்டிருந்தேன். ட்ரெவர் பாத்திரத்தை சிதைக்காமல் இருக்க அத்தகைய மெளன நிலையை கடைப்பிடிக்க வேண்டியது எனக்கு அவசியமாயிற்று.

என்னோடு இணைந்து மெஷினிஸ்ட்டில் பணியாற்றியவர்களை சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்தபோது அவர்கள் என்னை வியப்புடன் பார்த்தார்கள். நான் படம் பிடிக்கப்பட்ட நாட்களில் அவர்களிடமிருந்து ரொம்பவே விலகி இருந்ததாக சொன்னார்கள். நான் பங்குபெறும் காட்சிகளை விரைவாக, அதாவது எட்டு வாரங்களில் இயக்கி முடித்துவிட்டதால் என்னால் என் இயல்பை  காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com