எ ஷார்ட் ஃபிலிம் அபவுட் லவ் (A Short Film About Love)

கீஸ்லோவ்ஸ்கி முதலில் ஆவணப் படங்களைத் தான் இயக்கினார். 1976-ல் அவரது
எ ஷார்ட் ஃபிலிம் அபவுட் லவ் (A Short Film About Love)

மொழி – பொலிஷ்
இயக்குனர் – க்ரிஸ்டோஃப் கீஸ்லோவஸ்கி
நடிகர்கள் – ஒலஃப் லூபன்ஸ்கோ (Olaf Lubaszenko)/க்ரேஸ்யனா (Grażyna Szapołowska)

‘மலரினும் மெல்லியது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படுவார்’

காதலின்பம் மலரை விட மென்மையானது. அந்த உண்மையை உணர்ந்து நற்பயன் பெறுபவர் இவ்வுலகில் வெகு சிலரே என்கிறார் திருவள்ளுவர். இதைவிட காதலைப் பற்றி சிறப்பாகக் கூறிய வரிகள் வேறு எதுவுமிருக்க முடியாது. அத்தகைய மெல்லிய காதலைப் பற்றியும் அது காயம்பட்டால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் விளக்குகிறது ‘க்ரிஸ்டஃப் கீஸ்லோவஸ்கி இயக்கியுள்ள பொலீஷ் மொழித் திரைப்படமான 'A Short Film About Love'.

உணர்வுகளால் கட்டுண்டு வாழ்பவர்களுக்கு காதல் அதி உன்னதம். சிலருக்கு அது வெறும் பொழுதுபோக்கு, அல்லது உடலின் தேவை. காதல் என்பது வெற்றுச் சொல் எனச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் காதல் எனும் மென் உணர்வால்தான் உலகம் இயங்குகிறது. காதல் என்பது ஒரு ஆணையோ பெண்ணையோ நேசிப்பது மட்டுமல்ல. மனிதரில் தொடங்கி எல்லாவற்றின் மீதும் அன்பும் பிரியமும் விரிவடைதல் தான். வாழ்வின் மீதான காதல் நம்மை எல்லா உயிரையும் நேசிக்கச் செய்யும் எனில் அது உயர் காதல். இத்திரைப்படம் இளைஞன் ஒருவனுக்கு அவனின் பருவ வயதில் வரும் காதலை அதனால் ஏற்படும் பரவசங்களையும் வலிகளையும் பதிவு செய்திருக்கிறது. 

இளமையின் வசீகரங்கள் நிரம்பி வழியும் பத்தொன்பது வயது இளைஞனான டாமெக் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றின் இரண்டாவது தளத்தில் வசிக்கிறான். தன் நண்பனின் தாயோடு வசிப்பவன். தன் ஒரே நண்பன் ராணுவத்தில் சேர்ந்துவிடவே அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த அவன் நண்பன் வீட்டிலேயே தங்கி அவனுடைய தாயை கவனித்துக் கொள்கிறான். தன் படுக்கை அறையை டாமெக்கிற்கு தந்த நண்பனின் முக்கிய பொழுதுபோக்காய் இருந்த விஷயம் எதிர் மாடியில் தொலைநோக்கு வழியே ஒரு பெண்ணை ரசிப்பது எனச்
சொல்லியிருக்கிறான்.

யாரையும் மறுமுறை திரும்பிப் பார்க்கச் செய்யும் அழகியான மக்தா இளமையின் கடைசி படியில் இருப்பவள். காதலிப்பதும் அதில் சலித்துப் போவதுமாய் வெறுப்பான ஒரு தனிமை வாழ்க்கையை நடுத்துபவள். தினமும் தொலைநோக்கு கருவியினால் அவளுடைய வாழ்க்கையை நேரேதிரே பார்த்துக் கொண்டிருந்த டாமெக் வெகு சீக்கிரம் அவள் மீது பித்தாகிறான். தினமும் அறையில் மேஜை விளக்கை மட்டும் எரிய வைத்து அவளைக் காணக் காத்திருப்பான். சரியாக இரவு 8.30 மணிக்கு அவள் திரும்பி வரும் நேரத்தை தன் கடிகாரத்தில் அலாரம் வைத்துவிடுவான். அவள் படுக்கை அறைக்குள் வந்ததும் கண் எடுக்காமல் அவளையே தொலைநோக்கியில் பார்த்துக் கொண்டிருப்பான். அவள் உண்ணும் போது தான் சாப்பிடுவதும், அவள் உறங்குவதை சலிக்கும் வரை பார்த்து ரசித்துவிட்டு பின் மனமில்லாமல் தூங்குவதுமாய் அவன் நாளும் பொழுதும் கழிகிறது. 

ஓரிரவு அவள் அறைக்கு வந்ததும் அவளுடைய தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவள் நம்பருக்கு டயல் செய்து அவள் குரலைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தான். அவள் எரிச்சலுற்று திட்டிவிடவே சிறிது நேரம் கழித்து மீண்டும் ஃபோன் செய்து மன்னிப்பு கேட்டான். அவனுடைய வினோத நடவடிக்கைகளை அறிந்த நண்பனின் தாய் அவனை திசை திருப்ப முயன்றாள். ஆனால் அவனுடைய மனம் அவளிடம் லயித்துவிட்டது. தொலைந்து போன இதயத்தை மீட்க அவளிடம் பேசியே ஆகவேண்டும் எனும் நிலையில் இருந்தான். அவளுடன் வெகு நாள் பழகியது போலவே அவன் உள்ளம் சதா சர்வ காலமும் அவள் நினைவுகளில் மூழ்கித் திளைத்தது. மறுநாள் பகுதி நேர ஊழியனாக அவள் வீட்டில் பால் கேன் போடும் வேலையில் சேர்ந்துவிட்டான். அதிகாலையில் அவள் வீட்டு வாசலில் படபடப்பாக வந்து நின்று பழைய பால் கேனை எடுத்து ஒளித்து வைத்துவிட்டு அழைப்பு மணியை அழுத்தி மக்தாவை வெளியே வரவழைத்து பழைய கேன் இல்லை என்றான். அவள் வீட்டினுள் தேடி வேறு ஏதோ கேனை கொடுத்ததும் அவளை வெகு அருகில் பார்க்க முடிந்ததை நினைத்து மகிழ்ச்சியடைந்தான்.

கிட்டத்தட்ட ஒரு வருடம் அவளை தொலைநோக்கியிலிருந்து பார்த்து பார்த்து ரசித்து பித்தேறி அவள் மீது தீரா காதலுற்றான் டாமெக். ஓரிரவு மக்தா தாமதமாக வருகிறாள். அவளை நினைத்து கவலையில் ஆழ்ந்திருக்கையில் இரவு வெகு நேரம் கழித்து ஒரு காரில் நண்பனுடன் வருகிறாள் மக்தா. அந்த மனிதனை வீட்டிற்குள் அழைத்துச் செல்லவும் டாமெக் பதற்றமடைகிறான். என்ன செய்வது எனத் தெரியாமல் எரிச்சலடைந்து இறுதியில் கேஸ் கம்பெனிக்கு ஃபோன் செய்து அங்கு கேஸ் லீக்காகிறது மிகவும் அவசரம் எனச் சொல்லி அவர்கள் விலாசத்தை கேட்ட போது யோசிக்காமல் அவளுடைய முகவரியைத் தந்துவிடுகிறான். நள்ளிரவில் கேஸ் கம்பெனி ஆட்கள் கிளம்பி வந்து அவள் வீட்டின் சமையலறையை சோதித்து எல்லாம் சரியாக இருக்கிறது எனச் சொல்கிறார்கள். மக்தா யார் இவர்களை வரச் சொல்லியது என குழப்பம் அடைகிறாள். டாமெக் நிம்மதி பெருமூச்சு விடுகிறான்.

ஒரு நாள் தொலைநோக்கியில் டாமெக் பார்த்த காட்சி அவனை மிகவும் சங்கடப்படுத்தியது. அவனின் ப்ரியமான பெண் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். நண்பனின் தாயிடம் மனிதர்கள் ஏன் அழுகிறார்கள் எனக் கேட்கிறான். மிகவும் உற்றவர் யாராவது இறந்துபோனால் அழுவார்கள் அல்லது யாருமற்ற தனிமை எத்தகையவரையும் அழச் செய்யும் என்கிறாள். செயலற்றுப் போய் மக்தாவிற்காக மனம் வருந்துகிறான் டாமெக். அடுத்த நாள் பால் கேன் போடுகையில் அவள் போஸ்ட் பாக்ஸில் இரண்டு மணி ஆர்டர் ரசீதுகளை வைக்கிறான். அவன் எதிர்ப்பார்த்தது போல் மக்தா பணம் வந்திருக்கிறது என நினைத்து தபால் அலுவலகத்திற்கு வருகிறாள். அவனிடம் அந்த ரசீதை காண்பித்து பணம் கேட்கிறாள். டாமெக் அதில் யாரும் பணம் அனுப்பவில்லை எனச் சொல்லவே, ஆத்திரமடைந்த மக்தா மேலதிகாரியை அழைக்குமாறு சொல்கிறாள். மேலதிகாரி மக்தாவின் பெயருக்கு யாரும் பணம் அனுப்பவில்லை, யாரோ விளையாடியிருக்கிறார்கள் எனச் சொல்லி அதை கிழித்துப் போடுகிறாள். மிகவும் கோபமடைந்த மக்தா அவர்களைத் திட்டிக் கொண்டே அங்கிருந்து கிளம்புகிறாள். அவளைத் தொடர்ந்து வந்த டாமெக் நான்தான் அதை அனுப்பினேன் என உண்மையை ஒப்புக் கொள்கிறான். ஏன் இப்படிச் செய்தாய் என்று அவள் கேட்கவே மெளனமாக இருக்கிறான். அவனைத் திட்டிவிட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து போகவே, அவளைப் பார்த்து ‘நீ ஏன் நேற்று இரவு அழுதாய்' எனக் கத்துகிறான். அதிர்ச்சி அடைந்த மக்தா அவனிடம் வந்து 'உனக்கு எப்படி தெரியும்' எனக் கேட்கவே ‘நான் பார்த்தேன்..உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன்' என்கிறான். கடுமையான கோபம் அடைந்த மக்தா அது தவறு என உனக்குத் தெரியாதா இனி அப்படி செய்யாதே என எச்சரித்துவிட்டுப் போகிறாள்.

அன்று இரவு அவள் வீட்டிற்கு வருவதை வழமை போலவே தொலைநோக்கியில் பார்க்கிறான் டாமெக். அவள் சிரித்தபடி இருப்பதைப் பார்த்து குழம்புகிறான். அவள் தொலைபேசியில் அழைக்குமாறு சைகை செய்யவே போனை எடுக்கிறான். என்னை தானே பார்க்க விரும்புகிறாய் நன்றாக நான் செய்யப் போவதைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள் எனச் சொல்லி போனை வைத்துவிட்டு கதவைத் திறந்து தன் பழைய காதலனைக் கட்டி அணைக்கிறாள். டாமெக் மனம் பதைபதைக்கிறான். அந்த காதலனிடம் சைகையில் தங்களை ஒருவன் எதிர்மாடியிலிருந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்கிறாள். அவன் ஆத்திரமுற்று இவன் வீட்டிற்கு கீழ் நின்று வெளியே வருமாறு கத்துகிறான். கீழே வந்த டாமெக்கை அடித்துத் துவைக்கிறான். அடுத்த நாள் ரத்தக் காயத்தோடு அவள் வீட்டிற்கு பால் கேன் போடுகையில் மக்தா அவனைப் பார்த்து பரிதாபப்படுகிறாள். உனக்கு என்னிடம் என்ன வேண்டும் ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய் எனக் கேட்கிறாள். டாமெக் அவள் கண்களைப் பார்த்து உன்னை காதலிக்கிறேன் என்கிறான். அவள் வியப்புற்று என்னுடன் ஊர் சுற்ற வேண்டுமா, அல்லது தங்க வேண்டுமா நேரிடையாகக் கேட்க, திகைத்துப் போன டாமெக் எதுவும் வேண்டாம் எனச் சொல்லி அங்கிருந்து வேகமாக வெளியேறுகிறான். அறைக்குச் சென்றவுடன் அவளுக்கு போன் செய்து தன்னுடன் ஐஸ் க்ரீம் சாப்பிட வருமாறு அழைக்கிறான். அன்று மாலை அவர்கள் ரெஸ்டாரெண்டுக்குச் செல்கிறார்கள். தனக்கு ஐஸ் க்ரீம் பிடிக்காது என மக்தா சொல்லவே, அவளுக்கு டீயும் பியரும் ஆர்டர் செய்துவிட்டு அவன் ஐஸ்கீரிம் சாப்பிடுகிறான். டாமெக் மிகவும் மனம் நெகிழ்ந்து தன்னுடைய கதையை அவளுக்குச் சொல்கிறான். தன்னைப் போல அவனும் யாருமற்றவன் என அறிந்த மக்தாவின் மனம் இளகுகிறது. தன்னுடைய கையை பற்றிக் கொள்ளும்படி அவனிடம் கேட்கிறாள். நடுங்கியபடி அவளின் கையை அவன் தொடுகிறான், தன்னுடைய வீட்டுக்கு அன்றிரவு வரச் சொல்கிறாள். இருவரும் ஒன்றாக பஸ் ஏறி வீட்டுக்குச் செல்கிறார்கள்.

அவளுடன் அவள் வீட்டுக்கு படபடப்புடன் அவன் போவதை எதிர் மாடியிலிருந்து ஒரு ஜோடிக் கண்கள் பார்க்கின்றன. அவனுடைய நண்பனின் தாய் இவன் தினமும் என்ன செய்கிறான் என சோதிக்க அவன் அறைக்கு வந்து தொலைநோக்கியில் பார்த்தாள் டாமெக் அப்பெண்ணுடன் அறையில் நுழையும் காட்சி அவள் கண்களுக்குத் தென்படுகிறது. மக்தா அவனை வரவேற்று உடை மாற்றச் செல்கிறாள். அவன் கையில் அவளுக்கான அழகான பரிசுப் பொருள் இருப்பதைப் பார்த்து என்னவென்று கேட்கிறாள். உனக்காக நான் வாங்கிய பரிசு என்றதும் நீ பரிசு தரும் அளவிற்கு நான் பரிசுத்தமானவள் இல்லை, உனக்குத் தெரியும் தானே என்கிறாள். அவன் அமைதியாக அவளையே பார்க்கிறான். அவனை நாற்காலியில் அமரச் செய்து அவன் காலடியில் உட்கார்ந்து கொள்கிறாள். அவனுக்கு வியர்த்துக் கொட்டி படபடப்பாக இருக்கிறது. அத்தனை நெருக்கத்தில் அவளைப் பார்த்ததும் பரவசமாகிறான். அவள் அவனிடம் பேசிக் கொண்டே நெருங்க, அவன் பதற்றமடைகிறான். அவள் அவன் பயத்தை ரசித்தபடி ஒரு கட்டத்தில் இவ்வளவுதான் காதல்..புரிகிறதா என்கிறாள். அவளின் செய்கையால் மனம் உடைந்த டாமெக் அங்கிருந்து வேகமாக வெளியேறுகிறான். முதலில் அவன் போனதை அலட்சியப்படுத்தினாலும் அவன் மெல்லிய மனதை உடைத்துவிட்டோம் என அவளுக்கு உறைக்கிறது. எதிர் ஜன்னலைப் பார்த்து போன் செய் எனச் சைகை செய்கிறாள்.

டாமெக் நேராக வீட்டுக்குள் நுழைந்து பாத்ரூமிற்குச் செல்கிறான். அங்கிருந்த புதிய ப்ளேடை எடுத்து தண்ணீர் பேஸினுள் போட்டு கையை அதில் விட்டு அறுத்துக் கொள்கிறான். எதிர் மாடியில் மக்தா மனம் பதற்றம் அடைகிறாள். ’ஸாரி, திரும்பி வா’ என எழுதி ஜன்னலில் ஒட்டுகிறாள். பதில் ஏதுமில்லை. சிறிது நேரம் காத்திருந்துவிட்டு நேராக அவன் குடியிருப்பிற்கு சென்று நண்பனின் தாயிடம் அவன் இருக்கிறானா என விசாரிக்கிறாள். அவள் இருக்கிறான் என்ன வேண்டும் என கேட்கவே, அவன் கோட்டை விட்டுச் சென்றுவிட்டான், அதை அவனிடம் திருப்பி தரவேண்டும் என்கவே உள்ளே வை என நண்பனின் தாய் சொல்கிறாள் அவன் அறைக்குச் சென்று அவனுடைய கோட்டை வைக்கும் போது தொலைநோக்கியைப் பார்க்கிறாள். இதிலிருந்து தான் உன்னை தினமும் அவன் பார்த்துக் கொண்டிருப்பான், அவன் உன்னை விரும்புகிறானா என நண்பனின் தாய் கேட்கவே ஆமாம் என்கிறாள் மகதா. நீ ஒழுக்கமான பெண் இல்லை, அப்படித்தானே என கேட்கவும் அதற்கும் ஆமாம் என்கிறாள் மக்தா. அவன் எங்கே எனக் கேட்கவே, உடல் நலமில்லை மருத்துவமனையில் இருக்கிறான் என்று சொல்லிவிட்டு கதவை அறைந்து சாத்திவிடுகிறாள் நண்பனின் தாய். சோகத்துடன் சென்ற அவள் மீண்டும் கதவை தட்டுகிறாள், எரிச்சலுடன் கதவைத் திறந்த தாயிடம் அவனுடைய பெயர் என்ன எனக் கேட்கிறாள். ’டாமெக்’ என்று அவள் சொல்லவே அவன் பெயரை முதன்முறையாக ‘டாமெக்’ என உச்சரிக்கிறாள்.

அவனுக்கு என்னவாயிற்று என்பது தெரியாமல் மனம் நொந்து மிகவும் கஷ்டப்படுகிறாள் மக்தா. உண்மைக் காதல் என்றால் என்ன என்பதை உணர வைத்த அவனின் மீது அவளுக்கு வாழ்க்கையில் முதன் முறையாக காதல் ஏற்படுகிறது. அவனைப் பற்றி அவன் அலுவலகத்திற்குச் சென்று விசாரிக்கிறாள். அப்போதுதான் தன்னால்தான் அவன் கையில் கீறிக்கொண்டு மருத்துவமனையில் இருப்பது தெரிகிறது. குற்றவுணர்வும் காதலுணர்வும் அவளைக் கொல்ல, அவனை நினைத்து இரவில் அழுகிறாள். அவன் வீட்டிற்கு போய் விசாரித்தால் நண்பனின் தாய் சரியாக பதில் சொல்வதில்லை. எப்போதுமே அவன் இன்னும் வரவில்லை என்கிறாள். என்ன செய்வது என்று மிகவும் குழப்பமாகி தன்னுடைய அலமாரியில் பழைய சாமான்கள் வைத்திருக்கும் பெட்டியில் பைனாகுலர் ஒன்றை கண்டுபிடித்து அதிலிருந்து எதிர் வீட்டை கண்காணிக்கத் துவங்குகிறாள்.

அடுத்த நாள் இரவு டாமெக்கின் நிழல் ஜன்னலில் சன்னமாக தெரிகிறது. பரபரப்படைந்த மக்தா கோட்டை அணிந்து கொண்டு அவசர அவசரமாக அவனுடைய குடியிருப்புக்கு நடந்தாள். வழமை போலவே நண்பனின் தாய் அவன் இல்லை என்றாலும் அவளை விலக்கி உள்ளே புயலாக புகுந்துவிடுகிறாள். கையில் கட்டுப் போடப்பட்டிருக்க, டாமெக் அசையாமல் படுத்துக் கிடக்கிறான். ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தான். விழிகள் மூடியிருக்க மெல்லிய இசை கசிய அவன் உறக்கத்தினுள் நினைவுகள் மீண்டெழுகிறது (படத்தில் முதல் காட்சி இதுதான்) . தயக்கத்துடன் அவன் அருகில் சென்று அவன் கையை மக்தா தொட முயல்கையில் தாய் தடுக்கிறாள். அவனுடைய தொலைநோக்கியின் அருகில் சென்று அதன் மேலிருந்த துணியை விலக்கி அவனின் கண்களால் அவளுடைய வீட்டைப் பார்க்கிறாள். அதில் முன்பு அவள் நிற்பது, நடப்பது, சிரிப்பது, அழுவது எல்லாம் காட்சியாகத் தெரிகிறது. அதன்பின் தன்னுடைய கண்களால் அத் தொலைநோக்கியில் அவள் பார்க்கிறாள். தனிமையில் அவனை நினைத்து அவள் அழுது கொண்டிருக்கிறாள். டாமெக் அருகில் வருகிறான். அவள் தோள் தொட்டு மெல்ல அவளை அணைத்து தேற்றுகிறான். காவியத்தன்மையோடு படம் நிறைவடைகிறது. 

மென் உணர்வுகள் அறுபடும் போது மனம் அடையும் பெரும் துயரை இத்திரைப்படம் அற்புதமாய் காட்சிப்படுத்தியுள்ளது. எல்லோரும் எதையோ தேடிக்கொண்டிருக்கிறோம். தேடிக் கொண்டிருப்பது கையில் கிடைத்துவிட்டால் அடுத்த பொருள். ‘அடைய முடியா பொருளின் மீது ஆசை தீராது' எனும் பாடல் வரி எத்தகைய உண்மை. பருவ வயதில் அனைவரும் தேடுவது உற்ற துணையை. தன்னைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு உயிரை. வெகு சிலரின் தேடலே பூர்த்தியாகிறது. அவர்களின் காதல் அவன் விழிகள் திறந்ததும் வெற்றியடையும். அவளுக்காக நிச்சயம் அவன் மீண்டும் வருவான். ஆனால் அப்போது அவனிடம் இருந்த களங்கமற்ற அன்பு இருக்குமா என அவனுக்கே தெரியாது. 

மூன்றே கதாபாத்திரங்களின் வாயிலாக சொல்லப்பட்டிருக்கும் இக்கதையில் மென்மையான இசையும், நுட்பமான கேமராவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. முதலில் டாமெக்கின் பார்வையிலிருந்து கதை ஆரம்பித்து, முக்கியமான கட்டத்தில் நண்பனின் தாய் மூலம் நகர்ந்து, அதன்பின் மக்தாவின் பார்வையிலிருந்து விரிவடைந்து கவிதையாய் நிறைவடைகிறது. தேவையான இடத்தில் மட்டுமே இசை, மற்ற சமயங்களில் நிசப்தம் என மனத்தை உருக்கியிருக்கிறார் இசையமைப்பாளர். அதுவும் இறுதிக் காட்சியில் மக்தா தொலைநோக்கியில் பார்க்கையில் கனவு காண்பது போன்று உணர்வுகளை மேலெழச் செய்து மனத்தை ததும்பச் செய்யும் அற்புதமான இசை. காதலில் விழும் எல்லாருக்கும் சொல்ல முடியாத துயரொன்று இத்திரைப்படம் முடிந்ததும் மனத்தை அழுத்தும்.  

இப்படத்தின் இயக்குனர் போலந்தின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான க்ரைஸ்டாஃப் கீஸ்லோவ்ஸ்கி. கீஸ்லோவ்ஸ்கியின் திரைமொழி மிகவும் நுட்பமானது. இயல்பான காட்சிகளின் வழியாக தான் சொல்லவந்ததை பார்வையாளர்களுக்குள் கடத்தும் ஆற்றல்மிக்கவர். கான், வெனிஸ் உள்ளிட்ட உலகின் முக்கியமான திரைப்பட விழாக்களில் இவரது படங்கள் விருதுகள் பெற்றுள்ளன. 

கீஸ்லோவ்ஸ்கி முதலில் ஆவணப் படங்களைத் தான் இயக்கினார். 1976-ல் அவரது முதல் முழுநீள திரைப்படம், தி ஸ்கார் (The Scar) வெளியானது. 1979 -ல் அவர் இயக்கிய கேமரா பஃப் (Camera Buff) எனும் படம் சர்வதேச விழாக்களில் பரிசுகளை வென்றது. பின்னர் டெக்கோலக் என்ற பெயரில் அறியப்படும் பத்து குறும்படங்களில் இரண்டை மட்டும் மேலும் விஸ்தரித்து திரைப்படமாக இயக்கினார். ஏ ஷார்ட் ஃபிலிம் எபௌட் லவ், ஏ ஷார்ட் ஃபிலிம் எபௌட் கில்லிங். இந்த இரு படங்களும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. கீஸ்லோவ்ஸ்கி ப்ளூ, வொயிட், ரெட் என்ற பெயர்களில் த்ரீ கலர்ஸ் ட்ரையாலஜி என்று அழைக்கப்படும் படங்களை எடுத்தார். 1994-ல் திரைப்பட இயக்கத்திலிருந்து ஓய்வெடுக்க விரும்புவதாக கீஸ்லோவ்ஸ்கி அறிவித்தார். அதன்பின் 1996 மார்ச் 13 -ஆம் தேதி தனது 54-வது வயதில், இதய அறுவை சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

உலகம் முழுவதும் கீஸ்லோவ்ஸ்கிக்கு ரசிகர்கள் உள்ளார்கள். உலகளவில் தலைசிறந்த 25 இயக்குனர்களை பட்டியலிட்டால் அதில் கீஸ்லோவ்ஸ்கியின் பெயரும் இடம் பெறும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com