குற்றங்கள் கொண்டாட்டத்திற்கானவை அல்ல! ‘சிட்டி ஆஃப் காட்’ (City Of God) இயக்குனர் ஃபெர்னான்டோ மெரலாஸ் பேட்டி!

ரியோ டி ஜெனிரோ என்றாலே  அழகுச் செறிவூட்டும் கடற்கரைக் காட்சிகளும், துள்ளலான இசையும்,
குற்றங்கள் கொண்டாட்டத்திற்கானவை அல்ல! ‘சிட்டி ஆஃப் காட்’ (City Of God) இயக்குனர் ஃபெர்னான்டோ மெரலாஸ் பேட்டி!

ரியோ டி ஜெனிரோ என்றாலே  அழகுச் செறிவூட்டும் கடற்கரைக் காட்சிகளும், துள்ளலான இசையும், வெதுவெதுப்பான அதன் வெயில் பொழுதுகளும்தான் நம் மனத்தினுள் தோன்றும். உலகின் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளை தன்னை நோக்கி வரச் செய்யும் இனிமையான நகரமாகத்தான் இதுவரையிலும் நாம் ரியோவைப் பார்த்து பழகியிருப்போம். ஆனால், 2002 ஆம் ஆண்டு வெளியான சிட்டி ஆஃப் காட் திரைப்படம், ரியோவின் மீதான நமது வண்ணமயமான கனவுகளை மறுத்து, அதன் அசலானக் கோர முகத்தை சினிமாவில் காரசாரமாகக் காண்பித்தது. ரியோவின் ஒதுக்குப்புறமான சேரிகளில் வேர்விட்டு தலைமுறை தலைமுறையாக வளர்த்தெடுக்கப்பட்ட வன்முறை நிகழ்வுகளையும், அதனை இன்று வரையிலும் கட்டி இழுத்துக் கொண்டிருக்கும் வன்முறையாளர்களின் வாழ்க்கையையும் எந்தவொரு சமரசமுமின்றி உள்ளபடியே பதிவு செய்த படம் ‘சிட்டி ஆஃப் காட்’.

குற்ற நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டத் திரைப்படங்கள் நமக்கு புதியவையல்ல என்றாலும், கதை சொல்லும் பாணியிலும், தொழிற்நுட்ப நேர்த்தியாலும், அழுத்தமான திரைக்கதையாலும் மற்ற குற்றவியல் படங்கள் அனைத்திலிருந்து சிட்டி ஆஃப் காட் தனித்து நிற்கிறது. மூன்று தலைமுறையை வெவ்வேறு ஒளியமைப்புகளின் மூலம் துல்லியமாக பதிவு செய்திருந்தது. உலகின் பல்வேறு விருதுகளை வாரிக் குவித்த சிட்டி ஆஃப் காடின் தாக்கத்தில் தமிழிலும் சில படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உலக சினிமா அபிமானிகளால் சிறந்த படமாக அங்கீகரிக்கப்பட்ட சிட்டி ஆஃப் காடின் இயக்குனர் ஃபெர்னான்டோ மெரலாஸிடம் டெரி கீஃப் என்பவர் மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் வடிவம் இது.

பாவ்லோ லின்ஸ் எழுதிய  ‘சிட்டி ஆஃப் காட்’ நாவலை படமாக்கவேண்டுமென்று எப்போது முடிவு செய்தீர்கள்?

முதலில் ஒன்றை தெளிவுப்படுத்திவிட விரும்புகிறேன். பிரேசில் தனது எல்லைக்குள்ளாகவே இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இருவேறு நாடுகளைப் போல இவ்விரு பகுதிகளும் தங்களுக்குள் ஏராளமான முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. நான் வசிக்கும் மத்தியதர பிரேசிலைதான், நாம் பிரேசில் என்று பொதுவாக பிரதானப் படுத்துகிறோம். எங்களிடமிருந்து முழுவதுமாக வேறுபட்டு கிடக்கும் ரியோவில் 18 சதவிகித மக்கள் சேரிகளில் வசிக்கிறார்கள். ரியோவின் சேரிகள் இருண்ட வெளியைப் போன்றது. அங்கு நிகழும் எதுவும் வெளியுலகிற்கு கசிய முடியாதபடி இரும்புத் திரைக் கொண்டு மூடப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதிகளைப் பற்றி நாங்கள் தெரிந்து வைத்திருப்பவை யாவும் வெற்றுக் கணிப்புகள்தான். எப்போதாவது செய்தித்தாள்களில் அடிபடுகின்ற ரியோவின் குற்ற நடவடிக்கைகளை தவிர்த்து எங்களுக்கு ரியோவைப் பற்றி வேறெதுவும் தெரியாது. மத்தியதர பிரேசில்வாசிகளுக்கு ரியோவின் சேரிகள் என்பது எப்போதுமே புரியாத புதிர்தான்.

இத்தகைய சூழலில்தான்  லின்ஸ் எழுதிய சிட்டி ஆஃப் காட் நாவலை வாசிக்க நேர்ந்தது. லின்ஸ் ரியோவில் வளர்ந்தவர் என்பதால் அப்பகுதியைப் பற்றிய புதிர்தன்மைக் கொண்ட வினாக்களுக்கு அவரால் நேரடியான பதிலைக் கொடுக்க முடிந்துள்ளது. எட்டு வருட அயராத உழைப்பால் இந்நாவலை அவர் முழுமைப்படுத்தி உள்ளார். ரியோவில் உலாவும் பல நிஜ மனிதர்கள் அவரது நாவலில் பாத்திரப்படுத்தப்பட்டுள்ளார்கள். காவல்துறை இல்லாத, நீதிமன்றங்கள் இல்லாத, மருத்துவ வசதிகள் அல்லாத போதை மருந்து வியாபாரிகளால் கட்டுப்படுத்தப்பட்ட முற்றிலும் வேறானவொரு பிரேசிலை அதில் காண முடிந்தது.

லின்ஸ் இந்நாவலை வெறும் சாகச நாவலாக எழுதாமல், மனிதநேயத்துடன் அதனைக் கையாண்டிருக்கிறார். அதனால்தான் நான் இந்த நாவலை படமாக்க முடிவு செய்தேன். ரியோவின் இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமானது. போதை மருந்து வியாபாரிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக 60, 70 சேரிகளை தங்களது கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இத்தகைய அத்துமீறல்கள் எப்படி துவங்கப்பட்டன என்ற அடிப்படைக் கேள்வியிலிருந்துதான் இந்த மொத்தப் படமும் துவங்குகிறது.

நாவலிலிருந்து எந்தளவுக்கு உங்களது திரைப்படம் மாறுபட்டுள்ளது?

நாங்கள் நாவலில்  இருந்து முழுவதுமாக வேறுப்பட்டுதான்  படத்துக்கான திரைக்கதையை  அமைத்தோம். ஏனெனில், லின்ஸின் நாவல் 600 பக்கங்களை கொண்டது. சிட்டி ஆஃப் காடின் 250 தனி மனிதர்களை தொடந்து துரத்தியபடியே பயணிக்கக் கூடியது. அதனால் திரைப்படத்துக்கு தேவையான ஒரு கட்டமைப்பு அதில் இல்லாதிருந்தது. சிட்டி ஆஃப் காடை படமாக்குவது என்ற முடிவுக்கு வந்ததும் முதல் வேலையாக, படத்துக்கு தேவையான ஒரு கட்டமைப்பை நாங்கள் உருவாக்கினோம். அதன்பிறகு, அந்நகரத்தின் பழங்கதைகளை பார்வையாளனுக்கு விவரிக்கக் கூடிய ராக்கெட்டின் கதாப்பாத்திரத்தை உருவாக்கினோம். பின்பு, கதையை மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நடப்பதாக பிரித்தோம். தொடர்ந்து, பல்வேறு பகுதிகள், பல கதாப்பாத்திரங்கள் என்று மூச்சு முட்டக்கூடிய அளவுக்கு கடும் உழைப்பை நாங்கள் சுரக்க வேண்டியிருந்தது.

பல சட்டவிரோத கும்பல்களால் கைமாற்றப்பட்ட ரியோவில் குற்ற நிகழ்வுகளை துவக்கி வைத்த லில்சியும், பென்னியும் இன்றும் அப்பகுதி மக்களால் நினைக்கப்படுகிறார்களா?

ரியோவின் 35 வயதை தாண்டிய அனைவரும் அவர்களை நினைவு வைத்திருக்கிறார்கள். நாவலின் மூலமாகதான் நாங்கள் அவர்களை அறிந்து கொண்டோம் என்றாலும், படத்திற்காக சில கள ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ரியோவில் படப்பிடிப்புக்கான இடங்களைத் தெரிவு  செய்ய களப்பணிகள் அவசியமாயிற்று. அப்போதுதான் அப்பகுதி மக்கள் மத்தியில் லில்சியும், பென்னியும் இன்றும் நாயக உருவமாக திகழ்கிறார்கள் என்பதைக் கண்டு கொண்டோம். அவ்விருவரும் தங்களுக்கு நிறைய உதவிகள் செய்ததாக வெளிப்படையாகவே சிலர் ஒப்புக் கொண்டனர்.

ஆனால் இன்றைய ரியோவின் சூழல் முற்றிலும் வேறு மாதிரியானது. சதா சர்வகாலமும் குற்றங்கள் நிரம்பிய பகுதியில் வாழ மக்கள் அஞ்சுகிறார்கள். எங்களுடைய படம் வெளியான பிறகு, சிலர் நேரடியாக எங்களுக்கு கடிதம் எழுதினார்கள். சிட்டி ஆஃப் காடிற்கு அரசு அதிகாரிகள் சிலர் வந்து பார்வையிட்டதாகவும், விரைவில் சேரிகளை மாற்றியமைக்கும் பணிகள் துவங்கவிருப்பதாகவும் அதில் எழுதியிருந்தார்கள். உண்மையில் இதைதான் எங்களுடைய படத்தின் மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம்.

தொழில் முறை நடிகர்களை  தவிர்த்துவிட்டு ரியோ பகுதி  மக்களையே நடிக்க வைக்க எதனால் முடிவு செய்தீர்கள்?

சிட்டி ஆஃப் காட் நாவலை வாசித்தபோது, ரியோ நகரத்துடன் எனக்கு ஏற்பட்ட  வினோதமான உறவைப் பார்வையாளர்களும் உணர வேண்டுமென்று முடிவு செய்தேன். ஆனால் தொழில்முறை நடிகர்களைக் கொண்டு அத்தகைய உண்மைத் தன்மையான பாத்திர வெளிப்பாட்டை பெறுவது மிகவும் சிரமம் என்பதால், ரியோ பகுதியின் அசலான மனிதர்ளையே அதில் நடிக்க வைப்பது என்ற முடிவுக்கு வந்தேன். அதற்காக, ஆறு மாதங்களுக்கு சேரிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 200 பேருக்கு நாங்கள் கூட்டு பயிற்சி முகாம் ஒன்றை நடத்தினோம். ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டாலும், சிறிது நாட்களிலேயே எங்களது பாத்திரங்களில் தங்களை இயல்பாகப் பொருத்திக் கொண்டார்கள்.

உங்களது கூட்டு பயிற்சி  முகாமில் கலந்து கொண்டவர்களில், பிரச்சனைக்குரிய நபர்கள்  யாரேனும் கலந்து கொண்டார்களா?

ஆமாம், நாங்கள் பயிற்சி  முகாமை துவங்கியிருந்த ஆரம்ப  நாட்களில், சிலர் பகலில் முகாமில் கலந்து கொண்டு இரவு நேரங்களில் போதை பொருட்களை  விற்க அனுமதி அளிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அத்தகைய  கோரிக்கைகளை  நாங்கள் முழுவதுமாக நிராகரித்துவிட்டோம். போதை பொருட்களை விற்பது அவர்களுக்கு அத்தியாவசியம் என்றால் உடனடியாக முகாமை விட்டு விலகும்படியும் கட்டளையிட்டிருந்தோம். அதனால், சிலர் துவக்கத்திலேயே முகாமை விட்டு விலகிவிட்டனர்.

உங்கள் படத்தில் நடித்த ரியோ பகுதி மக்களின் வாழ்க்கை நிலை இன்று எவ்வாறு உள்ளது?

அவர்களின் வாழ்நிலை பெரிதும் மாற்றமடைந்துள்ளது. அவர்கள் கேமராவை சுயமாக இயக்கக் கற்றுக் கொண்டனர். இப்போது பல ஆவணப்படங்களை சுயமாகவே இயக்கி வருகிறார்கள். குழுக்குழுவாக பிரிந்து புதுபுது கதைகளை படங்களாக உருவாக்கி மகிழ்கிறார்கள். பல முக்கியஸ்தர்களும் அவர்களுக்கு தன்னிச்சையாக உதவிகளை செய்து வருகிறார்கள். அவர்களுள் ஜெனிஃபர் லோபஸ் ஒருவர்.

சிட்டி ஆஃப் காடில் நடித்த பலரும், இன்று அப்பகுதியின் பிரபலங்களாகிவிட்டார்கள். அவர்கள் தெருவில் செல்லும்போது அப்பகுதி மக்கள் அவர்களிடம் ஆட்டோகிராஃப் கேட்டு இம்சைப்படுத்துகிறார்கள். நானும் தனிப்பட்ட முறையில் சிலரை என்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் பணியில் அமர்த்திக் கொண்டுள்ளேன். சிலரை சேரிகளில் இருந்து மீட்டெடுத்து என்னுடைய ஊரில் குடியமர்த்தியுள்ளேன். அவர்களின் வாழ்க்கையில் சமீப நாட்களில் மின்னிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியே என்னுடைய படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

சிட்டி ஆஃப் காட் சராசரியான பொழுதுபோக்கு படமாக மட்டுமில்லாமல், அழுத்தமான  சமூக அக்கறை கொண்ட படமாகவும்  உலக அரங்கில் போற்றப்படுகிறது. பிரேசிலில்  இப்படத்துக்கான எதிர்வினைகள் என்னென்ன?

என்னைப் பொறுத்தவரை நான் குற்ற நிகழ்வுகளையோ, குற்றவாளிகளையோ கொண்டாட விரும்பவில்லை. என்னுடைய படத்தில் குற்றங்களை யாவும் மறைமுகமாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு சராசரி அமெரிக்க வன்முறைப் படமாக இருந்திருந்தால், நிச்சயமாக குற்றங்கள் போற்றப்பட்டிருக்கும் (சிரிக்கிறார்). ஆனால், நான் அதை விரும்பவில்லை. பிரேசிலில் சிட்டி ஆஃப் காடை ஒரு சாதாரண கமர்ஷியல் படமாகத்தான்  பார்க்கிறார்கள். ஆனால், இப்போது சிட்டி ஆஃப் காட் அரசாங்கத்தின் கையில் உள்ளது. அரசு நிறைய மாற்றங்களை அங்கு ஏற்படுத்தவிருக்கிறது. ஒரு இயக்குனராக இதைவிட பெருமைபட்டுக் கொள்ள, வேறு என்ன இருக்க முடியும்.  

(டெரி கீஃபிடம் மெயில் வழியே அனுமதி பெற்றப் பின்புதான் மொழிப்பெயர்த்தேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com