எந்தவொரு கருத்தையும் ஒருவர் மீது நம்மால் திணிக்க முடியாது ! அமெரிக்க இயக்குனர் டேரன் ஆரோனொஃப்ஸ்கி

திரைப்பட உருவாக்கத்தில் பல புதிய பரிசோதனைகளை தனது திரைப்படங்களின்
எந்தவொரு கருத்தையும் ஒருவர் மீது நம்மால் திணிக்க முடியாது ! அமெரிக்க இயக்குனர் டேரன் ஆரோனொஃப்ஸ்கி

திரைப்பட உருவாக்கத்தில் பல புதிய பரிசோதனைகளை தனது திரைப்படங்களின் மூலமாக தொடர்ச்சியாக அறிமுகப்படுத்திவருபவர் அமெரிக்க இயக்குனரான டேரன் ஆரோனொஃப்ஸ்கி (Darren Aronofsky). இவர் மிக விரைவாக நகரும் காட்சித் தொகுப்புகளுக்கு பெயர் பெற்றவர். குறைந்த பொருள் செலவில் படமாக்கப்பட்ட இவரது முதல் இரண்டு திரைப்படங்களான Pi மற்றும் Requiem for a Dream அதிக தொந்தரவுக்குள்ளாக்கும் திரைப்படங்களின் வரிசையில் இடம் பிடித்ததோடு, படம் பிடித்தலிலும், படத்தொகுப்பிலும் முற்றிலும் புதிய உத்திகளை கையாண்டிருந்தது.

நாம் விருப்பம்கொள்கின்ற பாதையில் பயணிக்க துவங்குகையில், அதில் எதிர்படும் சில சில சிக்கல்களை மனித மனம் எவ்வாறு சிடுக்குப்போட்டு, பாதையை குலைத்து சிதைவுக்குள்ளாகிறது என்பதை தனது திரைப்படங்களுக்கு கருவாக கொண்டுள்ள ஆரோனொஃப்ஸ்கி The Fountain திரைப்படத்தில் நிகழ்காலத்தில் தன் கண்ணிலிருந்து விலக முற்படும் காதலை தக்கவைத்துக்கொள்ள முன்னும்பின்னுமாக காலம் தாவுகின்ற மனிதன் ஒருவனின் கதையை இயக்கியிருப்பார். Black Swan, Wrestler, விவிலிய கதையான Noah என வரிசையாக இவர் இயக்கியிருக்கும் அனைத்து திரைப்படங்களையும் கொண்டாடி மகிழும் அவருக்கே உரித்தான பிரத்யேக திரைப்பட ரசிக குழு ஒன்று எப்போதும் இருந்து வருகிறது.

2014-ல் வெளியான அவரது Noah திரைப்படத்தில் மேகத் திரட்டிலிருந்து கீழ் விழும் மழைத் துளி ஒன்றிற்கு அவர் வைத்திருந்த பாயிண்ட் ஆஃப் வியூ ஷாட் சிலிர்க்க செய்தது. அதோடு, உலகத்தின் உருவாக்கத்தையும் இப்படத்தில் நான்கு நிமிடங்களில் ஆரோனொஃப்ஸ்கி காட்சிப்படுத்தியிருப்பார். 'துவக்கத்தில் அங்கு எதுவுமில்லாமல் இருந்தது' என்று குரலுடன் துவங்கும் அக்காட்சி ஒருவித மயக்கத்தன்மைக்குள் நம்மை அழைத்துச் சென்றுவிடும். ஆரோனொஃப்ஸ்கியிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் ஒன்றின் தமிழ் வடிவமிது.             

நீங்கள் உங்களது திரைப்படங்களின் மூலம் பார்வையாளர்கள் சித்திரவதை செய்யப்படுவதை விரும்புகிறீர்களா?

சித்திரவதை என்பதை மக்கள் பலவாறாக புரிந்து வைத்திருக்கிறார்கள். உண்மையில், சிலர் தாங்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளவே செய்கிறார்கள். அதனால், இதில் தவறொன்றும் இல்லை என்றே கருதுகிறேன். என்னால் இயன்ற வரையில் இதனை வெற்றிகரமாக செயல்படுத்த விழைகிறேன். இப்போதும் என் தங்கையிடமிருந்து என் மீதான அவளது முழுமையான கவனிப்பை கோர அவளுக்கு நான் அதிகளவில் தொந்தரவுகளை கொடுத்துக்கொண்டிருக்கிறேன். இக்காலக்கட்டத்தில், மக்களின் மனங்களில் தங்கிவிடுமளவுக்கான அழிவற்ற நிரந்தரமான கருத்துக்களையும், சில காட்சித்தொகுப்புகளையும் உருவாக்குவது மிகமிக கடினமானது.. ஆனால், இத்தகைய பயணம் மிகமிக உள கிளர்ச்சி அளிக்கக்கூடியது.

உங்கள் திரைப்படங்களை திட்டமிட்டுதான் அதிக தீவிரத்தன்மையுடன் இயக்குகிறீர்களா?

நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், அவ்வாறு இல்லை (சிரிக்கிறார்). எனது திரைப்படங்களை எல்லோரும் விரும்ப வேண்டுமென்பதோடு, அதைப் பற்றி கூடுதலாக சிந்திக்க வேண்டுமென்றும் நான் விரும்புகிறேன். ஆனால், விளைவுகள் முற்றிலும் நேர்மாறாக அமைந்துவிடுகின்றன. எனக்கு எவ்வாறு அதனை செயல்படுத்துவதென்று தெரியவில்லை. ரெக்குவம் ஃபார் எ ட்ரீம் (Requiem for a Dream) படத்தை மக்கள் பார்த்துவிட்டு, நான் அவர்களை பலாத்காரம் செய்துவிட்டதாக கூறினார்கள். அதோடு, அப்படத்தை தூக்கி எறியவும் செய்தார்கள். டொரண்டோவில் அப்படம் திரையிட்டப்போது, திரையரங்குக்கு வெளியே ஆம்புலன்ஸ் ஒன்றை நிறுத்தியிருந்தார்கள். ஏனெனில், அப்படத்தை பார்த்துக்கொண்டிருந்த ஒருவருக்கு இருதய வலி ஏற்பட்டுவிட்டது. இப்போதெல்லாம் நான் அதீத தீவிரத்தன்மையுடன் திரைப்படங்களை அணுகுவதில்லை. சற்றே என் பாணியை மாற்றிக்கொண்டேன். பை (Pi) திரைப்படத்திற்கும் இத்தகைய விளைவுகள் உண்டானது. அப்படத்தைப் பற்றி நியூ யார்க் டைம்ஸில் “தெளிவற்ற, சிறுசிறு புள்ளிகளைக்கொண்ட தொந்தரவுக்குள்ளாக்கும் காட்சிகளைக் கொண்ட திரைப்படம்” என்று எழுதினார்கள். அதோடு அப்படத்தின் இசையை காதுகளை துன்புறுத்தும்படி அமைக்கப்பட்டிருப்பதாக விமர்சித்திருந்தாரகள். நம்மால் நமது திரைப்படங்களை கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் திருப்தியுற செய்ய முடியாது.

ஆனால், நீங்கள் கடைசியாக இயக்கிய சில திரைப்படங்களுக்கு மக்களிடமிருந்து ஆதரவு கிடைத்தது இல்லையா?

என்னுடைய ரெஸ்ட்லர் (Wrestler) திரைப்படம் பார்வையாளர்களுக்கு முற்றிலும் புதியதான ஒரு அனுபவத்தை கொடுத்திருக்கும். நான் அப்படத்தை துவங்கியபோது பலரும் ”ஏன் மிக்கி ரோக்கிரியை வைத்துக்கொண்டு மல்யுத்த போட்டி தொடர்பான திரைப்படம் ஒன்றை இயக்க வேண்டும்? உங்களது திரைப்பட வாழ்க்கையை சிதைத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டீர்களா?” என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால், திரைப்படம் வெளியானதற்கு பிற்பாடு இத்திரைப்படம் நல்லதொரு வரவேற்பையே பெற்றது. அதேப்போல பிளாக் ஸ்வான் (Black Swan) திரைப்படத்திற்கும் மக்கள் ஆதரவு கிடைத்தது. மக்கள் ரசனை மாறி வருகிறது என்றே நினைக்கிறேன். நாங்கள் ரெக்குவம் பாஃர் எ ட்ரீம் இயக்கியபோது, அப்படம் திரையரங்குகளில் 3 மில்லியம் டாலர் பணத்தை வசூலித்துக் கொடுத்தது. ஆனால், இன்றைக்கு ஒரு திரைப்படத்தை விநியோகிக்க பலவழிமுறைகள் தோன்றிவிட்டன. திடீரென்று சில திரைப்படங்கள் ஆஸ்கார் முத்திரையுடன் வெளியிடப்படுகின்றன. அதனால், திரைப்படங்களின் மீதான மக்களின் ஆர்வத்திலும் எதிர்ப்பார்ப்பிலும் சிலசில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மிக விரைவில், என்னையும் முந்தைய தலைமுறையை சேர்ந்தவன் என்று மக்கள் நினைத்துவிடும் சாத்தியங்கள் இருப்பதாக கருதுகிறேன். அதனாலேயே, மிக மிக தாமதமாக எனது அடுத்தடுத்த திரைப்படத்திற்கான கருக்களை தேர்வு செய்கின்றேன்.

உங்களால் ஒரு நகைச்சுவை திரைப்படத்தை எழுதி இயக்குவதைப் பற்றி சிந்திக்க முடிகிறதா?

என் இளம் வயதில் நான் இயக்கிய மாணவ திரைப்படங்களில் பெரும்பாலானவை நகைச்சுவையை மையமாகக்கொண்டவைகளே. ஆனால்,  நான் ஏன் தொடர்ச்சியாக இத்தகைய இருண்மையான திரைப்படங்களையே இயக்கிக்கொண்டிருக்கிறேன் என்று என்னாலேயே உறுதியாக கூற முடியவில்லை.

உங்களது உள்ளுணர்வுதான் இத்தகைய விளைவிற்கு காரணமா?

இருக்கலாம். நான் எப்போதும் என் திரைப்படங்களின் மைய கதையின் மீது ஒருவித பிடிப்புடன் மனதினுள்ளாக செயலாற்றிக்கொண்டிருப்பேன். அத்தகைய தீர்மானமான எண்ணம்தான் சமயங்களில், மிக கடினமான பணியாக இருப்பினும் அதனை விருப்பத்துடன் கையில் எடுத்துக்கொள்ள தூண்டுகிறது. உண்மையில் என்னுடைய ஒவ்வொரு திரைப்படமும் மராத்தன் ஓட்டத்தைப்போலதான் உள்ளது. என் அணியில் பங்குகொள்கின்ற பலரும் இறுதி வரையில் என்னுடன் ஓட முடியாமல் சோர்ந்துவிடுவார்கள். இருப்பினும், என் திரைப்படங்கள் தங்களுடைய இறுதி வடிவத்தை எட்டி விடுவதற்கான காரணம், நான் தொடர்ந்து அவர்களிடம் சென்று, அவர்களை தொந்தரவுப்படுத்தி அவர்களது பணியினை முழுமையாக முடித்துவிட தூண்டிக்கொண்டே இருப்பதுதான்.

இவ்விதமான பிரச்சனை தி பவுண்டைன் (The Fountain) திரைப்படத்தின்போது உங்களுக்கு நிகழ்ந்தது இல்லையா? அத்திரைப்படத்தின் முன் ஆயத்த பணிகளில் இருந்தபோது பிராட் பிட் அதிலிருந்து விலகிவிட்டார்?

ஆமாம். இத்திரைப்படத்திற்காக பதினெட்டு மில்லியன் டாலர்களை செலவழித்துவிட்ட பின்பு, பிராட் பிட் இதிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். நான் அடுத்த ஆறேழே மாதங்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தேன். ஓரிரவு நான் முழுவதுமாக தூங்கவும் இல்லை. படுக்கையில் எழுந்து அமர்ந்துக்கொண்டு தி பவுண்டைன் திரைப்படத்திற்காக நான் ஆய்வு செய்திருந்த புத்தகங்கள் அனைத்தையும் புரட்டி புரட்டி பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான், இக்கதை எனது இரத்தத்தில் ஊறியிருக்கிறது. எது நடந்தாலும், இப்படத்தை முடிக்காமல், என்னால் இதிலிருந்து விடுபட இயலாது என்பதை புரிந்துக்கொண்டேன். அதற்கு பதினெட்டு மில்லியன் பணம் எதிராக இருந்தாலும்கூட, இத்திரைப்படத்தை மீண்டும் கையில் எடுப்பது என்று முடிவு செய்துவிட்டேன்.

நீங்கள் மீண்டும் அதனை எவ்வாறு சாத்தியப்படுத்தினீர்கள் என்று எனக்கு புரியவில்லை?

அது உண்மையில் எனக்கு மிகுந்த மன உளைச்சலை அளித்த காலக்கட்டம். அடுத்த ஏழு மாதங்கள் நான் கடுமையான மன வேதனையை அனுபவித்து வந்தேன். அதோடு, என்னை நம்பி அத்திரைப்படத்தின் தயாரிப்பு வேலைகளில் ஈடுப்பட்டிருந்த நானூறு, ஐநூறு மக்களின் நிலைதான் என்னை மேலும் மேலும் துன்புறுத்திக்கொண்டே இருந்தது. அவர்கள் எல்லோருக்குமே இதனால் வெவ்வேறு இன்னல்கள் உருவெடுத்திருந்தன. அத்திரைப்படத்தின் பணிகள் முழுவதுமாக துவக்கத்திலேயே சிதைந்துவிட, எல்லோரும் வேறுவேறு வேலைகளை பார்த்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்கள்.

பிராட் பிட் ஏன் திரைப்படத்திலிருந்து வெளியேறினார்?

அதைப்பற்றி இப்போது பேசுவது மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில், நாங்கள் இரண்டரை வருடங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றினோம். எங்களுக்கிடையில் மிக நெருக்கமாக உறவு நிலை இருந்துவந்தது. இத்திரைப்படத்தில் இருந்து விலகிய பின் அவரே கூட, நெருக்கமான பெண் தோழி ஒருத்தியை பிரிந்துவிட்டதைப்போல உணர்வதாக தெரிவித்திருந்தார். அதனால், ஒரேயொரு குறிப்பிட்ட விஷயம்தான் எங்களது பிரிவுக்கான காரணமென்று பொதுவாக சொல்லிவிட முடியாது. ஒருவேளை நான் ஆறு மாத காலம் ஆஸ்திரேலியாவில் படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் இருக்கலாம். அவரும் அப்போது லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தார். அதனால், எங்களுக்கிடையிலான சிந்தனைப்போக்கில் மிகப்பெரிய அளவில் விரிசல் விழுந்திருந்தது.

நீங்கள் படப்பிடிப்பு தளத்தில் உள்ளுணர்வின் விசையினால் உந்தப்பட்டுதான் இயங்குகிறீர்களா?

நீங்கள் படப்பிடிப்பு தளத்தில் இருக்கின்றபோது, எப்போதும் உள்ளுணர்வு விழிப்புடனேயே செயல்பட்டுக்கொண்டிருக்கும். அது அப்படித்தான் இருந்தாக வேண்டும். சில இயக்குனர்களை சுற்றி எப்போது இருந்து வரும் கிசுகிசுப்புகளில் ஒன்று, அவருக்கு ஒரு காட்சி எப்படி படம்பிடிக்க வேண்டுமென்று முன்னதாக தெரிந்திருக்கும். இத்தகையத்தன்மை சில இயக்குனர்களுக்கு வேண்டுமானால் நிகழக்கூடியதாக இருக்கலாம், ஆனால், எனக்கு படப்பிடிப்பு தளத்தில் செயல்படுகின்ற என் உள்ளுணர்வே அனைத்தையும் தீர்மானிக்கிறது.

உங்களின் திரைப்பட உருவாக்க பாணி எவ்வாறு செயல்படுகிறது?

நான் என்னால் இயன்ற அளவிலான சிறந்த மனிதர்களையும், சிறந்த பொருட்களையும் எனது படப்பிடிப்பு தளத்திற்கு கொண்டு வந்து சேர்த்துவிடுவேன். அதோடு, நடிகர்களுக்கு மிகச்சிறப்பாக தங்களது பங்களிப்பினை ஆற்றிடும் சூழலையும் உருவாக்கிக்கொடுப்பேன். சமயங்களில் சிலசில தவறுகள் நேரிடலாம் என்றாலும், நான் எனது உள்ளுணர்வின் இயக்கத்தை பின் தொடர்வதன் மூலமாக யாவற்றையும் சரி செய்துவிடுவேன். நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும், செயலையும் மற்றவர்களின் மீது திணித்து ஒன்றை உருவாக்க முயற்சித்தால், விளைவு உங்களது எதிர்ப்பார்ப்புக்கு முற்றிலும் நேர்மாறாகவே அமைந்துவிடும். அதோடு, உங்களது படைப்புத்திறன் போலித்தனமாக செயல்பட துவங்கிவிடும்.

உங்களுடன் ஒத்திசைத்து செயல்படக்கூட அணியினை உங்களால் வெகு சுலபமாக உருவாக்கிவிட முடிகின்றது இல்லையா?

உண்மையில் அது அத்தனை சுலபமானது அல்ல. நான் பலமுறை எனது செயல்பாடுகளில் ஒருவித தளர்வுத்தன்மை இருக்க வேண்டுமென்று விழைவதுண்டு. ஆனால், என்னால் அப்படி செயலாற்ற முடியவில்லை. நான் எனது நடிகர்களுடன் மிகுந்த நேர்மையுடனேயே பணியாற்றுகின்றேன். துவக்கத்திலேயே, அவர்களிடம், ”நீங்கள் இதைத்தான் செய்யப் போகிறீர்கள். இது உங்களுக்கு மிகுந்த வலி தரக்கூடியதாக இருக்கும். ஆனாலும், இதனை முழுமையான ஈடுபாட்டோடும் அர்ப்பணிப்போடும் நீங்கள் செய்து முடிக்க வேண்டும்” என்று சொல்லிவிடுவேன். அதற்கு பிறகு அவர்கள், “நிச்சயமாக நாங்கள் இதனை செய்யப் போவதில்லை” என்று மறுத்துவிடுவார்கள். இத்தனை வருடங்களில் நான் பல முன்னணி நடிகர்களுடனான உறவினை இதனால் இழந்திருக்கிறேன். மக்களின் வாழ்க்கை அதிக சிக்கல் நிரம்பியதாக இருக்கிறது. நான் இதுவரையில் பணியாற்றியுள்ள நடிகர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களில் எத்தனை பேர் மிக உயரந்த நிலையை அடைந்துள்ளார்கள்? நான் அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால், நிச்சயமாக தங்களது முழு திறனை வெளிப்படுத்த அவர்களுக்கு ஒரு சந்தர்பம் கிடைக்கும். ஆனால், நான் அதை செய்வதில்லை. அப்படி செய்வது என் வழக்கமும் அல்ல.  

தமிழில்: ராம் முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com