வசூல் மழை பொழிகிறதா 'ஸ்பைடர்'?  

ஒரு படம் நல்ல படமா சுமாரான படமா அல்லது மோசமான படமா என்று எது நிர்ணயம் செய்கிறது?
வசூல் மழை பொழிகிறதா 'ஸ்பைடர்'?  

ஒரு படம் நல்ல படமா சுமாரான படமா அல்லது மோசமான படமா என்பதை எது நிர்ணயம் செய்கிறது? ஒரு படத்தை பார்த்து முடித்தவுடன் சில காட்சிகள் மனதை விட்டு நீங்காமல் இருந்தால் அதை நிச்சயம் நமக்கான படம் என்று நினைப்போம். சில படங்கள் ஏன் பார்த்தோம் என்ற ஏமாற்றத்தை விளைவிக்கக் கூடியவை. இவற்றுக்கு இடையிலும் சில சுமார் படங்கள் உண்டு. ரசிகர்கள் கூட்டாக ரசிக்கும் கமர்ஷியல்  விஷயங்களை உள்ளடக்கிய படங்கள் சில சமயம் மிகப் பெரிய வெற்றி பெற்றுவிடும். ஆனால் சில சமயம் படு தோல்வியும் அடைந்துவிடும். சமீப காலங்களில் பாக்ஸ் ஆபிஸை குறிவைத்து எடுக்கப்படும் பிரமாண்டப் படங்களின் வருகையும் அதிகரித்துவிட்டது. இதில் ஸ்பைடர் எந்த வகை?

ஸ்பை த்ரில்லர் என்ற புது வகைமையில் ஒரு தமிழ்ப்படம் வந்துள்ளது என்பதே வரவேற்கத்தக்க விஷயம். அதுவும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் என்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.  மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் என கோலிவுட்டுக்கு இரண்டு புதிய அழகான வரவுகள். எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி என்ற அட்டகாசமான கூட்டணி. எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்று நினைக்கும் வகையில் படத்தின் திரைக்கதையில் சில பிரச்னைகள். ஸ்பைடர் எதில் வென்றது? எதில் சறுக்கியது?

ஷிவா (மகேஷ் பாபு) ஒரு பெரிய தொலைதொடர்பு உளவு நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். மக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டு, அதன் மூலம் நிகழவிருக்கும் குற்றங்களைக் கண்காணித்து அந்நிறுவன அதிகாரிக்கு தரவுகளைத் தயாரிப்பது அவனது வேலை. ஆனால் சமூக ஆர்வலரான ஷிவா, வேறு பாதையில் பயணிக்கிறான். தனக்காக பிரத்யேகமான ஒரு மென்பொருளைத் தயாரித்து, ஊரில் எந்தப் பகுதியில் க்ரைம் நடக்கவிருந்தாலும் அதை முன்கூட்டியே ஊகித்து, மிகச் சரியான நேரத்தில் நேரடியாக களத்தில் இறங்கி அதை முறியடிக்கிறான். இளம் பெண்ணை நகை பணத்துக்காக கடப்படுத்துவதாக  இருந்தாலும் சரி, நள்ளிரவில் தனியாக ஒரு பெண் வீட்டில் இருக்க பயந்து நடுங்கினாலும் சரி ஷிவாவின் அன்புக் கரங்கள் நீண்டு எவ்வகையிலாவது அவர்களுக்கு உதவி செய்யும். இதற்கான பிரதிபலன் எதுவும் அவன் எதிர்ப்பார்ப்பதில்லை. காரணம் முகம் தெரியாத ஒருவருக்கு செய்யும் உதவியும் அதன் மூலம் அவர்கள் முகத்தில் தவழும் புன்னகையைப் பார்ப்பதையுமே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ளவன் அவன்.

இந்நிலையில் நிறுவனத் தலைவர் (ஷாஜி) ஷிவாவின் திறமைக்கும் படிப்புக்கும் ஏற்ற பெரிய வேலையை அதே நிறுவனத்தில் தருவதாகச் சொல்லியும் மறுத்துவிடுகிறான். காரணம் சம்பளம் குறைவாக இருந்தாலும் தன் மனத்துக்கு நிறைவளிக்கும் இந்த வேலைதான் வேண்டும் எனப் பிடிவாதமாக அதைத் தொடர்கிறான் ஷிவா. பல சமயங்களில் சூப்பர் மேன் போலச் செயல்பட்டு சில குற்றங்களை முன் கூட்டியே உணர்ந்து தடுத்து வரும் அவன், ஒரு கட்டத்தில் சறுக்கி விடுவதிலிருந்து படம் விறுவிறுப்பாகத் தொடங்குகிறது. இரட்டைக் கொலை, அதனைத் தொடர்ந்து வெளிப்படும் சைக்கோ வில்லன் என்று படம் சில பல திருப்பங்களுடன் நிறைவடைகிறது.

டீன் ஏஜ் பெண் ஒருத்தி இரவில் தனியாக இருப்பதற்குப் பயந்து தன் தோழிக்கு ஃபோன் செய்கிறாள். அதை ஒட்டுக் கேட்ட ஷிவா தன் தோழி ரேணு எனும் போலீஸ் கான்ஸ்டபிளை துணைக்கு அனுப்புகிறான். ஆனால் மறுநாள் அந்த இருவரும் பிணமாக உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைவுக்கு உள்ளாகியிருந்த செய்தியைக் கேட்டு மனம் உடைந்து போகிறான் ஷிவா. இந்த வேலையே வேண்டாம் என்று முடிவுக்கு வரும் நிலையில் அவன் வீட்டினர் சமாதானம் செய்கின்றனர். கொலைகாரன் அடுத்ததாக என்ன செய்யப்போகிறானோ என்ற கேள்வி ஷிவா மனத்தில் எழும்ப, வேலையை விடும் எண்ணத்தை விட்டுவிட்டு தேடுதல் வேட்டையில் இறங்குகிறான் ஷிவா. 

நடுவில் ரகுல் ப்ரீத்துடன் சிறிய அளவு காதல். ஆனால் படத்தில் காதல் காட்சிகளுக்கு பெரிய அளவில் இடமில்லை, இடைச்செறுகலாக வரும் பாடல்கள் மட்டுமே ஹீரோயினுக்கான இடம். அதுவும் அவருடைய கதாபாத்திர சித்தரிப்பு படத்தின் மையக் கருத்துக்கு முற்றிலும் மாறாகவே உள்ளது. மருத்துவ மாணவியாக காண்பிக்கப்பட்டும் அது சார்ந்த எந்த வேலையில் செய்யாமல் உடலின் ஹார்மோன் பிரச்னை பற்றியே சிந்திப்பவராக இருப்பது எரிச்சலான விஷயம். மேலும் மனித நேயம் பற்றி உரக்கப் பேசும் இந்தப் படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமான ரகுலின் பாத்திரம் முரண்பட்டதாகவே உள்ளது. 

காதல் தேவையில்லை ஒருமுறை காமம் போதும் என்று ஆசைப்படும் பெண்கள் இந்தச் சமூகத்தில் இன்னும் உருவாகவில்லை என்றே நினைக்கிறேன். நாயகியின் அத்தகைய விருப்பம் சரி தவறு என்பதில்லை வாதம். அது அவரவர் சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைச் சார்ந்த ஒன்று. ஆனால் ஆழமான சமூகப் பிரச்னையை மையமாக எடுத்துக் கையாளும் ஒரு திரைப்படத்தில் ப்ளைண்ட் டேட்டிங் செல்ல விரும்பும் பெண் எவ்வகையில் கதை நகர்த்தலுக்கு உதவியிருக்கிறார் என்பதே கேள்வி. மனித நேயம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அக்கறை இருக்கும் இயக்குனர் கலாச்சார விஷயத்தில் கோட்டை விட்டது ஏன்?  Blind date உதவி கோரி தன் தோழியிடம் பேசும் போதுதான் ஷிவா அந்த உரையாடலை ஒட்டுக் கேட்கிறான். ரகுலின் பாத்திரப் படைப்பு படத்துக்கு துளியும் ஒட்டாத வகையில் உள்ளது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு குரூரத்தன்மை ஒளிந்துள்ளது. அதன் சதவிகிதம் மட்டுமே மாறுபடும். நல்லவை வழி நடத்தும் சமூக சூழல் ஒருவனின் நல்ல குணத்தை தக்க வைக்கிறது. அதுவே சமூகத்தை விட்டு விலகி, வாழ்வின் எவ்வித சந்தோஷத்துக்கும் ஆட்படாத ஒருவனின் தனிமையும், அவன் வாழ்நிலை சூழல்களும் அவனை கொடூரமான சைக்கோவாக மாற்றிவிடக் கூடும். அப்படி மாறிய ஒருவன் தான் சுடலை (எஸ்.ஜே.சூர்யா). அவனது அடாத செயல்களும், மற்றவர்களின் அழுகையில் மகிழ்ச்சியடையும் மனநிலையும் அவனை சிதைவுக்குள்ளாக்கி ஒரு கட்டத்தில் முழுமையான மனநோயாளியாகிவிடுகிறான்.

தனது அதிபுத்திசாலித்தனத்தையும், டெக்னாலஜி உத்திகளையும் பயன்படுத்தி தொடர் கொலையாளியாக சிறுவயதிலேயே உருவான சுடலையின் கதையை கண்டுபிடித்து அவனது சொந்த ஊரையும் கண்டுபிடிக்கிறான். கிட்டத்தட்ட அவனை நெருங்கி, அவனுடைய அடுத்தடுத்த திட்டங்களையும் தெரிந்து கொள்கிறான் ஷிவா. 

ஷிவாவின் அறச்சீற்றமும் அடுத்தவர் துயரில் பங்குகொண்டு தோள் கொடுக்கும் மனமும்தான் கதையின் உண்மையான ஹீரோ. அதை மிகச் சரியான விதத்தில் வெளிப்படுத்தி சுடலையின் சைக்கோ சதிகளை முறியடிக்கப்பட்டு மக்கள் காப்பாற்றப்படுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் ஷிவா. இயற்கைப் பேரிடர்கள் மட்டுமே பீறிட்டு கிளம்பும் மனித நேயம் மற்ற நேரங்கள் ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறது என்ற கேள்வியில் தொடங்கி மனிதாபிமானம் எவ்வகையில் தேய்ந்து வருகிறது என்பதை ஒருசில வசனங்கள் மூலம் க்ளைமாக்ஸில் ஷிவா சொல்வதே ஒட்டுமொத்த படத்தின் ஒன் லைன் மெசேஜ்.

வில்லன் எஸ்.ஜே.சூர்யா ஏன் முதல் கொலையைச் செய்கிறார் என்பதற்கான காரணம், சிறுவயது காட்சிகளில் சரியாக சித்தரிக்கப்படவில்லை. அச்சிறுவனின் மனச்சிதைவுக்கு இன்னும் ஆழமான காட்சிகளை வைத்திருக்க வேண்டும். மேலும் இத்தகைய Sadistic Personality Disorder உள்ளவர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கி இருப்பார்கள். ஆனால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலாவது
வெளிப்பட்டிருக்க வேண்டும். ஜெயிலில் இருக்கும் போதும் கெத்தாகவே பேசி தனது ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்க்கும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு படத்தின் மிகப் பெரிய ஆறுதல். அவரை இன்னும் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் படம் வேற லெவலுக்குப் போயிருக்கும்.

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அசுரத்தனமானது. அதை வைத்துக் கொண்டு நல்லதும் செய்யலாம். தீயவற்றையும் உருவாக்கலாம். நல்லவன் Vs கெட்டவன் என்ற போர் காலம் காலமாக நடந்து வரும் ஒன்று தான்.  ஒவ்வொரு வீட்டிலும், நகரிலும், வைக்கப்பட்டிருக்கும் சி.சி.டீவி கேமராக்கள் ஒரு குற்றச் சம்பவம் நடந்து முடிந்தபின் குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவி செய்கின்றன. ஆனால் இனி வரும் சமூகச் சூழலில் ஒவ்வொரு நொடியும் நாம் கண்காணிக்கப்படுவோம். குற்றவாளிகள் மட்டுமல்லாமல் அது யாராக இருந்தாலும் அவர்கள் கண்காணிப்பு எல்லைக்கு உட்பட்டுத் தான் வாழ வேண்டியிருக்கும் என்பதனை இப்படம் ஒரு காட்சியில் நுட்பமாகப் பதிவு செய்கிறது. ஷிவாவால் தாக்கப்பட்ட சுடலை சிகிச்சைப் பெறுவதற்காக ஒரு வீட்டினரை மிரட்டி அங்கு தங்கியிருக்கிறான்.  தன் நுண்ணறிவாலும், தொழில்நுட்ப வசதிகளாலும் ஷிவா அவன் பிணைக் கைதியாக வைத்திருக்கும் வீட்டைக் கண்டுபிடித்து, அப்ப்பகுதி பெண்களிடம் பேசிப் பேசியே அவர்களின் அற உணர்வை வெளிக் கொண்டு வந்து, சுடலைக்கு பொறி வைத்துப் பிடித்துவிடுகிறான்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசை பெரிய பங்களிப்பைச் செய்யவில்லை. ஆனால் எஸ்.ஜே.சூர்யா வரும் காட்சிகளில் பின்னணி இசை அசத்தல் ரகம். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகளும், க்ளைமாக்ஸில் கட்டடம் இடிந்துவிழும் பதைபதைக்கும் காட்சிகளை அருமையாக படமாக்கம் செய்துள்ளார்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கோலிவுட்டில் மட்டுமின்றி இந்திய சினிமாவின் ஒரு தவிர்க்க முடியாத பெயராகிவிட்டார். தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் ஒரு படத்தை உருவாக்கும் போதே இரண்டு தரப்பு ரசிகர்களை திருப்திபடுத்துவது என்பது ஹெர்க்யூலியன் டாஸ்க் என்பது அவருக்குத் தெரியாதது அல்ல. காரணம் தெலுங்கு சினிமாவில் இங்கு விட சற்று ஹீரோயிஸம் மற்றும் கமர்ஷியல் விஷயங்கள் மேலதிகமாக இருந்தால் தான் படம் வெற்றியடையும். இந்த இரட்டை குதிரை சவாரி தான் படத்தின் முதல் மைனஸ். சில இடங்களில் பளிச்சிடும் டைரக்டோரியல் டச், வசனங்கள், மெல்லிய நகைச்சுவை படத்தை சுவாரஸ்யப்படுத்திவிடுகிறது. 

ஸ்பைடர் ஏ.ஆர்.முருகதாஸின் மற்ற எல்லா படங்களைப் போலவே அழுத்தமான ஒரு சமூகச் செய்தியினை முன் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்றாலும் பெரிய அளவில் எதிர்பார்த்த ஒரு படத்தில் எந்தவித மேஜிக்கும் நிகழவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது. என்றாலும் தெலுங்கு சினிமாவைத் தாண்டி தமிழ்  சினிமா ரசிகர்களும் மகேஷ் பாபுவின் முதல் நேரடி தமிழ் படத்தை வரவேற்றுள்ளனர். அவ்வகையில் இப்படம் சில எதிர்மறை விமரிசனங்கள் இருந்தாலும், மக்களால் ரசிக்கப்பட்டே வருகிறது. 

தெலுங்கில் இதுவரை காணாத தோல்வியை இப்படம் சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது, ஆனால், தமிழ் நாட்டில் இப்படம் நல்ல வசூலைப் பெற்று வருகின்றது. சென்னையில் மட்டும் இப்படம் ரூ 2.8 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், மேலும், வட இந்தியாவில் ஸ்பைடர் ரூ 7 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது என்கிறது கோலிவுட் செய்தி.

வட இந்தியாவில் அதிகம் வசூல் செய்த தெலுங்குப்படங்களில் ஸ்பைடரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com