ஒரு கவிதைக்காரனின் கையெழுத்துப் பிரதி! பேட்டர்சன் ஹாலிவுட் திரைப்பட விமரிசனம்

ஒரு கவிதைக்காரனின் கையெழுத்துப் பிரதி! பேட்டர்சன் ஹாலிவுட் திரைப்பட விமரிசனம்

போலவே வார இறுதி நாட்களில் கவிதையுடன் பயணிப்பது, ஊருக்கு ஒதுக்குப்புறமாக

பேட்டர்சன் - Paterson (2016)

ஒரு எளிமையான கதை. சலிக்காத அன்றாட வாழ்க்கை, அன்பான காதல் தம்பதிகள், அவர்களுக்கான ஒரு அழகிய கனவு. கனவில் மிதக்கும் கவிதை. மெல்லிய இசை. அவர்களுடன் வாழும் ஒரு குட்டி நாய். இதுவே இயக்குநர் ஜிம் ஜாமர்ஷ் இயக்கியிருக்கும் பேட்டர்சன் திரைப்படத்தின் மேலோட்டமான கதை. இந்தப் படம் தரும் அனுபவத்தை முழுவதும் பெற நாம் இதற்கு முன் வெளிவந்திருக்கும் திரைப்படங்களைப் பற்றிய முன் முடிவுகளை எல்லாம் ஒரு பக்கம் தள்ளி வைத்துவிட்டுத்தான் பார்க்க வேண்டும். காரணம் தேர்ந்த ரசனையும் எளிய விஷயங்களின் மீதான ஆர்வமும், இயற்கையின் நீரோட்டத்தையும் உணர முடியாதவர்களுக்கான படமிதுவல்ல. தினசரி வாழ்க்கையின் கவித்துமனான தருணங்களை கண்டடைவதே பாட்டர்சன் படத்தின் நோக்கமாகும். 

கவிதை மக்களுக்கு என்ன செய்துவிட முடியும் என்பதே பலரின் கேள்வி. உண்மையில் கவிதையில் பயனில்லை என்று பதிப்பாளர்கள் கூட கவிதைகளை கைவிட்ட காலகட்டமிது. ஆனால் கவிதை சொற்களால் உருவாக்கப்பட்ட ஒரு கூர் கருவி என்பதை யாரும் உணர்வதில்லை. அது படைப்பாளியின் அதிநுட்பக் கருவி. அதனை வைத்து மலரின் மென்மையாக ஒன்றையும், இரும்பை விட கடினமான மற்றொரு கவிதையும் கவிஞனால் உருவாக்கிவிட முடியும். காலந்தோறும் கவிதைகள் உருவாகிக் கொண்டிருந்தன. நவீன காலத்தில் வீதிக்கு வீதி கவிஞர்கள் தோன்றியபடி இருக்கிறார்கள். ஒவ்வொரு பத்திரிகையிலும் கவிதைக்கென ஒரு பத்தியை ஒதுக்கியிருக்கிறார்கள். முகநூல் முழுவதும் கவிஞர்களின் ஆக்கிரமிப்பைக் காணலாம். ஆனால் அவை எல்லாம் உண்மையில் கவிதையா? கவிதையை மலினப்படுத்திய பெரும்பங்கு இணையத்திற்கு உண்டு. பல அரைகுறை அரைவேக்காட்டுத்தனமாக சொல்லாடல்களைப் பயன்படுத்துவோர் தங்களை கவிஞர் எனக் கொள்வது காலக் கொடுமையன்றி வேறில்லை. ஆனால் அன்றைய காலகட்டத்தில் அதற்கு பெருமதி இருந்தது. உமர்கய்யாமின் ருபாயத், ரவிந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி, கலீல் கிப்ரானின் முறிந்த சிறகு, காளிதாசன், கம்பன், பாரதியாரின் கவிதைகள் உள்ளிட்ட பல கவிதைகள் காலத்தால் அழியாப் புகழ்ப்பெற்றவை. அவை நூற்றாண்டுகள் கடந்தும் நம்மை சிந்திக்க தூண்டுபவை.

நகுலன், ஞானக்கூத்தன், ஆத்மாநாம், பிரமிள் என  இக்காலத்திலும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு கவிஞர்கள் ஆற்றிய பங்கு இன்றியமையாதது. கவிதையை படிக்க மட்டும் தான் முடியுமா என்ன முழுவதும் கவிதை வடிவிலான ஒரு படத்தை திரையிலும் பார்க்கலாம் என்பதை உணர்த்தி, பார்வையாளர்களை ஆழ்ந்த ரசனைக்கு உட்படுத்தும் திரைப்படம்தான் பாட்டர்சன். இப்படத்தில் ஜிம் ஜாமர்ஷ் தனக்குப் பிடித்த கவிஞரான வில்லியம்ஸ் கரோல் வில்லயம்ஸை பெருமைப்படுத்தி இருப்பார். மேலும் நியூயார்க்கிலுள்ள பேட்டர்சன் எனும் பகுதியில் இக்கதை நடைபெறுவதாக களம் அமைத்திருப்பார். இது போன்ற கவிதையையும், கவிஞரையும் போற்றும் திரைப்படங்கள் அரிதினும் அரிது. 

ஜிம் ஜாமர்ஷ் நவீன வாழ்க்கையை தன்னால் முடிந்த அளவுக்கு திரையில் அங்கதமாக காட்சிப்படுத்துவதில் வல்லுநர். அவரது படைப்புலகம் இசையாலும்
கவிதையாலும் பாடல்களாலும், கற்பனைகளாலும், நிஜங்களாலும் உருவானது. அவரது மனிதர்கள் சாமானியர்கள்தான். ஆனால் அவர்கள் தினமும் நாம் சந்திக்கும் மனிதர்கள், அல்லது நாம் சந்திக்கவே முடியாத அளவுக்கு தங்களை ஒரு தனிமை கூண்டுக்குள் ஒளித்து வைத்தபடி, வெளியுலகிற்கு எப்போதாவது முகம் காட்டும் மனிதர்கள். மனித மனங்கள் இயங்கும் விதத்தை ஒருவராலும் வரையறுத்துக் கூறிவிட முடியாது என்பதை சொல்லும் கதையாடல்களைக் கொண்ட திரைப்படங்களை உருவாக்குவபவர். இப்படத்தில் பேட்டர்சன் (ஆடம் ட்ரைவர்) தன் மனத்துக்குப் பிடித்த கவிஞர் வில்லியம்ஸ் மீது பெரு மதிப்பு வைத்திருக்கிறார். அவரைப் போலவே தீவிரமாக கவிதையுலகில் இயங்குவதே பேட்டர்சன்னின் பெரும் விருப்பம். அவன் கவிதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பி அதற்கென புகழ் பணம் அல்லது எவ்வித அங்கீகாரமும் பெற ஆசைப்படுபவனல்ல. அவற்றின் மீது அவனுக்கு  ஒரு துளி ஆர்வமும் இருந்ததில்லை. அவனது ஆசையெல்லாம் தன் ஆதர்ச கவிஞரைப் போல கவிதை எழுத வேண்டும். அதை தன் காதல் மனைவிக்கு படித்துக் காட்ட வேண்டும். அவள் புருவம் உயர்த்தி அவனை வியப்புடன் பார்ப்பதை கண்டு மகிழ வேண்டும். தன்னந்தனியே தனது கவிதையுடன் பயணம் செய்ய வேண்டும். சொற்கள் மேலும் சொற்கள் என ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ளேயும் வெளியேயும் நனைந்து சொற்களால் ஆன ஓருலகில் இரவு பகல் பாராமல் குளிர் வெயில் படாமல் கவிதையெனும் நிலவொளியில் நீள் பயணம் செய்திருக்க வேண்டும் என்றே நினைப்பவன் அவன். அவனுடைய ப்ரியத்துக்குரிய கவிஞர் வில்லியம்ஸ் பேட்டர்சன் என்ற பெயரில் ஒரு கவிதை நூலை வெளியிட்டுள்ளார். அதுவும் அவனுடைய விருப்ப பட்டியலில் என்றும் உள்ள தொகுப்பு.

பேட்டர்சன் தன் காதல் மனைவி லாராவுடன் (Golshifteh Farahani) புறநகர்ப் பகுதியொன்றில் தனித்த ஒரு வீட்டில் வாழ்கிறார். அவர்களுக்கு தோழகானவும் உற்ற துணையாகவும் இருப்பது மார்வின் என்ற டாபர்மேன் வகை நாய். அது ஒரு சுட்டியான நாய்க்குட்டி. இத்தம்பதியரின் ஒரு வார கால வாழ்க்கையில் நடக்கும் அன்றாட செயற்பாடுகளை மூலமாக இந்தக் கதையை இயக்குநர் கூறியிருப்பார். வாரத்தின் ஏழு நாட்களிலும் நிகழும் சம்பவங்களில் யாதொரு மாற்றங்களும் இல்லாமலிருக்க, அவ்வப்போது இடர்படும் சிறு சிறு மாறுபாடுகளுடன் அந்நாளின் முக்கிய சம்பவங்களை காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர். திங்கள் முதல் வெள்ளி வரை மாநகர பேருந்து ஓட்டநரான பேட்டர்சனின் ஐந்து வேலை நாட்களும் எவ்வித பரபரப்புமின்றி இருக்கும்.

காலையில் எழுந்து கிளம்புவதிலிருந்து அவனது சக பணியாளரிடம் வாழ்க்கை எப்படி போகிறது என்ற கேள்வியில் தொடங்கி, அவனது பேருந்து நகரத்தின் முக்கிய நிறுத்தங்களில் நின்றும் கிளம்பியும் செல்ல, இரவு கவியும் நேரத்தில் வீடு வந்து சேர்வான். சுட்டி நாய் மார்வின் அவனுக்குத் தெரியாமல் கடிதப் பெட்டியை இழுத்து சரித்து வைத்திருக்கும். அதை கடிதப் பெட்டியை நேராக்குவதில் தொடரும் அன்றாட நடவடிக்கை மார்வினை இரவில் ஒரு சிறிய நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்று பாரில் அவனுக்கு மனைவி வரையறுத்துக் கொடுத்துள்ள அளவிலான பியரை அருந்திவிட்டு, வீடு திரும்பி உறங்கச் செல்வது வரை பெரிய மாற்றங்கள் இராது.

போலவே, வார இறுதி நாட்களில் கவிதையுடன் பயணிப்பது, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் ஆறு இருக்கும் இடத்தில் அமர்ந்து வேடிக்கைப் பார்ப்பது போன்றவற்றில் ஈடுபடுவது அவனுக்குப் பிடிக்கும். ஆனால் தினமும் காலையில் எழுந்தவுடன் அவன் செல்வது வீட்டின் கீழ்த்தளத்திலுள்ள ஓர் அறைக்குத்தான். அங்குதான் அவனது நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கும் புத்தக அறை உள்ளது. அங்குதான் அவன் தினமும் எழுதிக் கொண்டிருக்கும் கவிதை நோட்டு ஒன்று உள்ளது. ஒரு கவிதையை எழுதிவிட்டு வார்த்தைகளைத் தேடிச் செல்லும் அவனது அகவெளிப் பயணம் அவனுக்கு மிகவும் பிரத்யேகமானது. தான் எழுதிய வரிகளை மனைவி உட்பட யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனம் கொண்டவன் பேட்டர்சன். லாரா அவனது திறமையை போற்றுபவள்.  கவிதை பற்றி எல்லாம் அவளுக்கு பெரிய அபிப்ராயம் உண்டென்று சொல்லிவிட முடியாது. ஆனால் அவள் விருப்பத்துக்குரியவனின் சொற்கள் என்பதாலும், அவை பெரும்பாலும் அவளைப் பற்றியும், அவர்கள் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட சிற்சில சம்பவங்களைப் பற்றியும் அக்கவிதைகளின் மையம் இருக்கும் என்பதாலும், அவள் அவன் கவிதைகளை விரும்புவாள். அவன் எழுதி வாசிக்கும் ஒவ்வொரு கவிதையை மனம் திறந்து பாராட்ட அவள் ஒருபோதும் தவறியதில்லை. பேட்டர்சனும் அவள் விரும்பிய கிடார் இசைக்கருவியை அதிக விலை கொடுத்து அவன் வாங்கித் தர தயங்கியதில்லை. இப்படி வேறுவிதமான விருப்பங்களை உடையவர்களாக இருப்பினும்,  இருவேறு துருவங்களாக இருந்தாலும், அவர்களை இணைப்பது காதல் வாழ்க்கை. எளிய வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிறைவும் காணும் அபூர்வ ஜோடிகள் அவர்கள். அவளுக்கு இசையைத் தவிர புதுப் புது உணவுகளை தயாரிப்பதும்  கலை நயத்துடன் சுவர்களுக்கு வண்ணம் தீட்டுவதிலும் ஆர்வம் உண்டு. 

இப்படி இருவரும் ஒருவர் மீது மற்றவர் மாறாத அன்புடையவர்களாக வாழ்கிறார்கள். விருப்பப் பட்டியல்கள் வெவ்வேறாக இருப்பினும், இரண்டு உடல்களில் வாழும் ஓரியிராக தம் வாழ்தலை இனிமையாக்குகிறார்கள். கலை என்பது ஒன்று அதன் வெளிப்பாடுகள் தான் வெவ்வேறானது என்பதை இருவரின் நடைமுறைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். பேட்டர்சன் கவிதையாக வெளிப்படுத்துவதை லாரா வண்ணங்களாக, அதுவும் பெரும்பாலும் கருப்பு வெள்ளை நிறத்தில் புதுப் புது டிசைன்களில் சுவர்களில், திரைச் சீலைகளில் என வெளிப்படுத்துவாள். ஆடை வடிவமைப்பு, வீட்டு அலங்காரம் போன்றவற்றில் ஆர்வமுடையவள் லாரா. அத்துறையில் சாதிக்க நினைக்கும் இளம் ஆர்வலர் அவள். இனிய முரண்பாடுகளுடன் ஒருவரை மற்றவர் சகித்து வாழாமல், ஒன்றுகூடி அன்புடன் ஒருங்கிணைந்து வாழ்வதை ஒருசில காட்சிகளிலேயே விளக்கியிருப்பார் ஜிம் ஜாமர்ஷ்.

பேட்டர்சன் இயல்பான வாழ்க்கைக்குள் தன்னை பொருத்திக் கொண்டவன். அதில் எவ்வித கீறல்களையும் அனுமதிக்காதவன். மனைவியுடனான தருணங்கள் தவிர்த்து பெரும்பாலும் தனிமையானவன். தன் கனவுகளைக் கண்டடைய பொறுமையை கடைப்பிடிப்பவன். அதிசயங்கள் நடக்கும் என்ற நம்பிக்கைகளில் சிக்காதவன். முக்கியமாக தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களை விமரிசனங்கள் ஏதுமின்றி உள்ளவாறே அவரவர் இயல்புப்படியே ஏற்றுக் கொள்பவன். அதிகம் யாருடனும் ஒட்டாத வகையில் தன்னை மற்றவர்களிடமிருந்து தள்ளி வைத்து வாழப் பழகியவன். செயற்கையான விஷயங்கள், நவீன வாழ்வின் ஆடம்பரங்கள் போலியான வாழ்க்கை இவற்றையெல்லாம் வெறுத்து ஒதுக்கி தானே உருவாக்கிய கவிதை பாதையில் மகிழ்ச்சியுடன் லாராவுடன் கைகோர்த்து நடப்பவன் அவன்.

இப்படத்தில் கூறியதை மீளக் கூறல் எனும் பாங்கை இயக்குநர் கடைபிடித்திருப்பார். காரணம் கவிதைகளில் அழகியலுக்காகவும் மொழிவன்மையை வெளிப்படுத்தவும் கவிதை செறிவின் காரணமாகவும் ஒரு சொற்றொடரை தேவைப்படும் இடத்தில் எல்லாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது போலவே, திரைக்காட்சிகளில் உருவாக்கப்பட்டிருக்கும். பார்வையாளனுக்கு ஒரே காட்சி மறுபடியும் தோன்றுகிறதே என்று நினைத்தாலும், சிறிய சுவாரஸ்யமான திருப்பங்களும், மெல்லிய அங்கதமும் இருப்பதால் சலிப்படையச் செய்யாது. ஒரு சாதாரண கவிஞனின் ஏழு நாட்களின் நித்திய செயல்பாடுகளைப் பார்க்க யார்தான் விரும்புவார்கள். ஆனால் அதனை விரும்பச் செய்யும் விதமாக,  இயக்குநர் புனைவாக்கி இருப்பதும், அந்தக் கவிஞனின் மனத்தினூடே நம்மை பயணிக்க வைத்ததும்தான் இப்படத்தின் ஆகப் பெரிய வெற்றி. 

ஒரு காட்சியில் பேட்டர்சன் வீடு திரும்பும் வழியில் கவிதையை ரசிக்கும் சிறுமி ஒருத்தியை சந்திப்பான். அவள் அவனுக்கு ஒரு கவிதையை வாசித்துக் காட்டுகிறாள். அந்தக் கவிதையின் ஒரு வரி அவனது மூளைக்குள் சென்று அவனுடனே பயணித்தபடி இருக்கிறது. மழையைப் பற்றிய அக்கவிதையை அவன் மிகவும் ரசிக்கிறான். அக்கவிதையின் ஊடே பொழியும் மழைத் துளியை அவன் மனது உணர்கிறது. அந்தச் சிறு பெண்ணைப் போல தன்னால் கவிதை எழுத முடியும் தானும அவளும் ஒரே படகில் பயணம் செய்கிறோம் என மனத்துக்குள் மகிழ்ச்சியடைகிறான் அவன். தினமும் மார்வினுடன் இரவு நடைபயிற்சிக்கு செல்லும் போது  ஆடைச்சலவை செய்யும் சக மனிதனை சந்திக்கும் வழக்கம் உண்டு. அவனது கடையை தாண்டிச் செல்கையில் எல்லாம் அவனது பாடிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்கும். அவனுக்கு வாழ்த்து தெரிவிப்பதை அவன் வழக்கமாகக் கொண்டிருந்தாலும் மார்வின் அதை விரும்புவதில்லை. இவனுக்கு பிடித்ததெல்லாம் அதற்கு பிடிக்காது. இவன் மீதான எதிர்வினையை அவ்வப்போது ஏதாவது ஒரு வகையில் ஆற்றிக் கொண்டிருக்கும். பல எதிர்வினை அவன் கண்பார்வைக்கே வராது. அல்லது மார்வின் தான் அதனைச் செய்திருக்கும் என்று அவனுக்குத் தெரிந்திருக்காது. இப்படி அவர்களுக்குள் நிகழும் ஒரு பனிப்போரின் இறுதியில் மார்வின் பேட்டர்சனை உலுக்கிப்போடும் ஒரு செயலைச் செய்துவிடும். அதன் பின் அதற்கு ஏற்பட்ட குற்றவுணர்வால் தலைகுனிந்து அமர்ந்திருக்கும். அச்செயல் என்ன, அதனால் அவனுக்கு என்ன பிரச்னை ஏற்பட்டது என்பதை விளக்கி முடிப்பதே இப்படத்தின் மீதிக் கதை. மார்வினை அதன் பின்னும் அதே அன்புடன்
அவன்ஏற்றுக் கொண்டதை இயக்குநர் தெளிவாக வெளிப்படுத்தி இருப்பார்.

இயக்குநர் ஜிம் ஜாமர்ஷர் பாட்டர்சன்னை பற்றி ஒரு பேட்டியில் கூறுகையில், ‘எனக்கு கவிதையிலும், இசையிலும், கலையிலும் அதன் கட்டமைப்பில் சில சில மாற்றங்களை உருவாக்குவதும், அதேப்போல ஒரே செயலை மீண்டும் மீண்டும் பிரயோகித்து பார்ப்பதும் மிகவும் பிடிக்கும். பேச்சினுடைய (Bach) இசையாக இருந்தாலும் அல்லது ஆண்டி வோராலின் (Andy Warhol) ஓவியமாக இருந்தாலும் எனக்கு அவற்றில் சிலசில மாற்றங்களும், சில ஒப்புமைகளும் இருந்தால், அதனை நான் மிகவும் விரும்பி ஏற்றுக்கொள்வேன். இந்த படத்தில் நான் அதனை வாழ்க்கைக்கான உருவகமாக பயன்படுத்த வேண்டுமென்று நினைத்தேன். அதாவது, ஒவ்வொரு நாளும் முந்தைய தினத்திலிருந்து ஏதேனுமொரு வகையில் மாறுப்பட்டிருக்கிறது. அல்லது பின் வரும் தினத்திலிருந்து வேறுப்பட்டிருக்கிறது. நான் இத்தகையை மாற்றங்களை விரும்புகின்றேன். 

வில்லியம் கார்லோஸ் வில்லியம், 'கற்பனையில் அல்ல, செயல்களே முக்கியமானவை' என குறிப்பிட்டுள்ளார். நான் அவ்வாறு அந்த வரிகளை திரைப்படத்தில் பயன்படுத்த சொல்லவில்லை. ராப் பாடலை எழுதியவர், அதில் கார்லோஸின் அந்த கவிதையை சேர்த்துக்கொண்டார். அதன் பொருள் என்னவென்றால், இந்த ஏகாத்திபத்திய உலகில் கிடைக்கபெறும் சிறிய சிறிய வாழ்க்கை அனுபவங்களை வைத்தே நமது பயணத்தை சிறப்புற அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே. 

20 வருடங்களுக்கு முன்பு சிறிய அளவில், பேட்டர்சன் பற்றிய குறிப்பொன்றை எழுதி வைத்திருந்தேன். அதனால், எதிலிருந்து இப்படத்திற்கான எழுத்து வேலை துவங்கியது என்பது எனக்கு நினைவில்லை. அதோடு, பேட்டர்சன் நகரத்தின் வரலாற்றை நான் மிகவும் விரும்பி படிக்க ஆரம்பித்தேன். நியூ யார்க்கிற்கு மிக அருகில் இருக்கும் அந்த நகரத்தை இப்போது ஏறக்குறைய எல்லோரும் மறந்தே விட்டார்கள். நியூ யார்க்கில் யாருக்கும் பேட்டர்சன் நகரம் குறித்த ஆர்வமில்லை. ஒருவரும் அந்த நகரத்தை பற்றி பேசுவது இல்லை. ’ இவ்வாறு அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.

கலையும் அதன் செயல்பாடுகளும் ஒவ்வொரு மனிதனுக்கும் பிரத்யேகமானது. அவரவர் தேர்ந்தெடுக்கும் வழியில் தான் அவரவர் பாதையும் பயணமும் கண்டு
அடைதலும் உள்ளது என்பதை விளக்கும் அரிய பொக்கிஷம் இத்திரைப்படம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com