நடிகை சசிகலாவை நினைவிருக்கிறதா? பெண்களின் திருமண வாழ்வு மற்றும் விவாகரத்து குறித்து அவர் பகிர்ந்து கொண்ட சில உண்மைகள்!

கணவரைப் பிரிந்து தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வரும் சசிகலா, பெண்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிவதற்கு காரணம் மனமொத்துப் போகாத கணவரால் மட்டுமல்ல... பெற்றோர்களின் சில முடிவுகளாலும் தான் என்
நடிகை சசிகலாவை நினைவிருக்கிறதா? பெண்களின் திருமண வாழ்வு மற்றும் விவாகரத்து குறித்து அவர் பகிர்ந்து கொண்ட சில உண்மைகள்!

நடிகை சசிகலா... ஊர் மரியாதை, ஊமை விழிகள், சங்கர் குரு, வெற்றி விழா, உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் என இவர் நடித்த சில திரைப்படங்கள் இன்னும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சை விட்டு அகன்றிருக்காது. இந்த திரைப்படங்களைத் தவிர மேலும் சில தமிழ்த்திரைப்படங்களில் சசிகலா நடித்திருந்த போதும் ரசிகர்களின் நெஞ்சில் நிற்பவை இந்தப் படங்கள் மட்டுமே. 80 களின் இறுதியில் தமிழில் சசிகலா என்ற பெயரில் நடித்துக் கொண்டிருந்தவர் தெலுங்கில் ரஜனி என்ற பெயரில் அறிமுகமாகி அப்போது டோலிவுட்டில் பீக்கில் இருந்த நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோருடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு தவிர கன்னடத்தில் அம்பரீஷ், விஷ்ணுவர்த்தனுடன் சில படங்கள் மலையாளத்தில் மம்மூட்டியுடன் சில படங்கள் என சசிகலா அப்போது முன்னணி நடிகையாகவே திகழ்ந்தார். 

குழந்தைகளுடன் சசிகலா...

பெங்களூருவில் பிறந்தவரான சசிகலாவின் அப்பா ஒரு பஞ்சாபி, அம்மா கன்னடர். இவர் 1998 ஆம் ஆண்டு வெளிநாட்டு வாழ் இந்தியரான டாக்டர் முல்லகிரி பிரவீணைத் திருமணம் செய்து கொண்டார். மணமாகி 9 ஆண்டுகளில் மூன்று குழந்தைகளுக்குத் தாயாரான சசிகலா ஒன்பதாம் ஆண்டில் இறுதியில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மிகுந்த சட்டப் போராட்டங்களின் பின் மனம் நொந்து அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றார். தற்போது கணவரைப் பிரிந்து தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வரும் சசிகலா, பெண்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிவதற்கு காரணம் மனமொத்துப் போகாத கணவரால் மட்டுமல்ல... பெற்றோர்களின் சில முடிவுகளாலும் தான் என்கிறார்.

சசிகலா தெலுங்கு இணைய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கவிருக்கும் நடிகைகளுக்கு மட்டுமானதல்ல... லைம்லைட் என்றால் என்னவென்றே அறியாத சாமானியப் பெண்களுக்கும் பொருந்துவதாகத் தோன்றியதால் தினமணி இணையதள வாசகர்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

‘ஒரு பெண்ணை அவள் நடிகையோ அல்லது சாமானியப் பெண்ணோ, யாராக இருந்தாலும் அவள் அவளது பெற்றோருக்கு கண்ணின் மணி போன்றவளே! அப்படிப் பட்ட பெண்ணை பிறந்த வீட்டில் இருக்கும் போது எப்படியெல்லாம் கட்டுப்பாடாக, பாதுகாப்பாக, ஏராளமான சட்ட திட்டங்களுடன் வளர்க்கிறார்கள்? அம்மா, எனக்கு செலவுக்கு 100 ரூபாய் வேண்டும் என்று கேட்டால், என்ன 100 ரூபாயா? 100 பைசாவா? என்னம்மா ஆச்சு உனக்கு? இவ்வளவு பணத்துக்கு இப்போ உனக்கென்ன அவசியம் வந்தது? என்று கண்டிப்புடன் மறுக்கிறார்களே தங்களது குழந்தைகளிடம், பிறகு அதே குழந்தை வளர்ந்து பெரியவளாகி கல்யாணமென்று முடிவு செய்யும் போது மாத்திரம் ஏகப்பட்ட வரதட்சிணை கொடுத்து, உடல் கொள்ளாத நகைகளையும் பூட்டி யாரோ ஒரு முன் பின் அறியாத ஆடவனுடன் அனுப்பி வைத்து விடுகிறார்களே! இது எந்த விதத்தில் நியாயம்? மணமகன் வீட்டார் வரதட்சிணை கேட்டு கொடுப்பது என்பது ஒருவகை, கேட்கக் கேட்க கொடுத்துக் கொண்டே இருப்பதென்பது இன்னொரு வகை. இந்த இரண்டுமே தவறு தானே! இரண்டிலுமே ஆண்களின் பேராசையை வளர்த்து விடுவது யார்? பெற்றோர் தரப்பு தான்.

உங்களிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது என்றால் அதை ஓரளவுக்கு பெண்ணின் திருமணத்திற்கு செலவு செய்யுங்கள்... மொத்தத்தையும் ஒரே தடவையில் அவளுக்கு அளித்து விட்டு நாளை மணவாழ்க்கையில் பிரச்னை என்று அவள் வந்து உங்கள் முன் நிற்கும் போது அவளோடு சேர்ந்து நீங்களும் அழாதீர்கள். பெண்ணின் திருமண வாழ்வில் முதல் 10 வருடங்கள் மிக முக்கியமானவை. அதில் நிச்சயம் அந்த வாழ்க்கை வாழத் தகுதியானது தானா? இல்லை பிரிவைப் பற்றி யோசிக்க வேண்டியது தானா? என்பது குறித்து அந்தப் பெண்ணுக்கு தெரிந்து விடும். அதனால் பெற்றோர்களே! உங்கள் மகளுக்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களானால் திருமண வரதட்சிணையை மொத்தமாக மணமகன் வீட்டாரிடம் அளிக்காமல் உங்கள் மகள் பெயரில் வைப்பு நிதியாக அந்தப் பணத்தை வங்கியில் போட்டு வையுங்கள். மாதாமாதம் அதிலிருந்து வரும் வட்டித் தொகை உங்கள் மகளைச் சென்று சேரும். திருமணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குப் போகக் கூடியவளாக இருந்தாலும் சரி, இல்லை இல்லத்தரசியாக இருந்தாலும் சரி, அவளது பங்காக அந்தப் பணம் மாதா மாதம் வந்து கொண்டிருப்பது அவளுக்கு மிகப்பெரிய பாதுகாப்புணர்வைத் தரும். பணத்தை அவளது பெயரில் வங்கியில் போட்டு வைப்பதுடன் அந்தப் பணத்தை எப்படி முறையாகக் கையாள்வது என்பது குறித்தும் உங்கள் மகளுக்கு கற்பிக்க வேண்டியவர்கள் நீங்களே! மணமகன் தேர்வில் இப்படி ஒரு முறைக்கு ஒப்புக் கொள்வோருக்கு மட்டுமே உங்கள் மகளைத் திருமணம் செய்து அனுப்புங்கள். மாறி... பெண்ணையும் மணந்து கொண்டு, அவள் கொண்டு வரும் சீர், செனத்திகளையும் விற்று ஒன்றுமில்லாமலாக்கி பெண்ணின் வாழ்வை நிர்மூலமாக்கி விடக் கூடிய வகையில் திட்டங்களுடன் வரும் மணமகனுக்கு அதற்குண்டான சந்தர்பத்தை பெற்றோரான நீங்களே ஏற்படுத்தித் தந்து விடாதீர்கள்!

என் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், நான் ரொம்பக் கஷ்டப்பட்டு நடிக்கும் நடிகையெல்லாம் இல்லை. மிகவும் லைட் வெயிட்டான வேடங்களில் மட்டுமே நடித்தேன். இப்போது அம்மா, அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க வேண்டியது தானே என்பார்கள். இல்லை எனக்கப்படி ஆசை எதுவும் இல்லை. நடித்த வரையில் பிடித்த வேடங்களைச் செய்தேன். பிறகு கல்யாணம் என்ற பெயரில் வாழ்வின் மிகத்துயரான தருணங்களைத் தாண்டி வந்தேன். அந்த 9 ஆண்டுகளுக்குள் நான் 10 முறையாவது தற்கொலைக்குத் திட்டமிட்டு கடைசி வரை சென்று மயிரிழையில் என் பிள்ளைகளை எண்ணி அந்த முயற்சியைக் கை விட்டிருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். என் மனம் அப்படிப் பட்டது. என் கணவர் வெளிநாட்டில் டாக்டராக இருக்கிறார் என்று தான் என்னை அவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால், அவரோ திருமணத்திற்குப் பின் ஒருமுறை கூட என்னையோ, என் குழந்தைகளையோ அவர் வசிக்கும் நாட்டுக்கு அழைத்துச் சென்றதே இல்லை. எங்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையே அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அவரைப் பொருத்தவரை நான் ஒரு ஏடிஎம் மெஷினாகத்தான் தெரிந்திருக்கிறேன். அதனால் தான் மூன்று குழந்தைகள் பிறந்த நிலையில் ஒரு விடுதியில் தங்கியிருந்து விட்டு விடுதியைக் காலி செய்து கொண்டு போவதைப்போல எங்களை உதறி விட்டு அவரால் செல்ல முடிந்திருக்கிறது. நான் அவரையும் அவரது தவறுகளையும் இத்தனை ஆண்டுகள் ஏன் பொறுத்துக் கொண்டேன் என்றால் அவர் இன்று திருந்துவார், நாளை திருந்துவார் என்று காத்திருந்தேன். அதற்குள் திருமணமான 9 ஆம் மாதமே என் மகன் என் கைகளில் இருந்தான். அவனையும் கையில் ஏந்திக் கொண்டு குழந்தையையும் கொன்று விட்டு நாமும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட ஒருமுறை முயற்சித்தேன். அந்த முயற்சியில் ஒரு வேளை நான் இறந்து என் மகன் உயிர் பிழைத்து விட்டான் என்றால் அவனை யார் பார்த்துக்கொள்வார்கள் என்றொரு கேள்வி என்னுள் குடைந்து கொண்டே இருந்தது. எனக்கே யாருமில்லாத நிலையில் என் குழந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள், அவனுடைய கதி என்ன? என்று யோசனை சென்றதும் என் தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். இப்போது நான் செய்ய வேண்டியது தற்கொலை அல்ல, கணவரிடமிருந்து மணவிலக்கு பெறுவது மாத்திரமே என்று முடிவு செய்து நாங்கள் விலகினோம்.

கணவர் என் மீதிருந்த கோபத்தை குழந்தைகளிடம் காட்டத் தொடங்கியதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனக்கு என் குழந்தைகள் மட்டும் போதும் இந்த வாழ்க்கைக்கு என்று நான் முடிவு செய்தது அப்போது தான். இதோ இப்போது நானும் என் குழந்தைகளுமாக மிக அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என் வாழ்க்கையில் இத்தனை நடந்திருக்கிறது என்ற போதும் இன்று வரையில் விவாகரத்துக்குப் பிறகும் கூட நான் என் கணவரை விரும்பத்தான் செய்கிறேன். அவரது எதிர்பார்த்த அளவில் நான் இல்லை, என்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் அவர் நடந்து கொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் பணம். அதைக் கையாளத் தெரியாத குழப்பம். இது தான் எங்கள் பிரிவுக்குக் காரணம். அதனால் தான் சொல்கிறேன். பெற்றோர்களிடம் எனக்கு ஒரே ஒரு கோரிக்கை உண்டு. தயவு செய்து உங்கள் பெண்ணுக்கென நீங்கள் தர நினைக்கும் அத்தனையயும் ஒரே தடவையில் அவளுக்கு அளித்து அவளது பிற்கால வாழ்விற்கு பிடிமானம் இன்றி செய்து விடாதீர்கள். குறைந்த பட்சம் உங்களது பெண்ணின் வாழ்வை முதல் 10 ஆண்டுகள் தள்ளி நின்று கவனியுங்கள். திருமண வாழ்க்கை குறித்த பக்குவத்தை அடைய அவளுக்கு அந்தப் 10 ஆண்டுகள் நிச்சயம் தேவை. அதுவரை அவளுக்கான பாதுகாப்பை பெற்றோர் என்ற வகையில் நீங்கள் உறுதி செய்தீர்கள் என்றால் நாளை உங்கள் பெண், மணவாழ்வில் தோல்வி என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு உங்கள் முன் நிற்க மாட்டாள்!

சசிகலா இந்த நேர்காணலை அளித்து சில வருடங்கள் ஆனாலும், அன்று அவர் சொன்னதில் எந்தக் குறையும் காண முடியாத அளவுக்குத் தான் இன்றும் பெரும்பாலான பெண்களின் திருமண வாழ்வு நீடிக்கிறது. திருமண வாழ்வில் பிரச்னை வர அவள் நடிகையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. சாதாரணப் பெண்ணுக்கும் இன்று இதே நிலை தான். எனவே வரதட்சிணை விஷயம் குறித்துப் பெற்றோர்கள் யோசிப்பது நல்லது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com