ஒரு சினிமா ஓடுமா ஓடாதா? இதை கணிப்பது எப்படி?

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சினிமா மக்கள் அதிகம் கொண்டாடும் கலையாகவே இருந்து வருகிறது.
ஒரு சினிமா ஓடுமா ஓடாதா? இதை கணிப்பது எப்படி?

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சினிமா மக்கள் அதிகம் கொண்டாடும் கலையாகவே இருந்து வருகிறது. முன்பெல்லாம் வெற்றிப் படங்கள் என்றால் அவை சில்வர் ஜூப்ளி கொண்டாடும். நூறு நாட்கள் ஓடி செஞ்சுரி அடித்த படங்கள் காலத்தால் அழியாத புகழ் பெற்றவையாக இருந்தன. கதாநாயகர்களை மையமாக வைத்து இயங்கி வரும் தமிழ் படம் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்குரிய முகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது என்பதும் உண்மை.

நூறு நாட்கள் எல்லாம் கூட ஒரு படம் ஓட வேண்டாம் குறைந்தது 25 நாட்களாவது ஓடுகின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு படத்தை நேரமின்மைக் காரணமாக திரையரங்கில் பார்க்கத் தவறிவிட்டால் அவ்வளவுதான் அதை அத்தனை எளிதில் மீண்டும் திரையில் பார்க்க முடியாது. அப்படத்தின் குறுந்தகடு அல்லது சானல்களில் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும். சமீப காலமாக சில படங்கள் திரையிடப்பட்டு ஏழு நாட்கள் அல்லது ஐந்து நாடக்ள் மட்டுமே ஓடுகின்றன. வெற்றி தோல்வி என்பது திரைத்துறையைப் பொருத்தவரையில் ஒரு சூதாட்டம்தான். படங்கள் தியேட்டரில் ஓடுவதற்குப் பதில் தியேட்டரை விட்டே படங்கள் ஓடிவிடும் நிலை எதனால் ஏற்பட்டது? இந்தளவுக்கு தமிழ் படங்களின் ஆயுள் சுருங்கியதன் காரணம் என்ன? 

திருட்டி டிவிடி மற்றும் தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் சினிமா உலகில் மட்டுமல்லாமல் உலக அளவில் இந்த திருட்டு டிவிடி தொல்லையை அழிக்க முடிவதில்லை. தமிழ் ராக்கர்ஸ் டொரண்ட் என்று இணையத்தில் புத்தம் புது திரைப்படங்களை உடனுக்கு உடன் உலவ விடும் சைபர் கிரிமினல்கள் உள்ள வரை தியேட்டர்களில் காற்றாடித்தான் கொண்டிருக்கும்.

நடுத்தர மக்களுக்கு பட்ஜெட் எகிறும்

தியேட்டருக்கு மக்கள் வராததற்கு இன்னொரு காரணம் பட்ஜெட். டிக்கெட் விலை வரி என்று குடும்பமாக தியேட்டருக்குச் சென்று திரும்பினால் பர்ஸ் பழுதடைவதுடன் அந்தப் படம் பெரும்பாலும் அத்தனை பேரையும் கவருவதாக இருக்காது. பணம், நேரம் என்று இரு கூர்மனையில் நஷ்டத்தை சந்திக்கும் ரசிகன் வெறுப்படைகிறான். பிரசவ வைராக்கியம் போல இனி குடும்பத்துடன் தியேட்டருக்கு வருவதில்லை என்றும் அவர்கள் முடிவு செய்துவிடுவார்கள்.

இந்தியத் தொலைக்காட்சியில் முதன்முறையாக....

ஒரு திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கும் போதே அதற்கு சானல் விற்பனையும் அமோகமாக நடந்துவிடும். அந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான படம் அதே ஆண்டின் பண்டிகையை முன்னிட்டு ஒளிபரப்பட்டுவிடும். விளம்பரங்களுக்கு இடையே என்றால் கூட புதுப்படத்தைப் பார்த்துவிடுகின்ற மனநிலைக்கு மக்கள் வந்து பலவாண்டுகள் ஆகிவிட்டன. 

மல்டி ப்ளக்ஸ் திரையரங்கங்கள்

முன்பெல்லாம் லோக்கல் தியேட்டர்கள் மட்டுமே இருக்கும். மெயின் ஏரியாக்களில் பெரிய அரங்குகள் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்னால் பெரும்பாலான தியேட்டர்கள் இடிக்கப்பட்டு அபார்ட்மெண்டுகளாகவும் கல்யாண மண்டபங்களாகவும் உருமாறிவிட்டன. அதன்பின் மால்களில் திரையரங்குகள் உருவாகின. டால்பி அட்மாஸில் மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்களில் படம் பார்ப்பது ஒரு நல்ல அனுபவம் தான். ஆனால் மாதத்தில் ஒரு படம் மட்டுமே ஒரு சராசரி ரசிகனால் பார்க்க முடியும். திரைப்படங்களைப் பொருத்தவரை மல்டி ஸ்க்ரீனில் ஒரு படம் வெளியாகும் போது கலெக்‌ஷனை அள்ளிவிடலாம் என்ற கணக்கும் உண்டு. எத்தனை ஸ்க்ரீன்களில் திரையிடப்பட்டாலும் படம் நன்றாக இருந்தால்தான் ஓடும். 

மாற்று சினிமா எப்போது?

அரைத்த மாவையே எத்தனை காலம் அரைப்பார்கள் என்று புதுமையை விரும்பும் மக்கள் மொக்கை படங்களை அறவே புறக்கணிக்கத் தொடங்கிவிட்டனர். அதன் எதிரொலியாக சமீபத்தில் வெளிவந்த சில படங்கள் வெற்றி பெற்றன. ரசிகர்களின் ஆதரவும் எப்போதும் நல்ல படங்களுக்கு உண்டு.

இது போன்ற பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மேலும் நாம் தினந்தோறும் திரைப்படங்களுக்கே சவால் விடும் காட்சிகளை நேரில் பார்க்கத் தொடங்கிவிட்டோம். அக்கம் பக்கத்தில் சண்டைக் காட்சிகள், கொலை நிகழ்வுகள், போன்றவை சந்துக்கு சந்து நடக்கிறது. போலீஸ் என்கவுண்டர்களையும் நிறைய பார்த்துவிட்டோம். முன்பெல்லாம் காதல் என்ற வார்த்தையே கெட்ட வார்த்தையாக இருந்த ஒரு காலகட்டம் இருந்தது. இன்று பார்க்கில், பீச்சில், வீதியில் என எங்கும் காதலர்கள் ஜோடிப் புறாவாக தங்களை யார் கவனிக்கிறார்கள் என்ற நினைப்பில் நெருக்கமாகவே வலம் வருகிறார்கள். பொது இடங்களில் மற்றவர்கள் அசூசைப்படும் அளவுக்கு நடந்து கொள்கிறார்கள். எனவே காதல், சண்டை போன்ற தமிழர்களின் விருப்பமான அகம் புறம் யாவுமே அக்கம் பக்கத்திலேயே நடந்துவிடுவதால் இதை ஒருவர் திரைப்படமாக்கி அதை காசு கொடுத்துப் பார்க்க வேண்டுமா என்ற முடிவுக்கும் வந்திருக்கலாம்.

வேடிக்கையாக இதை நான் எழுதினாலும் நடைமுறையில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தமிழ் சினிமா தனது பாதையை சீரமைத்துக் கொள்ளும் வரையில் தியேட்டருக்கு மக்கள் வரமாட்டார்கள். ஒரு சினிமா ஓடுமா ஓடாதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது? அது அதைப் படமாக்கம் செய்யும் போது இயக்குநர் அவதானித்துவிட வேண்டும். நல்ல கதைகளை நம்பி எடுக்க வேண்டும். நோக்கம் சரியாக இருக்கும் போது ஆக்கம் சரியாகவே அமையும். இப்போது ரசிகர்களுக்குத் தேவை அத்தகைய மூவி மேஜிக். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com