என்னுடைய ரோல் மாடல் கிரிக்கெட் வீரர் தோனிதான்! நடிகர் ராஜ் பரத் பேட்டி!

சினிமான்னா... கோடம்பாக்கம். ஆனா, எனக்குப் பிறந்ததில் இருந்தே கோடம்பாக்கம்தான் விலாசம்
என்னுடைய ரோல் மாடல் கிரிக்கெட் வீரர் தோனிதான்! நடிகர் ராஜ் பரத் பேட்டி!

சினிமான்னா... கோடம்பாக்கம். ஆனா, எனக்குப் பிறந்ததில் இருந்தே கோடம்பாக்கம்தான் விலாசம். நான் பிறந்த மருத்துவமனை, இருக்கிற வீடு, என் அலுவலகம் எல்லாமே எனக்கு கோடம்பாக்கம்தான். எப்போதுமே கேர் ஆஃப் கோடம்பாக்கம்தான். கல்லூரி மாணவர் போல இருக்கிறார் ராஜ்பரத். 'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்', 'நட்பதிகாரம்', ரிச்சி', ஆந்திரா மெஸ்' என தேர்வாக நடித்து வளரும் கலைஞர். அடுத்து 'சிகை' உள்ளிட்ட படங்களுக்காக காத்திருக்கிறார்.

'என் அப்பா மல்லியம் ராஜகோபால். திரையுலகைச் சேர்ந்தவர்தான். இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என சினிமாவில் அத்தனை வேலைகளையும் பார்த்தவர். 'சவாலே சமாளி', 'ஜீவானம்சம்', 'துலாபாரம்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர்.

வீட்டில் சினிமா சூழல் இருந்ததால், இயல்பாகவே எனக்கும் சினிமா மேல் ஆர்வம். ஆனால், சினிமாவில் என்னவாக இருப்பேன் என்று எந்த திட்டமும் இல்லை. ஏதோ படப்பிடிப்பு தளங்களுக்கு சென்று வரும்போது, டென்ஷன் டைரக்டர், வியர்க்க விறுவிறுக்கத் திரியும் அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் இவர்கள் எல்லாம் என்னை ஈர்க்கவே இல்லை. ஆனால், அந்த நடிகர்... அதைச் சுற்றி ஏதோ ஒரு காந்தம். ஒரு மர்மமான கவர்ச்சி. 'ஆக்ஷன்'னு சொன்னதும் எல்லோரின் கவனமும் நடிகரைச் சுற்றியே இருக்கும். அந்த நடிகராக ஆனால் என்ன... என்று தோன்றியது. அந்த ஆர்வம் வெறியாக உருமாறி, 'நடிப்புதான் நம் இலக்கு' என்று நிலை கொண்டது, நம்புவீர்களா இல்லையோ... இதுதான் நான் சினிமாவுக்கு வந்த கதை. நீங்களெல்லாம் நின்று பேசுகிற அளவுக்கு வந்ததே பெரிய விஷயம். எளிமையும், உழைப்புதான் எல்லாவற்றையும் விட அழகு என்று இப்போது உணரும் தருணம் இது'. 

பெரிய அனுபவத்தை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறீர்கள்...? ஆரம்பக் கட்டத்தில் அடுத்தடுத்து சினிமா என்று போகாமல் இருப்பது சரியாக வருமா...?

திட்டமிடல் இல்லாமல் பயணங்கள் எப்படி... நல்ல சினிமாக்கள் பற்றி நிறைய கனவுகள் இருந்தன. அதற்கு நான் சின்ன வயதில் இருந்து பார்த்து வந்த சினிமாக்கள்தான் காரணம். படிப்பு முடிந்து இன்போசியஸில் வேலை, அப்படியே வெளிநாட்டு வாழ்க்கை என்பதும் என் திட்டங்களில் ஒன்றாக இருந்தது. 'நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்' என்பது போல், சினிமாவே அமைந்து விட்டது. இப்போது என் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பும், பாராட்டுதல்களும் நான் எதிர்பார்த்த ஒன்றுதான். இதன் பின்னணியில் பெரிய உழைப்பு இருந்தது, ஏனென்றால் என்னிடம் எப்போதும் மெனக்கிடல்கள் உண்டு. எதை தொட்டாலும் ஜெயித்து விட வேண்டும் என்ற வேட்கை இருக்கும். கல்லூரி படிக்கும் போதே, சினிமாவுக்காக என்னை தயார் படுத்திக் கொண்டே வந்தேன். கூத்துப்பட்டறை உள்ளிட்ட இன்னப் பிற அம்சங்கள் இன்றைய சினிமாவுக்கு முக்கியமானதாக இருந்தது. அது எல்லாவற்றிலும் பங்கு கொண்டு வந்திருக்கிறேன். அதனால்தான் அந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நேர்த்தியை உணர முடிந்தது. 'ஆந்திரா மெஸ்',  'சிகை' இரண்டுமே வேறு இடத்தில் இருக்கும். இதற்கு முக்கியமாக சினிமாவை புரிந்துக் கொண்டதும் இதற்கு ஒரு காரணம். வெற்றி ஒரு மனிதனை அழகாக்க வேண்டும். அதை எனக்கு செய்து கொடுத்திருக்கிறது இந்த சினிமா. எல்லோருக்கும் நன்றி.

அடுத்தடுத்த சினிமாக்களையும் தீர்மானித்து பயணிக்க வேண்டிய காலம் வந்திருக்கிறது...?

நல்ல சினிமா பற்றி நிறைய கனவுகள் உண்டு. கலைஞனின் கனவில் அவனுடைய பங்களிப்பு பாதிதான். ரசிகர்களின் ஒத்துழைப்பில்தான் நல்ல கனவுகள் நிறைவடையும். இப்போது அந்த நிலைக்குதான் சினிமா வந்திருக்கிறது. ஹீரோ, ஹீரோயின் என்பதைத் தாண்டி, கதை இருந்தால்தான் அந்த படத்துக்கு வெற்றி கைக்கூடும். இந்த மாற்றம்தான் சினிமாவுக்கு முக்கியமானது. ஹாலிவுட்டில் இது எப்போதோ வந்து விட்டது. இங்கே இப்போதுதான் நடந்துக் கொண்டு வருகிறது. பெரிய ஸ்டார், சின்ன ஸ்டார் என எந்த வித்தியாசத்தையும் ரசிகர்கள் பார்ப்பதில்லை. கதை இருந்தால் போதும்... இந்த நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால், எல்லாமே மாறி விடும். எனக்கும் அப்படித்தான். கதைதான் முக்கியம். இதுதான் கதை என தீர்மானமாக பிடித்து விட்டால், அந்த கதையில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று விடுவேன். ஓடுகிற படத்தில் இருப்பதை விட, கதை உள்ள படத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்த நிலைப்பாடு கடைசி வரை இருந்தால் அழகான வெற்றிகளின் பட்டியல் தொடரும். 

உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்...?

ரஜினி சாருக்கு எல்லோரும் ரசிகர்கள்தான். கமல் சாரின் தனித்துவத்தை உணராதவர்கள் யார்...? அஜித்தின் உயரம். விஜய்யின் உழைப்பு என எல்லோருமே எனக்கு பிடித்தவர்கள்தான். எனக்கு பெரிய ரோல் மாடல் என்றால், அது கிரிக்கெட் வீரர் தோனி. அவரின் பொறுமையும், எளிமையும் எப்போதுமே அழகு. சரியான திட்டமிடல் ஒன்றுதான், இங்கே உன்னை முன்னெடுக்கும் என ஒரு முறை பேசினார். அதுதான் எனக்கும் தாரக மந்திரம். திட்டங்கள் இல்லாமல், நீ என்னதான் உழைத்தாலும் வீண். அந்த விதத்தில் டோனி என் பெரிய ரோல் மாடல். இப்படி வழி நடத்துபவர்கள் கூடவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் உண்மையாக இருந்து விட்டால் போதும். சில நேரங்களில் நமக்கு பக்கத்தில் இருப்பவர்களும் ரோல் மாடல்களாக இருப்பார்கள். இப்படி ஒவ்வொருவரையும் கவனித்து வழி நடக்க நினைக்கிறேன். சினிமா கற்றுக் கொடுத்த பாடம் இது. தேங்க்ஸ் டூ சினிமா. 

- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com