உங்களுக்கு(ம்) மணி ரத்னம் படம் பிடிக்குமா?

சில படங்களை ஒரு தடவை கூட பார்க்க முடியாது. சில படங்களோ எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை.
உங்களுக்கு(ம்) மணி ரத்னம் படம் பிடிக்குமா?

சில படங்களை ஒரு தடவை கூட பார்க்க முடியாது. சில படங்களோ எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை. அந்தப் படத்தின் ஏதோ ஒரு காட்சி அல்லது பாடல் நம் மனத்துள் ஆழப் பதிந்துவிடும். அப்படிப்பட்ட படங்களை திரை ரசிகர்களுக்குத் திகட்ட திகட்ட அளித்தவர் இயக்குநர் மணி ரத்னம்.

மணி ரத்னம் படங்களை விரும்புவோர் திரும்பத் திரும்ப அவரிடம் எதிர்ப்பார்ப்பது ஒரு மேஜிக். அது என்னவென்று அவருக்குத் தெரியும். அழகியல், இசை, கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகள், நேர்த்தியான கதை சொல்லல். காமெடி, பேய் என்ற இரண்டு ஜானர்களைத் தவிர மணி ரத்னம் மற்ற ஜானர்களில் படங்களை இயக்கிவிட்டார். 

துவக்க காலத்தில் திரைத் துறை அவருக்கு சில கசப்பான அனுபவங்களைக் கொடுத்தாலும், விடாமுயற்சியும் புதுமையை நேசிக்கும் தன்மையும் அவருக்கு நிரந்தரமான ஒரு தனியிடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. அவரது ஒவ்வொரு படத்திலும் ஒரே சரடாக சில ஒற்றுமைகள் இருந்தாலும், வெவ்வேறு களத்தில் நமது கருத்தையும் கவனத்தையும் கவர்ந்துவிடத் தவறாதவை. நீங்கள் இன்று பார்த்த மழையும் நாளை பார்க்கவிருக்கும் மழையும் ஒன்றல்லவே! போலவே மணி ரத்னத்தின் படங்களும் அவரது படைப்புக்களின் வெவ்வேறு வார்ப்புகள். அடிப்படையில் அவர் உருவாக்கும் ரசனை மற்றும் அழகியல் சார்ந்த கலை நேர்த்தி அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிரத்யேகமானது. 

தமிழ்த் திரையில் பெண் மையக் கதாபாத்திரங்களைச் சித்தரிப்பதில் மணி ரத்னத்துக்கு நிகர் அவரே. திவ்யா (மவுன ராகம்), பானு (பம்பாய்), ஷக்தி (அலைபாயுதே), ஷியாமா (கன்னத்தில் முத்தமிட்டால்),  சுஜாதா (குரு), தாரா (ஓ கே கண்மணி), லீலா (காற்று வெளியிடை) உள்ளிட்ட பல படங்களில் வரும் பெண் பாத்திரங்கள் தன் மனத்தில் உள்ளவற்றை வெளிப்படுத்தத் தயங்காதவர்கள். சுயம் சார்ந்து இயங்குபவர்கள். முக்கியமாக துணிச்சலானவர்கள். அன்பும், காதலும், தேடலும் மிக்கவர்கள். தன்னுடைய அடையாளத்தை ஒருபோதும் இழக்க மறுப்பவர்கள். இத்தகைய வலுவான கதாபாத்திரங்களை மணி ரத்னம் உருவாக்கக் காரணம் அவரைச் சுற்றியுள்ள, அவர் காண்கின்ற பெண்கள் தான் என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். 

அவரது இசை ஞானம் அனைவரும் அறிந்தவொன்றுதான். இளையராஜாவுடன் அவர் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் திரை ரசிகர்களுக்கு என்றென்றும் திகட்டாத விருந்து. அதன் பின் இசைப்புயல் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் அவரது நீண்ட பயணம் இந்திய திரை இசையை வேறு ஒரு தளத்துக்கு உயர்த்தியவை. ஓகே கண்மணி படத்தின் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் மனம் உருகும். 

இதோ அதன் காணொலி,

மணி ரத்னம் அமைதியானவர். பழகியவர்களுக்கு இனிமையானவர். அவர் அதிகம் பேச மாட்டார் என்று பொதுவான அபிப்ராயம் உள்ளது. தேவையற்ற வார்த்தைகளை உதிர்ப்பதும், அர்த்தமற்ற அரட்டைகளில் ஈடுபடுவதுமாக இருந்தால் அவரால் உலகத் தரமான திரைப்படங்களை எப்படி இயக்கியிருக்க முடியும்? தன்னுடைய பாதையை மிகச் சரியாக வகுத்துக் கொண்டு, சமரசம் இன்றி அதில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒப்பற்ற ஒரு கலைஞர் அவர்.

காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டு செல்லும் படைப்பாளி அவர். 35 ஆண்டுகள் திரை உலகில் பயணிப்பது சாதாரண விஷயமில்லை. மணி ரத்னத்தின் பங்களிப்பு இல்லாமல் இந்திய சினிமாவின் வரலாற்றை யாரும் எழுதிவிட முடியாது. முன்பு போல் அவர் படங்கள் இல்லை என கூறுபவர்களுக்கு இதோ பாருங்கள் என்று புத்தம் புதிய படைப்புக்களை பதிலாக தரும் வழக்கம் அவருக்கு உண்டு. விமரிசனங்களைத் தன் படைப்புக்கள் மூலம் அவர் சந்திப்பவர். தனது படங்களில் வெற்றி தோல்விகள் அவரைப் பாதிக்காது. வெற்றியில் மகிழ்வதும், தோல்வியில் தடுமாறுவதும் இல்லாமல் சமன்நிலை குலையாமல் வாழ்பவர். Trend setter, legend என்று மீடியா, ரசிகர்கள் என உலகமே புகழ்ந்தாலும் ஒரு சிறு புன்னகையில் அதைக் கடந்து அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிடுவார். எளிமையும், சான்றோரை மதிக்கும் பண்பும், கற்றலின் ஆர்வமும், தீவிரத்தன்மையும் அவரைப் புடம்போட்ட தங்கமாக்குகிறது. நிறைகுடங்கள் ததும்பாது என்பதற்கு ஒரு நிகழ் உதாரணம் அவர்.

இயக்குநர் மணி ரத்னத்தின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி எழுத சில விஷயங்களை நினைவுப் பதிவாய் எடுத்து வைத்தேன். ஆனால் எந்த ஒரு சொல்லும் என் உணர்வுகளை மொழிபெயர்த்துவிட முடியாது என்ற முடிவுக்கு வந்து இந்த எளிய பகிர்வை எழுதி முடிக்கிறேன். பத்தாண்டுகள் அவரிடம் பணி புரிந்துவிட்டு விடைபெறும் தருணத்தில் அவர் என்னிடம் கூறிய வார்த்தை எனக்கு ஒருபோதும் மறக்க முடியாது, Enjoy Writing Uma.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com