அப்படி என்ன செய்தது அந்த நரி? ஹாலிவுட் திரைப்படம் ஃபென்டாஸ்டிக் மிஸ்டர் பாக்ஸ் திரை விமரிசனம்

அப்படி என்ன செய்தது அந்த நரி? ஹாலிவுட் திரைப்படம் ஃபென்டாஸ்டிக் மிஸ்டர் பாக்ஸ் திரை விமரிசனம்

ஆங்கில புத்தகங்களை விரும்பிப் படிக்கும் குழந்தைகளுக்குப் பிடித்த எழுத்தாளர் ரோல்ட் டால்

ஆங்கில புத்தகங்களை விரும்பிப் படிக்கும் குழந்தைகளுக்குப் பிடித்த எழுத்தாளர் ரோல்ட் டால். அவருடைய கற்பனை உலகில் பொம்மைகள் பேசும், சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட அல்ல ஒதுங்கி வாழும் பணக்கார பிரபுக்கள் இருப்பார்கள், விசித்திரமான மனிதர்கள் வலம் வருவார்கள், ராட்சத உருவமும் அன்புள்ளமும் கொண்ட ஜயண்ட்ஸ் இடம் பெறுவார்கள். ரோல்ட் டால் உருவாக்கியிருக்கும் இந்த கதாபாத்திரங்கள் அனைவரும் குழந்தைகள் மீது மாறாத அன்பு கொண்டவர்கள். அவர்களும் குழந்தை உள்ளம் கொண்டவர்கள். மனிதர்கள் மட்டுமல்ல மிருகங்களை வைத்தும் அவர் புனைவுகள் எழுதியுள்ளார். அப்படியான ஒரு புனைவி தான் ஃபெண்டாஸ்டிக் மிஸ்டர் ஃபாக்ஸ். அது ஒரு தந்திரமான நரியின் கதை. ஆனால் அந்த நரியை நாம் நேசிக்கும்படியான கதையம்சம் கொண்டிருக்கும்.

இந்தக் கதையை வைத்து உருவாக்கப்பட்ட ஹாலிவுட் படம்தான் வெஸ் ஆண்டர்சன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு அதே பெயரில் வெளியான அனிமேஷன் படம். ஆதியிலிருந்தே கதை சொல்லிகளுக்குப் பிடித்த கதாபாத்திரம் நரியார் தான். ஒரு ஊர்ல ஒரு நரி இருந்துச்சாம் என்று பலர் சிறுவயதில் நரிக்கதைகளின் மீது தீராத மோகம் கொண்டிருப்போம். நரியின் மீதான இந்தப் பிடிப்புக்குக் காரணம் அது மிகவும் புத்திசாலித்தனமானது. பஞ்ச தந்திரக் கதைகள் முதல் நவீன கதைகள் வரை நரிகள் தந்திரமானது, சில திருட்டு குணங்கள் உள்ளது சூழ்ச்சிகள் செய்து தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ள வல்லது எனும் புனைவு நரிகளின் மீது காலம் காலமாக இருந்துவருகிறது.  மனிதர்களிலும் மிருகங்களின் குணம் உடையோரை நாம் பார்த்திருப்போம். நரி, நாய், பூனை, ஆந்தை, புலி, சிங்கம், கரடி என்று ஒவ்வொரு மிருகங்களுக்கும் பிரத்யேக குணம் உள்ளதாக புனைவில் உருவாக்கப்பட்டிருந்தாலும், விஞ்ஞானபூர்வமாகவும் விலங்குகள் தனக்கென சில குணாம்சங்களைக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மை. இந்த எளிய கதை நமக்குத் தரும் திரையனுபவம் ஆழமானது. 

இந்தப் படத்தில் வரும் மிஸ்டர் ஃபாக்ஸ் கெட்டிக்கார குடும்பத் தலைவன். மனைவி மற்றும் மகனுடன் சந்தோஷமாக ஒரு சிறு பொந்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. முன்பு செய்த திருட்டு வேலை பிடிக்காமல் தற்போது கெளரவமாக ஒரு பத்திரிகையாளராக வேலை செய்கிறது. இந்நிலையில் அந்நரி தேவையில்லாத ஒரு சிக்கலில் சிக்கிக் கொள்ள, அதன் பயனாக சில மனிதர்களின் பகைமையை சம்பாதிக்கிறது. அவர்கள் அதனைக் கொல்ல வர, அதிலிருந்து எப்படி தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றுகிறது என்பதை சுவாரஸ்யமாக இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நாம் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு அனிமேஷன் படம். அதுவும் நரிகள், சிறு சிறு விலங்குகள் தான் முக்கிய கதாபாத்திரங்கள் என்பதையெல்லாம் மறக்கச் செய்து அவற்றின் சிறு அசைவையும் தவறாமல் நாம் பார்க்கும்படி கண்களைத் திரையிலிருந்து அகற்றமுடியாத அளவிற்கு அதி அற்புதமாக இப்படத்தை இயக்கியுள்ளார் வெஸ் ஆண்டர்சன்.

மிஸ்டர் ஃபாக்ஸ் எப்படி சிக்கலில் மாட்டியது என்பது அதன் பழைய ஒரு பழக்கத்தினால்தான். அதென்ன பழைய பழக்கம்? முன்பு ஒரு காலத்தில முருங்கை மர காட்டுக்குள்ள தந்திரம் மிகுந்த நரி ஒன்று வாழ்ந்து வந்தது, அது காடு விட்டு நாடு தேடி ஓடி வந்தது.... இந்தப் பாடல் நினைவிருக்கிறதா? போலவே திருவாளர் நரியாரும் காடு விட்டு அடிக்கடி அருகில் இருக்கும் கிராமத்துக்கு வந்து, அங்குள்ள கோழி, வாத்து உள்ளிட்ட பல சிறு உயிரிகளை திருடும் வழக்கத்தினை கொண்டிருந்தது. கூட்டுக் களவாணியாக தன்னுடைய மனைவியையும் அத்தொழிலில் ஈடுபடுத்தியிருந்தது நரி. நல்ல வேட்டை கிடைத்த ஒரு தினத்தில் எதிர்பாராம பொறியில் இருவரும் சிக்கிக் கொள்கிறார்கள். கோழியை திருடிக் கொண்டு ஒளிந்து மறைந்து ஓரிடத்தில் இருவரும் நின்று கொண்டிருக்கும் போது ஒரு கைப்பிடி ஒன்றைப் பார்த்த நரி அதை சட்டென்று இழுத்துவிடுகிறது. தேவையில்லாமல் செய்த அந்தச் செயலால் இருவரும் கூண்டுக்குள் மாட்டிக் கொள்ளவே, செயலற்றுப் போகிறார்கள். சிக்கினால் மனிதர்கள் சின்னாபின்னமாக்கிவிடுவார்கள் என அறிந்த நரிகளுக்கு உதறல் எடுக்கிறது. இந்த இக்கட்டான திருமதி நரி,  தங்களுக்கு விரைவில் குட்டி நரி பிறக்கவிருக்கிறது எனும் முக்கியமான விஷயத்தை திருவாளர் நரியிடம் கூறுகிறது. அந்த உத்வேகத்தில் எப்படியோ தப்பிப் பிழைக்கிறது அந்த நரிக் குடும்பம். இனி ஒருபோதும் திருடக் கூடாது என்று திருமதியின் சொல்பேச்சை கேட்டு சத்தியப் பிரமாணம் எடுத்த நரி சமர்த்தாக ஒரு வேலையில் அமர்ந்து விடுகிறது.

அதன் பின் சில ஆண்டுகள் கழித்து நரியாரின் மகன் ஆஷ் சிறிது வளர்ந்த நிலையில், வீட்டில் பற்றாக்குறைகள் இருந்தாலும் குடும்ப வாழ்க்கை ஓரளவுக்கு இனிமையாகக் கழிகிறது. பத்திரிகையாளரான பணி என்பதால் அதற்கு ஓரளவு மிருக சமூகத்தில் மதிப்பு இருந்தது. அதனால் சின்னதாக ஒரு பொந்தில் அடைக்கப்பட்டு வாழ்வதை நரி வெறுத்தது. எப்படியாவது இந்த நிலையை மாற்றி சற்று வசதியான வாழ்விடத்தை அமைத்துக் கொள்ள எண்ணியது. இதே சிந்தனையில் இருந்ததால் விரைவில் அதனை செயல்படுத்தினார் நரியார். நல்ல ஏரியாவில் ஒரு அழகான மரத்தை விலைக்கு வாங்கிவிட முடிவு செய்து அதற்கான வேலையில் முழு மூச்சாக இறங்குகிறது மிஸ்டர் நரி.

'அந்த மரத்தைப் பற்றி பிரச்னையில்லை ஆனால் மிகவும் ஆபத்தானது. அங்குதான் போகிஸ், பன்ஸ், பீன் ஆகிய மூவர் கூட்டணி பண்ணையார்கள் வாழ்கிறார்கள். அவர்கள் கொடூரமான மனித இனத்தைச் சேர்ந்தவர்கள், வேறு நல்ல இடத்தில் வீடு பார்க்கலாம் என்கிறார் ஆலோசகர். ஆனால் திருவாளர் நரி அதற்கு ஒப்புக்கொள்ளாமல் வன்குரங்குத்தனமான பிடிவாதத்துடன் அந்த மரப்பொந்தை விலைக்கு வாங்கிவிடுகிறது.

அருமையான அந்த வீட்டில் வாழும் நரியைத் தேடி அதன் சொந்தக்காரரின் மகன்  க்ரிஸ்டஃப் விருந்தாளியாக சில நாட்கள் தங்க வரவே, தன் மகனையொத்த வயதுடைய அந்தச் சிறு நரியையும் தங்களுடன் தங்க சம்மதிக்கிறார் திருவாளர் நரி. க்ரிஸ்டஃபின் தந்தைக்கு நிமோனியா காய்ச்சல் என்பதை அறிந்து அன்புடன் அரவணைக்கிறார். இதனால் அவருடைய மகன் ஆஷ் எரிச்சல் அடைகிறான். 

எல்லாம் மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கையில் நரிக்கு பழைய நினைவு வரவே மீண்டும் ஒரு ஜாக்பாட் அளவுக்கு திருட்டில் ஈடுபட்டு அதன் பின் செட்டிலாகிவிடலாம் என்று திட்டம் போடுகிறது. கூட்டாக தன் புதிய நண்பn கெய்லியைச் சேர்த்துக் கொண்டு இரவில் வேட்டைக்குக் கிளம்புகிறார் நரியார். திருமதி எங்கே போகிறாய் என்று கேட்கும் போதெல்லாம் இரவுப் பணி என்று புளுகிவிட்டு கோழித் திருடனாகிறது நரி. கோழியை மட்டுமல்லாமல், வாத்து, ஆப்பிள் ஜூஸ் என்று மூன்று பண்ணை வீட்டிலும் கடுங்காவலை மீறி தன் நரித்தனத்தைக் காட்டி ஜெயிக்கிறது. சுற்றுவட்டாரத்தில் வாழும் மிருக நண்பர்களை எல்லாம் அழைத்து விருந்து கொடுத்து தடபுடல் செய்கிறார் நரியார்.

தங்களுடைய பொருட்கள் அடிக்கடி களவு போவதைக் கண்டு கடும் கோபம் கொண்ட மூன்று பண்ணையார்களும் நரியை போட்டுத் தள்ள திட்டமிடுகின்றனர். நரியார்தான் அந்த திருடன் என்று கண்டுபிடித்து அதன் மரத்தை உடைக்க ஆள் அனுப்புகிறார்கள். ஆனால் நரி தன் குடும்பத்துடன் தப்பி விட அவர்கள் தங்கள் திட்டத்தை தீவிரப்படுத்துகிறார்கள். அவர்களிடமிருந்து நரி குடும்பம் தப்பித்ததா எப்படி தப்பியது அதன் பிறகு நரியார் என்ன செய்தார் என்பதை மிகவும் சுவாரஸ்யமாக விளக்கியுள்ளது ஃபென்டாஸ்டிக் மிஸ்டர் பாக்ஸ் படம்.

இது சிறுவர்களுக்கான கதையென்றோ படம் என்றோ ஒதுக்கிவிட முடியாது. எந்த வயதினரையும் வியக்க வைத்துவிடும் அழகான படைப்பு இது. ஸ்டாப்மோஷன் எனும் தொழில்நுட்பத்தில் இத்திரைப்படத்தை வெஸ் ஆண்டர்சன் உருவாக்கியிருப்பார். நரியின் செய்கைகள், அதன் திட்டம் தீட்டும் பாங்கு, போராடும் குணம், தன் மனைவிக்காக மீண்டும் திருந்தும் குணம் என்று நரியார் படம் காண்போரை ரசிக்க வைத்துவிடுகிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி நரியாருக்கு குரல் கொடுத்திருப்பதால் அப்பாத்திரத்துக்கு சற்று அழுத்தம் கூடுகிறது. இந்தப் படத்தில் சிரிக்கவும், சிந்தக்கவும் நிறைய விஷயங்கள் உள்ளன. உலகப் புகழ் பெற்ற குழந்தை எழுத்தாளரான ரோல் டாலின் பிரசித்தி பெற்ற கதையான இந்த ஃபென்டாஸ்டிக் மிஸ்டர் ஃபாக்ஸ் வெளிவந்த 2014-ம் வருடத்தில் இருந்து இன்று வரை ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகிறது என்றால் மிகை இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com