முகேஷ் கன்னான்னு சொன்னா தெரியாது, ‘சக்திமான்’ னு சொன்னாத்தான் தெரியும்!

அந்தக் காலத்தில் பி.ஆர்.சோப்ரா, நடிகர்களைக் கொண்டு மகாபாரதம் எடுத்தார். அதனால் என்னால் நடிக்க முடிந்தது. ஆனால், இன்று ஏக்தா மாடல்களைக் கொண்டு மகாபாரதம் எடுக்கிறார், நான் மாடல் அல்ல, நடிகன்.
முகேஷ் கன்னான்னு சொன்னா தெரியாது, ‘சக்திமான்’ னு சொன்னாத்தான் தெரியும்!

பி.ஆர் சோப்ராவின் மகாபாரதம் பார்த்திருக்கிறீர்களா? 80 களில் தூர்தர்ஷன் வாயிலாக மகாபாரதக் கதை அறிந்தவர்களுக்கு ‘பீஷ்மர்’ என்றதும் உடனே ஒருமுகம் நினைவுக்கு வரும். அந்த முகத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இன்றைய மெகாசீரியல் யுக பீஷ்மர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மகாபாரதத்தில் இன்று பல வெர்ஷன்கள் வந்து விட்டன. ஆனால், அத்தனை மகாபாரத பீஷ்மரிலுமே முகேஷ் கன்னாவின் சாயல் இருக்கத்தான் செய்கிறது.

ஏனெனில் அந்தளவுக்கு அவர் நிஜ பீஷ்மராகவே மக்கள் மனங்களில் பதிந்து விட்டார்.

பீஷ்மராக மட்டுமல்ல, ‘சக்திமான்’ எனும் டெலிவிஷன் தொடர் மூலமாக குழந்தைகளின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் முகேஷ் கன்னா. இத்தொடர் எந்த அளவுக்கு குழந்தைகளால் ரசிக்கப்பட்டதோ அந்த அளவுக்கு பெற்றோர்களால் சிற்சில நேரங்களில் வெறுக்கப்பட்டதும் கூட! காரணம் சக்திமானைப் போலவே வலது கையை உயர்த்திக் கொண்டு சுழன்றால் தான் விரும்பும் இடத்திற்குப் பறக்கலாம் என்று நினைத்து நாடு முழுவதும் பல சிறுவர்கள் உயரமான மாடிகளில் இருந்து குதித்து காயம் பட்டதாலும், துரதிருஷ்டவசமாக மரணித்ததாலும் தான். சக்திமான் குறித்து இப்படிப்பட்ட புகார்கள் வரத் தொடங்கியதும் சக்திமான் தொடர் ஒளிபரப்பாவதற்கு முன்பு இது சித்தரிக்கப்பட்ட காட்சி இதைப் பார்த்து சிறுவர்கள் இதே போல முயற்சி செய்யக் கூடாது. ஆபத்து என முன்னெச்சரிக்கை டிஸ்க்கி வெளியிடப்பட்டது. 

சக்திமான் தொடர் சூப்பர் ஹிட் ஆனதற்கான காரணம் அதில் தீமையை எதிர்க்கும் சூப்பர் ஹீரோவாக முகேஷ் கன்னா நடித்ததால் மட்டுமல்ல, வெகுளியும், பயந்தாங்கொள்ளியுமான ‘பண்டிட் கங்காதர் வித்யாதர் சாஸ்திரி’ எனும் பெயரிலான நகைச்சுவை கதாபாத்திரத்தில் குழந்தைகளுக்கு மிகப்ரியமான தோற்றத்தில் முகேஷ் கன்னா நடித்ததாலும் தான். சக்திமான் தொடர் இந்தியாவில் மட்டுமல்ல பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தானிலும் கூட முகேஷ் கன்னாவுக்கு ஏராளமான குழந்தை ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தது ஆம், எப்படியோ குழந்தைகளின் சைக்காலஜியைப் படித்து விட்டார் இந்த மனிதர். அதனால் தான் சக்திமானைத் தொடர்ந்து அவரது மற்றுமொரு சூப்பர் நேச்சுரல் காமிக்  ஹீரோயிஸத் தொடரான ‘ஆரியமானும்’ குழந்தைகளிடையே மாபெரும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றதென்றால் அதன் கமர்சியல் வெற்றிகளைப் பற்றிய பேச்சில்லை இது. முகேஷ் கன்னா நடித்த கதாபாத்திரங்களில் இன்றும் கூட அவரை மேற்கண்ட மூன்று கதாபாத்திரங்களின் வாயிலாகவே மக்கள் வெகுவாக நினைவுகூர்கிறார்கள் என்பதைப் பொறுத்ததே அந்த வெற்றி!

முகேஷ் கன்னா தான் நடித்த அத்தனை தொடர்களிலும் குழந்தைகளுக்குப் பிடித்தமான அம்சம் இருக்கிறதா? எனத் தேடித் தேடி நடித்தாரோ இல்லை அது தானாக அப்படி அமைந்து விட்டதோ எனத் தெரியாத போதும் குழந்தைகளிடையே அவருக்கிருந்த பிரபலத்தன்மையின் காரணமாக சில்ட்ரன் ஃபிலிம் சொஸைட்டி ஆஃப் இந்தியாவின் சேர்மனாகவும் ஆனார். மகாபாரத பீஷ்மர் கதாபாத்திரத்தில் இவருக்கு கிடைத்த வெற்றியையும், காலங்கள் கடந்த பின்பும் மக்கள் இவரை பீஷ்மராக நினைவு கூர்ந்த அதிசயத்தையும் மனதில் வைத்து 2008 ஆம் ஆண்டு ஏக்தா கபூரின் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் நிறுவனத்தார், தாங்கள் எடுக்கவிருந்த  Kahaani Hamaaray Mahaabhaarat Ki எனும் நவீன மகாபாரதத் தொடரில் சாந்தனு கதாபாத்திரத்தில் நடிக்க முகேஷ் கன்னாவை அணுகினர். ஏனோ, முகேஷ் கன்னா அந்த வாய்ப்பை நிராகரித்தார். காரணம் மிக சிம்பிளானது.

‘அந்தக் காலத்தில் பி.ஆர்.சோப்ரா, நடிகர்களைக் கொண்டு மகாபாரதம் எடுத்தார். அதனால் என்னால் நடிக்க முடிந்தது. ஆனால், இன்று ஏக்தா மாடல்களைக் கொண்டு மகாபாரதம் எடுக்கிறார், நான் மாடல் அல்ல, நடிகன்... அதனால் ஏக்தாவின் மகாபாரதத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை’ எனக் கூறி அந்த வாய்ப்பை புறக்கணித்து விட்டார். 

மும்பையில் பிறந்தவரான முகேஷ் கன்னா, பள்ளிப்படிப்பை முடித்ததும் மும்பையில் இருக்கும் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவில் இணைந்து நடிப்புக் கலை பயிலத்தொடங்கினார். அப்போது அங்கு அவரது வகுப்புத் தோழர்களாக அமைந்தவர்கள் நஸ்ருதீன் ஷாவும், சக்தி கபூரும்(ஷ்ரத்தா கபூரின் அப்பா).

குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியரிடையே முகேஷ் கன்னாவுக்கு இருந்த செல்வாக்கைக் கண்டு மத்திய அரசு தனது ‘சக்திமான்’ திட்டத்துக்கு வலுச்சேர்க்க முகேஷைப் பயன்படுத்திக் கொண்டது. இந்திய அரசின் சக்திமான் திட்டத்தின் நோக்கம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் இந்தியக் குழந்தைகளிடையே ஊட்டச்சத்தின்மை, சத்துக்குறைபாடு, பேறு காலத்தின் போதான தாய், சேய் மரண விகிதத்தைக் குறைத்தல், ஆரோக்யம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல் எனும் அடிப்படைகளைக் கொண்டது. முகேஷ் கன்னா, தனது சக்திமான் தொடரின் இறுதியில் ஒவ்வொரு வாரமும் மத்திய அரசின் சக்திமான் திட்டத்திற்கான அம்பாஸிடராகவும் செயல்பட்டு குழந்தைகளின் ஆரோக்ய வாழ்வுக்கான அறிவுரைகளையும் வழங்கி வந்தார்.

அதிலொன்று, 

‘குழந்தைகளா, உங்களில் சிலருக்கு சாப்பிட்டதும் தூங்கச் சென்று விடும் பழக்கம் இருக்கலாம். அப்படிச் செய்யக் கூடாது. ஆனாலும் மறுநாள் பள்ளிக்கு சீக்கிரமாகச் செல்ல வேண்டுமே என்று அம்மாக்கள் வற்புறுத்தும் போது வேறு வழியில்லாமல் நீங்கள் படுக்கைக்குச் செல்வீர்கள். அப்படியான சமயங்களில் நீங்கள் உண்ட சாப்பாடு செரிக்க வேண்டுமானால்... நீங்கள் இடது பக்கம் திரும்பி படுத்துத் தூங்க வேண்டும். இப்படிச் செய்வதால் உங்களது இரப்பையின் செரித்தல் திறன் அதிகமாகி உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும்’ 

என்பது போன்றது. இம்மாதிரியான எளிதான அறிவுரைகள் குழந்தைகள் அளவில் மிகப்பயனுள்ளதாகவே இருந்தது.

அதெல்லாம் சரி... திடீரென்று ஏன் முகேஷ் கன்னாவின் பேச்சு என்பவர்களுக்கு. நேற்று அவரது பிறந்த நாள். ஒரு சக்திமான் ரசிகையாக அவருக்கு நேற்றே வாழ்த்து கூறியிருந்திருக்க வேண்டும். பெட்டர் லேட் தென் நெவர்... அதனால் இப்போது வாழ்த்திக் கொள்கிறேன்.

ஹேப்பி பெர்த் டே சக்திமான் & பண்டிட் கங்காதர் வித்யாதர் சாஸ்திரி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com