பிக்பாஸ் சீஸன் 2 வில் புல்லரிக்க வைக்கும் விதத்தில் ‘டாஸ்க் கான்செப்ட்’ உருவாக்கிய அதிபுத்திசாலிகள் கவனத்துக்கு!

டாஸ்குகளை ஆடியன்ஸ் ரசிக்கும் வண்ணம் கிரியேட்டிவ்வாக தரப்பழகுங்கள். குறைந்த பட்சம் முட்டையடித்தல், மீசை வரைதல், டயாபர் மாட்டுதல், ஃபீடிங் ரப்பர் வைத்துக் கொண்டு பார்ப்பவரகளை ஹிம்சை செய்தல் போன்ற விஷப்
பிக்பாஸ் சீஸன் 2 வில் புல்லரிக்க வைக்கும் விதத்தில் ‘டாஸ்க் கான்செப்ட்’ உருவாக்கிய அதிபுத்திசாலிகள் கவனத்துக்கு!

ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் கடுப்பேத்தறாங்க மை லார்ட். பிக் பாஸ் சீஸன் 2 வை தொடர்ந்து பார்க்க முடிவதில்லை. துவங்கிய நாளன்று ஒரு எபிசோட் பார்த்தேன். பிறகு நேற்று தான் மீண்டும் பார்த்தேன். மும்தாஜுக்கும், தாடி பாலாஜிக்கும் குழந்தைகள் போல நடிக்கவேண்டுமென்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. சின்னக்குழந்தைகளாக் நடிப்பதில் எத்தனையோ கியூட் வேரியேஷன்களைக் கொண்டு வரலாம். குழந்தை போலப் பேசிப் பழகி டிரெயினிங் எடுத்துக் கொள்ள இவர்களுக்கு தலை சிறந்த உதாரணங்களாக மூன்றாம் பிறை ஸ்ரீதேவி இருக்கிறார். தெய்வத் திருமகள் விக்ரம் இருக்கிறார். மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தின் ராதிகா, பிரதாப் போத்தன் ஜோடி இருக்கிறது. இன்னும் சரிதாவும், குஷ்பூவும் கூட அப்படிக் குழந்தை போலப் பேசி ஓரிரு திரைப்படங்களில் நடித்திருந்ததைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. ஒரு குழந்தை எப்படிப் பேசும் என்பதை அறிந்து கொள்ள அவர்களில் யாரையாவது இமிடேட் செய்திருக்கலாம். சரி தொலையட்டும்... அவர்களை எல்லாம் இமிடேட் செய்ய விரும்பாவிட்டால் ஒரு குழந்தை எப்படிப் பேசுமோ அப்படியாவது அழகாகப் பேசி நடித்திருக்க வேண்டும். பிக்பாஸில் நேற்று மும்தாஜுக்கும், தாடி பாலாஜிக்கும் டயாபர் மாட்டி விட்டு, வாயில் ஃபீடிங் ரப்பர் வைத்துத்தான் அவர்கள் குழந்தைகள் என்பதை ஆடியன்ஸ் மனதில் பதிய வைக்க வேண்டும் என்பதில்லை. பார்க்க படு கர்மமாக இருந்தது.

இதில் இப்படி ஒரு டாஸ்கை தேடிக் கண்டுபிடித்து பிக் பாஸுக்கு கொண்டு வந்த நல்ல உள்ளத்துக்கு ஒரே ஒரு வேண்டுகோள்...

ஐயா குழந்தைகள் என்றால் டயாபர் அணிவார்கள் என்பதை தயவு செய்து புரஜெக்ட் செய்யாதீர்கள்.

பெரும்பாலான இளம் தாய்மார்கள் அத்தகைய டயாபர்களைத் தங்களது குழந்தைகளுக்கு அணிவிப்பதை விரும்புவதில்லை என்பதே நிஜம்.

வேலைக்குப் போகும் தாய்மார்கள் வேறு வழியின்றி தங்கள் குழந்தைகளுக்கு டயாபர் அணிவித்து பழகினாலும் அதனால் அவர்களுக்கு உண்டாகும் மன சஞ்சலத்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரிந்திருக்குமா?! 

குழந்தைகளுக்கு டயாபர் அணிவிப்பதால் முதலில் ஸ்கின் அலர்ஜி வரும். தொடர்ந்து பருத்தியால் ஆன நாப்கின்கள் அன்றி பிளாஸ்டிக் இழைகளால் மெஷினால் தயராகும் பிரபல பிராண்டட் நாப்கின்களை மட்டுமே அணிவித்துப் பழகினீர்கள் என்றால் குழந்தைகளுக்கு புட்டம் நிறம் மாறி தடித்துப் போகும், யூரினரி டிராக்ட் இன்ஃபெக்சன் வரும். அது மட்டுமல்ல, மலச்சிக்கல் வரவும் வாய்ப்பு உண்டு. இதை நான் சொல்லவில்லை. என் குழந்தைக்கு அப்படிப்பட்ட பிரச்னைகள் வந்த போது சிகிச்சைக்கு அணுகிய குழந்தைகள் நல மருத்துவர் சொன்னார்.

விஷயம் இப்படி இருக்க... குழந்தைகளாக நடிக்கும் டாஸ்க் தரப்பட்டவர்களுக்கு மரக்குதிரை, சீசா, ஊஞ்சல், சறுக்குமரம் என அளித்து அதில் விளையாடச் சொல்லி இருக்கலாம். இல்லா விட்டால் மரப்பாச்சி பொம்மைகளையோ, செப்பு விளையாட்டுச் சாமான்களையோ அளித்து நாள் முழுவதும் விளையாடச் சொல்லி டாஸ்க் அளித்திருக்கலாம். இதிலெல்லாம் விருப்பமில்லையென்றால் பிக் பாஸ் வீட்டு கார்டன் ஏரியாவில் கொஞ்சம் ஆற்று மணலைக் கொட்டி அதில் திரி, திரி பொம்மக்காவையாவது விளையாடச் சொல்லி இருக்கலாம். 

அனந்த் வைத்யநாதனும், ரம்யாவும் சும்மா தானே இருக்கிறார்கள்... அவர்களுக்கு ஆசிரியர் டாஸ்க் கொடுத்து நீராரும் கடலுடுத்த பாடலையும், ஆத்திச்சூடியையும் ராகமிட்டுப் பாட கற்றுக் கொடுத்திருக்கலாம் மும்தாஜுக்கும், தாடி பாலாஜிக்கும் மாத்திரம் அல்ல... பிக் பாஸ் சீஸன் 2 தொடங்கியது முதலாக 8.30 மணியானால் போதும் பிக்பாஸே கதி என்று இருக்கிறார்களே லட்சக்கணக்கான ஆடியன்ஸ் அவர்களுக்கும் சேர்த்துத் தான்.

அதை விட்டு விட்டு. சென்ராயன் & ரித்விகா தலையில் முட்டை அடிப்பது, பார்த்தாலே நொந்து நூடுல்ஸ் ஆனவரைப் போல காட்சியளிக்கும் பொன்னம்பலத்தையும், ஒடிந்து விழுந்து விடுவார் போலிருக்கும் நித்யாவையும் நீச்சல்குளத்தில் பிடித்துத் தள்ளி விடுவது. இதெல்லாம் என்னய்யா வித்யாசமான டாஸ்க்! பார்வையாளர்களின் சகிப்புத் திறனைச் சோதிக்காதீர்கள். இவர்களைக் கொண்டு வேறு அருமையான பல டாஸ்குகளைத் திட்டமிடத் தோன்றவில்லையா உங்கள் துருப்பிடித்த மூளைகளுக்கு...

வேண்டுமானால் சில டிப்ஸ் தருகிறோம்... வொர்க் அவுட் ஆகிறதா என்று பாருங்கள்.

பிக் பாஸ் வீட்டில் ஒரு நாள் முழுதும் வேற்றுமொழிக் கலப்பின்றி முழுக்க, முழுக்க நல்ல தமிழ் பேசுவோம் என்ற கான்செப்டில் ஒரு டாஸ்க் வைக்கலாம். உருப்படியாக இருப்பதோடு, நகைச்சுவையாகவும் இருக்கும்.

இன்னும் கோடையின் உக்கிரம் தணியாது இருப்பதால் பிக் பாஸ் வீட்டில் கிராமத்து திருவிழாக்களில் கொண்டாடப்படும் மஞ்சள் நீராட்டம் அல்லது வடக்கத்திக்காரர்களின் ஹோலி போன்ற ஏதாவதொரு கலர்ஃபுல் ஃபன் கேம் ஆடச் சொல்லி  இரு அணிகளாகப் பிரித்து மதிப்பெண் அளிக்கலாம்.

நடிகர்களும், மாடல்களும் தானே இதில் பங்கேற்கிறார்கள்... இவர்களுக்கு ஏது பொது அறிவும், சமூக அக்கறையும் என்று மலினமாக நினைத்து விடாமல் அவர்களுக்குப் பொருத்தமான வகையில் வினாடி வினா நடத்தலாம், பிக்பாஸ் போட்டியாளர்களை இரு அணிகளாகப் பிரித்து சென்னை டு சேலம் எட்டுவழிச்சாலையின் நோக்கம் பிரஜாபாட்டையா? ராஜபாட்டையா? என்று பட்டிமன்றம் வைக்கலாம். நடுவர் தான் இருக்கவே இருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

பிக்பாஸ் வீட்டைச் சுற்றி சீஸன்கள் தோறும் அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் கையால் ஆரம்ப வாரத்தில் ஆளுக்கொரு மரக்கன்று அளித்து நடச்சொல்லலாம். அந்த மரங்களின் அருகில் என்றென்றைக்கும் அழியாத வண்ணமாக அதை அங்கு நட்டு வளர்த்த போட்டியாளர்களின் பெயரைப் பொறித்து வைக்கலாம். ஒருகாலத்தில் இந்த பிக்பாஸ் போட்டியையே கூட சேனல் நிர்வாகம் நிறுத்தினாலும் கூட இந்த மரங்கள் நிற்காமல் பிக்பாஸ் பெயர் சொல்லி வளர்ந்து கொண்டே இருக்கும்.

அட மேலும் அதிக ஃபன் வேண்டுமென்றால் பெண்களுக்கு மை தாடி, மீசை வரைந்து ஆணாக மாறச் சொல்லியும், ஆண்களுக்கு புடவை கட்டி விட்டு பெண்ணாக மாறச் சொல்லியும் நச்சுப் பண்ணும் இற்றுப் போன விளையாட்டை ஆடாமல் ஒரே ஒரு நாட்டுக் கோழியையோ அல்லது ஆட்டுக்குட்டியையோ பிக் பாஸ் வீட்டில் வைத்து அதன் போட்டியாளர்களை வளர்க்கச் சொல்லலாம். நாய், பூனை, மீன், புறா எல்லாம் வேண்டாம். அதெல்லாம் அவரவர் வீடுகளிலேயே வளர்த்த பழக்கம் அவர்களுக்கு இருக்கும். கோழியும், ஆடும் தான் வித்யாசமானது. பார்வையாளர்களுக்கும் பார்க்க நகைச்சுவையாக இருக்கும். அதோடு நாட்டுக்கோழி, ஆட்டுக்குட்டி வளர்ப்பின் மூலமாக கிடைக்கக் கூடிய நன்மைகளை இந்த சமூகத்துக்கு எடுத்துச் சொன்ன நற்பெயரும் கிடைக்கும்.

100 நாட்களும் ஸ்மார்ட் ஃபோன், லேப்டாப், நியூஸ் பேப்பர், இண்டர்நெட் எதுவுமில்லாத பிக்பாஸ் வீட்டு வாழ்க்கை எப்படி இருந்தது என ஒவ்வொரு போட்டியாளரையும் ஒரு கட்டுரையோ கவிதையோ எழுதச் சொல்லி அதற்கு கமல்ஹாசனை வைத்து மார்க் போட்டு அதையும் ஒரு டாஸ்க் ஆக்கலாம். 

பிக்பாஸ் உறுப்பினர்களை வட்டமாக உட்கார வைத்து ‘குலை, குலையாம் முந்திரிக்காய், குலைஞ்சு போச்சு கத்தரிக்காய், நரியே நரியே சுத்தி வா’ ஆடச்சொல்லி அவுட் ஆனவர்களின் பாயிண்டுகளை ஜெயித்தவர்களுக்குத் தரலாம்.

நேற்றைய நிகழ்ச்சியில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து யாஷிகாவையும், ஃப்ரெண்டு லவ் மேட்டரு டேனியலையும்  வைத்து 50 கிலோ வெங்காயம் நறுக்க வைத்தார்கள். பிக்பாஸ் வீட்டில் கல்யாணமா என்ன? இத்தனை வெங்காயத்தை ஒரேயடியாக நறுக்கித் தள்ள?! இதற்குப் பதிலாக கலர், கலராக மணிகளை வாங்கித் தந்து ஆளுக்கொரு ஹேண்ட் கிராஃப்ட் நகைகள் செய்யுங்கள் என்றோ, களிமண் பொம்மைகள் செய்யுங்கள் என்றோ  டாஸ்க் வைத்து சிறப்பான பங்களிப்பாளர்களுக்கு பிக்பாஸ் சிறப்புப் பரிசு தரலாம். கடந்த முறை ஆரவ்வும், காயத்ரியும் மாவில் பிக்பாஸ் செய்தார்களே கிட்டத்தட்ட அப்படி ஏதாவது இருந்தாலும் ஓகே.

கட்டக் கடைசியாக ஒரே ஒரு ஸ்பெஷல் டாஸ்க் ஆப்சனோடு முடித்துக் கொள்ளலாம். அதாவது பிக்பாஸ் தனது பிக்பாஸ் வீட்டில் ஸ்மார்ட் ஃபோன், டி.வி, இண்டர்நெட், நியூஸ் பேப்பர்களுக்குத் தடை விதித்தது போல ஒரே ஒருநாள் மட்டும் மின்சாரத்துக்கும் தடை விதித்து போட்டியாளர்களை அவரவரே கைவிசிறிகளைத் தயார் செய்ய வைத்து எதிர்காலத்தில் எப்போதாவது மின்சாரமற்றுப் போய்விடுமொரு காலகட்டம் வந்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்றும் இந்த பாழும் உலகத்துக்கு வழிகாட்டலாம்.

ஸாரி பிக்பாஸ் உங்களை விமர்சிப்பதற்காக இதையெல்லாம் எழுதவில்லை. ஒரு நிகழ்ச்சி பல லட்சக்கணக்கானவரகளை ஈர்த்திருக்கிறது என்றால் அது சாதாரண விஷயமில்லை. ஆனால், அப்படிப்பட்ட ஒரு ரியாலிட்டி ஷோவில் மக்களுக்கோ, இந்த சமூகத்துக்கோ, குறைந்த பட்சம் அதை விழுந்து விழுந்து பார்த்துக் கொண்டாடும் ரசிகர்களுக்கோ கூட உபயோகமாக குந்துமணியளவு விஷயம் கூட  இல்லாமல் உறிக்க, உறிக்க ஒன்றுமில்லாமல் போகும் வெங்காயம் போல சொறேரென்று இருக்கக் கூடாது.

எனவே தயவு செய்து டாஸ்குகளை ஆடியன்ஸ் ரசிக்கும் வண்ணம் கிரியேட்டிவ்வாக தரப்பழகுங்கள். குறைந்த பட்சம் முட்டையடித்தல், மீசை வரைதல், டயாபர் மாட்டுதல், ஃபீடிங் ரப்பர் வைத்துக் கொண்டு பார்ப்பவரகளை ஹிம்சை செய்தல் போன்ற விஷப் பரீட்சைகள் எல்லாம் வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com