கெட்ட வார்த்தை பேசுகிறார் தாடி பாலாஜி: குற்றம் சுமத்தும் பிக் பாஸ் வீட்டுப் பெண்கள்!

பாலாஜி கெட்ட வார்த்தை பேசியதற்கு பிக்பாஸ் ஏதாவது தண்டனை தருவாரா? ஞாயிற்றுக் கிழமை தெரியலாம்.
கெட்ட வார்த்தை பேசுகிறார் தாடி பாலாஜி: குற்றம் சுமத்தும் பிக் பாஸ் வீட்டுப் பெண்கள்!

விரும்பியோ அல்லது அனிச்சை செயலாகவோ இன்று பெரும்பாலானோர் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் சீஸன் 2. அதில் போட்டியாளர்களாக நடிகர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், பாடகர்கள், மாடல்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் கலந்து கொள்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பலமொழிகளில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகி வருகிறது. அந்தந்த மாநில மக்களின் ரசனையைப் பொறுத்து இதில் பலவிதமான டாஸ்குகள்  போட்டியாளர்களுக்கு அளிக்கப்படுகின்றன. இதில் மக்களின் ரசனை இது தான், அதற்கேற்ப தான் நிகழ்ச்சியின் போக்கு என்பதை இது போன்ற நிகழ்ச்சிகளை அளிக்கும் தொலைக்காட்சி நிர்வாகத்தார் எப்படி முடிவு செய்கிறார்கள் என்பது தான் மிகப்பெரிய மர்மமாக இருக்கிறது. இம்முரை பிக்பாஸ் சீஸன் 2 ல் விஜய் தொலைக்காட்சியின் ஆங்கர்களில் ஒருவரான தாடி பாலாஜியும் ஒருவர். அவருக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு இருப்பது இன்று தமிழ்நாடறிந்த உண்மை. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தங்களது குழந்தையின் மீதான உரிமைக்காக இருவருக்குள்ளும் உரிமை மோதல்கள் தொடர்கின்றன. பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலும் அது பிரதிபலிக்கிறது.

பிரிந்து வாழும் கணவனும், மனைவியும் ஒரே நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் போதே, இவர்களை வைத்து சேனல்காரர்கள் மக்களிடையே ஆக்ரோஷத்தைக் கிளப்ப வழி பார்க்கிறார்கள் என்று பலருக்கும் புரிந்தே இருந்தது. ஆனாலும், 100 ல் 1 சதவிகித வாய்ப்பாக இந்த ஜோடி பிக்பாஸ் 2 வுக்குப் பிறகு இணைந்தால் அவர்களது குழந்தையின் எதிர்காலத்துக்கு நல்லது என சிலர் கருதவும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அந்த நம்பிக்கை சேனல்காரர்களுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள், இவர்களை சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொண்டதென்னவோ நிகழ்ச்சியின் காண்ட்ரோவெர்சிக்காக மட்டுமே! சரி, சம்பாதிப்பதற்காகத் தான் இதில் கலந்து கொண்டிருக்கிறோம், என்று தெரிந்தே இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழந்திருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இது பல லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சி என்பது தாடி பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் தெரியாதா என்ன? தெரியும் எனும் போது அவர்கள் சற்று நாகரீகமாக நடந்து கொள்வதில் என்ன குந்தகம் வந்து விடப்போகிறது?! 

நேற்றைய பிரசனைக்கு வருவோம். நேற்றைய நிகழ்ச்சியில், பிக்பாஸ் அளித்த டாஸ்க்கின் படி ஆண்கள் அனைவரும் பெண்களுக்கு வேலைக்காரர்களாக நடிக்க வேண்டும். அதன்படி பிக்பாஸ் போட்டியாளர்களில் ஆண்களான மகத், பொன்னம்பலம், சாரிக், அனந்த் வைத்யநாதன், தாடி பாலாஜி, டேனியல், சென்ராயன் என அனைவருமே பெண் போட்டியாளர்களான ஜனனி ஐயர், ரித்விகா, மமதி, ஐஸ்வர்யா, வைஷ்ணவி, நித்யா... உள்ளிட்டோருக்கு வேலைக்காரர்களாக மாறி அவர்கள் இட்ட வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருந்தனர். 

இந்த டாஸ்கால் தான் சண்டையே தொடங்கியது.

தாடி பாலாஜி, தனது மனைவி நித்யாவுக்கு வேலைக்காரராகி அவர் சொன்ன வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருந்தார். எப்படி என்றால் கடுகடு முகத்தோடும், நையாண்டி சுடு சொற்களோடும்... சில சமயம் அதைப் பொருட்படுத்தாத நித்யா, தனது தந்தையைக் குறிக்கும் விதமாக பாலாஜி கெட்ட வார்த்தை சொல்லித் திட்டவும் அதை சகித்துக் கொள்ள முடியாமல். பல கேமிராக்கள் பொருத்தப்பட்டு பலர் பார்க்கக் கூடிய இந்த நிகழ்ச்சியில் பாலாஜி கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுவது சரியா? எனக் கேள்வி எழுப்பினார். அப்போதும் பாலாஜி நிறுத்தினாரில்லை.

சக போட்டியாளர்களில் ஒருவரான ரித்விகாவிடம், ‘உங்கள் அண்ணனையோ, தம்பியையோ... ஒரு பெண் இப்படி திமிருடன் நடத்தினால் நீங்கள் பொறுத்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பீர்களா? என்ன, ஏதென்று கேட்க மாட்டீர்களா?’ என்று தன் பக்க நியாயத்தைக் கூறி விளங்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.

அந்தப்பக்கம் நித்யா, வைஷ்ணவி, என் எஸ் கே ரம்யா, போன்றோரிடம்,  இப்படி கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுவது சரியா? என்னால் இதை பொறுத்துக் கொள்ள முடியாது. நான் எதிர்த்துக் கேட்கத்தான் செய்வேன், நீங்களானால் கேட்க மாட்டீர்களா? கேட்டுக் கொண்டு அப்படியே அமைதியாகப் போய்விடுவீர்களா? என்று ஆற்றாமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதுவரை நிகழ்ந்த விஷயங்களில் பிடிக்காத கணவருக்கும், மனைவிக்குமிடையேயான கருத்து வேறுபாடுகளின் காரணமாக ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்ள முயலும் தொனி தான் அதிகமாகத் தெரிந்தது. இவர்களைத் தேர்ந்தெடுத்து போட்டியில் கலந்து கொள்ளச் செய்து சேனல்காரர்கள் அவர்களிடம் முன்பே அறிவுறுத்தியிருக்கலாம், உங்கள் சண்டை, சச்சரவுகளை எல்லாம் உங்கள் வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள். இது உலகமே பார்க்கும் ஒரு ரியாலிட்டி ஷோ... இங்கே உலகின் முன் உங்களது மோசமான குணங்களை எல்லாம் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் என்று. அவர்கள் அப்படியெல்லாம் கேட்டுக் கொண்ட மாதிரி தெரியவில்லை. ஏனெனில், பிக்பாஸ் வீட்டில் அடியெடுத்து வைத்த நாள் முதலாகவே பாலாஜி நாவடக்கத்துடன் நடந்து கொள்வதாகத் தெரியவில்லை. பெண் போட்டியாளர்களைப் பார்த்து வாயில் வந்த கமெண்ட்டுகளை எல்லாம் சர்வ சாதாரணமாக உதிர்த்துக் கொண்டு தான் இருக்கிறார். நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இதை உணர்ந்திருப்பார்கள்.

நேற்றைய நிகழ்ச்சியிலும் கூட தாடி பாலாஜி தன் மனைவி நித்யாவைப் பார்த்து மட்டும் திட்டவில்லை. சக போட்டியாளரான வைஷ்ணவியையும் அதே வார்த்தை கூறி திட்டியிருக்கிறார். அதை வைஷ்ணவி எதிர்த்துக் கேட்டதற்கு அவரிடம் சரியான பதிலில்லை.

ஆக மொத்தத்தில், நேற்றைய நிகழ்ச்சியின் அடிப்படையில் பெண் போட்டியாளர்களுக்கு மத்தியில் தாடி பாலாஜி கெட்ட வார்த்தை பேசுகிறார்’ எனும்படியான கண்டனம் வலுத்து வருகிறது.

அதுசரி, அப்படி பாலாஜி பேசிய கெட்ட வார்த்தை தான் என்ன? என்கிறீர்களா?

அதை நீங்களே யூ டியூபில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் அதைப் பற்றி விஸ்தாரமாக விளக்குவதல்ல. ஆண்கள், கணவர் எனும் ஸ்தானத்தை அடையும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டிய சந்தர்பங்களில் ஒன்று மனைவியின் தகப்பனாரைப் பற்றி பேசும் நேரங்கள். எந்த ஒரு பெண்ணும் தன் தந்தையைப் பற்றி தனது கணவர் தகாத வார்த்தைகளைப் பேசுவதை சகித்துக் கொள்ளவே மாட்டார். பெண்களைப் பொறுத்தவரை, உன் அப்பனா செய்வான்?!  ங்கொப்பனா கொட்டியழுதான்?! என்ற வார்த்தைகளே போதும் அவர்களை ஆக்ரோஷப்படுத்த. எனவே அம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவதை தவிர்த்தால் தாம்பத்யப் படகு கவிழாமல் இருக்கும். மீறியோ, மறந்தோ மனைவிகளின் தகப்பனார்களைப் பற்றி ஏகதேசமாகப் பேசத்தொடங்கினீர்கள் என்று வையுங்கள் உங்கள் வாழ்க்கை கடற் சீற்றத்தில் சிக்கிய படகே தான்.

நேற்று பாலாஜி பேசிய கெட்ட வார்த்தையும் மனைவியின் தகப்பனாரை மையப்படுத்தியது தான்.

பாலாஜி கெட்ட வார்த்தை பேசியதற்கு பிக்பாஸ் ஏதாவது தண்டனை தருவாரா? ஞாயிற்றுக் கிழமை தெரியலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com