என் பாடல்கள் அளவுக்கு முகம் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானதில்லை: கல்பனா ராகவேந்தர்!

மலையாளத் திரைப்பட உலகமும், தெலுங்குத் திரைப்பட உலகமும் கல்பனாவைக் கொண்டாடிய அளவுக்கு தமிழ் கொண்டாடியதாகத் தெரியவில்லை.
என் பாடல்கள் அளவுக்கு முகம் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானதில்லை: கல்பனா ராகவேந்தர்!


நரசிம்மா திரைப்படத்தின்  ‘லாலா நந்தலாலா’  பாடல்;

மைனா திரைப்படத்தில் வரும் ‘ஏ ஜிங்கி... ஜிங்கி ஜிமிக்கி போட்டு’...

ப்ரியமான தோழி திரைப்படத்தின் ‘பெண்ணே நீயும் பெண்ணா... பெண்ணாகிய ஓவியம்’

மன்மதன் திரைப்படத்தில் வரும் ‘தத்தை... தத்தை ...பூ மெத்தை’  பாடல்

ஆறு திரைப்படத்தின் ‘நெஞ்சம் எனும் ஊரினிலே... ஆறு எனும் தெருவினிலே’ பாடல்

என் ராசாவின் மனசிலே படத்தில் வரும், போடா போடா புண்ணாக்கு... போடாத தப்புக் கணக்கு பாடல்

மாயாவி திரைப்படத்தின் ‘ கடவுள் தந்த அழகிய வீடு’ எனும் பாடல்

- இந்தப் பாடல்கள் எல்லாம் உங்களுக்குப் பிடித்தவையா அப்படியானால் உங்களுக்கு கல்பனாவைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

இந்தப் பாடகியை அவர் சிறுமியாக இருந்த போதே ஒரு குழந்தை நட்சத்திரமாக நமக்குத் தெரியும். ஆனால், இன்றும் கூட தமிழில் இவர் எப்போதாவது பாடல் போட்டிகள் தொடர்பான ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றால் யார் இது? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே! யாரென்று தான் சட்டென்று ஞாபகத்தில் வரவில்லை என்று தான் பலருக்கும் தோன்றுகிறது. காரணம் கல்பனாவின் பாடல்கள் ஹிட் அடித்த அளவுக்கு அவரது முகம் தமிழில் பரிச்சயமாகவில்லை என்பதே! அந்த வருத்தம் அவருக்கும் உண்டு.

நல்ல குரல் வளம் இருந்தும் ஆரம்பத்தில் இவருக்கு தனது முழு இசைத்திறனையும் வெளிப்படுத்தக் கூடிய விதத்திலான பாடல்கள் தமிழில் அமையவில்லை. மலையாளத் திரைப்பட உலகமும், தெலுங்குத் திரைப்பட உலகமும் கல்பனாவைக் கொண்டாடிய அளவுக்கு தமிழ் கொண்டாடியதாகத் தெரியவில்லை. ஏனெனில் கல்பனா தெலுங்கில் பிரபலமடைந்த அளவுக்கு தமிழில் பிரபலமடைந்ததாகத் தெரியவில்லை. 

இவரை மட்டுமல்ல இவரது அப்பாவையும் கூட தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமுண்டு. தமிழ் திரைப்படங்களில் இசைப் பிரவாகமாக சில கதாபாத்திரங்களில் இவர் நடித்து ரசிகர்களின் மனதில் தடம் பதித்திருக்கிறார். அதில் ஸ்பெஷலானவை என்றால் ‘வைதேகி காத்திருந்தாள்’ மற்றும் ‘சிந்து பைரவி’ திரைப்படங்களைப் பற்றிச் சொல்லலாம். இரண்டிலுமே இசையின் மீது பேரார்வம் கொண்ட கதாபாத்திரங்கள் தான் இவருக்கு. அடிப்படையில் இவர் ஒரு இசையமைப்பாளர் என்பதால் தான் சிந்து பைரவி திரைப்படத்தில் சுஹாசினியின் மாற்றாந்தந்தையாகவும், சிவக்குமாரின் நண்பராகவும் இசையார்வம் மிக்க நீதிபதியாக இவர் நடித்த அந்த வேடம் இன்றும் நம் மனதில் நிற்கிறது. 

தந்தையே ஒரு இசையமைப்பாளர் என்பதால் கல்பனாவுக்கு சங்கீத ஞானம் பிறவிப் பரிசாக அமைந்து விட்டது. முறையாக சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக மதுரை டி.எஸ்.கிருஷ்ணன் அவர்களிடம் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறார். தாய்மொழி தமிழாக இருந்த போதும் தான் அறிந்திராத பிற மொழிகளையும் இசைக்காகவே  கற்றுக் கொண்டு பாடுவதில் ஆர்வம் மிகுந்தவர் கல்பனா.  ஐந்தரை வயதிலிருந்து பாடிக் கொண்டிருக்கிறார். அப்பா அதிகப் படங்களுக்கு இசையமைக்கவில்லை எனினும் குறிப்பிடத்தக்க அளவில் திரைப்படங்களில் நடித்தார். எம்சிஏ பட்டதாரியான கல்பனாவுக்கு பிரசன்னா என்றொரு தங்கையுமிருக்கிறார். தற்போது மதம் மாறிப் பெயரும் மாற்றிக் கொண்ட அந்தத் தங்கையும் ஒரு பிரபலப் பாடகி தான். 

சிறுமியாக இருந்த போது கல்பனா ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் கமலுடன் அவர் சாப்ளின் செல்லப்பாவாக வரும் போது வாக்கிங் ஸ்டிக் காட்சியொன்றில் இணைந்து நடித்திருக்கிறார். அது தவிர ‘ஆண்பாவம்’ திரைப்படத்தில் சீதாவின் உறவுக்காரச் சிறுமியாக நடித்திருப்பார். இப்படி இசைப் பயிற்சியுடன் அவ்வப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டு, பாடல் வாய்ப்புகளையும் ஏற்றுக் கொண்டு இரண்டையும் வெற்றிகரமாகவும் செய்து கொண்டு கூடவே படிப்பையும் தொடர்ந்து கொண்டு வாழ்க்கை நல்லவிதமாகத் தான் சென்றுக் கொண்டிருந்திருக்கிறது. தெலுங்கில் மணி சர்மா, எம்.எம்.கீரவாணி, தேவ்ஸ்ரீபிரசாத் என இவர் பாடாத இசையமைப்பாளரே இல்லை. எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருந்திருக்கிறது இடையில் திருமணம் என்றொரு பேரிடி வந்து கல்பனாவின் தலையில் இறங்கும் வரை.

ஆம், திருமண வாழ்வு கல்பனாவுக்கு அத்தனை ரசிக்கத் தக்கதாக அமையவில்லை. அதில் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளானவருக்கு வாழ வேண்டும் என்ற ஆசை கூட அற்றுப் போனதாக ஆனது துரதிர்ஷ்டமே! இதனால் உடைந்து போனது மனம் மட்டுமல்ல அவரது திரைப்பாடகி எனும் கேரியர் வளர்ச்சியும் தான். அந்தச் சமயங்களில் மிகுந்த மன உளைச்சலில் இப்படி திருமண வாழ்வு தோல்வியில் முடிந்ததை எண்ணி கல்பனா விரக்தியில் இருந்த போது தான் அவருக்கு மலையாள தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நடத்தப்பட்ட ஐடியா சூப்பர் சிங்கர் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கல்பனாவின் வார்த்தைகளில் சொல்வதானால், கிட்டத்தட்ட அப்போதே அவருக்கு திரையிசைப் பாடல்களில் 25 வருட அனுபவம் இருந்திருக்கிறது. அம்மாதிரியான ஒரு சூழலில் தனது வாழ்வில் நேர்ந்த திருமணம் எனும் விபத்தின் பேரால் மனமுடைந்து போயிருந்தவருக்கு ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்னையை தீர்க்கவும்,மன உளைச்சலுக்கு ஒருமாற்று மருந்தாக இருக்கட்டும் என்ற எண்ணத்திலும் தான் ஐடியா சூப்பர் சிங்கர் போட்டியில் ஒரு சாதாரண போட்டியாளராகப் பங்கேற்கும் முடிவுக்கு இவரை வரச் செய்திருக்கிறது. பாடல் போட்டிகளுக்கு நடுவராகப் போகும் அளவுக்கு இசையில் தேர்ச்சி பெற்ற ஒரு பெண்ணை போட்டியாளராகப் பங்கேற்கும் அளவுக்கு இறங்கிப் போகச் செய்தது அவருக்கு அப்போதிருந்த வறுமையும், மன அழுத்தமும் தான். தனது திறமை மற்றும் இசையின் மீதான அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் கடின உழைப்பின் காரணமாக அந்தப் போட்டியில் வென்று வெற்றிப் பரிசாக ரூபாஇ 1 கோடி மதிப்பிலான வில்லாவுக்குச் சொந்தக்காரராக ஆனார் கல்பனா. 

பிறகு தான் வாழ்க்கை மீண்டும் வெற்றிமுகம் காணத்தொடங்கியது.

மலையாளத் தொலைக்காட்சியின் பாடல் ரியாலிட்டி ஷோவில் கிடைத்த வெற்றி என்பதால் மேலும் ஓரிரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகப் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்து அப்படியே தெலுங்குப் பக்கம் போனார். தெலுங்கில் திரைப்படங்களில் பாடிக்கொண்டே மேடைப்பாடல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கத் தொடங்கினார் கல்பனா. தொடர்ந்து 2017 ஆம் ஆண்டில் ஜூனியர் என் டி ஆர் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகப் பங்கேற்று அதன் மூலமாக முகமறிந்த பிரபலமானார்.

இடையில் சருமப் பிரச்னை, உடல் எடை கூடி தோற்றம் மாறியதால் உண்டான மன அழுத்தம், கணவர் மறுதிருமணம் செய்து கொண்ட அதிர்ச்சித் தகவல் அத்தனையையும் தனது வேலைகளோடு வேலையாய் வலிக்க வலிக்கக் கடந்து கல்பனா இப்போது சேஃப் ஜோனுக்குத் திரும்பி விட்டார். இன்று அவரிடம் கேட்டால், வாழ்க்கை என்பது இன்பம், துன்பம் இரண்டும் கலந்ததே! அதில் எதிர் நீச்சலிட்டுப் போராடி வெல்வதே உண்மையான வாழ்வனுபவம். சோர்ந்து போய் சிறகொடிந்து வீழ்வதல்ல! என்கிறார். 

ஹாட்ஸ் ஆஃப் டு யூ கல்பனா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com