தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் அத்துமீறல்கள்! பிக் பாஸ், 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சிகளால் யார் பயன்பெறுகின்றனர்?

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சி
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் அத்துமீறல்கள்! பிக் பாஸ், 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சிகளால் யார் பயன்பெறுகின்றனர்?

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சி மூலமாகத் தனக்கான துணையைத் தேர்வு செய்ய களமிறங்கியுள்ளார் நடிகர் ஆர்யா. இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஆரம்பமானது. இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை 'எங்க வீட்டு மாப்பிள்ளை' ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 இளம் பெண்கள் பங்கேற்றுள்ளனர். அதில் ஒருவரைத்தான் மணப்பெண்ணாகத் தேர்வு செய்யவுள்ளார் நடிகர் ஆர்யா. ஆர்யாவின் இந்த முயற்சிக்கு அவருடைய நெருங்கிய நண்பர்களும் திரையுலகப் பிரபலங்களும் ஆதரவும் வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் ஆர்யா பங்குபெறும் இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்த ஜானகி அம்மாள் தன்னுடைய மனுவில், பெண்களின் மாண்பைக் கெடுக்கும் வகையில் உள்ள இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கவேண்டும். கலர்ஸ் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி, நடிகர் ஆர்யா, நடிகை சங்கீதா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

'நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு நடனம், பேஷன் ஷோ உள்ளிட்ட பலவிதமான போட்டிகளளை நடத்துகிறார்கள். இது பெண்களின் மாண்பை சிதைக்கும் வகையில் உள்ளது. இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை சங்கீதா போட்டியில் பங்கேற்கும் பெண்களை தேர்வு செய்வது, நீக்குவது என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார். இது அரசியலமைப்பு சட்டத்தின் படி பாலியல் சமத்துவம் மீறலாகும். பெண்களை காட்சிப்பொருளாகக் காண்பிக்கின்றனர். பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி ஆண்களுக்கு நிகராக செயலாற்றி வரும் நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகள் பெண்கள் மீது தவறான கருத்தை ஏற்படுத்தும். இந்த நிகழ்ச்சியை தொடர அனுமதித்தால் இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் சூழல் ஏற்படும். எனவே பெண்களுக்கு எதிரான வன்முறையை அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதுடன், சேனல் தலைமைச் செயல் அலுவலர், நடிகர் ஆர்யா, நிகழ்ச்சித் தொகுப்பாளர் நடிகை சங்கீதா ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று (செய்வாய்கிழமை) நடைபெற்றது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர், திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேற்கொண்டு இந்த விசாரணையை ஏப்ரல் 18-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இது ஒரு புறம் இருக்க, கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் வித்யாசமான களத்தில் பங்கேற்பாளர்கள் நூறு நாட்கள் ஒரே வீட்டில் தங்கி, ஒருவரை ஒருவர் காலை வாரிக் கொண்டும், புறம் பேசிக் கொண்டும் வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கொள்கையைப் பரப்பியும் பல லட்சம் ரசிகர்களின் முன்னிலையில் நாடகமாடிக் கொண்டும், நடனமாடிக் கொண்டும் இருந்தனர். பெண்கள் என்றாலே இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பொதுப்புத்தியைக் கட்டுடைத்து பிக் பாஸ் டைட்டிலுக்காக அவரவர் முடிந்த வரையில் கடுமையாகப் போராடினார்கள். இதில் ஓவியா ரசிகர்களின் மனத்தை கவர்ந்தார். ஜூலி, காயத்ரி, நமீதா, ரைசா போன்றோர் கடும் வசைக்கு உள்ளானார்கள். ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பின் நிறைய பேட்டிகள் நிகழ்ச்சிகள் என பிஸியாகிவிட்டார். அவரவர் இலக்கு அடையப்பட்ட நிலையில், சேனலும் தனக்கான இலக்கினை முடித்து அடுத்த சீஸனுக்குத் தயாராகிவிட்டது.

பிக் பாஸ், எங்க வீட்டு மாப்பிள்ளை போன்ற நிகழ்ச்சிகளால் உண்மையில் பயன் அடைபவர்கள் சேனல்கள்தான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகளை ரசிகர்களும் ஊக்கப்படுத்துவதால்தான் சேனல் தரப்பிலிருந்து துணிவாக இத்தகைய தலைப்புக்களுடன் களம் இறங்குகிறார்கள். ஹாலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கும் பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கும் சினிமா தரவிறக்கம் ஆவது போல, சேனல்களும் பிக் ப்ரதரிலிருந்து பிக் பாஸுக்கு வந்து, எங்க வீட்டு மாப்பிள்ளையாக உருமாறி வலம் வருகிறது. ஆங்கில சேனல்களில் டேட்டிங், பேஷன் போன்றவை எல்லாம் சர்வ சாதாரணம். இங்கு மேற்கைப் பார்த்து காப்பியடிக்க நினைக்கும் நமது கிழக்கு மனம் எல்லா விஷயங்களுடன் ஒத்துப் போக முடியாமல், அரை குறையாக கான்செப்டுகளை உள்வாங்கி அதை ரசிகர்களிடம் விஷத்தனமாக பரப்புகிறது.

பிக் பாஸ் சீஸன் 2 தயாராகிவரும் நிலையில், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஒரு ஆணுக்காக போட்டியிடும் 18 பெண்கள் என்ற நவீன சுயம்வரமாக காணக் கிடைக்கிறது. 37 வயதான நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு தங்கள் சொந்த வாழ்க்கையில் நடந்ததாக இவர்கள் கூறும் விஷயங்களை ரசிகர்கள் கேட்டாக வேண்டிய நிலை.

இவை உண்மை இல்லை என்பதைத் தாண்டி இதுபோன்ற சம்பவங்களை நாம் அறிந்து ஆக வேண்டியது என்ன? இத்தகைய நிகழ்ச்சிகளை புறம் தள்ள பலருக்கு மனம் ஒப்பாது. சும்மா ஜாலிக்குத்தானே பாக்கலாமே என்று பார்ப்பார்கள். இது எத்தகைய மனப்பான்மை என்றால் பக்கத்து வீட்டுப் பிரச்னைகள் என்பது சிலருக்கு அல்வா போல இனிக்கும் சமாச்சாரம். அவரவர் வீட்டில் ஆயிரம் ஓட்டைகள் இருக்க அதை அடைக்க பிரயத்தனம் படாமல் அண்டை வீட்டு, ஊர், நாட்டில் நடக்கும் விஷயங்களை ஆர்வம் காட்டுவார்கள். கேட்டால் நம்மைச் சுத்தி என்ன நடக்குதுன்னு நல்லா விசாரிச்சு தெரிஞ்சுக்கணும் என்ற பொதுநல ஆர்வம் தான் காரணம் என்பார்கள். நாளைக்கு நமக்கு அது நடக்கக் கூடாதுன்னு தான் நாலும் தெரிஞ்சு வைச்சுக்கறேன் என்றும் சொல்வார்கள். நாலு அல்ல எட்டு கூட தெரிந்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் இங்கு பிரச்னை எதில் என்றால், இவர்கள் தனக்குத் தெரிந்ததை மானே தேனே போட்டு கற்பனை வளத்தை ஏற்றி பத்தாகத் திரித்து கூறும் போதுதான் உண்மைக்கும் பொய்க்கும் கலப்பு நடக்கிறது. மனிதர்களின் இத்தகைய மனநிலையை நன்கு பயன்படுத்தி தான் இதுபோன்ற அந்நிய கலாச்சார நிகழ்ச்சிகள் மெள்ள தலையெடுத்து நம் வீட்டு ஹாலில் தினமும் வந்து நமக்கே தெரியாமல் நம்மை மூளைச் சலவை செய்கின்றன.

இதெல்லாம் மாடர்ன் விஷயங்கள் உங்களை போல பழமைவாத மனங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று இளைஞர்கள் இந்நிகழ்ச்சிகளுக்கு எதிரான கருத்துக்களை புறம்தள்ளிவிடுவார்கள். சமூக வலைத்தளங்கள் இத்தகைய நிகழ்ச்சிகளை பாராட்டியும், கண்டனம் தெரிவித்தும் இரு கூறாக பிரிந்து வாதம் செய்து கொண்டிருக்கும். அடுத்த பிரச்னை வரும் வரை அவர்கள் இதில் ஆழம் கண்டு கொண்டிருப்பார்கள். சேனல்களோ கல்லா கட்டுவதையே குறியாக டிஆர்பி ரேட்டிங்கே நெறியாக இயங்கிக் கொண்டிருக்கும். கடைசியில் பாதிக்கப்படப் போவது இதைப் பார்க்கும் மனங்கள் தான். இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு சென்ஸார் அறிமுகப்படுத்தாதவரை இவை தொடரும்.  மேலும் வெப் சீரீஸ் என்று ஒருபக்கம் சினிமாவை விஞ்சும் காட்சிகளைக் கொண்ட ஒரு இயக்கம் சத்தமின்றி நடந்து கொண்டிருக்கிறது. அது நெட்டிசன்கள் மட்டும் பார்த்து மகிழக் கூடிய ஒன்றாக இருப்பதால் இப்போதைக்கு தொலைக்காட்சிக்குள் அவை வீடு வீடாக நுழைந்திருக்கவில்லை.

அடுத்தவர் அந்தரங்களை அம்பலமாக்குவதில் காட்டும் சிரத்தையை இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் செய்வதை விடுத்து, பயனுள்ள நிகழ்ச்சிகளையும் அறிவுத் திரட்டை அதிகரிக்க செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால் அவற்றைப் பார்க்க யாரும் இருப்பதில்லை என்பதே இவர்கள் கால காலமாகக் கூறும் பதில்கள். நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்ல ஆளோ, கேட்டுப் பயன்பெறும் கூட்டங்களோ அருகி வரும் காலகட்டமான இதில், ஒருசிலர் இவ்விதம் நடக்கும் கோமாளித்தனங்களை பார்க்க சகிக்காமல் மனம் நொந்து போவதைத் தவிர வேறு வழியில்லாமல் இருக்கின்றனர். ஸ்லோ பாய்ஸனாக செயல்படும் இத்தகைய நிகழ்ச்சிகள் ஒரு கட்டத்தில் இன்னும் சுவாரஸ்யமாக மாற்ற என்னென்ன கூத்து நிகழ்த்தப் போகிறார்களோ என்பது அந்த ஆண்டவனுக்கு இல்லையில்லை ஆர்யாவுக்கே வெளிச்சம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com