வித்யா பாலனின் ‘துமாரி சுலு’ ரீமேக் திரைப்படத்தில் நடிக்க ஜோதிகா போட்ட 3 கண்டீசன்கள்!

ஜோதிகாவின் சம்மதம் கிடைத்தபிறகு தான் தனஞ்செயன் துமாரி சுலுவின் ரீமேக் உரிமையைப் பெற்று படத்தின் இயக்குனராக ராதாமோகனை உறுதி செய்திருக்கிறார். 
வித்யா பாலனின் ‘துமாரி சுலு’ ரீமேக் திரைப்படத்தில் நடிக்க ஜோதிகா போட்ட 3 கண்டீசன்கள்!

சிறந்த திரைப்பட விமர்சகருக்கான தேசிய விருது பெற்ற எழுத்தாளர், தயாரிப்பாளர் தனஞ்செயன் இந்தியில் ஹிட் அடித்த துமாரி சுலு திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கான உரிமையை வாங்கியுள்ளார். இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் பரவலான பாராட்டுகளைப் பெற்று ஹிட் அடித்த படமான ‘துமாரி சுலு’ ஒரு மிடில் கிளாஸ் இல்லத்தரசியின் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் கனவை நனவாக்கும் படியான கதையமைப்பைக் கொண்டது. நாயகியான வித்யாபாலன் அதிகம் படித்திருக்க மாட்டார். ஆனால், தன் வாழ்வில் எதையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்ளும் மிகச்சிறந்த மன உறுதி கொண்ட பெண்ணாகக் காட்டப்பட்டிருப்பார். கணவரை அலுவலகத்துக்கும், மகனை பள்ளிக்கும் அனுப்பிய பிறகு கிடைக்கும் நேரத்தில் பண்பலை (எஃப் எம் ரேடியோக்களில்) அறிவிக்கப்படும் போட்டிகளில் கலந்து கொள்வது சுலுவின்(சுலோச்சனாவின் சுருக்கம்) பொழுதுபோக்கு. 

அப்படி ஒருமுறை அவர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற எஃப் எம் போட்டியில் சுலுவுக்கு குக்கர் பரிசு கிடைக்கிறது. அந்தப் பரிசைப் பெற்றுக் கொள்ள பண்பலை நிறுவனத்தின் அலுவலகம் செல்லும் போது அங்கே பம்பர் பரிசாக அறிவிப்பாளர் வேலையும் கிடைக்கிறது. அந்த வேலையின் தன்மை என்னவென்றால்? நடுநிஷியில் தனிமையில் இருக்கும் மனிதர்களுடன் பண்பலை வழியாக  நேசத்துடனும், அன்புடனும் உரையாடி அவர்களது தனிமை உணர்வைப் போக்குவது. இப்படி ஒரு நிகழ்ச்சியில் பணியாற்ற எவரும் பொருந்தாத நிலையில் சுலு விளையாட்டாகத் தன்னால் அந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தித் தரமுடியும் எனக்கூறி பண்பலை மேலாளரிடம் வாதாடி அந்த வேலையைப் பெறுகிறார். சுலுவின் இந்த வேலையில் அவரது குடும்பத்தினருக்கு விருப்பமில்லாத நிலையில் அவர் பிடிவாதமாக அந்த வேலையில் சேர்ந்து வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்திச் செல்கிறார். 

இந்நிலையில் இந்த வேலை காரணமாக சுலுவின் வாழ்வில் நிகழும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு மீதிக்கதை விரியும். சுலு தனது வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பெண் எனும் கனவை தக்க வைத்துக் கொண்டாரா? அல்லது குடும்ப உறுப்பினர்களின் விமர்சனம் காரணமாக வேலையை விட்டாரா? தனது வாழ்வின் முக்கியமாக சில பிரச்னைகளை சுலு எப்படி சுலபமாகக் கடக்கிறார்? என்பது தான் துமாரி சுலு திரைப்படத்தின் வெற்றிக்கான காரணம். 

‘இந்தப் படம் அடிப்படையில் ஹீரோயினைத் தூக்கிப் பிடிக்கக் கூடிய படம். நாயகிக்கு தனது நடிப்புத் திறனின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்த அருமையான பல வாய்ப்புகளை வழங்கக் கூடிய கதையமைப்பு கொண்ட திரைப்படம் இது. எனவே இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்வதென்றால் வலுவான நடிப்புத் திறனும், தமிழ் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய அளவில் புகழும் கொண்ட நடிகை ஒருவர் வாய்க்க வேண்டும். அது மட்டுமல்ல, கதைப்படி சுலுவுக்கு 11 வயதில் மகன் இருப்பார். அதனால் திருமணமாகாத இன்றைய இளம் ஹீரோயின்களில் யாரும் அந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருந்த மாட்டார்கள். அப்படித் தேடியதில் ஜோதிகா தான் சுலு கதாபாத்திரத்துக்கு  மிகப் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்து கொண்டு அவரை அணுகினேன்.’  

- என்கிறார் இப்படத்தின் உரிமையை வாங்கியுள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன்.

‘படத்தைப் பற்றிச் சொன்னதுமே ஜோதிகா உடனடியாக, இந்தப் படத்தின் உரிமையை வாங்கி தமிழில் நானே நடிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தேன், உங்களிடம் படத்தை ரீமேக் செய்வதற்கான உரிமை இருந்தால், நான் நிச்சயமாக இதில் நடிக்கிறேன் என்று சம்மதித்தார். என்னைப் பொறுத்தவரை ஜோதிகா இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்தால் மட்டுமே படத்தின் உரிமையைப் பெறுவது என்று முடிவு செய்திருந்ததால், அவர் சம்மதித்ததும் உடனடியாகப் படத்தின் உரிமையை வாங்கினோம், படத்தில் நடிக்க ஜோதிகா போட்ட கண்டீசன் மூன்றே மூன்று தான்.[’

அலுவலகம் செல்லும் பெண்கள் போல காலை 9 மணீயிலிருந்து மாலை 6 மணிவரை படப்பிடிப்பை வைத்துக் கொள்ளுங்கள். நான் 8 மணிக்கெல்லாம் தயாராகி வந்து விடுவேன்.

ஞாயிற்றுக் கிழமைகளில் என்னால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது. அன்று விடுமுறை வேண்டும்.

அதோடு படப்பிடிப்பு 3 மாதங்களில் முடிந்தால் நல்லது. 

- என்பது போன்ற 3 கண்டீசன்களை மட்டுமே ஜோதிகா முன் வைத்தாராம். 

ஜோதிகாவின் சம்மதம் கிடைத்தபிறகு தான் தனஞ்செயன் துமாரி சுலுவின் ரீமேக் உரிமையைப் பெற்று படத்தின் இயக்குனராக ராதாமோகனை உறுதி செய்திருக்கிறார். 

ஜோதிகா, ராதா மோகன் காம்போ ‘மொழி’ படத்திலேயே மிகச்சிறந்த ஹிட் அடித்த இணை என்பதால் துமாரி சுலுவை இவர் இயக்கினால் மட்டுமே படம் வெற்றிப்படமாகும் என்ற நம்பிக்கையில் அவரையும் புக் செய்திருக்கிறார்கள். 

அடுத்ததாக இந்தத் திரைப்படத்தில் பண்பலையின்  மேலாளராக வரும் ஸ்டைலிஷான பெண் கதாபாத்திரம். இதற்கு யாரை அணுகுவது என்ற பலத்த யோசனைக்குப் பின் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகளும், நடிகையுமான மஞ்சு லட்சுமியை புக் செய்திருக்கிறார்கள். 

‘ஜோதிகா நடிக்கும் திரைப்படம் அதோடு ஸ்டைலிஷாகத் தனது இயல்போடும் பொருந்திப் போகக் கூடிய வகையிலான ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதென்றால் ஜாலியாக நடித்து விட்டுப் போகிறேன். என்று சந்தோஷமாகச் சம்மதித்தார் மஞ்சு லட்சுமி‘
- என்கிறார் தயாரிப்பாளர் கம் எழுத்தாளரான தனஞ்செயன்.

துமாரி சுலு திரைப்பட ரீமேக் குறித்து தனஞ்செயன் அளித்த நேர்காணலைக் காண...

நிச்சயம் படம் வெற்றி பெறும் என்ற உறுதியான எதிர்பார்ப்புடனும், பொருத்தமான நடிகர், நடிகைகளுடனும், பக்காவான ஒரு இயக்குனருடனும் தயாராகும் துமாரி சுலுவுக்குத் தமிழில் என்ன பெயர் வைப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனாலும் இந்தியில் படத்தைப் பார்த்து ரசித்தவர்களின் எதிர்பார்ப்பை தமிழிலும் ஏமாற்றாது பூர்த்தி செய்வார்கள் என நம்புவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com