அஜித், 47 வது பிறந்தநாளில் அவரைப் பற்றிய 47 ‘தல’யாய சுவாரஸ்யங்களின் தொகுப்பு!

எது எப்படியோ கோலிவுட்டில் அஜித் அடைந்த உயரம் எப்போதும் ரஜினியுடனே ஒப்பிடப்படுகிறது. ஏனெனில் இருவருமே கவர்ச்சிகரமான சினிமா பின்புலங்கள் எதுவும் இல்லாத குடும்பங்களில் இருந்து நடிக்க வந்தவர்கள்.
அஜித், 47 வது பிறந்தநாளில் அவரைப் பற்றிய 47 ‘தல’யாய சுவாரஸ்யங்களின் தொகுப்பு!

1.

காஃபீ, டீ, பழரசங்களை கோப்பைகளில் அருந்தும் போது இடது கையால் அருந்தும் பழக்கம் கொண்டவர் அஜித். காரணம் வலது கையால் கோப்பையைப் பற்றி அருந்துவதைக் காட்டிலும் இடது கையால் கோப்பைகளைப் பற்றி அருந்தும் பழக்கம் கொண்டவர்களுக்கு பாக்டீரியாத் தொற்று குறைவாக இருக்கும் எனும் பொதுவான மருத்துவ நம்பிக்கை தான்.

2. 

அதேபோல விரைவில் மக்கக் கூடிய பயோ டிகிரேடபிள் பேப்பர் ப்ளேட்டுகளில் அடிக்கடி உண்ணும் பழக்கம் அஜித்துக்கு உண்டு. தன்னைப் பார்க்க வரும் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் அத்தகைய பிளேட்டுகளில் பரிமாறி உண்ணுமாறு ஊக்குவிக்கக் கூடியவர் அஜித். காரணம் பாத்திரங்களைப் பலமுறை கழுவிப் பயன்படுத்தும் போது ஏற்படக்கூடிய நுண்ணுயிர்க் கிருமித் தாக்குதல் குறித்து பேப்பர் பிளேட்டுகளில் உண்ணும் போது கவலைப்படத் தேவையில்லை என்பதால்.

3.
படப்பிடிப்பு நேரங்கள் தவிர ஓய்வு நேரம் கிடைத்தால் தனது வீடு மற்றும் அலுவலகத்தில் இண்ட்டீரியர் டிஸைன் செய்ய அஜித்துக்கு ரொம்பப் பிடிக்கும். சமயம் கிடைத்தால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் கூட அஜித்தின் இண்ட்டீரியர்  கைத்திறன் மிளிருவதுண்டாம்.
4.

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்கு கிளம்பும் முன் தனது வீட்டின் கீழ்த்தளத்தில் வசிக்கும் பெற்றோரிடம் ஆசி வாங்காமல் அஜித் படப்பிடிப்புக்கு சென்றதில்லை என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

5.

சென்னையில் படப்பிடிப்பு இருக்கும் நாட்களில் 6 மணிக்கு ஷூட் முடிந்தால் உடனடியாக அஜித் செல்லக் கூடிய இடம் ஜிம். அங்கிருந்து அப்படியே வீட்டுக்குச் சென்றாரென்றால் மாலை நேரம் முழுதும் அவரது குழந்தைகளுக்குத் தான் சொந்தம். ஆட்டம், பாட்டம், விளையாட்டு என்று வீடே அமர்க்களப்படும் என்கிறார்கள்.

6.
மாலை 6 மணிக்கு மேல் அஜித் யாருக்காவது தொலைபேசியில் அழைக்கிறார் என்றால் அவர் பேசும் முதல் வார்த்தை ‘இது உங்களுடன் பேச உகந்த நேரமா?’ (Is it right time to speak?)  என்பதாகவே இருக்குமாம்.

7.

ஒவ்வொரு வார இறுதியிலும் தனது குடும்பத்தினர் தவிர, சகோதரர்களின் குடும்பம், மாமனார் குடும்பம், மற்றும் நெருங்கிய நண்பர்களது குடும்பத்தினருடன் குவாலிட்டி டைம் செலவிடத் தவறுவதே இல்லை அஜித்.

8.

சில ரசிகர்கள் சாலைகளில் அஜித்தின் காரைக் கண்டு உற்சாகமாக ஆரவாரத்துடன் அவரை வரவேற்று வாழ்த்தினால்... அஜித் காரை விட்டிறங்கி அவர்களுக்கு ஹெல்மெட் வாங்கித் தந்து அதை அணிய வலியுறுத்தி வழியனுப்புதுண்டாம். சில வருடங்களுக்கு முன்பு அஜித்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் ஹெல்மெட் அணியாத காரணத்தால் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அந்த சோக நினைவின் தாக்கத்தால் தான் அஜித் தனது பயணத்தில் இடைப்படும் ரசிகர்களுக்கு மறக்காமல் ஹெல்மெட் வாங்கித் தந்து வழியனுப்புகிறாராம்.

9. 
ஒருவேளை உங்களுக்கு அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமானால் உங்களது நகங்களை வெட்டி விரல்களைத் தூய்மையாகப் பராமரித்திருக்கிறீர்களா? என்பதை ஒன்றுக்கு இருமுறை சோதித்த பின் அவரைச் சந்தியுங்கள். காரணம் நீளமாக நகம் வளர்த்து அதில் அழுக்கடைந்து நகங்களைப் பராமரிக்க சோம்பியிருப்பவர்களைக் கண்டால் அஜித்துக்கு ஒவ்வாமை உண்டு.

10. ஓய்வு நேரங்களில் கூட சோம்பியிருக்கப் பிடிக்காதவர் அஜித். அப்போதும் கூட ஃபோட்டோகிராபி, பெயிண்ட்டிங். குக்கிங் என்று பயனுள்ள வகையில் தனது ஓய்வு நேரங்களைப் பயன்படுத்துவார்.

11. தனது ரசிகர்கள் சக நடிகர்களைக் கலாய்ப்பதோ, மீம்ஸ்கள் போட்டு நாறடிப்பதோ அஜித்துக்கு சுத்தமாகப் பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் ரசிகர்கள் என்ற பெயரில் தனது அலுவலகத்தையோ, வீட்டையோ தேடி வரக்கூடாது எனக் கடுமையான பாலிசியைப் பின்பற்றுவதும் அஜித் ஸ்பெஷல்களில் ஒன்று.

12.

சிறிய இயக்குனரோ, பெரிய இயக்குனரோ...ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி விட்டால் அதற்காக 100 % அர்ப்பணிப்பு உணர்வையும், ஈடுபாட்டையும் காட்டக் கூடியவர் அஜித். இடையில் எவ்வளவு பெரிய இயக்குனரோ, தயாரிப்பாளரோ வேறு பெரிய பேனர் திரைப்படங்களில் நடிக்க அணுகினாலும் அஜித் அதில் அக்கறை செலுத்தவே மாட்டார். ஒரு முறை கமிட் ஆனால் அதற்குத்தான் முன்னுரிமை... பெரிய இயக்குனர், தயாரிப்பாளர்களின் பெருமை எல்லாம் அதற்குப் பிறகு தான்.

13.
தயாரிப்பாளர்களைச் சந்திப்பதாக வாக்குறுதி அளித்தால் சென்று, திரும்ப லக்சூரி கார், ஃப்ளைட் உபச்சாரமெல்லாம் கேட்டு அவர்களை இழுத்தடிக்காமல் முறையாகத் தானே தனது காரில் குறிப்பிட்ட நேரத்துக்குச் சென்று அவர்களை சந்திப்பது அஜித் ஸ்டைல்.

14.

புதுப்படங்களுக்கு கதை சொல்ல இயக்குனர்கள் அணுகும் போது அஜித் உடனடியாக கதை கேட்க உட்கார்ந்து விடுவதில்லை. முதலில் அவர்களுடன் கேஷுவலாகச் சிறிது நேரம் பேசிப் பார்ப்பார். பேசும் போது இருவருக்குமிடையில் நல்ல அலைவரிசை நிலவினால் மட்டுமே அந்த இயக்குனரின் படங்களை ஒப்புக் கொள்வார். குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் தன்னுடன் ஒத்துப் போகாத அலைவரிசையுள்ள இயக்குனருடன் தொடர்ந்து 3 அல்லது 4 மாதங்கள் ஒரு படத்துக்காக இணைந்து செயலாற்றுவது முடியாத காரியம் என்பது அஜித்தின் தீர்க்கமான முடிவு.

15.
எப்போதும் தங்களது தூய்மையான தோற்றத்துக்கு முதலிடம் தரும் நபர்களில் அஜித்தும் ஒருவர். நீங்கள் கவனித்திருக்கக் கூடும் அஜித் மட்டுமல்ல, அவருடைய டிரைவர் மற்றும் இதர பணியாளர்கள் கூட எப்போதும் சுத்தமான உடைகளுடன் கச்சிதமாக உலவுவதை.

16.
ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனதும் அப்படத்தின் ப்ரீ புரடக்‌ஷன் வேலைகளில் தொடங்கி அப்படத்தில் கடைசி நாள் டப்பிங் வரையிலும் தனது செல்ஃபோன் நம்பரை அஜித் மாற்றிக் கொள்வது இல்லை. ஆனால் கடைசி நாள் டப்பிங் முடிந்த மறுகணம் செல் நம்பரை மாற்றி விடுவார். காரணம் அந்தப் படத்தின் தாக்கத்திலிருந்து உளவியல் ரீதியாக விடுபடும் முயற்சியாக இந்த வழக்கத்தை அஜித் பின்பற்றுவதுண்டு என்கிறார்கள்.

17. தங்களது திரைப்படங்கள் வெளியாகும் முதல் நாள் முதல் ஷோ அன்று தியேட்டர்களில் ரசிகர்களின் ரியாக்‌ஷன்களைக் காண நண்பர்களையோ அல்லது ஃபேன் கிளப் மெம்பர்களையோ அனுப்பி ஆராய்வது அனேக நடிகர்களின் வழக்கம். ஆனால், அஜித் தனது திரைப்படம் வெளியாகும் முதல் நாள் முதல் ஷோ அன்று முற்றிலும் தனிமையாகி செல்ஃபோனில் கூட அணுக முடியாத அளவுக்கு தூரமாகி விடுவாராம்.

18.

தான் ஹீரோ என்றாலும் கூட தன்னுடன் இணைந்து நடிப்பவர்களில் தன்னை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்த நடிகர்கள் செட்டில் இருந்தால் இயக்குனர்கள் அஜித்திடம் சீன்களை விவரிக்க வருகையில் மூத்த நடிகர்களிடம் முதலில் சீன்களை குறித்து விளக்கமாக விவரிக்கச் சொல்லி கோரிக்கை விடுப்பாராம் அஜித். இது அவர்களது வயதுக்கும், அனுபவத்துக்கும் அஜித் தரும் மரியாதை.

19.

அஜித்தை முதல்முறையாக திரையில் அறிமுகப்படுத்திய இயக்குனர் டோலிவுட்டின் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ். அவரது  'பிரேம புஸ்தகம்' திரைப்படமே ஒரு ஹீரோவாக அஜித்தின் முதல் திரைப்படம். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கையில் துரதிருஷ்டவசமாக இயக்குனர் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் கடலில் தவறி விழுந்து இறந்து விட்டதால் படப்பிடிப்பு மூன்று மாதங்கள் தடைபடுகிறது. பிறகு அந்தப்படம் அவரது மகனால் இயக்கப்பட்டு வெளிவந்தாலும் கூட அது அஜித்துக்கு ராசி இல்லாத நடிகர் என்ற பெயரையே பெற்றுத் தந்தது. எனினும் அஜித் நடிப்பின் மீதிருந்த பேரார்வத்தால் மீண்டும் கடினமாக முயன்று இன்று தானிருக்கும் உன்னதமான இடத்தை அடைந்திருக்கிறார். படம் வெற்றி பெறுகிறதோ, இல்லையோ அஜித்துக்கு கிடைத்த அளவுக்கு எந்த எதிர்பார்ப்பில்லாத ரசிகர் கூட்டம் வேறெந்த நடிகர்களுக்கும் தமிழில் இல்லை என்பதே நிஜம்.

20.

இந்திய நடிகர்களில் முறைப்படி பயிற்சி பெற்று புரொஃபெஷனல் பைலட் லைசென்ஸ் வைத்துள்ள நடிகர் அஜித் மட்டுமே!

21.

அஜித் பள்ளியிறுதி தாண்டாதவர். அதற்குள் நடிப்பின் மீது ஆர்வமாகி பைக் மெக்கானிக், மெடிக்கல் ரெப் என்று திரை வாய்ப்புத் தேடத் தோதான வகையிலான வேலைகளின் மீது கவனம் செலுத்தி நடிப்பு ஆர்வத்துக்கு தீனியிட்டார்.

22.

ஒரு சமயத்தில் 2 வருட இடைவெளியில் 9 பிளாக் பஸ்டர் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை அளித்த பெருமை அஜித்துக்கு உண்டு.

23.

மணிரத்னம், பி.சி. ஸ்ரீராம் ஆசி இருந்தாலும் கூட அஜித் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானது எந்த ஒரு  டாப் டென் இயக்குனர்களின் தயவாலும் அல்ல. சொல்லப்போனால் இன்றைய டாப் இயக்குனர்களான எஸ்.ஜே.சூர்யா, முருக தாஸ், சரண் துரை, போன்றவர்களுக்கு மாஸ் ஹிட் திரைப்படங்களை அளித்து அவர்களது திரைப்பயணம் சிறக்க உதவியவர் என்று வேண்டுமானால் அஜித்தைக் குறிப்பிடலாம்.

24.
அஜித்... சிம்பு, தனுஷ், ஆர்யா, அருண் விஜய், வைபவ், ராணா டகுபதி உள்ளிட்ட அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு மிகச்சிறந்த இன்ஸ்பிரேஷனாக விளங்கக்கூடியவர். அதை அந்தந்த நடிகர்களே பல சந்தர்பங்களில் தங்களது திரைப்பட வசனங்களிலும், நேர் காணல்களிலும் தெரிவித்திருக்கிறார்கள். தொழில்முறையில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்விலும் கூட அவர்கள் பின்பற்ற விரும்பும், பின்பற்றத் தகுந்த மிகச்சிறந்த வழிகாட்டியாக அஜித் விளங்குகிறார்.

25.
அரசியல் ரீதியாக நடுநிலைத் தன்மையைப் பின்பற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ள அஜித் எந்த ஒரு கட்சியையும் ஆதரித்து இதுவரை குரல் கொடுத்ததே இல்லை. ஓட்டு என்பது தனது தனிப்பட்ட உரிமை என்று கூறும் அஜித்... தனது ரசிகர்களையும் ஓட்டு விஷயத்தில் அவ்விதமே சுயமாக முடிவெடுக்க ஊக்குவிக்கிறார்.

26.

சூப்பர் டூப்பர் ஹிட்களைக் கொடுத்த போதும் சரி, அட்டர் ஃப்ளாப்களைக் கொடுத்த போதும் சரி தனக்கு தனது திரைப்படங்கள் கொடுக்கும் சந்தோஷத்தைக் காட்டிலும் அளவிட முடியாத அளவு உற்சாகத்தை அளித்து எல்லாவித மயக்கங்களில் இருந்து மீட்டுக் கொண்டு வந்து மீண்டும் துடிப்பாக இயங்கக் கூடிய தன்மையைத் தரக்கூடியது பிரதிபலன் எதிர்பாராத தனது ரசிகர் கூட்டமே! என்று அஜித் கூறுவது வழக்கம்.

27.
தனது 40 ஆவது பிறந்தநாளின் போது, ரசிகர்கள் சிலரின் அடாவடித் தனத்தாலும் ஆட்சேபிக்கத் தக்க நடவடிக்கைகளாலும் மனம் சோர்ந்த அஜித்... கோபத்தில் தனது ரசிகர் மன்றங்களைக் கலைப்பதாக அறிவித்தார். மீண்டும் ரசிகர்மன்றங்களை முறைப்படுத்தும் எண்ணம் தற்போது அஜித்துக்கு இருக்கலாம்.

28.
ரெட்டை ஜடை வயசு, ராசி உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கையில் ஹீரோ அஜித்தைக் காட்டிலும் அதில் நாயகிகளாக வந்த ரம்பா மற்றும் மந்த்ராவின் ஊதியம் இரு மடங்கு அதிகமிருந்ததாக ஒரு பேச்சுண்டு. அதைப் பற்றியெல்லாம் அஜித் அப்போது அலட்டிக் கொண்டதில்லை என்பார்கள்.

29.

இயக்குனர் அகத்தியனின் காதல் கோட்டை திரைப்படத்தில் நடிக்கையில் படத்தின் இரண்டாம் நாயகியாக நடித்த நடிகை ஹீராவுடன் அஜித் கிசுகிசுக்கப் பட்டார். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று அப்போது பேச்சிருந்தது. காதல் கோட்டையில் ஹீரோயின் தேவயானியை விட  செகண்ட் ஹீரோயின் ஹீராவைத் தான் தனக்குப் பிடிக்கும் என அஜித் அப்போது தான் விகடனில் எழுதிக் கொண்டிருந்த சுயபுராணத் தொடர் ஒன்றில் கூறி இருந்தார். ஆனால் அந்த விஷயங்களை எல்லாம் மறக்கடிக்கும் விதத்தில் ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் தன்னுடன் நடித்த ஷாலினியை காதல் மணம் புரிந்தார் அஜித். இன்றளவும் வெற்றிகரமாகத் திருமண வாழ்வில் இணைந்திருக்கும் இந்த நட்சத்திரத் தம்பதிக்கு ‘அனோஸ்கா’ என்ற மகளும், ‘ஆத்விக்’ என்ற மகனும் உள்ளனர்.

30.

அஜித் கதாநாயகனாக அறிமுகமான முதல் திரைப்படம் தமிழில் வெளிவந்த ‘அமராவதி’ என்று பலர் நினைப்பதுண்டு ஆனால் அது நிஜமில்லை. அஜித் நாயகனாக நடித்த முதல் திரைப்படம் தமிழில் அல்ல, தெலுங்கில் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் ‘பிரேமபுஸ்தகம்’ திரைப்படமே!

31.

கொல்லபுடி துரதிருஷ்டவசமாக படப்பிடிப்பின் போது உயிரிழக்க அந்தப் படம் தடைபட்டதில் தமிழில் அமராவதிக்கு முன்பு ரேவதி இயக்கத்தில் ‘பாசமலர்கள்’ திரைப்படத்தில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடித்தார் அஜித். ஆரம்ப காலங்களில் தனது நடிப்பார்வத்துக்கு தீனியாக விளம்பரப் படங்கள், சிறு சிறு கதாபாத்திரங்கள் என எதையும் மறுக்காமல் ஏற்று நடித்தவரே அஜித்.

32.

90 களில் அறிமுகமானவர்களில் அன்று வசூலில் ஏமாற்றாத இளம் டாப் ஹீரோக்களான விஜய், பிரசாந்த், விக்ரம், அப்பாஸ், இந்தியில் ஷாருக்கான், என அனைவருடனும் இணைந்து நடிக்கத் தயங்காதவர் அஜித்.

33.

ஆரம்பகாலத் திரைப்படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்த நடிகைகளில் குறிப்பிடத் தக்கவர்கள் சங்கவி, ஸ்வாதி, சுவலட்சுமி, மாளவிகா, தேவயானி, மீனா, ரோஜா, லைலா, ஹீரா உள்ளிட்டோர்.

34.

பாலக்காடு தமிழ் ஐயர் அப்பாவுக்கும், சிந்தி அம்மாவுக்கும் மகனாகப் பிறந்த அஜித்துக்கு இரு சகோதரர்கள் உண்டு. இருவருமே மெத்தப் படித்து ஒயிட் காலர் வேலைகளில் சம்பாதித்துக் கொண்டிருக்க அஜித் மட்டுமே அவரது குடும்பத்தில் பள்ளி இறுதி தாண்டாதவர். அண்ணன்களில் ஒருவர் ஐஐடி முன்னாள் மாணவர். குடும்பத்திற்கு சினிமா பரிச்சயம் துளியும் கிடையாது. அப்படி ஒரு குடும்பத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்த அஜித் எந்தப் பின்புலமும் இன்றி இன்று அடைந்திருக்கும் உயரமும், ரசிகர் பட்டாளம் இதுவரை தமிழில் எந்த நடிகர்களுக்கும் கிடைக்காத பெருமையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

35.

தமிழ் சினிமாக்களில் ஹீரோக்கள் தங்கள் வழுக்கையை மறைக்க விக் வைத்து நடிப்பார்கள். முடி நரைத்தவர்கள் மீசை, தாடியில் கூட டை அடித்து நடிப்பார்கள். ஆனால், அஜித் ஒருவர் மட்டுமே ‘சால்ட் அண்ட் பெப்பர் லுக்’ கில் இரண்டுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இயல்பான தோற்றத்துடன் நடித்து அத்திரைப்படங்களை மாஸ் ஹிட் அடிக்கவும் செய்தார். இன்று அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் இந்தியா முழுக்க ஃபேமஸ்.

36.

பொதுவாக அஜித் மேக் அப் எதுவும் செய்து கொள்வதில்லை. ஷாட்டுக்கு முன்பு குளிர்ந்த நீரில் ஒருமுறை முகம் கழுவுவதோடு சரி மற்றபடி ஹீரோக்கள் கூட லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு நடிக்கும் இந்தக் காலத்தில் மேக் அப் பாக்ஸைத் தொடாமலே படங்களில் முகம் காட்டும் தில்லான நடிகர்களில் அஜித்துக்கு எப்போதும் முதலிடம் உண்டு.

37.

அற்புதமான முக பாவனைகளை வெளிப்படுத்தி நடிக்கக் கூடிய ஜோதிகா என்றொரு நடிகையை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமையும் அஜித்துக்கு உண்டு. வாலி திரைப்படத்தின் ஒருசில காட்சிகளுக்காக அஜித்தால் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யாவுக்கு பரிந்துரைக்கப் பட்டவரே ஜோதிகா. பின்னாட்களில் ஸ்ரீதேவி, குஷ்பூ, சிம்ரன் ரேஞ்சில் கோலிவுட் ஐகான்களில் ஒருவராகி இன்றளவும் குறிப்பிடத்தகுந்த நடிகைகளில் ஒருவராக நீடிக்கிறார் ஜோ.

38. 
அல்டிமேட் ஸ்டார் அஜித்தை இன்று ரசிகர்கள் உருகும் ‘தல’ யாக ஆக்கியவர் இயக்குனர் ஏ.ஆர். முருக தாஸ். முருகதாஸின் அறிமுகத் திரைப்படமான ‘தீனா’வில் அஜித் ஹீரோ. அதற்கு முன்பிருந்தே அஜித்தை ‘தல’ என அழைக்கும் பழக்கம் கொண்டவர் இயக்குனர் முருகதாஸ். அந்தப் பழக்கத்தில் தீனா திரைப்படத்தில் அஜித்தை தல என அடைமொழியிட்டு அழைக்கும் வண்ணம் சில காட்சிகளை அமைத்தார். இந்த ஐடியா வெகு ஜோராக க்ளிக்காகி இன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் ‘தல’ அஜித்!

39.

ஃபைனான்ஸியர்கள் மற்றும் பெரும் இயக்குனர்களின் மிரட்டல்களாகட்டும், தமிழ்த்திரையுலகில் அரசியல்வாதிகளின் எதேச்சாதிகாரமாகட்டும் எதற்காகவும் முதலில் குரல் கொடுக்கத் துணிந்தவர் அஜித். இதை இயக்குனர் பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தில் இருந்து அஜித் விலகிய சூழலிலும், கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழா மேடையிலும் அஜித் நிரூபித்தார்.

40. 

தன்னிடம் பணிபுரியும் தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கு வீடு கட்டிக் கொடுப்பது, அவர்களது பிள்ளைகளின் ஒட்டுமொத்த படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வது என விளம்பர அலட்டல்கள் எதுவுமின்றி வெளியுலகம் அறியாது அஜித் செய்யும் சேவைகளுக்கு எல்லையில்லை.

41.
சூப்பர் ஸ்டாரை எல்லோருக்கும் பிடிக்கும் ஆனால் சூப்பர் ஸ்டாரே எழுந்து நின்று கைதட்டி ஆராவாரம் செய்த ஒரே நபர் அஜித் மட்டுமே. அந்தச் சூழலில் மட்டுமல்ல அதன் பிறகான பல நேரங்களிலும் அஜித் மீதான தனது சாஃப்ட் கார்னரை வெளிப்படுத்தத் தவறியதில்லை ரஜினி.

42.

ரஜினிக்கு மட்டுமல்ல கமலுக்கும் கூட அஜித் என்றால் ப்ரியம். மனதில் எதையும் ஒழிக்காமல் அப்பட்டமாகப் பேசும் அஜித்தைப் பார்த்தால் தனக்குப் பொறாமையாக இருப்பதாகக் கூட அஜித் மீதான தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார் கமல்.

43.

தான் பீக்கில் நடித்துக் கொண்டிருந்த சமயங்களில் கூட சத்யராஜ், கார்த்திக், அர்ஜூன், பார்த்திபன், மம்மூட்டி, சுரேஷ் கோபி, உள்ளிட்ட மூத்த தலைமுறை நடிகர்களுக்கு முக்கியத்துவமுள்ள திரைப்படங்களில் இரண்டாம் நாயகனாக நடிக்கத் தயங்கியதில்லை அஜித்.

44.

பிற நடிகர்களைப் போல அஜித் தனது புதிய திரைப்படங்களுக்கான புரமோஷனல் ஈவன்ட்களில் பங்கேற்பதில்லை. காரணம் ஒரு நடிகர் தனது படத்துக்கான புரமோஷனல் நிகழ்வுகளில் தலைகாட்டுவதும் பேட்டியளிப்பதும் தேவையற்றது என்பது அஜித்தின் எண்ணம். ஒரு படம் நல்ல படம், ரசிகர்களுக்கும் பிடித்த படம் என்றால் அதன் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது. பிறகெதற்கு இம்மாதிரியான நிகழ்வுகளில் பங்கேற்பது? என்று நினைப்பவர் அஜித். 10 வருடங்களுக்கு முன்பு வரை அஜித்தும் கூட தனது திரைப்படங்களுக்கான விளம்பரத்துக்காக சில புரமோஷனல் ஈவன்ட்களில் பங்கேற்றவரே ஆனால் அதை முற்றிலுமாகத் தற்போது நிராகரித்து வருகிறார்.

45. 

அஜித் திரைப்படங்களுக்கு எந்த வித விளம்பரங்களும் தேவையில்லை. அதில் அஜித் இருக்கிறார் என்பதே படத்துக்கான மிகப்பெரிய விளம்பரம் தான். உதாரணம் மங்காத்தா, பில்லா, திரைப்படங்கள். இந்தியாவில் ரஜினிக்குப் பிறகு பேரைச் சொன்னால் அதிர வைக்கும் அப்ளாஷ்களை அள்ளும் திறன் அஜித்குமார் எனும் பெயருக்கே உண்டு எனச் சில வருடங்களுக்கு முன்பு டைம்ஸ் ஆஃப் இந்தியா கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தது.

46.

எது எப்படியோ கோலிவுட்டில் அஜித் அடைந்த உயரம் எப்போதும் ரஜினியுடனே ஒப்பிடப்படுகிறது. ஏனெனில் இருவருமே கவர்ச்சிகரமான சினிமா பின்புலங்கள் எதுவும் இல்லாத குடும்பங்களில் இருந்து நடிக்க வந்தவர்கள். தங்களது அசலான தன்மையின் மூலமாகப் பெருவாரியான ரசிகர்கூட்டங்களை ஈர்த்துக் கொண்டவர்கள் என்ற பெருமை இருவருக்குமே உண்டு. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகப் பிடித்த தற்காலத் தமிழ் ஹீரோக்களில் ஒருவர் அஜித் குமார் என்ற புகழும் அஜித்துக்கு உண்டு.

47.

ரஜினிக்கு அடுத்தபடியாக அஜித்தின் பெயர் சமகால இளம் நடிகர்களால் அவர்களது திரைப்படங்களில் அதிகமும் பயன்படுத்தப் படுகிறது. தான் ஒரு தல ரசிகன் எனச் சொல்லிக் கொள்வதில் அந்தந்த நடிகர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். ஆரம்ப காலங்களில் தான் நடித்த விளம்பரப் படங்கள் தொடங்கி இன்று டாப் ஸ்டார்களில் ஒருவராக ஆனது வரை அஜித்தின் குணநலன்களில் எந்த மாற்றமும் இல்லை. தோற்றத்தில் தான் வயதுக்கேற்றவாறு சில மாறுதல்கள் வந்துள்ளன. அதையும் அப்பட்டமாக வெளிக்காட்டி நடிக்க அஜித்துக்கு ஆட்சேபணை இருந்ததில்லை. 

ஒரு இயல்பான நடிகரான அஜித்தின் 47 வது பிறந்தநாளை #Hbdthalajith என இணையத்தில் ஹேஷ்டேக் போட்டு கொண்டாடித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.ஏதோ நம்மால் முடிந்தது அஜித்தின் 47 ஆவது பிறந்தநாளில் அவரைப் பற்றிய சுவாரஸ்யமான 47 தகவல்களைப் பகிர்ந்திருக்கிறோம். வாசித்துப் பரவசமாகுங்கள் ‘தல’ ரசிகப் பெருமக்களே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com