ஹாலிவுட் ஊடகங்கள் கொண்டாடிய ‘லேடி பேர்ட்’ திரைப்படம் ஏன் ஆஸ்கர் விருது பெறவில்லை?

ஆஸ்கர் விருது உலகின் மிகப் பெரிய திரை விருதுகளுள் ஒன்றாக திரைக் கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஹாலிவுட் ஊடகங்கள் கொண்டாடிய ‘லேடி பேர்ட்’ திரைப்படம் ஏன் ஆஸ்கர் விருது பெறவில்லை?

ஆஸ்கர் விருது உலகின் மிகப் பெரிய திரை விருதுகளுள் ஒன்றாக திரைக் கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்விருதை வெல்வதை வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட கலைஞர்கள் எண்ணற்றோர் உள்ளனர். சினிமா என்பது தனி மனிதனின் சாதனை மட்டுமே இல்லை. அது ஒரு கூட்டு முயற்சி. ஆஸ்கரில் வழங்கப்படும் விருதுகள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் விமரிசனங்களுக்கு உள்ளாகி வந்தாலும், பல நல்ல திரை முயற்சிகளையும் திறன்களையும் ஊக்குவிக்கும்விதமாக இவ்விருது அமைந்திருப்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. இந்த ஆண்டு (2018), 90-வது ஆஸ்கர் விருது ஒவ்வொரு ஆண்டையும் போலவே, சர்வதேச அளவில் திரை ஆர்வலர்களை பெரும் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாக்கியது.  

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கு வந்த படங்கள் ஒன்பது. அவற்றில், கால் மீ பை யுவர் நேம், டார்க்கெஸ்ட் ஹவர், டன்கிர்க், கெட் அவுட், லேடி பேர்டு, பாந்தம் திரெட், தி போஸ்ட், தி ஷேப் ஆஃப் வாட்டர், த்ரீ பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங்-மிசூரி ஆகிய திரைப்படங்கள் இடம்பெற்றன. இதில் தி ஷேப் ஆஃப் வாட்டர் திரைப்படம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக டன்கிர்க் திரைப்படம் 8 பிரிவுகளிலும், த்ரீ பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங்-மிசூரி திரைப்படம் 7 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டது. இந்திய நடிகர் அலி ஃபசல் நடித்த 'விக்டோரியா அண்ட் அப்துல்' திரைப்படம் சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த சிகை அலங்காரம், சிறந்த ஒப்பனை ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒன்பது படங்களுள் ஒன்றான லேடி பேர்ட் திரை ஆர்வலர்களை புருவம் உயர்த்தவும் புன்னகைக்கவும் செய்த ஒன்று. 

ஹாலிவுட் ஊடகங்கள் இத்திரைப்படத்தை கொண்டாடின. பதின்பருவ ஆண்களை மையப்படுத்தி, தி 400 ப்ளோ, பாய்ஹுட் உள்ளிட்ட பல திரைப்படங்கள் வந்துள்ள ஹாலிவுட்டில், தன்னுடைய லேடி பேர்ட் அவற்றுக்கு சமமாக உருவாக்கியிருப்பதில் மகிழ்ச்சி அடைந்தார் இயக்குநர் கிரெட்டா கெர்விக். கண்டிப்பான தாய்க்கும் அவரது பதின்வயது மகளுக்குமிடையே நடக்கும் பிரச்னைகளையும் இறுதியில் மகள் தாயை புரிந்து கொண்டாளா என்ற கேள்விக்கு விடையும் கண்டடைகிறது லேடிபேர்ட். இத்திரைப்படத்தில் நடிகை சாவோய்ர்ஸ் ரோனான், லேடி பேர்ட் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் லாரி மெட்கால்ஃப், ட்ரேசி லெட்ஸ், லூகாஸ் ஹெட்ஜெஸ், டிமோதி சாலேமேட் மற்றும் லூயிஸ் ஸ்மித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இக்கதை  2002-2003-ம் ஆண்டு இறுதியில் நடக்கிறது. செல்ஃபோன்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்திருக்காத காலகட்டம் அது. சிறிய ஊரான சாக்ரமெண்டோவிலுள்ள கதோலிக உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாள் கிறிஸ்டின் மெக்ஃபெர்சன் (சாவோய்ர்ஸ் ரோனான்). கண்டிப்புள்ள நடுத்திர வர்க்கக் குடும்பத்தில் மூன்று பிள்ளைகளுள் ஒருத்தி அவள் (அதில் இவளை விட பெரியவள் பெற்றோர்களின் வளர்ப்பு மகள்). தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வர, தாய் மரியான் மெர்ஃபெர்சன் (லாரி மெட்கால்ஃப்) மருத்துவமனையில் செவிலியாக பணி புரிந்து அந்தக் குடும்பத்தின் தேவைகளை கவனித்து வருகிறாள்.

பள்ளியில் உயர்நிலைப் படிப்பு முடிவடையும் நிலையிலுள்ள க்றிஸ்டீன், தனது ஊரான சாக்ரமெண்டோவை விட்டுத் தூர விலகி ந்யூயார்க் போன்ற பெரிய நகரத்தில் கல்லூரிப் படிப்பைத் தொடர விரும்புகிறாள். எப்படியாவது தனது தற்போதைய நடுத்திர வர்க்கத்திலிருந்து தப்பித்து பணம் படைத்தவளாகிவிட வேண்டும் என்பதே அவளுடைய ஆகப் பெரிய கனவாகும். அதற்காக அவள் என்ன செய்கிறாள் என்பதுடன் தனது கனவுகளை கைப்பற்றும் முயற்சிகளில் மற்றவர்களை எப்படியெல்லாம் காயப்படுத்துகிறாள், தாய் மரியானுடன் ஏற்படும் சிக்கல்களை எப்படி நேராக்குகிறாள் என்பதுதான் இப்படத்தின் உணர்ச்சிமயமான ஒற்றைவரிக் கதை. இதனை நேர்க்கோட்டில் நாயகியின் பார்வையில் அழகானவொரு திரைமொழியில் கூறியிருப்பது சிறப்பு.

லேடி பேர்ட் என்பது க்றிஸ்டியன் தனக்குத் தானே வைத்துக் கொள்ளும் புனைப் பெயர். பள்ளி நாடகப் பிரிவில் தனது பெயரைக் கொடுத்துள்ள அவளுக்கு இசையிலும் தீவிர ஈடுபாடு உண்டு. உன் பெயரென்ன என்று யார் கேட்டாலும் க்றிஸ்டின் என்று அவள் சொல்லுவதில்லை, லேடி பேர்ட் என்பாள்.  வீட்டிலும் சரி நண்பர்களுக்கு மத்தியிலும் சரி அந்தப் பெயரில் அவளை அழைக்காவிட்டால் அவள் அவர்களை மதிப்பதில்லை. தனது பெயரை நிறுவவே, அவள் அரும்பாடு பட வேண்டியதாகிறது. அவளுடைய அம்மா மரியானுக்கு வீட்டு வேலைகளில் சிறு உதவியும் அவள் செய்வதில்லை. ஆடைகள், புத்தகங்கள் எல்லாம் ஒழுங்கற்றுக் கிடக்க தனது சொந்த அறையைக் கூட அவளால் அக்கறையுடன் பராமரிக்க முடிவதில்லை. அம்மா திட்டினால் முகத்தை திருப்பி வைத்துக் கொள்வதுடன் எதற்கெடுத்தாலும் ஏறுக்கு மாறாகப் பேசுவாள். அவள் வெளியூர் சென்று படிப்பதில் மரியானுக்கு உடன்பாடில்லை என்பதால் தாயை எப்படி சமாதானப்படுத்துவது என்ற குழப்பமும் அவளுக்கு உண்டு. தினமும் மகளை தனது காரில் பள்ளியில் விட்டுவிட்டு மருத்துவமனைக்கு விரைவாள். அவர்களுக்கிடையே நடக்கும் பேச்சுக்கள் எல்லாம் பெரும்பாலும் சண்டைகளிலேயே முடியும். சில சமயம் லேடிபேர்டின் அப்பா லாரி (ட்ரேசி லெட்ஸ்) அவளை பள்ளியில் விடும்போது அப்பாவிடம் மனம்விட்டுப் பேசுவாள். அவளுடைய பிரச்னைகளின் தீர்வு அவரிடம் உண்டு என்பதை தீர்க்கமாக நம்புகிறவள் கிறிஸ்டின். அப்படித்தான் மேல்படிப்புக்கான விண்ணப்பங்களை அம்மாவிடம் கூறாமல் ரகசியமாக வாங்கித் தரும்படி அப்பாவை கெஞ்சுகிறாள். அவரும் ஒப்புக் கொள்ள அவள் மனம் லேசாகிறது.

பதின்வயது என்பது பலருக்கு சிக்கலான வயது. ஆசைகளும் கனவுகளையும் துரத்திக் கொண்டிருக்கும் கனவு பொழுதுகளை உள்ளடக்கியது. லேடி பேர்ட் என்று தன்னை உருவகித்துக் கொள்ளும் க்றிஸ்டீனின் தேவைகள் வானளாவியது. அவளுக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு அது. விழிகள் வழிய தேக்கி வைத்த பல வண்ணக் கனவுகளுடன் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாதவள் அவள். தான் இன்னும் முழுமையான பெண்ணாக மலரவில்லை என்பதை பிடிவாதமாக மறுப்பவள். தனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வத்துடன் இளமை நுரைக்கும் பருவத்தின் எழிலில் உலகை அதிலுள்ள மனிதர்களை துச்சமாகவே பார்ப்பவள். எதிலும் அவசரம், எல்லாமும் உடனே வேண்டும் என்ற நவயுக யுவதியின் ஒரு பிரதிநிதி அவள். தன்னைத் தவிர மற்றொரு உலகம் இருப்பதை உணர முடியாத பிராயத்தில் தன்னுடைய ஆளுமையைக் கட்டமைத்துக் கொள்ள தனக்குத் தெரிந்த விதத்தில் போராடிக் கொண்டிருப்பவள். 

இந்த ஓட்டத்தில் போகிற போக்கில் தன்னைச் சார்ந்தவர்களைக் காயப்படுத்துவதும், சர்வ சாதாரணமாக பொய் உரைப்பதும், அந்த வயதிலேயே இரண்டு முறை காதலித்து தோற்றதும் அவளுக்கு ஒரு விஷயமாகவே இருப்பதில்லை. எல்லோருடைய வாழ்விலும் தான் இவை நடக்கின்றன. இதிலென்ன என்ற அலட்சிய மனப்போக்கும் அவளிடம் காணப்படுகிறது. எதைவிடவும் மேலாக அவள் மிகவும் பிடிவாதக்காரி, முன் கோபம் மிகுந்தவள், அழுத்தமானவள். எந்தளவு என்றால் வீட்டில் தந்தை வேலை பறிபோன நிலையில் சோர்ந்திருக்கும் போதும்கூட, முதல் காதலன் டானி (லூகாஸ் ஹெட்ஜஸ்) அழைப்புக்கிணங்கி அவனுடைய பாட்டி அளிக்கும் ஒரு விருந்துக்குக் கிளம்பிச் செல்கிறாள். அந்த விருந்துக்கு அவள் செல்ல முக்கிய காரணம் டானியின் பாட்டி வீடுதான் அவளது கனவு இல்லம். நகரத்தில் வசதியானவர்களின் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டைக் கடக்கும் போதெல்லாம் அது போன்றதொரு வீட்டில் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவாள் லேடிபேர்ட். அந்த விருந்துக்குப் போகவேண்டாம், இதெல்லாம் நம் போன்ற குடும்பங்களுக்கு தேவையில்லை என்று அவளது அம்மா மறைமுகமாக கூறியும், லேடிபேர்ட் கேட்கவில்லை. நினைத்தவற்றைச் செய்து முடிக்கும் ஆவேசம், சுதந்திரமான மனப்போக்கு, வேட்கையின் பின் செல்லும் தீவிரம் என குழப்பமான கொதிநிலையான உணர்ச்சிக் கலவைகளுக்குள் சிக்கிக் கொண்ட அந்தப் பறவை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கூண்டை விட்டுப் பறக்கத் துடிக்கிறது. லேடிபேர்ட். தன் வீட்டின் பிரச்னை பணம் தான், அது இருந்தால் எல்லாவற்றையும் வென்றெடுக்கலாம் என்று வலுவான நம்பிக்கையில் இருக்கிறாள். அது செலுத்தும் திசையில் சிறகடிக்க உள்ளுக்குள் முடிவெடுக்கிறாள்.

அவளுடைய நெருங்கிய தோழியான ஜூலியிடம் தன்னுடைய ரகசியங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வாள் லேடிபேர்ட். ஜூலிக்கும் இவளை விட்டால் வேறெந்த தோழியும் கிடையாது. இருவரும் தினந்தோறும் தங்களுடைய வருங்காலம் முதற்கொண்டு, சூரியனின் கீழுள்ள அனைத்து விஷயங்களையும் பேசித் தீர்க்காமல் அடுத்த நாளுக்கு மிச்சம் வைப்பார்கள். ஜூலி விவாகரத்தான தனது தாயுடன் வசித்து வருபவள். லேடி பேர்டின் கனவு இல்லம் இருக்கும் அதே மேட்டுக்குடியிருப்பில் தான் அவளும் வசிக்கிறாள். என்றாவது ஒருநாள் தானும் அதே போலவொரு வீட்டில் வாழ வேண்டும் என்ற பெருங்கனவை சிறுகச் சிறுக தன்னுள் ஆழமாக விதைத்துள்ளாள். இதற்கெனவே மேல்தட்டு தோழிகளுடன் பழகுவதில் பெரும் விருப்பம் கொள்கிறாள். ஜென்னா (ஒடியா ரஷ்) என்ற தன் வகுப்பு மாணவியிடம் வலிய சென்று நட்பு பாராட்டுகிறாள். ஜென்னாவின் மதிப்பைப் பெற தன்னுடைய வீடாக அவள் கூறுவது டானியின் பாட்டியின் வீட்டைத்தான். பகட்டும் கொண்டாட்டமுமான கைக்கு இதுவரை எட்டாத ஒரு பெருவாழ்வை அவள் வாழ விழைகிறாள். அதன் பொருட்டு அவள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாரான மனநிலையுடன் இருக்கிறாள். 

டானியுடனான அவளுடைய முதல் காதல் எதிர்பாராதவிதமாக மிக விரைவில் தோல்வியுற, அடுத்து அவள் பகுதி நேர வேலை செய்யும்போது சந்தித்த கைல் (டிமோதி சாலமேட்) என்பவனின் மீது காதல் கொள்கிறாள். அவன் எளிமையான வாழ்க்கைப் பற்றிப் பேசினாலும் பணக்காரத்தன்மையுடன் இருப்பவன், ஊரின் வசதியான பள்ளியில் படிப்பவன், பணக்காரத் தன்மையை வெறுப்பதாகச் சொல்லும் அவன் அதை அனுபவித்துக் கொண்டே இருப்பவன். அவன் வலையில் அவள் தானாக வீழ்ந்து, பின்னர் மிகத் தாமதமாகவே அவனைப் பற்றிப் புரிந்து கொள்கிறாள். இரண்டாம் காதலும் தோற்றுப் போக, வேறு வழியில்லாமல் படிப்பில் தீவிரம் காட்டுகிறாள் லேடிபேர்ட்.

பள்ளி நாடகத்திலும் அவளால் சிறப்பாக நடிக்க முடியாமல் போகிறது, பரீட்சைகளில் எதிர்பார்த்ததைவிட குறைவான மதிப்பெண்கள் பெறுகிறாள், ஜென்னாவை நம்பி ஜூலியின் நட்பை இழக்கிறாள், இரண்டு காதல் தோல்விகளும், அம்மாவுடன் மற்றும் குடும்பத்தாருடன் உள்ள விலகல் என ஒரு கட்டத்தில் அனைத்து பிரச்னைகளும் ஒன்று கூட மனம் உடைந்து போகிறாள். தன்னை தோல்வியுற்றவளாக நினைத்து வருந்துகிறாள். அவள் பணக்காரி இல்லை பொய் சொல்லியிருக்கிறாள் என்றுணர்ந்த ஜென்னா அவளை கேலியாகப் பேசுகிறாள். கைல் அவளை மன்னித்தால் தானும் மன்னிப்பதாக உறுதி கூறுகிறாள். பாம்பின் கால் பாம்பறியும் போலவே பணக்காரர்களின் தன்மை அவளுக்குத் தெரியும் என்பதால் சாக்குக் கிடைத்தபோது சாதாரண லேடிபேர்டின் நட்பை வெளியேற்றுகிறாள் ஜென்னா. இவ்வகையில், புதிய நண்பர்களின் பணக்கார வாழ்க்கையுடன் ஒட்ட முடியாத மனநிலையில் மீண்டும் ஜூலியுடன் பழைய நட்பை புதுப்பிக்கிறாள் லேடிபேர்ட். முதலில் கோபமாக அவளிடம் பேசினாலும், ஜூலி அவளை மன்னித்து ஏற்கிறாள். 

ஒருவழியாக அவள் ஆசைப்பட்ட கல்லூரியில் இடம் கிடைக்கும் நிலை வரும்போது, மரியானுக்கு அவளுடைய இந்த ரகசிய திட்டம் தெரிய வருகிறது. கோபம் கொண்டு, மகளுடன் பேசுவதை நிறுத்திவிடுகிறாள். அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சுகிறாள் லேடி பேர்ட். இது தன்னுடைய வாழ்க்கை, கனவு வேறு வழியில்லை வெளியூருக்குச் சென்றால்தான் முன்னேற முடியும் என்றெல்லாம் சமாதானம் செய்தும் அம்மா கேட்கவில்லை. மகள் தன்னை விட்டு வெகுதூரம் போகிறாள் என்ற ஒரு காரணம் இருந்தாலும், பணப் பற்றாக்குறை என்பதும் முக்கிய காரணம். லேடிபேர்ட் நிதியுதவி கேட்டு விண்ணப்பித்திருந்தாலும், அது கிடைக்கும்வரையில் அந்தப் புதிய ஊரில் அவள் தங்க வேண்டும், தினமும் மூன்று வேளை வயிறார சாப்பிட வேண்டும் என்ற கவலை பெற்றவளுக்கு. ஆனால் அதைப்பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் அப்பாவிடம் அம்மா தன்னை ஏன் இந்தளவுக்கு வெறுக்கிறாள் என்று புலம்பியபடி கிடைத்த கல்லூரியில் சேர தனித்துக் கிளம்புகிறாள். ஆனால் அவளுக்குத் தெரியாது அவளுடைய செலவுகளுக்காக மரியான் வீட்டை அடமானம் வைத்துவிட்டாள் என்பது. மகள் ஊருக்குக் கிளம்புவதற்கு முந்தைய இரவில் அவளுக்கு ஒரு கடிதம் எழுத நினைத்து, எவ்வளவு எழுதினாலும், தன்னை முழுவதும் வெளிப்படுத்த முடியாது என்று முடிவு செய்து எழுதி வைத்த அத்தனை தாள்களையும் கிழித்துப் போட்டுவிடுகிறாள் மரியான்.

இப்போது லேடி பேர்ட் பதினெட்டு வயது நிரம்பியவள். தன் சுயவிருப்பப்படி வாழலாம் இனி தான் சுதந்திரமானவள் என்பதை அறிவிக்க தனக்குப் பிடித்த சின்ன சின்ன பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிக்கிறாள், அதற்கு முதலில் பெரியவர்களுக்கு மட்டுமேயான பத்திரிகை ஒன்றினை வாங்கி சிகரெட் ஊதியபடி படிக்கிறாள். இனி தன்னுடைய விருப்பங்கள் ஆசைகள், தேர்வுகள் தெளிவுகளை நோக்கிய பயனத்தைத் தொடங்க முடிவு செய்கிறாள் அவள். அப்பாவின் ஆசிர்வாதம் தனக்கு எப்போதும் உண்டு என்று மகிழும் க்றிஸ்டினுக்கு ந்யூயார்க்கிலுள்ள கல்லூரியில் சேர வேண்டிய தினம் நெருங்குகிறது. விமான நிலையத்துக்கு பெற்றோர் அவளை வழியனுப்ப வந்தாலும், மரியான் காரிலேயே தங்கிவிடுகிறாள். இப்போதெல்லாம் தன்னை லேடி பேர்ட் என்று கூறிக்கொள்வதை நிறுத்தியிருந்த க்றிஸ்டின் அம்மாவை விமானநிலையத்துக்குள் வரும்படி அழைக்கிறாள். அந்த இடங்களில் எல்லாம் வண்டியை நிறுத்த அதிகக் கட்டணம் எனக்கூறி மரியான் கடுமையான முகபாவத்துடன் மறுக்கவே, அவள் முகம் வாடிவிடுகிறது. அப்பா மட்டுமே அவளுடன் செல்கிறார். மகள் கண்பார்வைக்கு மறைந்த பின் பதை பதைத்துப் போன அவள், தாயுள்ளம் தவிக்க காரை நிறுத்திவிட்டு அவளைத் தேடி ஓடிவருகிறாள். ஆனால் அதற்குள் லேடிபேர்ட் வேறு ஒரு உலகத்தைக் காண பறந்துவிடுகிறாள். அதன் பின் புதிய ஊரில் அவள் என்னவாகினாள், தாயைப் பற்றி எப்படிப் புரிந்து கொண்டாள் என்பதை ஒரு சிறிய திருப்பத்துடன் கூறி நிறைவடைகிறது இத்திரைப்படம்.

இந்தப் படத்தில் கெர்விக் எதையும் மிகைப்படுத்துவதில்லை. இயல்பாக நடுத்திர வர்க்கத்துக் குடும்பங்களில் நிகழும் சம்பவங்களை தனது சொந்த வாழ்க்கையில் நடந்தவற்றுடன் கலந்து எளிமையான ஒரு படைப்பை முன் வைக்கிறார். லேடி பேர்ட் மூலம் அவர் கூற விரும்புவது ஒன்றுதான். ஒரு பெண் என்பவள் வளர் இளம் பருவத்தில் பக்குவப்படாதவளாக இருப்பாள். சில துர்குணங்கள் கூட அவளுக்கு இருக்கலாம். சேர்க்கை சரியில்லாமல் போகலாம் தனது அரைவேக்காட்டுத்தனத்துடன் அறிவார்ந்த வேஷம் போடும் சராசரி பெண்கள் தான் அவர்கள். ஆனால் அவர்களை வெறுத்து ஒதுக்க வேண்டாம். யார் கண்டது அவர்களின் கனவுகள் ஒளிரக் கூடும். ஒரு நாள் அவர்களும் தங்களை உணர்ந்து கொண்டு திருந்துவார்கள். அல்லது தாம் செய்த தவறுகளுக்காக வருந்தி அக்காலகட்டத்தை கடந்துவிடுவார்கள். இந்தச் சமூகமும் குடும்பமும் வன்முறையாளர்களாகவும், கலாச்சார காவலர்களாகவும் உருமாறி அவர்களை மன நெருக்கடிக்குள்ளாக்கினால் அவர்களால் ஒருபோதும் மீள முடியாது. முடிவற்ற பள்ளத்தாக்கினுள் இருள் சூழச் சூழ அவர்கள் விழுந்து கொண்டேயிருப்பார்கள்.  

இப்படத்தில் கிறிஸ்டின் எனும் சிறு பெண் தனக்கென ஓர் பிரத்யேகமான  பெயர், பிரகாசமான எதிர்கால வாழ்க்கை என தன் கனவுகளை இளம் பிராயத்திலேயே இனம் கண்டு கொண்டவள். அதற்கேற்ற வகையில் தன்னைத் தகவமைத்துக் கொள்ள போராடுபவள். தனக்கு உண்மையில் என்ன வேண்டும் என்றும் ஆழமான சுய அலசல் அவள் செய்ததில்லை. ஆனால் அதை நோக்கிய பயணத்தின் அழகான இடைநிறுத்தம் தான் அவளுடைய இளமைப் பருவம். இதில் அவளது தேடல் பணம் என்று வெளிப்படையாக தோன்றும்படி இருந்தாலும், அதைவிடவும் அதிகமான வேறொன்றை அவள் உள்மனம் நாடியிருக்கிறது என்பதை புரிந்து படம் பார்க்கையில் கொள்ள முடியும். துடிப்பும் ஆர்வமும், எதைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடும் தீவிரமும் கொண்ட அவள் வாழ்தலின் மீதுதான் தீராத தாகம் கொண்டவளாக இருக்கிறாள். பணத்தை விடவும், இளமையை விடவும், கனவுகளை விடவும் மிகப் பெரியது ஒன்றுண்டு. அதுதான் நிதர்சன வாழ்க்கை. அதுதரும் அனுபவம் மற்றும் தரிசனங்கள் எண்ணிலடங்காதவை. அவற்றை எதிர்நோக்கி மிச்ச காலம் நகரும் என்பதை கடைசி காட்சிகளின் அதற்கான திறப்புடன் படத்தை நிறைவு செய்கிறார் இயக்குநர். 

லேடி பேர்ட் படத்தில் க்றிஸ்டினின் ஆளுமையைக் கட்டமைக்கும் காட்சி எதுவெனில் டானியை பிரிந்தபின் அவன் ஒரு நாள் அவளைத் தேடி அவள் பகுதி நேரமாக வேலை செய்யும் கடைக்கு வருகிறான். முதலில் அவனைப் பார்க்க மறுக்கும் அவள், பிறகு மனம் இறங்கி அவனைச் சந்திக்கிறாள். அவன் ஓரிரு வார்த்தைகளில் தன்னுடைய பிரச்னையைக் கூற சட்டென்று மனம் கரைந்து அவனுக்கு ஆறுதல் சொல்கிறாள் க்றிஸ்டின். மனிதர்கள் எப்போதும் பழிவாங்கும் நோக்கத்துடனும் வன்மத்துடனும் வாழ்க்கையை அணுகிக் கொண்டிருந்தால் அவர்களால் ஒருபோதும் சக மனிதர்களுடன் அணுக்கமாக இருக்க முடியாது. மானுட வாழ்க்கை எல்லா சிறுமைகளையும் கயமைகளையும் உள்ளடக்கியதுதான். இங்கு யாரும் புனிதரில்லை. தவறு செய்யாத ஓரியிருர் கூட பூமியில் இருக்க வாய்ப்பில்லை. மறப்பதும் மன்னிப்பதும் சிறந்த குணம் என்பது க்றிஸ்டினின் செயல்பாடுகளில் தெரியும். அதை வெளிப்படையாக இயக்குநர் இப்படத்தில் கூறியிருக்காவிட்டாலும் சில காட்சிகளில் லேடி பேர்ட்டின் இயல்பை வெளிச்சமிட்டிருப்பார். 

புது ஊரில் அவள் தனித்துத் திரியும் போதுதான் தன்னுடைய சொந்த ஊரின் நினைவும் அவளுடைய அம்மாவின் பாசத்தையும் அவள் முழுவதும் உணர்கிறாள். கவலைகளின்றி சுற்றித் திரிந்த அந்த வீதிகள், காரின் ஜன்னல் வழியாக அம்மாவுடன் அரட்டை அடித்தபடி செய்த பயணங்கள் என ஒவ்வொன்றும் நினைவுத் திரளாக அவள் முன் ஊடாடுகிறது. காலம் ஒருவரையும் அப்படியே விட்டுவைப்பதில்லை. அது சிலரை பக்குவப்படுத்துகிறது. அதற்கான நேரத்தை அவர்களுக்குத் தந்துவிடுங்கள் என்றுதான் கோருகிறது லேடி பேர்ட் என்ற இத்திரைப்படம்.

இயக்குநர் கெர்விக் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி முடிக்க நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொண்டார். அதற்குக் காரணம் அது அவரது சொந்த வாழ்க்கையிலிருந்து உருவப்பட்ட சில பக்கங்கள் என்பதாலும்கூட. எதையும் மிகைப்படுத்திவிடாமல் சம்பவங்களை நிகழ்ந்த வகையில் எடுக்காமல் உணர்வுகளை மட்டுமே கடத்த வேண்டும் எனும் பிரயத்தனத்தினால்தான் திரைக்கதையை உருவாக்குவதில் அதிக நேரத்தை செலவழித்தார். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை சாவோய்ர்ஸ் ரோனானை இப்படத்தில் லேடி பேர்டாக நடிக்க வைத்ததைப் பற்றி  கெர்விக் கூறுகையில், 'சாவோய்ர்ஸ் ரோனானை 2015-ம் ஆண்டு டொராண்டோ திரைப்படவிழாவில்தான் முதன் முதலில் சந்தித்தேன். எங்களுடைய படமான மாகீஸ் ப்ளான் மற்றும் ப்ரூக்ளீன் திரையிடல் விஷயமாக அங்கு சென்றிருந்தேன். ரோனானைப் பார்த்ததும் அவரை படத்தில் நடிக்க வைக்கலாம் என்று நினைத்து, அவர் தங்கியிருக்கும் ஓட்டலுக்குச் சென்று அவருடன் உரையாடிய பின்னர்  இப்படத்தின் மொத்த திரைக்கதையையும் அவருக்கு உரக்க படித்துக் காட்டினேன். நான் நினைத்தபடி ரோனானுக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது. அது குறித்து உடனடியாக அவர் தனது கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவரது பாராட்டுதல்கள் எனக்குள் நம்பிக்கையை வேறூன்றச் செய்தது. ஒரு துளி சந்தேகத்திற்கும் இடமின்றி சாவோய்ர்ஸ் ரோனான் தான் என்னுடைய லேடி பேர்ட் என்பதை அக்கணத்தில் நான் உணர்ந்தேன். என்னுடைய கதை நாயகியாக நான் கற்பனை செய்து வைத்திருந்த லேடி பேர்டை விடவும் ரோனான் பன்மடங்கு மிகச் சிறப்பாகவே பொருந்தி இருந்தார். அதிகம் கவனம் பெறாத ஒரு சராசரி பெண்ணின் பெருங்கனவை தத்ரூபமாக வெளிப்படுத்தும் விதமாக அக்கதாபாத்திரத்துக்கு அவர் உயிரூட்டினார். உண்மையில் அவரும் அந்த சின்னஞ்சிறு பெண்ணை நேசித்திருக்கிறார். அதனால்தான் அவளை இயல்பாக உள்வாங்கி, அற்புதமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்திவிட்டார்.  இப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அதீத உணர்ச்சி வசப்படும் இளம் பெண்ணாகவும், நன்றி மறக்கும் ஒருத்தியாகவும், தன் தவறுகளுக்கு வருந்தும் பக்குவப்பட்ட பெண்ணாகவும் விதவிதமாக மடைமாற்றம் செய்து தனது மிகையற்ற நடிப்பை உருக்கமாக வழங்கினார் ரோனான். அது உலகத்தரத்தில் இருந்ததால்தான் ஆஸ்கர் வரை லேடி பேர்ட் வந்துள்ளது’ என்று தனது கதாநாயகியை மனம்திறந்து பாராட்டுகிறார் இயக்குநர் கெர்விக். 

கதையின் முக்கிய நாயகி எதிர்பாராத விதமாக கிடைத்ததும் மற்ற கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் அதிக பிரச்னை இருக்கவில்லை அவருக்கு. 2016-செப்டம்பருக்குள் கதை மாந்தர்கள் அனைவரும் தயாராகிவிட, லேடி பேர்ட் படப்படிப்பை ஆகஸ்ட் மாதம் தொடங்கினார் கெர்விக். படப்பிடிப்பு நடந்த காலகட்டத்தில் குறித்த நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாக வந்துவிடுவார் கெர்விக். எல்லாம் சரியாக உள்ளதா என்று சரி பார்த்து பார்த்து படப்படிப்பை சிக்கனமாகவும் விரைவாகவும் முடித்து கொடுத்தார். இயக்குநர் ரெபேக்கா மில்லரிடமிருந்து இந்தப் பழக்கத்தைக் கற்றுக் கொண்டதாக பேட்டியில் தெரிவித்தார் கெர்விக். திரைப்படத் துறை சார்ந்த படிப்பு எதையும் கெர்விக் படித்திருக்கவில்லை. கற்றுக் கொள்வதின் ஆர்வமும், சினிமா மீதுள்ள ஆசையும்தான் அவரை அத்திசை வழிநடத்தியிருந்தது. ஆரம்பத்தில் இப்படத்தை சூப்பர் 16 காமிராவில் எடுக்க நினைத்திருந்தாராம் கெர்விக். ஆனால் அதிக பொருட்செலவாகும் எனும்படியால் ஆரி அலெக்ஸா மினியைப் பயன்படுத்தி படப்பிடிப்பை முடித்துள்ளார். இந்தப் படம் ஜூலை 2017-ல் வெளியானது. இதன் ப்ரிமியர் காட்சி டெலுரைட் திரைப்பட விழாவில் செப்டம்பர் 1, திரையிடப்பட்டது. அதனை தொடர்ந்து டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் பங்கேற்றது. ந்யூயார்க் திரைப்பட விழா உள்ளிட்ட பல விழாக்களில் உலகம் முழுவதும் வலம் வரத் தொடங்கியது இந்த லேடி பேர்ட். அதிலும் முக்கியமாக டொரொண்டோ திரைவிழாவில் ரசிகர்கள் படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டி இதனை வரவேற்றுள்ளனர். இந்தப் பெருமை எல்லா திரைப்படங்களுக்கும் கிடைத்துவிடாது என்பது குறிப்பிடத்தக்கது.  

பாராட்டுகள் மட்டுமல்லாமல் வசூல் விஷயங்களிலும் லேடி பேர்ட் சில குறிப்பிட்ட சாதனைகள் புரிந்துள்ளது. திரை அரங்குகளிலும் அனைத்து காட்சிகளும் வெற்றிப்பெற்ற நிலையில் அமெரிக்காவில் மட்டும் 48.3 மில்லியன் டாலர்களை ஈட்டித் தந்தது இப்படம். மார்ச் மாத இறுதியில் கணக்கெடுத்துப் பார்க்கையில், உலக திரையிடல்களைச் சேர்த்துக் கணக்கிட்டால் 59.4 மில்லியன் டாலர்களுக்கும் மேலாக பொருளீட்டிக் கொண்டிருக்கிறது. பெண் இயக்குநர் ஒருவரின் படம் இத்தகைய பெரு வெற்றியைப் பெறுவது இதுவே முதல் முறை என்று புகழ்ந்து தள்ளின அமெரிக்க ஊடகங்கள். ஆஸ்கர் விருதைத் தவறவிட்டிருந்தாலும் பல விருதுகளுக்கு இப்படம் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. டைம் இதழ் 2017-ம் ஆண்டின் தலைசிறந்த பத்து படங்களுள் ஒன்றாக லேடி பேர்டை தேர்வு செய்துள்ளது. 

ஆஸ்கர் விருது பெறவில்லையே என்ற வருத்தம் மனதின் ஒரு மூலையில் இருந்தாலும், இந்தப் படம் ஒருவகையில் அவரது சுயசரிதை என்பதை கெர்விக் மறுக்கவில்லை. திரையில் தன்னுடைய இளமைக் காலத்தின் ஒரு துளியை வரைந்துவிட்ட மகிழ்ச்சி அவருக்கு ஏற்பட்டது. மேலும் எப்போது நினைத்தாலும் ஒரு இனிய நினைவாக, காட்சிப் படலமாக அது பார்வையாளர்களுக்குள் மாயம் செய்து கொண்டிருக்கும் என்பதுதான். படைப்பாளிகள் பலவிதம். அதிலொருவரான கெர்விக் தனது திரை வாழ்வின் ஆரம்ப நிலையில் உள்ளார். அவரிடமிருந்து ஆழமான படைப்புக்களை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள். இனி வரும் காலங்களில் அவர் விளையாட்டுத்தனமாக லேடி பேர்ட் போன்ற படங்களை எடுப்பாரா, அல்லது லேடி பேர்ட் எனும் அடையாளத்தை உதிர்த்து புத்தம் புதிய இனவகையில் படம் எடுப்பாரா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com