மகள்களுக்குள் வேறுபடும் நடிகர் ஜெமினி மீதான புரிதல்!

கணவன், மனைவி இருவரைப் பற்றியும் படம் எடுக்கும் போது மனைவி தரப்பை மட்டுமே ஆதாரமாக வைத்துக் கொண்டு அவர்கள் சொல்வதை நம்பி மட்டுமே திரைப்படம் எடுத்தது தவறு. நாங்கள் எல்லாம் இங்கே இருக்கும் போது எங்களையும்
மகள்களுக்குள் வேறுபடும் நடிகர் ஜெமினி மீதான புரிதல்!

மே 11 ஆம் தேதி வெளியான ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தில் மறைந்த நடிகர் ஜெமினி கணேஷன் எதிர்மறையாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாக அவரது மகளும், மகப்பேறு மருத்துவருமான டாக்டர் கமலா செல்வராஜ் கோபத்துடன் தனது உளக்குமுறலை தெலுங்கு மற்றும் தமிழ் ஊடகங்களில் பதிவு செய்திருந்தார். திரைப்படத்தில், ஜெமினியின் முதல் மனைவியின் மகள்களான தங்களை அணுகி அவரைப் பற்றிய சரியான தகவல்களைத் தெரிந்து கொண்டு அவரைப் பற்றிய காட்சிகளை படமாக்காமல் ஒருசாரார் சொன்ன தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு என் அப்பா ஜெமினி கணேஷனை வில்லன் மாதிரியும், சாவித்ரியை விடக் குறைவான புகழுடையவராகவும் காண்பித்திருப்பது தன்னை மிகுந்த வருத்தமடையச் செய்வதாக அவர் தெரிவித்திருந்தார். இது இயக்குனரின் பக்குவமற்ற தன்மையையே காட்டுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

ஜெமினி சாவித்ரியை மணந்து கொண்டதால் சுமார் 15 வருடங்கள் அப்பாவின் அருகாமையைத் தாங்கள் இழந்து விட்டதாக, அவர் தெரிவித்திருந்தார்.

‘என் கடைசித் தங்கை ஜெயலட்சுமிக்கு பல வருடங்களாக இரவில் தங்களது தந்தை வீட்டில் தூங்காதது மிகுந்த மன வருத்தத்தையும், ஏக்கத்தையும் அளிக்கக் கூடிய விஷயமாக இருந்தது, 4 குழந்தைகளைத் தந்தையின் அருகாமையிலிருந்து பிரித்தவரான சாவித்ரி கோபம் வந்தால் ஹிஸ்டீரிக்கலாக கத்துவார். அவரது கோபத்தை தாங்க முடியாமல் அப்பா தவித்திருக்கிறார். அதற்கொரு உதாரணம்... சாவித்ரி, பிராப்தம் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கையில்... அந்த முயற்சி வீண்... அந்தப் படம் ஓடாது என எச்சரிக்க என் தந்தை சாவித்ரியின் வீட்டுக்குச் சென்றார். அப்போது நானும் அவருடன் சென்றிருந்தேன். ஆனால், சாவித்ரியோ, எங்களை வீட்டுக்குள் கூட அனுமதிக்க விரும்பாமல் கூர்க்காவை ஏவி எங்களை வெளியேற்றினார். அந்த மோசமான நிகழ்ச்சிக்குப் பிறகு தான் சாவித்ரி வீட்டுக்கு அப்பா செல்வது குறைந்தது. என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்ல;

திரைப்படத்தில் ஜெமினி தான் சாவித்ரியின் பின்னால் காதல் வார்த்தைகள் கூறிக் கொண்டு சுற்றுவதாகக் காண்பித்திருக்கிறார்கள். உண்மை அப்படியல்ல. இருவருமே சினிமாத்துறையில் இருந்தார்கள்.  சாவித்ரிக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்ததும் அப்பா தான் என்று காட்டுகிறார்கள். இல்லை அதுவும் பொய்யான தகவல். அவர்கள் இருந்தது சினிமாத்துறை அங்கே இதெல்லாம் சோஷியல். என் அப்பா குடிக்கக் கற்றுத் தருவதென்றால் முதல் மனைவியான என் அம்மாவுக்குதானே முதலில் கற்றுக் கொடுத்திருப்பார். நாங்களும் கெட்டுக் குட்டிச்சுவர் ஆகியிருந்திருப்போமே, அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லையே... என் அப்பா மிகவும் கண்ணியமான மனிதர். அவர் ஒரு சோஷியல் ட்ரங்கர் தானே தவிர எப்போதும் குடித்துக் கொண்டே இருக்கும் மொடாக்குடிகாரர் அல்ல. எங்களை எல்லாம் நன்றாகப் படிக்க வைத்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்டவரைப் போய் மட்டம் தட்டும் விதமாக இந்த திரைப்படத்தில் காட்டியிருப்பது மிகுந்த மனவருத்தம் கொள்ள செய்கிறது.

டாக்டர் கமலா செல்வராஜ் ’நடிகையர் திலகம் திரைப்படம்’ குறித்து தெரிவித்த புகார் காணொளியாக..

கணவன், மனைவி இருவரைப் பற்றியும் படம் எடுக்கும் போது மனைவி தரப்பை மட்டுமே ஆதாரமாக வைத்துக் கொண்டு அவர்கள் சொல்வதை நம்பி மட்டுமே திரைப்படம் எடுத்தது தவறு. நாங்கள் எல்லாம் இங்கே இருக்கும் போது எங்களையும் கேட்டிருக்க வேண்டும். அப்போது தான் அப்பா தரப்பு நியாயங்களையும் திரைப்படத்தில் சேர்த்திருக்க முடியும். என்று நடிகையர் திலகம் திரைப்படம் குறித்த தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் டாக்டர் கமலா செல்வராஜ்.

மறைந்த நடிகர் ஜெமினிக்கு முதல் மனைவி அலமேலு. தனது மாமன்மகளான அலமேலுவை வெகு இளமையிலேயே மணந்து கொண்டார் ஜெமினி. இரண்டாவதாக ஜெமினி நிறுவனத்தில் பணியிலிருக்கும் போது உடன் நடித்த நடிகை புஷ்பவள்ளியுடனும் அவருக்கு உறவு இருந்தது. சட்டப்பூர்வமாக திருமண பந்தத்தில் இணையவில்லை என்பதால் புஷ்பவள்ளியுடனான அவரது உறவு பல ஆண்டுகளாக வெறும் வதந்தியாகவே நிலைபெற்றிருந்தது. ஜெமினி அதை அங்கீகரித்ததுமில்லை, மறுத்ததுமில்லை. மூன்றாவதாக நடிகை சாவித்ரியை ஜெமினி மணந்து கொண்டார். இந்த திருமணமும் சட்டப்பூர்வமானதில்லை. ஆனால், சாவித்ரி லக்ஸ் சோப் விளம்பரத்தில் சாவித்ரி கணேஷ் என்று கையெழுத்திட்ட பின் இவர்களது திருமண உறவு வெளிச்சத்திற்கு வந்தது.

ஜெமினிக்கு ஊர் அறிய அவரது குழந்தைகளும் அங்கீகரிக்க மூன்று மனைவிகள் என்பது வாஸ்தவம்.

இதில் சாவித்ரியின் வாரிசுகளுக்கும், அலமேலுவின் வாரிசுகளுக்கும் ஜெமினியுடன் அப்பா என்ற பாசத்துடன் அருகாமையில் வாழ உரிமை இருந்தது. ஆனால், இரண்டாவது மனைவி புஷ்பவள்ளியின் மகள்களான இந்தி நடிகை ரேகா மற்றும் அவரது தங்கை ராதா இருவருக்குமே அப்பாவின் அருகாமையில் வளரும் சூழல் அமையவில்லை.

இதை நடிகை சிமி கிரேவலுக்கு அளித்த தனது பேட்டியொன்றில் நடிகை ரேகாவே பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

‘நான் குழந்தையாக இருந்த போது சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் படித்தேன். அப்போது சென்னையிலேயே இருக்கும் அப்பாவை நான் ஒருமுறை கூட சந்தித்ததேயில்லை. அது ஏன் என்று கூட நான் யோசித்ததில்லை. என் அம்மாவும், பாட்டியும் தான் என்னையும், என் தங்கையையும் வளர்த்தார்கள். அப்பாவுடனான உறவு எங்களுக்கு இருந்ததில்லை. அப்போது கடவுள் மட்டுமே எனக்கு அப்பாவாக இருந்தார். ஆனாலும் நான் நடிகையாகி பிறகு பல ஆண்டுகள் கழித்து என் தந்தையைச் சந்தித்த போது அவர் எனக்கு ஹீரோவாகத் தெரிந்தார். எங்களுடன் அவர் சேர்ந்து வாழ்ந்ததில்லை என்ற போதும் என் அம்மா அவரைப் பற்றி எந்தக் குறையும் சொன்னதே இல்லை. அவரைப் பற்றிச் சொல்ல அவருக்கு இனிமையான நினைவுகளே அதிகமிருந்தன. என் அப்பா, அம்மா உறவு உலகின் மோஸ்ட் ரொமான்டிக் உறவுகளில் ஒன்றாக இருந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன் என்று கூறிச் சிரித்தார் ரேகா.

மேலும்,  ‘இப்போதும் கூட என் அப்பாவுடன் நான் உரையாடியதே இல்லை. ஆனாலும் என் ஹீரோ என் அப்பா தான். அவருடைய பார்வையில் தெரிந்தது எங்கள் மீதான நேசம். பாசத்தையும், நேசத்தையும் புரிந்து கொள்ள உரையாடல் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.’ என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அங்கீகாரமற்ற உறவுநிலை என்ற போதும் ரேகாவுக்கு ஜெமினி மீது பெரிதாக எந்த வருத்தங்களும், மனக்குறைகளும் இருந்ததாகத் தெரியவில்லை.

அதே விதமாக தங்களது தந்தை தாங்கள் இருவரும் பிறந்த பிறகு சாவித்ரியை மணந்து கொண்டதைப் பற்றிக்கூட ஜெமினியின் முதல் இரண்டு மகள்களும் ஏன் அவர்களது தாயார் அலமேலுவும் கூட எவ்வித மனக்குமுறல்களையும் பொதுவெளியில்  வெளிப்படுத்தியதில்லை. ஏதோ ஒரு சந்தர்பத்தில் மட்டும் டாக்டர் கமலா செல்வராஜ், ‘ஒருவேளை தன் கணவரது நடவடிக்கை பிடிக்காமல் எங்கள் அம்மா கோபித்துக் கொண்டு அவரை விட்டு விலகி இருந்தாரானால் எங்களது நிலமை எல்லாம் என்ன ஆகியிருக்கக் கூடும்?! நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது’ என்று தனது அம்மாவின் மீதான பாச உணர்வைப் பெருமிதமாகப் பதிவு செய்திருந்தார். 

ஆனால், இப்போது திரைப்பட ஆவணமாக எடுக்கப்பட்டுள்ள நடிகை சாவித்ரியின் வாழ்க்கைச் சித்திரத்துக்கு பெரும்பாலான தகவல்களை அளித்து உறுதுணையாக இருந்தவரான சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி நினைத்திருந்தால் தன் அப்பா ஜெமினி குறித்து மட்டம் தட்டும் விதமாக காட்டப்பட்டுள்ள சில காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் அவர் ஏன் அதைச் செய்யவில்லை எனத் தெரியவில்லை எனக் கொதிக்கிறார்கள் காதல் மன்னன் தரப்பினர். இது நியாயமான வாதமே!

ஜெமினி கணேஷன் எந்தப் பெண்ணையும் ஏமாற்றவில்லை. அவர்கள் தங்களது சுயவிருப்புடனே ஜெமினியுடன் இணைந்தார்கள். பிறகு அவர்களே தான் பிரிந்தும் சென்றார்கள். சாவித்ரியால் ஜெமினி பலமுறை அவமதிக்கப்பட்டிருக்கிறார். அப்படியிருக்கையில் ஜெமினிக்கு சாவித்ரி மீது மட்டுமே ஆழமான அன்பும், காதலும் இருந்ததாக படத்தில் காட்டியிருப்பதும் தவறு. அது அவரது முதல் மனைவி அலமேலுவையும், புஷ்ப வள்ளியையும் அவமதிக்கும் செயல்.

ஆனால், இந்த நியாயத்தைப் புறக்கணிக்கும் விஜய சாமுண்டீஸ்வரி, தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலொன்றில், தன் அப்பா ஜெமினி கணேசன், மூத்த மனைவி அலமேலுவை மணந்தது காதலினால் அல்ல; மெடிக்கல் காலேஜில் சீட் வாங்கித் தருகிறேன் என அலமேலுவின் தந்தை வாக்களித்ததால் தான், ஆனால் கொடுத்த வாக்கை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. மகளுக்குத் திருமணமான மூன்று மாதங்களுக்குள் அவர் இறந்து விட்டார். என்று குறிப்பிட்டிருந்தார். இது அவரது உறவினர்களால் அவருக்குச் சொல்லப்பட்ட தகவலாக இருக்கலாம்.

இந்த நிராகரிப்பு தான் டாக்டர் கமலா செல்வராஜை கொதிக்க வைத்திருக்கிறது.

சாவித்ரியின் கடைசிக் காலங்களில் அவர் சாவித்ரியை கண்டுகொள்ளவில்லை. என்பதே தவறான வாதம் என்கிறார் கமலா செல்வராஜ்.

சாவித்ரி இறந்த போதே அவரது மகளான விஜய சாமுண்டீஸ்வரிக்குத் திருமணம் ஆகியிருந்தது. அம்மாவின் மரணத்தின் பின் தனியான மகன் சதீஷை வளர்த்து, படிக்க வைத்துக் கவனித்துக் கொண்டது ஜெமினி கணேஷன் தான். அதே போல சாவித்ரி இறந்த போது அவரது உடலை மருத்துவமனையிலிருந்து பெற்று முறைப்படி தனது நுங்கம்பாக்கம் வீட்டுக்கு எடுத்து வந்து இறுதிச் சடங்குகள் செய்து தகனம் செய்ததும் ஜெமினி தான் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

எது எப்படியோ?!

ஜெமினி குறித்து அவரது மகள்களுக்கு வேண்டுமானால் வேறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் அவரது மனைவிகள் அவரை உணர்ந்தே காதலித்திருக்கிறார்கள். அதனால் தான் காதல்மன்னன் என்ற பட்டப்பெயர் இன்றளவும் கூட அவருக்கு நிலைத்திருக்கிறது.

படத்தில் கூட அதை நினைவூட்டும் ரீதியாக ஒரு காட்சி...

இந்தக் காட்சியை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தனக்கு மிகப்பிடித்த காட்சியாக சமீபத்தில் சிலாகித்திருந்தார்...

சாவித்ரி இயக்கிய ‘குழந்தை உள்ளம்’ திரைப்படம் வெளியான அன்று அந்த விழாவில் ஜெமினி கலந்து கொண்டிருந்திருக்க மாட்டார்.

அவரைப் பற்றி விசாரிப்பவர்களிடம் இருந்து தப்பி ஜெமினியைச் சந்திக்க கெஸ்ட் ஹவுஸுக்கு வரும் சாவித்ரி, அங்கே ஜெமினியுடன் இருக்கும் இளம்பெண்ணைக் கண்டு மிகுந்த ஆத்திரமுற்று ஜெமினியை விட்டுவிட்டு அந்தப்பெண்ணைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கி விடுவார். இதைக் குறுக்கே புகுந்து ஜெமினி தடுக்க வரும் போது, சாவித்ரி தன்னைத் தானே தாக்கிக் கொண்டு அங்கிருந்து வெளியேறுவது போல காட்சி. இந்தக் காட்சியில் வெளியேறும் சாவித்ரியைத் தொடர்ந்து ஜெமினியும் அவர் பின்னே விரைவார். ஆனால், கோபித்துக் கொண்டு செல்லும் மனைவியைப் பின் தொடரும் முன் ஜெமினி, சாவித்ரியால் தாக்கப்பட்ட தன்னுடன் இருந்த இளம்பெண்ணின் தலையை ஆறுதலாகத் தடவி அவரைச் சமாதானப் படுத்தி விட்டு பிறகே சாவித்ரியைப் பின் தொடர்ந்து விரைவார்.

இந்த ஆதூரம் தான் ஜெமினியை நோக்கி அன்று பல இளம்பெண்களைத் திரும்பச் செய்ததோ?!

படத்தில் சாவித்ரியின் பொசஸிவ்னெஸ் குறித்து எந்த விளக்கமும் இல்லை. ஜெமினி, சாவித்ரி உறவைக் காட்ட முயற்சிக்கும் போது ஜெமினி மீது சாவித்ரிக்கு இருந்த தனக்கு மட்டுமே சொந்தம் எனும் உடமையுணர்வு குறித்து ஒரு சில காட்சிகளாவது வைக்கப் பட்டிருக்கலாம். பயோபிக் என்று சொல்லி விட்டு சாவித்ரியை மட்டுமே நல்லவிதமாகக் காட்ட முயற்சித்திருப்பது தவறில்லை. ஆனால், ஜெமினியை ஏன் தவறாகச் சித்தரிக்க முயலவேண்டும்?! அதைத் தான் தவறு என்கிறார் டாக்டர் கமலா செல்வராஜ்.

முதல் மனைவி இருக்கையில், இரண்டாவதாகத் திருமணம் செய்வது சட்டப்பூர்வமாகத் தவறு. ஜெமினி, சாவித்ரி திருமணம் சம்பிரதாயத் திருமணம் தானேயொழிய சட்டப்பூர்வமான திருமணம் அல்ல.

ஆனால் ஜெமினி முதல் மனைவி அலமேலுவின் சம்மதத்துடன் சாவித்ரியைத் திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமண உறவு செல்லாது. ஆயினும் சாவித்ரியின் குழந்தைகள் மட்டுமல்ல திருமண உறவே இல்லாமல் நடிகை புஷ்ப வள்ளியுடன் தனக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் அப்பா தான் தான் எனவும் ஜெமினி ஒப்புக் கொண்டார். சாவித்ரி தெலுங்கு, தமிழ் என இருமொழிப்படங்களிலும் சாதித்த வெற்றியை ஜெமினி தமிழில் மட்டுமாக சாதித்தார். அவரது திரையுலகப் பங்களிப்பையும் சாதாரணமாகப் புறம் தள்ளிவிட முடியாது. இறக்கும் வரை தனது வாழ்நாள் முழுமைக்கும் உடல்நிலை ஒத்துழைத்த வரை ஜெமினி நடித்துக் கொண்டே தான் இருந்தார். கே.பாலசந்தர் காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி தலைமுறை நடிகர்களெனக் கருதப்பட்ட முத்துராமன், ஏவிஎம் ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் உள்ளிட்டோருக்கெல்லாம் திரைவாய்ப்புகள் காலாவதியாகிக் கொண்டிருக்கையில் வெள்ளி விழா, இரு கோடுகள், நூற்றுக்கு நூறு, என ஜெமினியின் திரை வாழ்க்கை பேலன்ஸ்டாகவே சென்று கொண்டிருந்தது. அப்படியிருக்க சாவித்ரிக்கு கிடைத்த புகழைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஜெமினி புழுங்குவதாகக் காட்டியிருப்பது தவறான சித்தரிப்பு.

மூன்று மனைவிகள், அவர்களுக்குப் பிறந்த 7 மகள்கள் ஒரு மகன் என ஜெமினியின் தனிப்பட்ட வாழ்க்கை புதிரான ஒன்றாக இருக்க முடியுமே தவிர விமர்சனத்துகுரியதல்ல! ஒரு தகப்பனாக அவர் தனது குழந்தைகளால் இன்றளவும் மதிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார். அப்பாவை வில்லன் என்று எந்த மகளும் சொல்லவில்லை. ஆனால், இந்தத் திரைப்படக் காட்சிகளின் காரணமாக முதல்முறையாக சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரியின் புரிதலை தவறெனச் சுட்டிக்காட்டியிருக்கிறார் மூத்த மனைவி அலமேலுவின் மனைவி டாகடர் கமலா செல்வராஜ்.

எது எப்படியாயினும் ஜெமினியை காதல் மன்னன் எனும் போஸ்டிலிருந்து எவராலும் கீழிறக்கி விட முடியாது எனும்படியாகத்தான் திரைப்படத்தில் ஜெமினியாக நடித்த துல்கர் சல்மானின் நடிப்பு இருந்தது. துல்கர் வாயிலாக ஜெமினியை அறிந்து கொள்ளும் இனி வரும் தலைமுறையினர் கூட நிச்சயம் ஜெமினியை சாவித்ரியின் வாழ்க்கைக்கு வில்லனாகக் கருத வாய்ப்பில்லை.

சாவித்ரியின் வாழ்க்கைக்கு வில்லனானது அவரது பிடிவாத குணமே! இதை நான் சொல்லவில்லை. நடிகையர் திலகம் திரைப்பட முடிவு சொல்கிறது.

கடைசியில் சமந்தா... சாவித்ரியின் சினேகிதி சுசீலாவிடம் கோபத்துடன் கேட்கிறார்;

ஏன் நீங்களெல்லாம் எங்கே போய் விட்டீர்கள்? கஷ்ட காலத்தில் அவருக்குத் துணையாக இருந்திருக்கக் கூடாதா? என்று;

அதற்கு சுசிலா அளிக்கும் பதில்;

சாவித்ரிக்குத் தனது கஷ்டங்களை, துயரங்களை பிறரோடு பகிர்ந்து கொள்ளும் வழக்கமில்லை என.

மிகுந்த வைராக்யம் கொண்ட பெண்மணியாகக் கருதப்படும் சாவித்ரி, தன்னால் முடியும் என்கிற அதீத தன்னம்பிக்கை, மற்றும் மனிதர்களை இனம்பிரித்துப் பார்க்கத் தெரியாத வெகுளித்தனம் எல்லாவற்றுக்கும் மேலாகப் பிடிவாதம் எனும் மூன்று விஷயங்களால் தான் வாழ்வின் இறுதிக் காலங்களில் தோல்வியுற்றார்.

அதற்கு ஜெமினியைக் காரணகர்த்தா ஆக்க முயல்வது தவறான புரிதல். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com