செக்கச் சிவந்த வானம்: பிடித்தவையும் பிடிக்காதவையும்!

ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் அளிக்கும் பரவசம் படத்தைக் குதூகல உணர்வுடன் பார்க்க வைக்கிறது...
செக்கச் சிவந்த வானம்: பிடித்தவையும் பிடிக்காதவையும்!

தொழிலதிபரோ அரசியல்வாதியோ அடிமட்டத்தில் இருந்து உழைத்து முன்னேறி ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவதும், அந்தத் தலைவரின் மறைவுக்குப் பிறகு சாம்ராஜ்ஜியத்தின் சிம்மாசனத்துக்காக வாரிசுகள் சண்டையிடுவதும் நாம் கேட்காத கதையல்ல. இதுதான் செக்கச் சிவந்த வானமும். இதை ஒரு கேங்க்ஸ்டர் கதையாக உருவாக்கியிருக்கிறார் மணி ரத்னம். 

சென்னையின் மிகப் பெரிய தாதா, சேனாதிபதி (பிரகாஷ்ராஜ்). அமைச்சர்களுக்கு பினாமி, மத்திய அரசு வரை செல்வாக்கு எனத் தனது தொழிலில் கொடிகட்டிப் பறப்பவர். அவருக்கு 3 மகன்கள், 1 மகள். மூத்த மகன் வரதன் (அரவிந்த் சுவாமி), நடு மகன் தியாகு (அருண் விஜய்), இளைய மகன் எதிராஜ் (சிம்பு). வரதனின் நண்பன், ரசூல் இப்ராஹிம் (விஜய் சேதுபதி). காவல் ஆய்வாளர்.  

சேனாபதி கட்டி ஆளும் சாம்ராஜ்ஜியத்தை அவருக்கு அடுத்தபடியாக யார் ஆள்வது என வரதன், தியாகு மற்றும் எதிராஜ் ஆகியோருக்கிடையே யுத்தம் நடக்கிறது. இந்த யுத்தத்தில் ரசூல் எந்தவிதத்தில் அவர்களுக்கு உதவுகிறார் என்பதுதான் செக்கச் சிவந்த வானத்தின் கதை.  படத்தின் பெயருக்கு ஏற்றவாறு பின்பாதி முழுக்கச் செக்கச் சிவந்து ரத்தக்களரியாகக் காட்சியளிக்கிறது. 

பிடித்தவை

முதல் பாதியில் கதாபாத்திரங்களின் அறிமுகங்கள் கதையின் வழியே மெல்ல நுழைகின்றன. அறிமுகக் காட்சிகளை நேர்த்தியான கேமரா ஷாட்களால் சந்தோஷ் சிவன் அற்புதமாகக் காண்பித்துள்ளார். 

வழக்கமான தாதா கதை என்றாலும், அதிலும் உணர்வுபூர்வமான காட்சிகளை விதைத்துள்ளார் மணி ரத்னம். விமான நிலையத்தில் தியாகு மற்றும் எதியை வரதன் வரவேற்கும் காட்சிகளில் நட்சத்திர பட்டாளங்கள் ஒன்றாக இருப்பதால் அந்தக் காட்சி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகமாகக் கிளறுகிறது. 

அரவிந்த் சுவாமி, அருண் விஜய், சிம்பு மற்றும் விஜய் சேதுபதி. அனைவருமே குறையில்லாத நடிப்பு. விஜய் சேதுபதி தனது வழக்கமான பாணியில் ஜோதிகா, சிம்புவுடன் இயல்பாகப் பேசுவது ரசிகர்களைக் கவர்கிறது. 

அருண் விஜய் மீண்டும் தனது நடிப்புத் திறமையை நிரூபித்துள்ளார். அவருடைய உடைகளும், உடல்மொழியும் ஈர்க்கின்றன. 

எதிராஜாகத் தூள் கிளப்பியிருக்கிறார் சிம்பு. திரையரங்கில் விசில் பறக்கிறது. சிம்புவுக்கும் அவரது ரசிகர்களுக்கு செக்கச் சிவந்த வானம் மறக்கமுடியாத படம். 

இத்தனை பெரிய நட்சத்திரங்கள் இருந்தும் யாருக்கும் கூடுதல் முக்கியத்துவம் இல்லை, யாரையும் உயர்த்திப் பிடிக்கவும் இல்லை. இது திரைக்கதையின் பலம்.

பிரகாஷ் ராஜ், ஜெயசுதாவுக்குப் பெரிய அளவில் காட்சிகள் இல்லாவிட்டாலும் முக்கியமான காட்சிகளில் தங்களுடைய அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். 

ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, டயானா எரப்பா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இவர்கள் குறைந்த காட்சிகளிலேயே தோன்றினாலும், அந்த மூன்று கதாபாத்திரங்களுக்கிடையிலான வேறுபாடுகள் அழகாகக் காண்பிக்கப்பட்டுள்ளன. 

ஒரு தாதா, தனது குழந்தைகளை எப்படி வளர்ப்பார், அவருடைய மகன்கள் எவ்வித மனநிலையுடன் வளர்வார்கள் என்பன போன்றவை வசனங்கள் மூலமாக நன்றாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குடும்பத்தில் பெண்களுக்கான முக்கியத்துவமும் நன்றாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஹிட்டான பாடல்களைப் பின்னணி இசையாகப் பயன்படுத்தியுள்ளார் மணி ரத்னம். ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் அளிக்கும் பரவசம் படத்தைக் குதூகல உணர்வுடன் பார்க்க வைக்கிறது. 

பிடிக்காதவை

முதல் பாதி விறுவிறுவென சென்றது. ஆனால் இரண்டாம் பாதி அந்தளவுக்கு வேகமில்லை. 

டிரெய்லர்களில் என்ன காண்பிக்கப்பட்டதோ அதுவே படமாக விரிகிறது. ஆச்சர்யங்கள் எதுவுமில்லை. 

எத்தனை எத்தனை நடிகர்கள், நடிகைகள். ஆனால், இந்தக் கதைக்கு இத்தனை பேர் தேவையா? அதிதி, டயானாவின் கதாபாத்திரங்கள் இல்லாமலேயே படம் அதே பாதையில், அதே வேகத்தில் பயணித்திருக்குமே!

*

விஜய் சேதுபதியின் இயல்பான நக்கல், அருண் விஜய்யின் ஸ்டைல் மற்றும் அரவிந்த் சாமி, சிம்புவின் அசத்தலான நடிப்பு என இந்தக் கூட்டணி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது. 

நட்சத்திரப்பட்டாளங்களைச் சரியான விகிதத்தில் கையாண்டு பொழுதுபோக்குப் படத்தை அளித்துள்ளார் மணி ரத்னம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com