பச்சை நிற புடவை, வைரக் கம்மல்

அரசியல் வாழ்வில் ஒரு கட்டத்தில் நகைகள் அணிவதை முதல்வர் ஜெயலலிதா முற்றிலும் துறந்தார்.
பச்சை நிற புடவை, வைரக் கம்மல்

அரசியல் வாழ்வில் ஒரு கட்டத்தில் நகைகள் அணிவதை முதல்வர் ஜெயலலிதா முற்றிலும் துறந்தார். ராஜாஜி அரங்கில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதா அணிந்திருந்தவை: ஒரு டாலர் செயின், விரலில் மோதிரம், கையில் கருப்பு நிற கைக்கடிகாரம், வளையல், வைரக் கம்மல், பச்சை நிற புடவை.

ஜெயலலிதாவுக்கு அவரின் அண்ணன் மகள் தீபா அஞ்சலி செலுத்துவிட்டு இறங்கி வந்தார். அப்போது, பொதுமக்கள் மத்தியில், "அப்படியே ஜெயலலிதா போல இருக்காங்க.." என்ற குரல் எழுந்தது.

ராஜாஜி அரங்கத்துக்கு உள்ளேயும், வெளியேயும் முக்கியப் பிரமுகர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகள் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பட்டன. ஆனால், அதற்கு பெரிய அளவில் ஆர்வம் இல்லை. ஜெயலலிதாவின் முகத்தை இறுதியாக நேரில் பார்க்க வேண்டும் என்றே அனைவரும் விரும்பினர்.

ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கத்தின் அருகிலேயே ராணுவத்துக்கு உரிய ஐ.என்.எஸ். கடற்படைத் தளத்தின் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைந்திருந்ததால், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் ஹெலிகாப்டரில் வந்தனர். ராஜாஜி அரங்கப் பகுதியில் ஹெலிகாப்டர்கள் பறந்தபோது, அதோ, "மோடி வர்றார், ராகுல் வர்றார்' என்று பொதுமக்கள் குரல் கொடுத்தனர்.

ராஜாஜி அரங்குக்கு உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அஞ்சலி செலுத்த வந்தபோது, ஜெயலலிதாவின் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு விட்டது. இருப்பினும் அசராத அகிலேஷ் யாதவ், இறுதி ஊர்வலத்தில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா போன்றோர் சென்ற ராணுவ வாகனத்தில் ஏறி சென்று, நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா, எல்.கே.சுதீஷ் ஆகியோர் வந்தனர். அப்போது கனிமொழி அஞ்சலி செலுத்திவிட்டு இறங்கி வந்தார். விஜயகாந்த் அவசரமாக கனிமொழியைத் தடுத்து நிறுத்தி ஓரிரு நிமிஷங்கள் பேசினார். அப்போது கனிமொழியிடம் அப்பா (கருணாநிதி) நலமா எனக் கேட்டார்.

ரஜினிகாந்த் அவர் மனைவி லதா, நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருடன் வந்தார். சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினி, அடுத்து ஓ.பன்னீர்செல்வத்தைத் தேடி ஆறுதல் கூறினார். அதே சமயம் அவருடைய வழக்கமான பாணியில் பொதுமக்கள் பக்கம் திரும்பி இருமுறை வணக்கம் கூறினார். மக்களின் சத்தம் அதிகரித்தது.

ஜெயலலிதாவின் உடல் அருகில் சசிகலா தொடர்ந்து நின்றவாறே இருந்தார். அவரைப்போல மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் அமரவே இல்லை. அவரை பல முறை உட்காருமாறு கூறியும் அவர் அமரவில்லை.

கேரள அரசியல் தலைவர்களின் ஒற்றுமையை ராஜாஜி அரங்கிலும் பார்க்க முடிந்தது. கேரள ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் ஒரே விமானத்தில் வந்தார்கள் என்பது தகவல். பினராயி விஜயன், உம்மன் சாண்டி ஆகியோர் ஒரே நேரத்தில் அஞ்சலி செலுத்தினர்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகிய மூன்று பேரும் அடுத்தடுத்து வந்தனர். அப்போது அவர்களுடன் இருந்தவர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் உடல் இருந்த பகுதிக்குச் சென்றுவிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அஞ்சலி செலுத்த வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது, போலீஸார் சில இடங்களில் தடியடி பிரயோகம் செய்தனர் என்றாலும், சில கட்டங்களில் போலீஸாரே கரைந்துபோன சம்பவங்களும் நிகழ்ந்தன. அடித்து விரட்டிய போது, சில பெண்கள், இனிமே, எங்கம்மாவை எப்போது பார்க்கப் போகிறோம் என்று கூறியபோது போலீஸாரால் ஒன்றும் செய்ய முடியாமல் விட்டுவிட்டனர்.

போலீஸ் கெடுபிடியில் இருந்து தப்பிக்க சிலர் கேமராக்களை வைத்துக் கொண்டு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் போல நடித்து, ஜெயலலிதாவின் முகத்தைப் பார்ப்பதற்காக நின்றனர். போலீஸாருக்கு அது தெரிந்தாலும் அவர்கள் மீது ஏற்பட்ட கரிசனத்தால் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஜெயலலிதா எங்கு சென்றாலும் பெண்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஜெயலலிதாவை வரவேற்கும் அதிமுகவின் பெண்கள் அமைச்சர்களைவிடவும் முக்கியமானவர்களாகப் பார்க்கப்படுவர். அந்தப் பெண்கள் அனைவரும் ஜெயலலிதாவின் உடலை பொதுமக்கள் வரிசையில் நின்றே கண்ணீருடன் பார்த்தனர். ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்திலும் அவர்களின் கண்களில் கண்ணீர்...கண்ணீர்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com