ஜெயலலிதா கொடுத்த காபியும் தங்கப்பேனாவும்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து மறைந்த செல்வி. ஜெ. ஜெயலலிதா பன்முகத்திறமை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த பன்முகத்திறமையில் சிறந்த பாடகியாகவும் இருந்துள்ளார்.
ஜெயலலிதா கொடுத்த காபியும் தங்கப்பேனாவும்


தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து மறைந்த செல்வி. ஜெ. ஜெயலலிதா பன்முகத்திறமை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த பன்முகத்திறமையில் சிறந்த பாடகியாகவும் இருந்துள்ளார்.

1968ஆம் ஆண்டு வெளிவந்த “கண்ணன் என் காதலன்” படத்தின் படப்பிடிப்பு விஜயா - வாகினி ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு நடனம் அமைத்தவர்களில் சின்னி சம்பத்தும் ஒருவர். இவர் தவிர இப்படத்திற்கு மேலும் நால்வர் நடனம் அமைத்துள்ளனர். சின்னி சம்பத்திற்கு இசை ஞானமும் உண்டு, ஓரளவு இசையைப் பற்றியும் தெரியும். செல்வி ஜெயலலிதாவும் இசையைப்பற்றி நன்கு அறிவர். படப்பிடிப்பு இடைவேளையில் சின்னி சம்பத்தும் ஜெயலலிதாவும் இசையைப்பற்றி மிகவும் ஆழமாக பேசிக்கொண்டிருக்கின்றனர். இசையில் ஒரு பகுதியான பஜன்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

இருவரின் பேச்சுகளை, தொலைவிலிருந்து எம்.ஜி.ஆர். கவனித்துக்கொண்டிருந்தார். பேசி முடித்ததை கவனித்த எம்.ஜி.ஆர்., இருவரிடமும் சென்று, உங்கள் இருவருக்கும் சங்கீதம் தெரியுமா என்று கேட்க இருவரும் ஆம் என்று சொன்னார்கள்.

உடனே எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவைப் பார்த்து, நான் தயாரிக்கும் ஒரு படத்திற்கு நீ ஒரு பாடல் பாட வேண்டும், நாளை உன்னை அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்த ஷாட்டிற்கு சென்றுவிட்டார். எம்.ஜி.ஆர் விளையாட்டாகத்தான் சொல்கிறார் என்று நினைத்துவிட்டார். ஆனால், சொன்னபடியே எம்.ஜி.ஆர் மறுநாள் ஜெயலலிதாவை வீட்டிற்கு சென்று அழைத்துக்கொண்டு ஏ.வி.எம் ஸ்டுடியோ சென்றார். அங்கு எம்.ஜி.ஆருக்காக இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் காத்துக்கொண்டிருந்தார். ஒலிப்பதிவு கூடத்திற்கு சென்றவுடன், எம்.ஜி.ஆர், கே.வி. மகாதேவனைப்பார்த்து, நான் சொன்ன அந்தப்பாடலை இவரைக்கொண்டு (ஜெயலலிதாவைக்கொண்டு) பாட வைத்து ஒலிப்பதிவு செய்யுங்கள் என்றார்.

ஓரிரு ஒத்திகைக்குப் பின் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அந்தப்பாடல்தான் அடிமைப்பெண் படத்தில் வரும் "அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு, ஆசான் என்றால் கல்வி அவரே உனது தெய்வம்" இந்தப்பாடல்தான் ஜெயலலிதா திரைப்படத்திற்காக முதன்முதலாக பாடிய பாடல். வாலி எழுதிய பாடல்.

அதன் பிறகு 1973ஆம் ஆண்டு, “முக்தா” சீனிவாசன் இயக்கத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் வெளிவந்த “சூரியகாந்தி” படத்தில் இரு பாடல்களை பாடியிருப்பார்.  அந்தக்காலத்தில் இருபாடல்களுமே சூப்பர்ஹிட் பாடல்கள்.

முதலாவது பாடல் “ஓ மேரி தில்ரூபா என்று ஆரம்பிக்கும். டி.எம்.சௌந்திரராஜனோடு இணைந்து பாடியிருப்பார். இரண்டாவது பாடல் “நானென்றால் அது நானும் அவளும் என்று ஆரம்பிக்கும். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு சேர்ந்து பாடியிருப்பார். “வந்தாளே மகராசி” “அன்பைத்தேடி” “வைரம்” “திருமாங்கல்யம்” போன்ற தமிழ்த் திரைப்படங்களில் ஜெயலலிதா பாடியுள்ளார்.  “திருமாங்கல்யம்” ஜெயலலிதாவின் 100வது படம்.

இது தவிர வெளிவராத ஒரு தமிழ்த்திரைப்படத்திலும், குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் தனிப்பாடல்களும் பாடியுள்ளார்.

ஜெயலலிதா தமிழ்த் திரை உலகில் ஒரு சில பாடல்களே பாடியிருந்தாலும் அனைத்துப்பாடல்களும் தனி முத்திரை பதித்தவை. அவருடைய பன்முகத் தன்மையில் சிறந்த பாடகியாகவும் இருந்துள்ளார்.

இது தவிர அவரது நடிப்பைப்பற்றிய ஒரு சிறிய நினைவை பதிவு செய்ய வேண்டும். 1972ஆம் ஆண்டு இயக்குநர் பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த படம் “பட்டிக்காடா பட்டணமா” வசூலில் சக்கை போடு போட்ட படம். லண்டனில் இருந்து திரும்பி வந்த நாகரீக மங்கையாக ஜெயலலிதா நடித்திருப்பார். அவருக்கும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த மூக்கையாவுக்கும் (சிவாஜி) திருமணம் நடந்து குழந்தையும் பிறக்கும். குழந்தை பிறந்த உடனேயே, குழந்தையை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடுவார் ஜெயலலிதாவின் தாயார் சுகுமாரி. சிலமணி நேரம் கழித்து தாய்ப்பால் கொடுப்பதற்காக குழந்தையை தேடுவார் ஜெயலலிதா, குழந்தையைத் தேடுவார், பின்பு தன் தாயாரிடம் கேட்பார். அவர் நடந்த விஷயத்தைச் சொல்வார். ஜெயலலிதா தாய்ப்பால் கொடுக்க முடியுமால் வலியால் துடிப்பார்.

இந்தக் காட்சியை இயக்குநர் பி. மாதவன் படமாக்கிக்கொண்டிருந்தார். ஆனால் எதிர்பார்த்த நடிப்பு வரவில்லை. உடனே இப்படத்திற்கு கதை-வசனம் எழுதிய பாலமுருகன் அந்தக் காட்சிக்குரிய நடிப்பை சொல்லிக்கொடுத்தார். மூன்றாவது டேக்கில்தான் இயக்குநரும் கதை வசனகர்த்தாவும் எதிர்பார்த்த நடிப்பு வந்தது. அதைத்தான் இப்போது நாம் படத்தில் பார்க்கின்றோம். “பட்டிகாடா பட்டணமா” படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிக்கைக்கான பிலிம்பேர் விருது ஜெயலலிதாவிற்கு கிடைத்தது. விருது கிடைத்த செய்தியை அறிந்தவுடன் இப்படத்திற்கு கதை-வசனம் எழுதிய பாலமுருகனை அழைத்து, உங்களால்தான் இந்த விருது, எனவே உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் தருகிறேன் என்று கேட்டார். அதற்கு பாலமுருகன் பெருந்தன்மையாக எதுவும் வேண்டாம், காபி கொடுங்கள் அது போதும் என்று சொன்னார். ஆனால், ஜெயலலிதா விடவில்லை காபியும் கொடுத்து தொடர்ந்து கதை-வசனம் எழுத தங்கப்பேனா ஒன்றையும் பரிசளித்தார். அவருடைய பன்முகத் திறமையில் சிறந்த நடிகையாகவும் இருந்துள்ளார்.

- ஆர். சுந்தர்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com