தினமணி ‘வேஸ்ட்லெஸ் வெட்டிங் பிளான்’ போட்டி முடிவுகள் & பரிசு பெற்றோர் பட்டியல்!

தினமணி ‘வேஸ்ட்லெஸ் வெட்டிங் பிளான்’ போட்டி முடிவுகள் & வெற்றி பெற்றோர் பட்டியல் வெளியீடு!
தினமணி ‘வேஸ்ட்லெஸ் வெட்டிங் பிளான்’ போட்டி முடிவுகள் & பரிசு பெற்றோர் பட்டியல்!

முதல் பரிசு 

விஜயலஷ்மி, மதுரை.

1.எனது ஆதரவு, டெஸ்டினேஷன் திருமணங்களுக்கே...

2. ஆதரவுக்கான காரணம்... 

ஒரே மாதிரியான பாதைகள் பயணிக்க சுலபமாக இருந்தாலும் அலுத்து விடுகின்றன. டெஸ்டினேஷன் திருமணங்கள் புதிய அனுபவத்தையும், எதிர்பார்ப்பையும், வித்தியாசமான சூழ்நிலையையும் தந்து  நம் மனதில் தனி இடத்தைப் பிடித்து  காலங்கள் கடந்தும் நினைத்து மகிழ வைக்கின்றன.

3. திருமணங்களில் பின்பற்றப்பட வேண்டிய, தவிர்க்கப் படவேண்டிய நிறை/ குறைகள்

குறைகள்

  • பட்டாசு, வாண வெடிகள் என்று காசை கரியாக்குவதைத் தவிர்க்கலாம்.
  • பிளக்ஸ் போர்டுகளில் வாழ்த்து சொல்வது  தேவையில்லை.
  • சாப்பாட்டில் நிறைய அயிட்டங்கள் தேவையில்லை.  ரசித்து, சுவைத்து சாப்பிட முடியாது. நிறைய வேஸ்ட்டாகும். சுவையான கொஞ்சம் அயிட்டங்கள் இருந்தால் தான் ரசித்துச் சாப்பிட முடியும்.
  • தராதரம் பார்த்து உபசரிப்பதைத் தவிர்க்கலாம். நாம் அழைத்துதான் எல்லோரும் வந்திருக்கிறார்கள். ஆகவே, சிலருக்கு மட்டும் தனி கவனிப்பு, உபசரிப்பு தராமல் எல்லோரையும்  அன்பாக  வரவேற்கலாம்.
  • பாட்டு,  நடனக் கச்சேரிகளைத் தவிர்க்கலாம்.  ஒருவரோடு ஒருவர் பேச, பந்திக்கு முந்த  என்றே எல்லோரும் இருக்க, அந்தக் கலைஞர்கள் அவமதிப்பாக உணரலாம்.      

     நிறைகள்

  • வாட்ஸ் அப், ஈ மெயில் என்று  எவ்வளவு  வசதிகள் இருந்த போதிலும், ஒவ்வொருவர் வீட்டுக்கும் நேரில் சென்று, பேசி கல்யாணத்துக்கு அழைக்கும்போது ஒரு நிறைவு ஏற்படுகிறது.
  • உறவுகள், நட்புகள் கூடி, மகிழ்ந்து  கொண்டாட முடிகிறது. 
  • இரு குடும்பங்களின் இணைப்பால் புதிய உறவுகள்  பெருகுகின்றன.
  • பந்தல் போடுவது, மாலை அலங்காரம் முதல்  சமையல், வரவேற்பு என்று  பல
  • நிகழ்ச்சிகளின்  மூலம்  பலருக்கு  வேலை  வாய்ப்பு கிடைக்கிறது.
  • புது அறிமுகங்கள் கிடைக்கின்றன.

4. வேஸ்ட்லெஸ் வெட்டிங் டிப்ஸ்

அனாவசியமான  வீணடிப்புகளைக்  குறைத்து, அதற்கான செலவைக் கணக்கிட்டு, அந்தத் தொகையை அநாதை இல்லங்களுக்கு வழங்கலாம் .  

5. டெஸ்டினேஷன் வெட்டிங் ஐடியா!  

பச்சைக் கம்பளத்தால்  போர்த்தியது  போன்ற  மலையடிவாரத்தில் ஒரு  சின்னக் கிராமம். நூறு  வீடுகளுக்கு  மேல் தேறாது. அதிகப் படிப்பறிவில்லாத, எளிமையான மக்கள். வாட்ஸ் அப், ஈ.மெயிலில் உறவினர், நண்பர்களுக்கு கல்யாணப் பத்திரிகை அனுப்பி, விருப்பமாக வருபவர்களுடன் சமையல்காரர் சகிதம் அந்தக் கிராமத்துக்கு படையெடுப்பு. அந்தக் கிராமத்து ‘தொப்பை’ என்றால் என்னவென்று கேட்கும், மேலாடை அணியாத உழைப்பாளி ஆண்கள்,  ரவிக்கை போடாத, மேனியை  இறுகச் சுற்றியிருக்கும் நூலாடை அணிந்த சுள்ளி பொறுக்கும் பெண்கள் என அவர்களனைவரும் சந்தோஷமாக  கல்யாண  வீட்டுக்காரர்களை வரவேற்கிறார்கள்.

பொழுது புலரும் முன்பே ஓலைக்  குடிசைகளுக்கு பின்புறம் உள்ள கிணற்றில் சகடச் சத்தத்தோடு நீர் இறைத்து, அரைத்த  மஞ்சளை உடலெங்கும் பூசி, நெஞ்சு உயரத்துக்கு கட்டிய சேலையோடு பெண்கள் குளிக்க,  'சல சல' வென படிகம் போல வெண்மணலைக் காட்டியபடி  ஓடும் ஆற்றில் ஆண்கள்  நீச்சல் அடித்துக்  குளித்து வர, மாப்பிள்ளையும், பெண்ணும்  புத்தாடை அணிகிறார்கள்.

கண்டாங்கிச் சேலை கட்டி, அள்ளி முடித்த கூந்தலில் காட்டு மல்லி மணக்க, கழுத்தில் பாசிமாலையும், கைகள் இரண்டும் குலுங்கக் குலுங்க கண்ணாடி வளையல்களும் அணிந்து மணப்பெண்ணும், மல்வேஷ்டியும், கதர்ச் சட்டையும் அணிந்து மாப்பிள்ளையும் வரும்போது 'பொல, பொலவெனப்' பொழுது விடிகிறது. ஊரின் நடுவே உள்ள மலைக்குன்றில் அமைந்திருக்கும் அம்மன்  கோவிலில்தான் கல்யாணம்.

காட்டாமணக்குப் பூவினால் தொடுத்த மாலையை மணமக்கள் மாற்றிக் கொள்கிறார்கள். கோவில் மணி அடிக்க, மலை உச்சியில் இருந்து  தவழ்ந்து இறங்கி, தென்னை ஓலைகளில் வழுக்கி ஓடி வந்த சீர்கெடாத ஈரக்காற்று தலையைத் தடவி ஆசீர்வதிக்க, ஊர்க்காரர்கள் தும்பைப் பூவைத் தூவி அட்சதை பொழிய மணமகன், மஞ்சள் சரட்டில் கோர்த்த திருமாங்கல்யத்தை மணமகள் கழுத்தில் கட்டுகிறார். கோவில் முன்னே சந்தானம், குங்குமம்  பூசிய  புதுப்பானையில்  பால் பொங்கி  வர  மணமகனும், மணமகளும் அரிசியை அள்ளிப் போடுகிறார்கள். ஊர்க்காரர்கள் எல்லோரையும் உட்கார வைத்து இட்லி, பொங்கல், கருப்பட்டி காபி என  சமையல்காரர்  சமைத்ததை  மணமக்கள்  பரிமாறுகிறார்கள்.

பிறகு, அடர்ந்த விழுதுகளைப் பரப்பி  நிழல் தந்துகொண்டிருக்கும் ஆலமரத்தின் அடியில், திருமண விழாவின் மகுடமாக,  ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த பொய்க்கால் குதிரையாட்டம் நடக்கும். மணமக்களை முன்னிறுத்தி உற்றார், நட்புகள், ஊரார் கூடி அந்தக் கலையை ரசிப்பர். மதியம், மரங்கள் அடர்ந்த சோலையில் தலைவாழை இலை போட்டு சிறுதானிய உணவு பிரதானமாக இருக்க, வடை, பாயசத்தோடு விருந்து பரிமாறப்படும்.

உண்ட களைப்பு தீர ஓய்வு எடுத்த பிறகு, ஊராருக்கு நன்றி சொல்லிவிட்டு, கல்யாண நிகழ்வுகளையும், அந்த எளிய மக்களின் மகிழ்ச்சியையும் ஒளிப்படமாக்கிய திருப்தியோடு, நிறைந்த மனதோடு  ஊர்  திரும்புகிறோம்.

இதுவே  என் கனவு  டெஸ்டினேஷன் வெட்டிங் பிளான்!.

{pagination-pagination}
இரண்டாம் பரிசு!

நடராஜன். K, தி.நகர், சென்னை.

1. என் ஆதரவு "டெஸ்டினேஷன் வெட்டிங் பிளானுக்கு"

2. ஆதரவுக்கான காரணம்

பழக்கம் வழக்கம் என்று சொல்லி லட்சம் பல செலவு செய்து தங்கள் பகட்டு, பணம், செல்வாக்கு என்ன? என்று ஊருக்குக் காட்டும் வழக்கமான திருமணத்தில் மணமகனும், மணமகளும் வெறும் காட்சி பொம்மைகளே! அக்னி சாட்சியாக நடக்கவிருக்கும் மண நாளுக்கு முந்தைய தினமே இந்த இரண்டு "பொம்மைகளை" வைத்து அவர் பெற்றோர்  நடத்தும் "பொம்மலாட்டம்" அவர் செல்வாக்கை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு விளம்பர படம்! ஆதலால், என் வாக்கு "வேஸ்ட்லெஸ்  டெஸ்டினேஷன் வெட்டிங் பிளானுக்கு" மட்டுமே !

3. திருமணங்களில் பின்பற்ற வேண்டிய நிறை/ தவிர்க்கப்பட வேண்டிய குறைகள்

குறைகள்

  • ஆடம்பர திருமண அழைப்பிதழ் 
  • ஆடம்பர ஆடை  அணிகலன்கள் 
  • ஆடம்பர விருந்து 
  • பகட்டு மேடை அலங்காரம், மின் விளக்கு அலங்காரம் 
  • மெல்லிசை நிகழ்ச்சி  என்னும் பெயரில் திருமண மண்டபமே அதிரும் அதிர்வலைகள்!  
  • வாழ்த்து கூற விரும்பும் விருந்தினர் வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம், வயது முதிர்ந்த தம்பதியரும் வரிசையில் நிற்கும் அவலம்!

நிறைகள்

  • மங்கள  இசை 
  • மென்மையான மண மாலைகள் 
  • வேத மந்திர  உச்சாடனம்... அவரவர்  மதம், குல வழக்கம்          மனதில் கொண்டு 
  • ஹோமம், அக்னி சாட்சி... அவரவர்  மதம், குல வழக்கப்படி 
  • அவரவர் குடும்பப் பெரியவர் மற்றும் முக்கிய உறவினர் முன்னிலை...
  •  எளிய சிறப்பு உடை... எளிமையான குடும்ப விருந்து...

4.  வேஸ்ட்லெஸ் வெட்டிங் டிப்ஸ்

வரவேற்பு, இரவு விருந்து  என்னும் பெயரில் வீணடிக்கப்படும் வறட்டு ஜம்ப செலவுப்பணத்தை, "வருங்கால சேமிப்பு வைப்பு நிதியாக" மாற்றி மணமக்களுக்கு திருமணப் பரிசாக கொடுக்கலாமே!


5. டெஸ்டினேஷன் வெட்டிங் ஐடியா! 

திருமண பரிசு கொடுக்க விரும்பும் அன்பர்கள் திருமண இணைய தளத்தில் அறிவிக்கப்பட்டு உள்ள  மணமக்களின் வங்கி கணக்கில் செலுத்த அன்பு வேண்டுகோள்... பரிசு காசோலையும் அனுப்பும் வசதி! பரிசு விபரமும் திருமண இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுவிடும். வாழ்த்துக்கும், பரிசுக்கும் நன்றி இணைய தளத்திலோ அல்லது அவரவர் மின் அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கப்படும்.

இனிய மண நாள் நிகழ்வு புகைப்படங்கள் தொகுப்பு  மற்றும் ஒளிநாடா (வீடியோ) திருமண இணைய தளத்திலேயே பதிவேற்றப்பட்டு வேண்டும் சமயம் பார்த்து மகிழவும்  மற்றும் சுற்றம் நட்புடன்  பகிர்ந்து கொள்ளவும் வழி வகுக்கும். இந்த மாதிரி "டெஸ்டினேஷன் மற்றும் வேஸ்ட்லெஸ் வெட்டிங்" மணமக்களின் சந்ததியருக்கும் ஒரு நல்ல முன் மாதிரி ஆகும்! ஒரு நல்ல ஆரம்பம்... அதுவே அந்த குடும்பத்தின் பழக்கமாகவும், வழக்கமாகவும் மாறிட இது ஒரு நல்ல வாய்ப்பு !

{pagination-pagination}

மூன்றாம் பரிசு!

 (இருவருக்கு - கீதாஞ்சலி & பாரதிராஜன்)

1. கீதாஞ்சலி, முகப்பேர் மேற்கு, சென்னை

1. என்னுடைய ஆதரவு வழக்கமான திருமணத்திற்கே.

2.  ஆதரவுக்குக் காரணம்...

திருமணம் என்பது இருமனங்களின் சங்கமம் மட்டுமன்று. இரு குடும்பங்களின் இணைப்புமாகும். டெஸ்டினேஷன் வெட்டிங்கில் அது சாத்தியமில்லை. டெஸ்டினேசன் வெட்டிங் மணமக்களுக்கு மட்டுமே மகிழ்ச்சியைத் தரும். இரு குடும்ப உறவினர்களின் இணைப்புக்கு அது பாலமாகாது. இன்றைய அவசர உலகில் உறவினர்களையோ நண்பர்களையோ நேரில் சென்று சந்திப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு உறவுகள் பற்றித் தெரிவதில்லை. திருமணங்களுக்குச் செல்வதன் மூலம் அவர்களைச் சந்தித்து நட்பையும் உறவையும் வளர்க்க முடியும்.குழந்தைகளும் உறவினர்களைத் தெரிந்துகொள்வர். நம்முடைய கலாச்சாரத்தையும் அறிந்துகொள்வர். மேலும் பெண்ணுக்கும் அவளைப் பெற்றவர்களுக்கும் சங்கடத்தையும் பொருள் மற்றும் நேர விரயத்தையும் தரக்கூடிய பெண்பார்த்தல் போன்ற வழக்கங்களைத் தவிர்த்து திருமண இடத்திலேயே பல திருமணங்களை முடிவு செய்யமுடியும். உறவினர்களுக்கிடையேயான சிறுசிறு பிணக்குகள் தீர வழிகிடைக்கும். நமக்கும் அன்றாட அலுவல்களிலிருந்து இனிமையான மகிழ்ச்சியான இளைப்பாறல் கிடைக்கும்.

3. நிறை / குறைகள்

குறைகள்

  • வரதட்சிணை, சீர்வகைகள்
  • ஆடம்பரம், பகட்டு
  • பேரிரைச்சல் தரும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஒலிபெருக்கிகள்
  • உண்ணவே முடியாதபடி பரிமாறப்படும் பலவகையான உணவுவகைகள்
  • கடன் வாங்கியாவது மணமக்களுக்கு உறவினர்களால் தரப்படும் விலையுயர்ந்த பரிசுப்பொருட்கள்

நிறைகள்

  • பணப்பொருத்தத்தைப் பார்க்காமல் மனப்பொருத்தத்தையும் குணப்பொருத்தத்தையும் மட்டுமே பார்க்க வேண்டும்.
  • மணமக்களின் சம்மதத்தை அறியவேண்டும்.
  • திருமணச் சடங்குகளை நடத்திவைப்பவர் அவற்றின் பொருளை அனைவரும் அறியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டும்.
  • எளிமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • திருமணத்திற்கு வருகைதருபவர் ஏதோ கடமைக்கு வந்து கடனைத் திருப்பிச்செலுத்துவது போல் பரிசளித்துவிட்டு சென்றுவிடாமல் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் அளவளாவி அன்பைப் பகிர வேண்டும்.

4.வேஸ்ட்லெஸ் வெட்டிங் டிப்ஸ்...

ஒவ்வொரு குடும்பத்திலும் கண்டிப்பாக ஒருவர் நன்றாக அலங்காரம் செய்யக்கூடியவராக இருப்பார். அவரை மணமக்களுக்கு அலங்காரம் செய்யச் சொன்னால் செலவும் குறையும்; அவரும் மகிழ்சியடைவார். ஆடம்பரமான அலங்காரங்கள் கண்ணுக்கு அழகாகத் தெரியலாம். ஆனால் எளிமையான மிதமான அலங்காரமே மனத்திற்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் தரும். அதுவே வசதியாகவும் இருக்கும். வயிற்றுக்கும் உடலுக்கும் நன்மை தரக்கூடிய எளிமையான சத்தான உணவை, உண்பவர் கேட்கும் அளவறிந்து பரிமாறினால் உணவு விரயம் தவிர்க்கப்படும். மீதமாகும் உணவை உணவில்லாத தெருவோர வாசிகளுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் கொடுத்து விடலாம்.

5.என்னுடைய டெஸ்டினேஷன் வெட்டிங் ஐடியா...

1. திருமணம் நடத்த மிகச்சிறந்த இடமாக என்னுடைய தேர்வு முதியோர் இல்லம். நம் வீட்டுப் பெரியோரின் ஆசிகளோடு மட்டுமல்லாது அங்கிருக்கும் அனைத்துப் பெரியோரின் ஆசிகளோடும் மணமக்கள் நலமுடனும் வளமுடனும் வாழ்வர். மேலும் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு மகிழ்ச்சியின்றி வாழும் அவர்களுக்கு அந்த ஒருநாள் மிக மகிழ்ச்சியான நாளாக அமையும். அவர்களின் மனம் நிறைந்த அன்பான ஆசிகள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்யும். நமக்கும் வித்தியாசமான அனுபவத்தைத் தரும். மணமக்களுக்கும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்வோடு நினைவுகூரும் நிகழ்வாக அமையும். அவர்களின் நிலையைப் பார்க்கும் இளைய தலைமுறையினர் அவர்கள் பெற்றோரை தம்முடனே வைத்துப் பராமரிக்கும் எண்ணம் வர வாய்ப்புள்ளது. மேலும் திருமண மண்டப வாடகை, அலங்காரங்கள், ஆடம்பரங்கள் எதுவும் இல்லாமல் அன்பும் எளிமையும் மனநிறைவும் மகிழ்ச்சியும் நிறைந்த திருமணமாக அமையும். மேலும் தேவையான உணவு அளவும் தெரியும் என்பதால் உணவும் வீணாகாது. உணவு மீதமானாலும் அடுத்தவேளைக்குப் பயன்படுத்திக் கொள்வர். மீதமாகும் திருமணச் செலவுத்தொகையை முதியோர் இல்லத்திற்கு வசதிகளைச் செய்து கொடுக்கப் பயன்படுத்தலாம்.
(அல்லது)

2. அவரவர் சொந்தக் கிராமத்தில் திருமணம் நடத்தலாம். திருமணத்திற்கு வரும் விருந்தினர் அனைவரையும் கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் தங்கவைக்கலாம். இன்றைய தலைமுறையினர் கிராமத்து வாழ்க்கையை ஒருநாள் வாழ்ந்து பார்க்கலாம். அது அவர்கள் வாழ்நாளெல்லாம் அவர்கள் நினைவை விட்டு நீங்காது. கிராமத்தினரின் விருந்தோம்பலையும் அறிந்து கொள்வர். கிராமத்தினரின் தேவைகளை அறிந்து அதற்கான தீர்வுகளுக்கும் உதவவாய்ப்பாக அமையும். நம்வீட்டு திருமணத்தை ஒரு ஊரே கொண்டாடும்போது மகிழ்ச்சி பன்மடங்காகும். அந்த ஒருநாள் ஊருக்கே விருந்து வைக்கலாம். திருமணத்தில் ஆடம்பர ஆடைகளையும் பகட்டான நகைகளையும் தவிர்த்து கைத்தறி ஆடைகளை அணிந்து நெசவாளர்களுக்கு உதவலாம். உணவுச் செலவு தவிர வேறு எந்த செலவும் இல்லாததால் மீதமாகும் செலவுத்தொகையை கிராமத்தின் நீராதாரங்களை மேம்படுத்தவோ பொதுக்கழிப்பறை அமைப்பதற்கோ குடிநீர்த்தேவைகளை நிறைவேற்றவோ அல்லது கிராம முன்னேற்றதிற்கான வேறு வழிகளுக்கோ பயன்படுத்தலாம்.

இதில் ஏதேனும் ஒருமுறையில் நம்வீட்டுத் திருமணத்தை நாமும் மகிழ்ந்து மற்றவர்களும் பயன்பெறும் வகையில் நடத்தினால் நலம்.

{pagination-pagination}

2. பாரதிராஜன், பெங்களூரு

1. வழக்கமான திருமணம்தான் சிறந்தது.                                    

2. காரணம்...

மணமக்கள் இருவரும் ஒரு புதிய உறவுக்குள் நுழைகிறார்கள். இப்போது வளரும் நாகரிகத்தில் ஒரு உறவு முறையும் புரியாமல் போகும் காலமாக உள்ளது. ஏற்கனவே சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த கூட்டுக்குடும்பம் மாறி தனிக்குடித்தனம் என்று சுருங்கி  உறவினர் திருமணங்களில் மட்டுமே சந்தித்து பேசுவது என்று மாறி விட்டது.எனவே குறைந்த பட்சம் நவீன திருமண மாக இல்லாமல் வழக்கமான திருமணம் நல்லது.                                         

3. நிறை / குறைகள்

குறைகள்

  • நிறைய உறவினர்கள் அவரவர் மனதில் தோன்றும் விஷயங்களைச் சொல்வது.       
  • புதிதாக ஏதாவது திருமணத்தில் செய்ய வைத்தல்.  
  • அந்த காலத்தில் நடந்ததுபோல்  நிறைய சீர் செய்ய சொல்வது.
  • ஏடாகூடமாக ஏதாவது பேசுவது.  
  • நிகழ்ச்சி நிரல் நல்லபடியாக நடக்கும்போது ஏதாவது இடைஞ்சல் செய்வது.                 

நிறைகள்‌

  • திருமணத்திற்கு வந்தவர்களை மனநிறைவுடன் வரவேற்றல். 
  • யார் மனமும் குறை சொல்ல முடியாதபடி மணமக்கள் வீட்டார் இருவரும் நடத்தல். 
  • பிரச்னை ஏதும் வராதபடியும் அப்படியே வந்தாலும் உடனே அதை சரி செய்தல்.
  • சமையல்கார்கள், மண்டபம் சிப்பந்திகள் அனைவரையும் அரவணைத்து செல்வது.
  • இந்த திருமணம் மாதிரி இனி வராது என்று சொல்ல வைப்பது.                        

4.வேஸ்ட்லெஸ் வெட்டிங் டிப்ஸ்

திருமண வீட்டார் இருவரும் முதலில் கலந்து பேசி இவ்வளவு பேர் வருவார்கள் எனத் தீர்மானித்து, கூட விடுமுறை நாட்கள் என்பதற்கேற்ப பட்ஜெட் போட்டு நடத்த வேண்டும். திருமண விழாவில் இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகள் அதிக அளவில் வீணாகாமல் இருக்க திருமணமண்டபத்துக்கு அருகில் உள்ள அநாதை இல்லத்தில் கொடுத்து விடலாம். பொருட்களும் வீணாகாது அந்த உள்ளங்களும் வாழ்த்தும். திருமணம் என்பது இருமணம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. புதிதாக வாழ்க்கை தொடங்குவதால் அதற்கேற்ப மணமக்கள் தங்களை பக்குவம் செய்து கொள்ளவேண்டும்.    

5.டெஸ்டினேஷன் வெட்டிங் ஐடியா! 

திருமணம் கூடுமான வரை ஒரு கோயிலில் செய்துவிட்டு பிற்காலத்தில் மணமகள் சந்தோஷமாக வாழத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொடுத்து செய்தால் நலமே. மரக்கன்றுகள் நடலாம், கண் தானம், உடல் உறுப்புகள் தானம் போன்றவைகளை ஏற்பாடு செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com