தினமணி கொடுத்த பரிசுத் தொகையை வென்றவர்கள் இவர்கள்தான்!

இன்று (ஜனவரி 17, 2018) தினமணி டாட் காம் நடத்திய ரங்கோலி கோலப் போட்டியில் வாசகியர் உற்சாகமாக
தினமணி கொடுத்த பரிசுத் தொகையை வென்றவர்கள் இவர்கள்தான்!

புதன்கிழமை (ஜனவரி 17, 2018) தினமணி இணையதளம் (www.dinamani.com) நடத்திய ரங்கோலி கோலப் போட்டியில் வாசகியர் உற்சாகமாக பங்கு கொண்டனர். காலையிலிருந்தே வாசகியரிடமிருந்து அலைபேசி அழைப்புக்கள் வந்த வண்ணம் இருந்தது. நாங்கள் குறிப்பிட்டிருந்த நேரத்துக்கு முன்னதாகவே அணி திரண்டு வந்து அசத்தினர் வாசகியர். 

தினமணி இணையதளம் (www.dinamani.com), ஐநாக்ஸ் திரையரங்குடன் இணைந்து 'பொங்கலோ பொங்கல்' ரங்கோலி போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அறிவிப்பு இணையதளத்திலும், தினமணி நாளிதழிலும் வெளியானது. இந்த அறிவிப்புக்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அறிவிப்பு வெளியான நாள் முதல் எங்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் மெயிலில் விதவிதமான ரங்கோலிகள் வந்து குவிந்தன. கிட்டத்தட்ட 250 ரங்கோலிகளைப் பரிசீலித்து அவற்றிலிருந்து பத்து ரங்கோலிகளைத் தேர்ந்தெடுதோம். ஒவ்வொருவருக்கும் தொலைபேசியில் இறுதிப் போட்டிக்கான விபரங்களைத் தெரிவித்தோம். புதன்கிழமை காலை போட்டியாளர்கள் பத்து பேரும் இறுதிச் சுற்றை சந்திக்க, களம் இறங்கத் தயாராக இருந்தனர். 

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐநாக்ஸ் திரையங்க வளாகத்தில் உள்ள சந்திராமாலில் ரங்கோலி போட வாசகியருக்கு இடம் அமைக்கப்பட்டது. இந்தப் போட்டியின் நடுவராக க்ரயான்ஸ் விளம்பர நிறுவனத்தின் தென் பிராந்தியத் தலைவர் விஜய்ஸ்ரீ கிருஷ்ணன் வந்திருந்தார். ஒவ்வொருவருக்கும் ஒரு சீட்டு தரப்பட்டது. அதில் உள்ள நம்பரின் படி அவர்களுக்கான ரங்கோலி போடும் இடம் ஒதுக்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் கோலம் போட்டு முடிக்க வேண்டும் என்ற சவாலை ஏற்று தினமணி இணையதள வாசகியர் சரியாக 11.30 மணிக்கு கோலம் போடத் தொடங்கினர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நிதானமாக ஒவ்வொருவரும் கோலத்துக்கான டிசைன்களை வரைந்து கொண்டிருந்தனர். 

போட்டி ஆரம்பித்த சில நொடிகளில் மாலில் இருந்தவர்கள் வேடிக்கை பார்க்க சூழ்ந்தனர். நமது பாரம்பரியத்துடன் தொடர்பு கொண்டது கோலம், அதிலுள்ள நவீனம் ரங்கோலி. புள்ளிக் கோலம் ஒருவிதமான அழகென்றால், ரங்கோலி கலை அழகியலுடன் ரசனையும் சேர்ந்தது. பெண்களின் க்ரியேட்ட்டிவிட்டிக்கு எப்போதும் தனித்துவம் உண்டு என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் போட்டியில் பங்கேற்ற பத்து பேரும் வண்ணமயமான ரங்கோலி கோலங்களை போட்டுக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு கோலமும் அவர்களின் கைவண்ணத்திற்கு சிறந்த சான்றாக இருந்தது.

பரபரப்பாக வாசகியர் தங்களின் ரங்கோலிகளுக்கு வண்ணம் இட்டுக் கொண்டிருக்க, வேடிக்கைப் பார்க்க பலர் சூழ்ந்துவிட்டதால் அவர்களது உற்சாகம் பன்மடங்காகியது. பார்வையாளர்கள் சிலரை அணுகி அவர்களிடம் பேசினோம்.

'ஐநாக்ஸில் படம் பார்க்க வந்தோம். இந்த கலர்ஃபுல் கோலங்களைப் பார்த்ததும் கவரப்பட்டு வேடிக்கை பார்க்கறோம். தினமணி பத்திரிகை அப்பா படிப்பாங்க. இந்த போட்டி பத்தி தெரியாது. மிஸ் பண்ணிட்டோம். அடுத்த முறை கட்டாயம் கலந்துக்கறோம்’ என்றார் தினமணி வாசகி ரம்யா.

எங்களின் அழைப்பின் பேரில் நிகழ்ச்சியைப் பார்வையிட வந்திருந்த கவிஞர் ஹேமா பாலாஜி ரங்கோலியின் உருவாக்கத்தை வெகுவாக ரசித்தார். இதுபோன்ற பல நிகழ்வுகளை தினமணி டாட் காம் நடத்தினால் தானும் நிச்சயம் பங்குகொள்வேன் என்று கூறி  நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பேத்தியுடன் மாலுக்கு வந்திருந்த வாசகி ஒருவர் தனக்கு புள்ளி வைத்த கோலம் நன்றாக போட வரும். இதைப் பார்க்கும் போது ரங்கோலி கற்றுக் கொள்ள ஆசையாக இருக்கிறது. நிச்சயம் கற்றுக் கொள்வேன். நிறைய கோலங்களை ஒரே இடத்தில் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. இனி தினமணி டாட் காம் நடத்தும் நிகழ்ச்சிகளில் கட்டாயம் நாங்களும் பங்கு கொள்வேன்’ என்று உறுதியளித்தார்.

தனது அம்மா, சித்தியுடன் வந்திருந்த பிரியா, 'இதற்கு முன் இதுபோன்ற போட்டிகளைப் பார்வை இட்டதில்லை. ஒரு மாலில் இத்தகைய நிகழ்வு எதிர்பாராத ஒன்று. எல்லா கோலமும் டாப்’ என்று பாராட்டினார்.

போட்டியாளர்களில் ஒருவரான வள்ளியம்மை இதில் கலந்து கொள்ள கோவில்பட்டியிலிருந்து வந்திருந்தார். அவரது கணவர் ஆர்.ராஜேஸ்வரன் தொடக்கப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர். தினமணியின் நீண்ட நாள் வாசகரான அவர் கூறுகையில், 'தினமணி போன்ற வெகு சில பத்திரிகைகளே தரமானதாக உள்ளது. படிப்பதற்கு நிறைய விஷயங்களை உள்ளடக்கியது. இணையதளத்திலும் புதுமையுடன் தினமணி இருப்பது அருமை. என்னுடைய மொபைலில் தினமணி டாட் காம் ஆப் உள்ளது. தினமும் செய்திகளையும், சிறப்புக் கட்டுரைகளையும் முதலில் படித்துவிடுவேன்.

என்னுடைய மனைவி வள்ளியம்மை கோலம் போடுவதில் மிகவும் ஆர்வம் உள்ளவர். தினமும் வீட்டு வாசலில் அவர் போட்ட கோலத்தை எனக்கு வாட்ஸ் அப்பிலும் அனுப்புவார். அதை ஃபோன் கேலரியில் சேமித்து வைத்துள்ளேன். தினமணி டாட் காமில் உள்ள லைஃப்ஸ்டைல் பகுதியில் தினமணி இணையதள வாசகர்களுக்கான பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி கோலப்போட்டியைப் பற்றி வந்த அறிவிப்பைப் பார்த்ததும், உடனே என் மனைவி போட்ட சில கோலங்களை மெயில் மற்றும் வாட்ஸ் அப்பில் அனுப்பினேன். வள்ளியம்மையின் கோலங்கள் தேர்வாகிவிட்டன, இந்தப் போட்டிக்காக சென்னைக்கு வர வேண்டும் என்று அவர்கள் சொன்னதும், உடனடியாக கிளம்பினோம். போட்டி நடந்த புதன்கிழமை காலைதான் கோயம்பேடு வந்து சேர்ந்தோம். நேராக போட்டியில் கலந்து கொண்டது மறக்க முடியாத அனுபவம்’என்றார்.  

'நாங்கள் சென்னையில் திருவொற்றியூரில் இருக்கிறோம். ரங்கோலி போட்டி அறிவிப்பைப் பார்த்ததும் அதில் என் மனைவி குணசெல்வியைப் பங்குபெறச் செய்யலாம் என்று நினைத்து அவர் புத்தாண்டுக்குப் போட்ட கோலம் என்னுடைய மொபைலிலிருந்து அனுப்பினேன். தினமணி டாட் காமிலிருந்து அழைப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. இதுதான் அவள் முதல் முறையாக கலந்து கொள்ளும் போட்டி. அவங்க ஜெயிச்சாலும் சரி இல்லையென்றாலும் சரி பங்கெடுத்துக்கறாங்க என்பது மகிழ்ச்சியான விஷயம்' என்றார் அவர்.

தங்கள் மனைவியின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் இந்த இருவரும் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்களே. நிகழ்ச்சியை தங்களது மொபைலில் படம் பிடித்தும் போட்டியை ரசித்தும் கொண்டிருந்தனர். 

கணவருடன் வந்த பெயர் தெரிவிக்காத ரசிகை ஒருவர் கோலங்களைப் பார்வையிட்டு சிலவற்றை புகைப்படம் எடுத்தார். திரையரங்கிற்கு வந்தவர்கள், இந்த நிகழ்வால் ஈர்க்கப்பட்டு பார்வையாளர்களானார்கள். கண் கவர் வண்ணங்கள் நிறைந்த ரங்கோலிகளை அதற்குள் வாசகிகள் போட்டு முடித்துவிட, நடுவர் விஜயஸ்ரீ கிருஷ்ணா போட்டியாளர்கள் அனைவரையும் பாராட்டினார்.

எதை விடுப்பது எதை எடுப்பது என்று தெரியாத அளவிற்கு ஒவ்வொரு ரங்கோலியும் ஒவ்வொரு வகையில் அழகாகப் போடப்பட்டிருந்தது. 5 வெற்றியாளர்களை தேர்வு செய்தார். எவ்வகையில் பரிசுக்குரிய கோலங்களைத் தேர்ந்தெடுத்தேன் என்று கூறிவிட்டு முதல் மூன்று பரிசுகளைப் பெற்றவர்களின் பெயர்களை அறிவித்தார். அதன் பின் இரண்டு பரிசுகளை கூடுதலாக தந்து வாசகியரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.  அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளை வழங்கி தினமணி டாட் காம் தங்களது பாராட்டுக்களை பதிவு செய்தது.

முதல் பரிசை வனஜா ராதா கிருஷ்ணன் தட்டிச் சென்றார். அவருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசை அனுராதா கமலக்கண்ணன் வென்றார். அவருக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசை ஷாலினி பெற்றார். அவருக்கு ரூ.2 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 4-ஆவது, 5- ஆவது பரிசை முறையே ரெமா ரமணி மற்றும் சந்திரா ரங்கராஜ் பெற்றனர். அவர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டது.

மற்ற போட்டியாளர்களான குணசெல்வி, மாலா, விஜயலட்சுமி, வள்ளி அம்மாள், வித்யா ஆகியோருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. ரொக்கப் பரிசுகளுடன் தினமணி இணையதளத்தின் பிரத்யேகக் குடைகளும், ஐநாக்ஸ் நிறுவனம் வழங்கிய திரைப்பட டிக்கெட்டுகளும், சென்னை டயமண்ட்ஸ் நிறுவனம் வழங்கிய தள்ளுபடி கூப்பனும் வழங்கப்பட்டன பரிசு பெற்றவர்களை நடுவர் பாராட்டினார். அனைவரும் தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். 

இது போன்ற நிகழ்வுகள் எங்களுக்கும் உற்சாகத்தை அளித்தது. காரணம் வாசகர்களை நேரடியாக சந்திப்பது ஒரு இனிய அனுபவம். வாசகர்களுக்கும் பத்திரிகைக்கும் ஒரு பாலமாக இந்நிகழ்வு அமைந்ததென்றால் மிகையில்லை. இந்த நிகழ்ச்சியில் தினமணி இணையதளக் குழுவினர், வாசகியர், மற்றும் ரசிகர்களும் சேர்ந்து நிறைவு செய்தனர். ஒவ்வொருவரும் நன்றி கூறி விடைப்பெற்ற போது நல்லதொரு நிகழ்ச்சியை நடத்திய மகிழ்ச்சியுடன் அலுவலம் வந்து சேர்ந்தோம். நினைவுகள் இனிக்கும் என்பார்கள், இந்த நாள் எங்கள் நினைவில் என்றென்றும் கரும்பாய் தித்திக்கும்.  

- கார்திகா வாசுதேவன், உமா பார்வதி,  ஒளி ஓவியம் - பவித்ரா முகுந்தன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com