Saturday, February 04, 2012 9:55 PM IST
ஜோதிடம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்


ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர்,
                                                                                                                    சென்னை.


எண்ணங்கள் மாறும்!

எனது மனைவிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எனக்கு மறுமணம் நடக்குமா? என்னுடைய ஜாதகமும் எனது மனைவியின் ஜாதகமும் சரியாக கணிக்கப்பட்டுள்ளதா? நான் எந்தவொரு வேலையைத் தொட்டாலும் காலதாமதம் ஏற்படுகிறது. பணம் விரயமாகிறது. இந்த சூழ்நிலை எப்போது மாறும்? நான் என்ன தொழில் செய்தால் முன்னேற்றம் ஏற்படும்? என்னுடைய சொத்துக்கள் நிலைக்குமா? என்னுடைய ஆயுள் பலம் எப்படி இருக்கும்?

வாசகர்.

உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு மறுமணம் நடக்க வாய்ப்பு இல்லை. உங்கள் மனைவிக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு சுப பலம் பெற்ற மாங்கல்ய ஸ்தானாதிபதியின் தசை நடக்கத் தொடங்குவதால் அவரின் எண்ணங்களிலும், செயல்களிலும் மாற்றங்கள் உண்டாகும். மனமாற்றம் ஏற்பட்டு மனதை ஆன்மிகத்தில் செலுத்துவதற்கு குரு பகவானின் அருள் கிடைக்கும்.

இதைத்தான் ஆண்டாள் நாச்சியார் ""மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்'' என்கிறார். நம் மனதில் தோன்றும் தவறான எண்ணங்களை நம் வழிபாட்டின் மூலம் இறைவன் மாற்றிவிடுவார் என்று பொருள். உங்களுக்கு வருகிற மே மாதத்திற்குப் பிறகு சிறப்பான தசா புத்திகளுடன் கோசாரமும் வலுவாக அமைவதால் உங்கள் குடும்ப வாழ்க்கையிலும் செய்தொழிலிலும் நிம்மதி உண்டாகும்.

நீங்கள் செய்து வரும் தொழிலுடன் ஸ்டேஷனரி போன்ற தொழிலும் செய்யலாம். உங்கள் சொத்துக்கள் கைவிட்டுப் போகாது. உங்களுக்கு சனி பகவானும், அஷ்டமாதிபதியும் வலுவாக இருப்பதால் தீர்க்காயுள் உண்டாகும். உங்கள் மற்றும் உங்கள் மனைவியின் ஜாதகம் சரியாகவே கணிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு தீபமேற்றியும், ஞாயிற்றுக் கிழமைகளில் சிவபெருமானை வில்வ மாலை அணிவித்தும் வழிபட்டு வரவும். இருவருக்கும் எதிர்காலம் சிறப்பாகவே அமையும்.


முயற்சி வெற்றி பெறும்!


என் அக்கா மகனுக்கு 36 வயது ஆகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக அவரது திருமணத்திற்காக பெண் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை. எப்போது அவருக்குத் திருமணம் நடக்கும்? காளஹஸ்தி, கும்பகோணம், திருப்பதஞ்சலி ஆகிய தலங்களுக்கு சென்று பரிகாரம் செய்துள்ளோம். வேறு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

கோவை வாசகி.

உங்கள் அக்கா மகனுக்கு பூர்வபுண்ய ஸ்தானாதிபதி, பாக்யாதிபதி மற்றும் களத்ர ஸ்தானாதிபதி ஆகியோர் வலுவாக அமர்ந்திருந்தாலும் லக்னாதிபதி கேந்திராதிபத்ய தோஷம் பெற்று கேந்திரத்தில் அமர்ந்து களத்ரஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றிருப்பது குறை.

இதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து தேர்வு செய்ய வேண்டும். இல்லையேல் மணவாழ்க்கை சீராக செல்ல வாய்ப்பு குறைவு. மற்றபடி அவருக்கு இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு ஓராண்டுக்குள் திருமண முயற்சிகள் வெற்றி பெறும். லாபாதிபதியை குரு பகவான் பார்வை செய்வதால் எதிர்காலம் வளமாக அமையும்.

கடன் தீரும்!

என்னுடைய தொழிலால் கடன் தொல்லைக்கு ஆளாகியுள்ளேன். எப்போது கடன் தொல்லை தீரும்? சொந்தமாக மனை வாங்கும் வாய்ப்பு உண்டா? இது ஒருபுறமிருக்க தனியார் துறையில் வேலையில் இருந்த எனது மகன் அரசுத் தேர்வு எழுதுவதற்காக அந்த வேலையை விட்டுவிட்டான்.

அவனுக்கு அரசு வேலை கிடைக்குமா? அல்லது மீண்டும் தனியார் துறையிலேயே உத்யோகம் அமையுமா? எனது கணவர் இறந்துவிட்டார். அவர் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் எப்போது கிடைக்கும்? எனது மகனுக்குத் திருமணம் எப்போது நடக்கும்?

ஈரோடு வாசகி.

உங்கள் ஜாதகப்படி கடன் ஸ்தானாதிபதி பூர்வபுண்ய ஸ்தானத்தில் இருப்பதாலும், லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்று இருப்பதாலும் கடன்கள் தற்காலிகமானதே! மேலும் பூர்வ புண்ய ஸ்தானாதிபதியான குரு பகவான் தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். உங்கள் கடன்கள் 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு முழுமையாக தீரும். அந்தக் காலத்தில் சொந்த இடம் வாங்கி வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும்.உங்கள் மகனுக்கு அரசு உத்யோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அவரை வங்கி, காப்பீடு போன்ற துறைகளில் போட்டித் தேர்வை எழுதச் சொல்லவும். உங்கள் கணவரின் சொத்து முழுமையாகக் கிடைக்கும். களத்ரஸ்தானாதிபதி சுகஸ்தானத்தைப் பார்வை செய்வதால் உங்கள் மகனின் மணவாழ்க்கை சீராக அமையும். 2014ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் திருமணம் நடக்கும்.

ஓராண்டுக்குள் திருமணம்!

எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? நிரந்தரமாக என்ன தொழில் அமையும்?

சேலம் வாசகர்.

உங்களுக்கு வருகிற மார்ச் மாதத்திற்குப் பிறகு ஓராண்டுக்குள் திருமணம் நடக்கும். நீங்கள் செய்து வரும் தொழில் உங்களுக்கு ஏற்றதாகவே அமைகிறது. அதில் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள்.

குரு தட்சிணாமூர்த்தியை வழிபடவும்!

நான் ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் ஜெராக்ஸ் மற்றும் ஸ்டேஷனரி நடத்தி வருகிறேன். அதில் எனக்கு முன்னேற்றம் ஏற்படுமா? அல்லது வேறு தொழில் செய்யலாமா?

ஜெ. வரதராஜ், கோவை.

நீங்கள் செய்து வரும் தொழிலில் வருகிற மே மாதத்திற்குப் பிறகு தொடங்கும் பாக்யாதிபதியின் புத்தியிலிருந்து வருமானம் உயரும். அதனால் தொடர்ந்து இந்தத் தொழிலிலேயே இருக்கவும். வியாழக் கிழமைகளில் குரு தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

பரிகாரம் தேவையில்லை!

எனது மகளுக்குத் திருமணம் நடப்பதில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. எப்போது திருமணம் நடக்கும்?

எம். தங்கசுவாமி, மயிலாடுதுறை.

உங்கள் மகளின் ஜாதகப்படி தர்மகர்மாதிபதி களத்ர ஸ்தானத்தில் வலுவாக அமர்ந்திருக்கிறார். ஆனால் களத்ரஸ்தானாதிபதி அசுபர் சாரத்தில் அமர்ந்து மறைவு பெற்றிருப்பதால் திருமணம் தாமதமாகிறது. இதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்துத் தேர்வு செய்ய வேண்டும். மற்றபடி அவருக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் திருமணம் நடக்கும். பரிகாரம் தேவையில்லை.

வீடு கட்டுவீர்கள்!

எனது கணவரின் உடல்நிலை எப்போது சீராகும்? அவருக்கு எப்படிப்பட்ட சிகிச்சை ஏற்றது? எங்கள் இருவரின் ஆயுள்பலமும் எவ்வாறு அமையும்? எனது கணவர் கூட்டாகத் தொழில் செய்கிறார். அதில் முன்னேற்றம் ஏற்படுமா? குழந்தைகளை எந்தத் துறையில் படிக்க வைத்தால் முன்னேற்றம் ஏற்படும்? நான் அரசுத் துறையில் பணிபுரிகிறேன். எனக்கு இடமாறுதல் கிடைக்குமா? பாகப்பிரிவினை சுமுகமாக முடிந்து வீடு கட்டும் வாய்ப்பு உண்டா?

வாசகி.

உங்கள் கணவர் கூட்டாக சேர்ந்து தொழில் செய்வது கூடாது. அதனால் அவரை உடனடியாக அவரின் பாகத்தைப் பெற்றுக்கொண்டு வெளியேறச் சொல்லுங்கள். 2014ஆம் ஆண்டுக்குள் நீங்கள் இருக்கும் ஊரிலேயே உங்கள் தகுதிக்கேற்ப கடன் வாங்கி வீடு கட்டுவீர்கள். பாகப்பிரிவினை கேட்க வேண்டாம். அதனால் மனக் கஷ்டங்கள் உண்டாகலாம். உத்யோகம் தொடர்பாக இடம் மாறுதல் கேட்க வேண்டாம். உங்கள் கணவருக்கு ஆங்கில மருத்துவ முறையே சிகிச்சைக்கு உகந்தது. உங்கள் இரண்டு மகன்களையும் சிவில், மெக்கானிக்கல் அல்லது மேலாண்மைப் படிப்புகளில் படிக்க வைக்கலாம். வியாழக் கிழமைகளில் குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.

செய்வினை இல்லை!

எனது மகனுக்கு 33 வயதாகிறது. எம்.பி.ஏ. படித்துள்ளான். அவனுக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடக்கும்? இதுவரை குடும்பத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கு செய்வினை கோளாறு காரணமா?

வாசகி.

உங்கள் மகனுக்கு அரசு உத்யோகம் கிடைக்க வாய்ப்பு குறைவு. தனியார் துறையில் சிறப்பாக முன்னேறுவார். உங்கள் மகனுக்கு ஜாதகம் வலுவாகவே உள்ளது. களத்ரஸ்தானாதிபதி நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருப்பது சிறப்பு. செய்வினைக் கோளாறுகள் இல்லை. இந்த ஆண்டு மே மாதத்திற்குள் திருமணம் நடக்கும்.

உத்யோக மாற்றம்!

எனது நண்பர் ஹரியாணாவில் பணிபுரிகிறார். அவருக்கு பெங்களூரில் நல்ல வேலை கிடைக்குமா? அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டா? அவருக்கு எப்போது திருமணம் நடக்கும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?

வி. ரமேஷ், பெங்களூர் - 33.

உங்கள் நண்பருக்கு 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு பெங்களூர் அருகில் உத்யோக மாற்றம் உண்டாகும். அதற்குப் பிறகு ஓராண்டுக்குள் திருமணம் நடக்கும். அரசு உத்யோகம் கிடைக்க வாய்ப்பு குறைவு. வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகம் 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு உண்டாகும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

செய்தொழிலில் வளர்ச்சி!

எனக்கு 2000ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும்? நான் காலணிகள் தயாரிக்கும் தொழில் செய்கிறேன். அதில் சொல்லிக்கொள்ளும்படி முன்னேற்றம் இல்லை. எப்போது தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்? வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டா?

பால.சக்திவேல், பண்ருட்டி.

உங்கள் இருவரின் ஜாதகப்படி இந்த ஆண்டு இறுதிக்குள் குழந்தை பாக்கியம் உண்டாகும். 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு உங்கள் செய்தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். தற்சமயம் உங்கள் இருவருக்கும் நலம் சேர்க்கும் தசை நடைபெறுவதால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

விரும்பும் நபருடன் திருமணம்!

எனது சகோதரிக்கு 25 வயது ஆகிறது. அவருக்கு எப்போது திருமணம் நடக்கும்? அவருக்கு காதல் திருமணம் நடக்குமா? அவரின் படிப்பிற்கேற்ற வேலை எப்போது கிடைக்கும்? எங்களின் பெற்றோர் உடல்நிலை எப்போது சீராகும்?

திருவண்ணாமலை மாவட்ட வாசகி.

உங்கள் சகோதரிக்கு அவர் விரும்பும் நபருடன் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு திருமணம் நடக்கும். பெற்றோரின் உடல் நிலை சீராகவே இருக்கும். வருகிற மே மாதத்திற்குப் பிறகு உங்கள் சகோதரிக்கு தனியார் துறையில் நல்ல உத்யோகம் அமையும்.

பொறுமையுடன் இருக்கவும்!

எனது மகள்களின் ஜாதகப்படி எப்போது கடன் பிரச்னை தீர்ந்து நிம்மதியாக வாழ்வோம்? பூர்வீகச் சொத்தை விற்று கடனை செலுத்த வாய்ப்பு உண்டா? எனது மூத்த மகள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள். அவள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கலாம்? இளைய மகள் படிப்பில் சுமாராக இருக்கிறாள். அவளுடைய எதிர்காலம் எப்படியிருக்கும்?

வெற்றிச்செல்வி, பொள்ளாச்சி.

உங்கள் மகள்களின் ஜாதகப்படி 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு கடன் தொல்லை தீரும். உங்கள் மூத்த மகளை மருத்துவத் துறையில் சேர்த்து படிக்க வைக்கலாம். உங்கள் இளைய மகளுக்கு கணினி சம்பந்தப்பட்ட படிப்பு ஏற்றது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு நன்றாகப் படிப்பார். அதுவரை பொறுமையுடன் இருக்கவும். மற்றபடி உங்கள் குடும்பத்தின் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும். விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

அமைதியான இறுதிக்காலம்!

நான் கடந்த 35 வருடங்களாக சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன். என்னுடைய இறுதிக்காலம் எப்படியிருக்கும்? பௌர்ணமி தோறும் மீனாட்சி அம்மனுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வருகிறோம். வீட்டிலேயே இறைவனை வழிபடுகிறோம். வேறு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

வாசகர், மதுரை - 1.

உங்களுக்கு தற்சமயம் லக்னாதிபதியின் தசை நடக்கத் தொடங்கி ஒரு வருடம் ஆகிறது. லக்னாதிபதி குடும்பஸ்தானத்தில் பாக்யாதிபதியின் தசையில் நவாம்சத்தில் உச்சம் பெற்று அமர்ந்துள்ளதால் தீர்க்காயுள் உண்டாகும். இறுதிக்காலம் அமைதியாகக் கழியும். நீங்கள் செய்து வரும் வழிபாடுகள் போதுமானவை.

தீர்க்காயுள் உண்டு!

நான் தொழில் நடத்துவதற்கு சொந்தமாக இடம் அமைய வாய்ப்பு உண்டா? என்னுடைய வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படுமா?

டி. கோபாலகிருஷ்ணன், காரைக்கால்.

உங்களுக்கு நீச்சபங்க ராஜயோகம் பெற்ற பாக்யாதிபதியின் தசை நடக்கிறது. இந்த தசை இன்னும் 10 ஆண்டுகள் நடைபெறும். 2013ஆம் ஆண்டுக்குள் நீங்கள் தொழில் நடத்த சொந்த இடம் வாங்கி விடுவீர்கள். உங்கள் வருமானம் படிப்படியாக உயரும். சனி பகவான் பூர்வ புண்ய ஸ்தானாதிபதியாகி நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருப்பதால் தீர்க்காயுள் உண்டு. புதன் கிழமைகளிலும்,வெள்ளிக் கிழமைகளிலும் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும்.

வடக்கு திசையில் சம்பந்தம்!

என் அக்கா மகன் எம்.பி.ஏ. படித்துவிட்டு பணிபுரிகிறான். அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? படித்த பெண் மனைவியாக அமைவாரா? காளஹஸ்தி, ஸ்ரீரங்கம் போன்ற தலங்களுக்கு சென்று பரிகாரம் செய்துள்ளோம். வேறு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

கோபி வாசகர்.

உங்கள் அக்கா மகனுக்கு இந்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு திருமண முயற்சிகள் வெற்றி பெறும். களத்ர ஸ்தானாதிபதி களத்ர ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று இருப்பதால் தகுதியான இடத்திலிருந்து படித்த பெண் அமைவார். வடக்கு திசையில் சம்பந்தம் ஏற்படும். நீங்கள் செய்துள்ள பரிகாரங்கள் போதுமானவை.

குழந்தை பிறக்கும்!

எனக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. எப்போது குழந்தை பிறக்கும்?

விருத்தாசலம் வாசகி.

உங்களுக்கு இந்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு குழந்தை பிறக்கும். வியாழக் கிழமைகளில் குரு தட்சிணாமூர்த்தியையும், ஞாயிற்றுக் கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

இணைந்து வாழ்வார்கள்!

எனது மகனும், மருமகளும் பிரிந்து வாழ்கிறார்கள். அவர்கள் இணைந்து வாழும் வாய்ப்பு உண்டா?

காஞ்சீபுரம் வாசகி.

உங்கள் மகன் - மருமகள் ஜாதகப்படி இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து வாழ்வார்கள். வியாழக் கிழமைகளில் ஸ்ரீராகவேந்திரரை வழிபட்டு வரவும்.

வீடு மாற வேண்டாம்!

நாங்கள் பத்து ஆண்டுகளாக ஒரு வீட்டில் குடியிருந்தோம். பின்னர் எனது இரு மகன்களின் படிப்பு வசதிக்காக பள்ளி அருகில் மற்றொரு இடம் வாங்கி வீடு கட்டிக் குடியேறினோம். கடந்த எட்டு வருடங்களாக இந்த வீட்டில்தான் வசிக்கிறோம். ஆனால் இங்கு குடியேறிய பிறகு என்னுடைய உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்படுகிறது. எனவே பழைய வீட்டிற்கே சென்று விடலாமா? எப்போது என் உடல் நலம் சீராகும்? என் இளைய மகன் பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரியில் சேர்ந்துள்ளான். மூத்த மகன் வேலை பார்க்கிறான்.

இருவரின் எதிர்காலமும் எப்படியிருக்கும்? மூத்த மகனுக்கு எப்போது திருமணம் செய்யலாம்? எனது கணவருக்கு பதவி உயர்வு கிடைக்குமா? சென்னையில் அடுக்கு மாடிக் குடியிருப்பு வாங்கலாமா?

காஞ்சனா, திண்டிவனம்.

உங்கள் மூத்த மகனை மேலாண்மைப் படிப்பில் மார்க்கெட்டிங், லாஜிஸ்டிக்ஸ் போன்ற பிரிவுகளில் படிப்பைத் தொடரச் சொல்லவும். 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு திருமணம் செய்வது சிறப்பு. உங்கள் இளைய மகனுக்கு கல்வி ஸ்தானத்தை தர்மகர்மாதிபதிகள் கர்மஸ்தானத்திலிருந்து பார்வை செய்வதால் நல்லபடியாக படித்து முடித்துவிடுவார். அவருக்கு கணினி சம்பந்தப்பட்ட துறைகளில் உத்யோகம் பார்ப்பது சிறப்பு.

நீங்கள் 2013ஆம் ஆண்டு மே மாதம் வரையில் வீடு மாற்றம் செய்ய வேண்டாம். பழைய வீட்டிற்குச் செல்வதால் மேலும் நன்மைகள் உண்டாகும் என்று கூற முடியாது. மற்றபடி சென்னையில் அடுக்கு மாடிக் குடியிருப்பை வாங்கலாம். உங்கள் நால்வருக்கும் பூர்வ புண்யம் நன்றாக இருப்பதால் பெரிய பாதிப்புகள் உண்டாகாது. உங்கள் கணவருக்கு 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு பதவி உயர்வு கிடைக்கும்.ஞாயிற்றுக் கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

சிறப்பான எதிர்காலம்!

எனது சகோதரனுக்கு 47 வயது ஆகிறது. பல முறை முயன்றும் இதுவரை திருமணம் ஆகவில்லை. எப்போது அவனுக்கு திருமணம் நடக்கும்?

அறந்தாங்கி வாசகர்.

உங்கள் சகோதரருக்கு திருமணம் நடக்க வாய்ப்பில்லை. மற்றபடி அவருக்கு தற்சமயம் லக்னாதிபதியின் தசை நடைபெறுவதால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

நல்ல இடத்தில் திருமணம்!

என் அண்ணனின் திருமணத்திற்காக கடந்த நான்கு வருடங்களாக முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை. எப்போது அவருக்கு திருமணம் நடக்கும்? திருமணஞ்சேரி, திருவிருந்தை, காளஹஸ்தி, சோளிங்கவரம், திருப்பதி ஆகிய தலங்களில் பரிகாரம் செய்துள்ளோம். வேறு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

பம்மல் வாசகி.

உங்கள் அண்ணனுக்கு தற்சமயம் ஆட்சி பெற்ற பூர்வ புண்ய ஸ்தானாதிபதியின் தசையில் பாக்யாதிபதியின் புத்தி நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். தொழில் ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் எதிர்காலம்
சிறப்பாக அமையும்.

சமதோஷம் பார்க்கவும்!

எனது மகளின் திருமணம் தோல்வியில் முடிந்துவிட்டது. அவளுக்கு மறுமணம் நடக்குமா? எதிர்காலம் எப்படியிருக்கும்?

ஜி. குமார், திருப்பத்தூர்.

உங்கள் மகளுக்கு அயனஸ்தானத்திற்கும், லக்னத்திற்கும் ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். அவருக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு மறுமணம் நடக்கும். மற்றபடி ராகு பகவான் லாபஸ்தானத்தில் அமர்ந்து தசையை நடத்துவதாலும் அவர் தொழில் ஸ்தானாதிபதியுடன் இணைந்திருப்பதாலும் எதிர்காலம் வளமாக அமையும். படித்த, நல்ல உத்யோகத்தில் உள்ள வரன் அமையும்.
கருத்துகள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.