08 Feb 2010 10:09:35 AM IST

உலக நன்மை வேண்டி கொடைக்கானலில் ஆன்மிகச் சொற்பொழிவு 

கொடைக்கானல், பிப். 7: கொடைக்கானலில் உலக நன்மை வேண்டி, ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
    கிரீன் ஏக்கர் ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கொடைக்கானல் சன்ஸ்குரிட்டி அமைப்பின் தலைவர் ராமச்சந்திரதுரை ராஜா தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக ஜெய் பகவான்ஜி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி  பேசியதாவது:
    ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் கடவுள் உள்ளார். ஆனால், அவற்றை நாம் எவ்வாறு பின்பற்றுகிறோம் என்பது தெரியவேண்டும்.
ஒரு மனிதன் முன்னேறும் போது  பெருமைப்பட வேண்டும். அவனிடமுள்ள தீய பழக்கவழக்கங்களை விட்டு நல்ல பழக்கங்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். பொறாமைப்படுதல் கூடாது. வாழ்க்கையில் முன்னேற பிறருக்குத் தீங்கு நினைத்தல் கூடாது.
    ஜாதி, சமய, இன, மொழி வேறுபாடுகளைக் களைந்து, மனிதனை மனிதனாக நினைக்க வேண்டும். இந்த அமைப்பிற்கு எந்தவிதமான வேற்றுமையும் கிடையாது. நன்கு உழைத்து முன்வரவேண்டும்.     
மனிதனிடத்தில் தவறு இருப்பின் அவற்றை மனிதனே திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
    முன்னதாக, பூப்பல்லாக்கில் மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்டார் ஜெய் பகவான்ஜி.
    இந்நிகழ்ச்சியில், கொடைக்கானலிலுள்ள இந்த அமைப்பைச் சேர்ந்த  ஆறுமுகம், ராஜகோபால் துரைராஜா, ராஜகுமாரி வி.ஆர். தொண்டைமான், சங்கர் சாட்டர்ஜி, டாக்டர் பத்மநாபன், திலீப், சங்கர், சண்முகம், சேது மற்றும் ஆமதாபாத், நாசிக், மும்பை, ஆந்திரம், கர்நாடகம், துபாய் போன்ற இடங்களிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.இதைத் தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.

© Copyright 2008 Dinamani