09 Feb 2010 12:00:00 AM IST

குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 தங்கம் 

டாக்கா,​​ பிப்.​ 8:​ தெற்காசிய விளையாட்டு குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட 3 வீரர்களும் தங்கள் பிரிவுகளில் தங்கப் பதக்கத்தை வென்றனர்.
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் 11-வது தெற்காசிய விளையாட்டில் குத்துச் சண்டைப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.​ இதில் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் சோட் லால்,​​ 51 கிலோ பிரிவில் சுரண்ஜாய்,​​ 48 கிலோ பிரிவில் அமன்தீப் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
54,​ 60,​ 64 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டைப் போட்டியில் வங்கதேச வீரர்கள் மூவர் தங்கம் வென்றனர்.​ இந்தப் பிரிவுகளில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.
டேக்வாண்டோவில் 4 பதக்கம்:​​ டேக்வாண்டோ போட்டியில் ஆண்களுக்கான 87 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சந்தீப் குண்டு,​​ இலங்கை வீரர் ரவீந்திர ராஜபட்சவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.​ பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லத்திகா பண்டாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.​ இந்தப் பிரிவில் நேபாளத்தின் ஆயிஷா தங்கம் வென்றார்.​ ​
57 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை ​ சிருஷ்டி சிங்கும்,​​ 87 கிலோ பிரிவில் இந்திய வீரர் நகுல் மல்கோத்ராவும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

© Copyright 2008 Dinamani