10 Mar 2010 01:56:59 AM IST

தெரிந்து கொள்ளுங்கள்: சுதந்திர இந்தியாவின் பெருமை! 

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் நடைபெற்ற முதல் ஒலிம்பிக்கில் ஹாக்கியில் தங்கம்  வென்று சுதந்திர இந்தியாவுக்கு பெருமை சேர்ந்தவர் கேப்டன் கிஷன் லால்.
அந்த ஒலிம்பிக்கில் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டனை  இறுதிப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இது விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றிகளில் ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது. இந்த பெருமையை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தவர் கிஷன் லால்.
மத்தியப் பிரதேச மாநிலம் மஹவ்-வில் 1917 பிப்ரவரி 2-ல் கிஷன் லால் பிறந்தார். சிறுவயதிலேயே ஹாக்கி விளையாட்டின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. 16-வது வயதில் உள்ளூர் ஹாக்கி அணிக்காக அவர் களம் இறங்கினார். அப்போது மற்றொரு பிரபல இந்திய ஹாக்கி வீரர் தியான் சந்த்துடன் இணைந்தும் கிஷன் லால் விளையாடியுள்ளார்.
1941-ல் ரயில்வே ஹாக்கி அணியில் அவர் இடம் பிடித்தார். அவரது தலைமையில் ரயில்வே அணி பல கோப்பைகளை வென்றது. பல்வேறு களத்தில் கிஷன் லாலில் திறமையைக் கண்ட இந்திய ஹாக்கி அணி தேர்வுக் குழுவினர் அவருக்கு அணியில் வாய்ப்பு அளித்தனர்.
களத்தில் இறங்கினால் காலில் இறக்கைகள் முளைத்துவிட்டதா என்று நினைக்கும்  அளவுக்கு அபார வேகத்தில் பந்தை கோல் கம்பத்துக்கு கடத்திச் செல்லும் திறமையுடையவர் கிஷன் லால்.
1948-ல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கிஷன் லால் தலைமையிலான இந்திய அணி களம் இறங்கியது. அந்த போட்டியில் இந்திய அணி விளையாடிய 5 ஆட்டங்களிலும் வென்றது. இந்திய வீரர்கள் மொத்தம் 25 கோல்களைப் போட்டனர். இறுதிப் போட்டியில் பிரிட்டன் அணியை இந்திய அணி வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
தொடர்ந்து 28 ஆண்டுகள் விளையாடிய பின் ஹாக்கியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். 1976-ம் ஆண்டு வரை ரயில்வே உள்பட பல்வேறு அணிகளுக்கு பயிற்சி அளித்தார். இவரது பயிற்சியின் கீழ் பல்பீர் சிங், மொகிந்தர் சிங், ஹர்பீந்தர் சிங் போன்ற பல தலைசிறந்த வீரர்கள் உருவாகினர்.
மலேசியா, கிழக்கு ஜெர்மனி ஆகிய நாடுகள் தங்கள் அணிக்கு பயிற்சி அளிக்குமாறு அவருக்கு அழைப்பு விடுத்தன. 1966-ல் மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெüரவித்தது. 1980-ல் முருகப்பா கோப்பை ஹாக்கி போட்டியின் போது தூர்தர்ஷனுக்காக வர்னணையாளர் பொறுப்பை ஏற்றிருந்தார். இதற்காக சென்னை வந்த போது 1980 ஜூன் 22-ல் கிஷன் லால் மரணமடைந்தார்.

© Copyright 2008 Dinamani