10 Mar 2010 11:10:12 AM IST
கருவூல கணினி மென்பொருள் பயிலரங்கு
திண்டுக்கல், மார்ச் 9: தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் அலுவலர்களுக்கு ஊதியப் பட்டியல்களை புதிய மென்பொருள் மூலம் கணினியில் தயாரிப்பது குறித்த பயிலரங்கு, திண்டுக்கல் மாவட்ட கருவூல அலுவலர் ஆ.பெ.நா. பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.
இப் பயிலரங்கை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ். முத்துச்சாமி துவக்கி வைத்து, அரசுத் துறைகள் கணினிமயமாக்கப்பட்டு வருவதையும், அதன் முக்கியத்துவத்தையும் மற்றும் அரசின் நோக்கம் குறித்தும் பேசினார்.
புதிய மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து, விருதுநகர் மாவட்டக் கருவூல கண்காணிப்பாளர் வி.எம். கிருஷ்ணமூர்த்தி பயிற்சி அளித்தார்.
பயிலரங்கத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறையைச் சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.