Wednesday, September 08, 2010 1:52 PM IST
Click
சினிமா
கௌதம் மேனனின் ரசிகை நான்: சமீராரெட்டி

First Published : 26 Jul 2010 12:00:00 AM IST


விழாக்களில் மட்டும்தான் இந்தப் பக்கம் உங்களைப் பார்க்க முடியுமா?

அப்படியெல்லாம் இல்லை. எனக்கு சென்னையையும், சென்னை ரசிகர்களையும் ரொம்பவே பிடிக்கும். தமிழ் சினிமாக்களில் நடிப்பதற்கு நான்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தமிழ் சினிமாவை தேர்ந்தெடுத்து நடித்ததில் சந்தோஷம். ஆனால், ஹிந்தி, தெலுங்கு, போஜ்புரி, பெங்காலி, மலையாளம் என ஏகப்பட்ட மொழிப் படங்களில் நடிப்பதால், தமிழில் சின்ன இடைவெளி விட்டாகி விட்டது. தொடர்ந்து தமிழில் நடிக்க முடியாமல் போனதற்கு நான் மட்டும்தான் காரணம். வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. சீக்கிரமா... உங்களை திகில் சினிமாவில் சந்திக்கிறேன்.

கௌதம் மேனன் படம் என்றதும் பேய் கதையிலும் நடிக்கிறீர்களே?

"நடுநிசி நாய்கள்' பெயரே ஈர்க்குதுல்ல... நீங்கள் இதுவரை பார்க்காத சமீராவை இதில் பார்க்கலாம். திகில், திடீர் திருப்பம் என சஸ்பென்ஸ்களால் தியேட்டர்கள் திக்கு முக்காட போகிறது. அனுபவமும் புதுசா இருக்கும். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். கிளாமர் ரோல்களில் மட்டுமே நடிக்க நான் சினிமாவுக்கு வரவில்லை. எல்லாவற்றிலும் பயணிக்க வேண்டும் என ஆசை. அதனால்தான் சைலண்டாக ஒரு படம். "வாரணம் ஆயிரம்' படத்தில் ரொம்ப சின்ன ரோல்தான். ஆனால், எவ்வளவு ரசிகர்கள் கிடைத்தார்கள். அதே சமயம் "அசல்' படத்தில் நான் நடித்த ரோல் நிறைய பேருக்குப் பிடிக்கவில்லை. அதனால் ரொம்ப செலெக்ட்டிவ்வாக இனிமேல் நடிக்க விரும்புகிறேன். முதலில் கௌதம் மேனனின் ரசிகை நான். அவரோட படத்தில் தொடர்ந்து நடிப்பது எனக்கு கிடைத்த பரிசு. ஐ லவ் கௌதம் மேனன்.

கௌதம், சரண் என பெரிய இயக்குநர்களின் படங்களில்தான் நடிப்பீர்களா?

தமிழை விட மற்ற மொழிப் படங்களில் பிஸியாக இருக்கிறேன். "அசல்', "வாரணம் ஆயிரம்" இரண்டும் கதைகளும் நன்றாக இருந்தன. அஜீத், கௌதம் என பிடித்துப் போன ஆள்கள். அடுத்து தமிழில் கதைகள் கேட்க ரெடியாக இருக்கிறேன். இன்னும் சில மாதங்கள் பொறுத்திருங்கள். எல்லா இயக்குநரிடம் பேசுவேன்.

தமிழில் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்?

இதுவரை இரண்டு ஹீரோக்களுடன்தான் நடித்திருக்கிறேன். அதுக்குள்ளேயே இந்த கேள்விக்கு எப்படிப் பதில் சொல்ல முடியும். ஆனால், எனக்கு ரொம்ப பிடிச்ச இயக்குநர் கௌதம் மேனன்.  "காக்க காக்க' படத்தைப் பார்த்து விட்டு அவருடைய ரசிகை ஆகி விட்டேன். திடீரென ஒரு நாள் "வாரணம் ஆயிரம்' படத்தில் நடிக்க வாய்ப்பு... எப்படி இருக்கும். சினிமாவில் பலருக்கு கிடைக்காத வாய்ப்பு அது. அஜீத் பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன். என் வாழ்க்கையில் சந்தித்த வித்தியாசமான மனிதர். அடக்கம், எளிமைன்னு நிறைய சொல்லுவாங்க... அதை அவரிடம்தான் நேரில் பார்த்தேன். இப்போது நிறைய பேர் வந்து விட்டார்கள். அவர்களுடன் பழகும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை.

"ஸ்கூபா டைவிங்'குக்காக வெளிநாடுகளை சுற்றி வருகிறீர்களாமே?

இதெல்லாம் யாருப்பா சொன்னா... மீடியாவுக்கு எப்படிதான் இதெல்லாம் தெரியுதோ? ஸ்கூபா டைவிங் ரொம்ப பிடிக்கும். ஒரு வேளை சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் ஸ்கூபா டைவிங் டீச்சராக இருந்திருப்பேன். போன சம்மரில் தாய்லாந்து கடலில் நீந்திட்டு வந்தேன்.  இப்போ அடுத்ததா அயர்லாந்து போகலாம் என பிளான் போட்டிருக்கிறேன். இன்னும் நிறைய நாடுகளுக்கு சென்று நீந்தி வர வேண்டும் என ஒரு ஆசை இருக்கிறது.

ஐ.பி.எல்.லின் இரவு நேர பார்ட்டிகள், பொது இடங்களில் கிளாமர் என நிறைய பேச்சு இருந்ததே?

ஷில்பா ஷெட்டி, ஷாரூக்கான் என எல்லோரும் நண்பர்கள். சென்னை எனக்கு ரொம்பப் பிடிச்ச ஊர். இப்போது நான் எந்த டீமூக்கு சப்போர்ட் பண்ணியிருக்க வேண்டும் என நீங்களே சொல்லுங்க? அதனால் பைனலில் என் சப்போர்ட் சென்னைக்குதான். அவங்க ஜெயிச்சதும் கஷ்டப்பட்டு விசில் அடித்தேன். எல்லோருக்கும் வாழ்த்துச் சொன்னேன். அதற்கான பார்ட்டிகளிலும் கலந்து கொண்டேன். அவ்வளவுதான்.

மும்பை போலீஸ் உங்களிடம் லஞ்சம் கேட்டாங்கன்னு பரபரப்பு ஆச்சே... என்ன விஷயம்?

அது ஒரு காமெடியான விஷயம். செல்போனில் பாட்டு கேட்டுக்கிட்டே கார் டிரைவ் செய்தேன். போனில் பேசிக்கிட்டே கார் ஓட்டுறேன்னு நினைத்து டிராஃபிக் போலீஸ் காரை நிறுத்தி விட்டார்கள். நான் எவ்வளவு சொல்லியும் புரிந்து கொள்ளவில்லை. ""சரி ஃபைன் கட்டுறேன், எவ்வளவு''ன்னு கேட்டதும் லஞ்சம் கேட்டார்கள். அது தர முடியாதுன்னு நான் சொல்ல, அவர்கள் வம்பிழுக்க கூட்டம் சேர்ந்து விட்டது. நான் சினிமா ஆள் என தெரிந்ததும் போகச் சொல்லி விட்டார்கள்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்