வனத்திலிருந்து வெளியேறும் யானைகளை கண்காணிக்க நவீன கருவி
First Published : 30 Jul 2010 01:20:41 PM IST
Last Updated :
கோவை, ஜூலை 29: வனத்திலிருந்து வெளியேறும் யானைகளை கண்காணிக்க நவீன கருவியை கோவை சி.ஐ.டி. கல்லூரி பேராசிரியர், மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வனவிலங்குகளால் விவசாயிகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, யானைகளால் அதிக பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். வனத்தில் குடிநீர் மற்றும் உணவுக்கு பற்றாக்குறை ஏற்படும்போது அங்கிருந்து வெளியேறும் யானைகள், மலையோர கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்துவிடுகின்றன. ஒரு சில இடங்களில் யானைகள் வெளியேறும்போது ரயில் தண்டவாளங்களைக் கடக்கின்றன. அப்போது ரயிலில் அடிபட்டு யானைகள் இறக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நவீன கருவியை சி.ஐ.டி. கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல்துறை பேராசிரியர்கள் ஆர்.ஜெயபார்வதி, எஸ்.ஜே.சுகுமார், மாணவர்கள் ஜி.சிவசங்கர், எஸ்.வி.ஸ்ரீகாந்த் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். வனத்துறையின் நிதிஉதவியுடன் இக் கருவியை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இக் கருவி செயல்படும் விதம் குறித்து பேராசியர்கள் ஜெயபார்வதி, சுகுமார் ஆகியோர் கூறியது: வன எல்லை பகுதிகளில் யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறியும் வைப்ரேஷன் சென்சார் கருவி பதித்துவைக்கப்படும். இக் கருவியில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு வயர் மூலம் இணைப்பு கொடுக்கப்படும். சென்சார் கருவியில் இருந்து வரும் தகவலைப் பெற்று, அங்கிருந்து செல்போன்களுக்கு தகவல்களைப் பரிமாறும் வகையில் "எம்படட் சிஸ்டம்' என்னும் கருவி பயன்படுத்தப்படுகிறது. வன எல்லையை யானைகள் கடக்கும்போது சென்சார் கருவியில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வரும். அங்கிருந்து எம்படட் சிஸ்டம் மூலம் சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் சென்றுவிடும். வன எல்லையை யானை கடந்த இடம், நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வனத்துறை அதிகாரிகளுக்கு சென்றுவிடும். இதுபோல தகவல் வந்த அடுத்த நிமிடமே தங்களுக்கு கீழ் இருக்கும் அதிகாரிகள் அல்லது ஊழியர்களுக்கு தகவலை பரிமாறி வழி வறும் யானைகளை வனப் பகுதிக்குள் மீண்டும் விரட்ட முடியும் என்றனர். இக் கருவியின் அறிமுக நிகழ்ச்சி சி.ஐ.டி. கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை மண்டல வனப்பாதுகாவலர் கண்ணன், மாவட்ட வன அலுவலர் அன்வர்தீன், கல்லூரி தாளாளர் எஸ்.ஆர்.கே.பிரசாத், முதல்வர் வி.செல்லத்துரை ஆகியோர் பங்கேற்றனர்.