மயானப் பாதை கோரி சடலத்துடன் சாலை மறியல்
First Published : 30 Jul 2010 12:50:18 PM IST
Last Updated :
தருமபுரி, ஜூலை 29: தருமபுரி, கடத்தூர் அருகே மயனாப் பாதை கோரி சடலத்தை சாலையில் கிடத்தி இறந்தவரின் உறவினர்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.கடத்தூர், தேக்கல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராமலிங்கம் (42). இவர் புதன்கிழமை இறந்தார். இதையடுத்து, அவரது உடல் வியாழக்கிழமை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வழியில் புளியமரத்தின் கிளை தடங்கலாக இருந்ததால் ராமலிங்கத்தின் உறவினர்கள் மரக்கிளையை வெட்ட முயற்சித்தனராம். அப்போது, புளியமரத்தின் உரிமையாளர் குமரேசன் மற்றும் அவரது உறவினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராமலிங்கத்தின் சடலத்தை தருமபுரி-பொம்மிடி சாலையில் கிடத்தி, தங்களுக்கு மயானப் பாதை வசதி வேண்டும், மயானத்துக்குச் செல்லும் வழியில் இடையூறாக இருக்கும் புளியமரத்தை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் ராமதுரைமுருகன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.