Friday, September 10, 2010 2:36 AM IST
Click
கட்டுரைகள்
நக்ஸல் எனும் நஞ்சு...

First Published : 30 Jul 2010 12:22:10 AM IST


நக்ஸலிசம் என்ற சொல்லைக் கேட்கும் போதே குலை நடுங்குகிறது. அண்மைக்காலமாக அவர்களின் செயல்பாடு அந்த அளவுக்கு மனிதநேயமற்ற முறையில் அமைந்துள்ளது. அப்பாவி மக்களைக் கொன்றுகுவிக்கும் அரக்கர்களாக நக்ஸல்கள் உருவெடுத்துள்ளனர்.

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிகார், ஆந்திரம், ஒரிசா, மேற்கு வங்கம் என சில பகுதிகளில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த நக்ஸல்கள், தங்களது அதிகார எல்லையை விரிவுபடுத்த முயல்கின்றனர்.

தேசத்தையே கட்டுக்குள் கொண்டுவந்து சூறையாடத் துடிக்கின்றனர். நக்ஸல்களை இப்படியே வளரவிட்டால் இந்தியாவில் ஜனநாயகம், ஒருமைப்பாடு என்பதெல்லாம் கேள்விக்குறியாகும் என்பதில் துளியும் ஐயமில்லை.

நீண்டகாலமாகவே சதிச்செயலை அரங்கேற்றிவந்த நக்ஸலைட்டுகளை கண்டும் காணாமல் இருந்ததுதான் அவர்கள் இந்த அளவுக்கு தழைத்தோங்கியதற்குக் காரணம்.

தந்தேவாடாவில் 76 சிஆர்பிஎப் வீரர்களைக் கொன்று குவித்த பிறகுதான் விழித்துக் கொண்டுள்ளோம். "நக்ஸல்களை நசுக்க வேண்டும்' என்ற கோஷத்தோடு நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். இது தும்பைவிட்டு வாலைப்பிடிக்கும் கதைதான் என்றாலும், இப்போதாவது விழித்துக்கொண்டோமே என்பதை நினைத்து ஆறுதல் அடைந்து கொள்வதைத்தவிர வேறு வழியில்லை.

நக்ஸல்களும் இந்த நாட்டு மக்கள். இதனால் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்று மத்தியில் ஆட்சியில் அமருபவர்கள் எல்லாம் காலங்காலமாய் கூறிவந்தாலும், தந்தேவாடா துயரச் சம்பவத்துக்குப் பிறகு நக்ஸல்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஏன், ராணுவத்தைக்கூட களத்தில் இறக்கலாம் என்றும் நம்பினர்.

ஆனால் இதையெல்லாம் இனிமேலும் செய்யப்போவதில்லை என்ற ரீதியில் மத்திய அரசின் கருத்து அமைந்தது. நக்ஸல்கள் நம்மக்கள். அவர்களுக்கு எதிராக ராணுவத்தைப் பயன்படுத்துவதில்லை என்ற அரசின் முடிவில் மாற்றமில்லை என்று அரசு அறிவித்தது.

வழக்கம்போல அரசு மாநில போலீஸôரையும், சிஆர்பிஎப், துணை ராணுவ வீரர்களையும் நக்ஸல்களுக்கு எதிராக முடுக்கிவிட்டது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட நக்ஸல்கள் மீண்டும் பாதுகாப்பு வீரர்களின் உயிரைப் பறிக்கத் தயங்கவில்லை.

வெட்டவெளியில் சண்டையிடுவது வேறு. அடர்ந்த வனப்பகுதியில் போர்புரிவதென்பது வேறு. அடர்ந்த காட்டுப்பகுதியில் எதிரிகளை இலகுவாக வீழ்த்தும் போர்ப்பயிற்சி பெற்ற நக்ஸல்களுக்கு எதிராக சிறப்புப் பயிற்சியே இல்லாத பாதுகாப்பு வீரர்களையே மீண்டும் மீண்டும் அனுப்புவது தவறு என்பதை மாநில அரசுகளும் சரி, மத்திய அரசும் சரி புரிந்து கொள்ளவில்லை. இதுதான் பாதுகாப்பு வீரர்களை நக்ஸல்கள் மரணக்குழிக்குள் அனுப்பி வைக்க முழுக்காரணம்.

இந்த இடத்தில் ராணுவத் தலைமை தளபதி வி.கே.சிங், சமீபத்தில் சொன்ன கருத்தைக் கவனத்தில் கொள்வது அவசியம். நக்ஸல்களுக்கு எதிராகப் போலீஸôரும், துணை ராணுவ வீரர்களும் எடுத்த நடவடிக்கையால் இதுவரை பெரிய முன்னேற்றம் இல்லை.

இதனால் நக்ஸல்களுக்கு எதிரான போருக்கு நாம் தயாராக வேண்டும் என்று தமது துறை சகாக்களுக்கு வி.கே.சிங் அறிவுறுத்தல் விடுத்தார். வி.கே.சிங்கின் கருத்து, இனிமேலும் நக்ஸல்களை விட்டுவைக்கக்கூடாது. அவர்களை ராணுவத்தின் மூலம் ஒடுக்கும் காலம் வந்துவிட்டது என்பதை மறைமுகமாக வெளிப்படுத்துகிறது. இந்த உயர் அதிகாரியின் கருத்தை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, நக்ஸல்களுக்கு எதிராக ராணுவத்தை நேரிடையாக இறக்கி அவர்கள் இருக்கும் இடமே தெரியாமல் செய்வதே இத்தருணத்தில் எடுக்கும் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

இதைவிடுத்து, நக்ஸல்களுக்கு எதிராக வழக்கமான போக்கையே கடைப்பிடித்து, செய்யும் தவறையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருந்தால் நக்ஸல்கள் கரம் மேலும் மேலும் ஓங்குமே தவிர, ஒடுங்குவதற்கு வாய்ப்பே இல்லை.

நக்ஸல்களை ஒடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசிடம் தெளிவான திட்டம் இல்லை. நக்ஸல்களை அழிக்க மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஒழுங்கான ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்பது பாதுகாப்பு நிபுணர்களின் நீண்டகால ஆதங்கம்.

இதே ஆதங்கத்தை சமீபத்தில் பிகார் முதல்வர் நிதீஷ் குமாரும் வெளிப்படுத்தினார். பிரதமர் தலைமையில் நடைபெற்ற நக்ஸல்கள் பாதிப்பு மாநில முதல்வர்களின் கூட்டத்தில் பங்கேற்ற நிதீஷ் குமார், நக்ஸல்களை ஒடுக்க உறுதியான நடவடிக்கையை தமது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. ஆனால் படையை வழிநடத்திச் செல்லும் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுகிறது. கூடுதல் அதிகாரியை அனுப்பி உதவுங்கள் என்று மத்திய அரசுக்கு பல மாதங்களுக்கு முன்பே கோரிக்கை விடுத்தோம். எங்களது கோரிக்கையை இந்த நிமிடம் வரை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று பகிரங்கமாகக் குற்றம்சுமத்தினார்.

அந்தக் கூட்டத்தில் மாநிலங்களுக்கு அளித்த வழிகாட்டுதலில் சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களும் நக்ஸல்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த தனிப்படையை உருவாக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு 4 மாநில முதல்வர்களும் தலை அசைத்து இசைவு தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தப் படைப்பிரிவுக்கு ஆயுதங்கள் வாங்குதல், சிறப்புப் பயிற்சி அளித்தல் உள்பட படைக்கு ஆகும் செலவு குறித்து மத்திய அரசு சொன்னபடி செய்ய வேண்டும். இதில் மாற்றம் இருக்கக்கூடாது என்றே 4 மாநில முதல்வர்களும் நினைக்கின்றனர்.

இதைப் புரிந்து கொண்டு மத்திய அரசு நடத்தல் அவசியம். இல்லையென்றால் பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் நிதீஷ் குமார் குரல் எழுப்பியது போல் இந்த 4 முதல்வர்களும் கோஷமிடுவார்கள் என்பதில் மாற்றமிருக்காது.

கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்