Wednesday, September 08, 2010 12:41 PM IST
Click
கட்டுரைகள்
சிறுபான்மை வாக்குத்தான் எல்லாமே!

First Published : 31 Jul 2010 12:00:00 AM IST


தற்போதைய அரசியல் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது. அமைப்பின் மீதான நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யும் அளவுக்கு அன்றாட நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன. விலைவாசிப் பிரச்னையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து காங்கிரஸ் மீதான தாக்குதலை வலுவாக்கியிருக்கின்றன.

தங்களுக்கென்று தனித்தனி கோரிக்கைகளை வைத்திருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஏனோ மவுனமாக இருக்கின்றன. கட்சிகளுக்குள்ளேயே கருத்து பேதங்கள் முளைத்திருப்பதால் நிலைமையை மேலும் குழப்பமாகியிருக்கிறது.

 இந்தக் குழப்பத்தை மதச்சார்பின்மை மற்றும் மதவாத மோதல், சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை வாக்கு வங்கி அரசியல், கூட்டணி கட்டாயங்கள் ஆகியவை சேர்ந்து மேலும் சிக்கலாக்கியிருக்கின்றன.

 இப்போதைய முக்கியப் பிரச்னையான விலைவாசி உயர்வை, உணவுப் பொருள்களுக்கு மட்டுமேயானதாகக் கருதக் கூடாது. நமது பொருளாதாரம் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் வளர்ச்சியடைந்திருந்தாலும், அடித்தட்டு சாமானியர்கள் இன்னமும் நெருக்கடியில்தான் இருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக, இப்போது நல்ல மழை பெய்திருக்கிறது. அதை உற்பத்தியாக மாற்ற வேண்டும். உற்பத்திப் பொருள்கள் அனைவரையும் சென்றடையும் வகையில் அரசு திறமையாகச் செயல்பட வேண்டும். இவற்றைத்தான் மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

 அமைச்சரவை மாற்றம் இன்னொரு முறை தள்ளிப் போயிருக்கிறது. தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவை மாற்றுவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை திமுக தெளிவாகச் சொல்லிவிட்டது. இதேபோல், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் பிரத்யேகப் பிரச்னைகள் இருக்கின்றன. அவ்வளவு ஏன்? அமைச்சரவை மாற்றம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல சிக்கல்கள் இருக்கின்றன.

 பல மாநிலத் தேர்தல் களங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. அணி மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. கூட்டணிகள் புதிய வடிவம் பெறத் தொடங்கியிருக்கின்றன. இந்தப் பரபரப்பில்தான் அமைச்சரவை மாற்றத்தை கட்சிகள் மறந்து போயிருக்கின்றன.

 விலைவாசிப் பிரச்னை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயலைக் கிளப்பியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் அரசியல் விபத்துகள் தொடர்கின்றன. இவற்றில் எதுவும் நாட்டு நலன் அல்லது கட்சி நலன் சார்ந்தவையல்ல. எல்லாம் சொந்த விருப்பு, வெறுப்புகளாலேயே நிகழ்கின்றன.

 இன்னும் இரு மாதத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடக்க இருக்கின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எழுந்திருக்கும் கருத்து வேறுபாடுகள் அரசியலில் பெரிய விவாதத்துக்கு வித்திட்டிருக்கிறது. கட்சியில் நடக்கும் இதுபோன்ற சர்ச்சைகளைக்கூட கையாள முடியாத அளவுக்குக் கட்சித் தலைமை அதிகாரமற்ற நிலையில் இருக்கிறது.

 பிகாரில் சட்டப் பேரவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இப்போதைய நிலவரப்படி ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணிதான் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. எனினும் கடந்த தேர்தலைப் போல இது தெளிவான வெற்றியாக இருக்காது. ஆட்சிக்கு எதிராக மக்கள் மனநிலை காரணமாக இந்தத் தேர்தலில் நிதீஷ் கூட்டணிக்கு ஆதரவான வாக்கு சதவீதம் குறையக்கூடும்.

 அரசுக்கு எதிரான வாக்குகளை அள்ளுவதற்கு காங்கிரஸ் கட்சி போதிய முயற்சி மேற்கொள்ளாவிட்டால், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், பாஸ்வானின் எல்ஜேபி ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலில் கூடுதல் இடங்களைப் பிடிக்கும். அதேபோல் ஐக்கிய ஜனதா தளத்தின் சிறுபான்மை வாக்கு வங்கியில் ஏற்படும் திருப்பமும் இந்தக் கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகளைப் பெற்றுத்தரும். கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்தபோது பிகாரில் இருந்த அரசியல் நிலைமைக்கும், தற்போதைய நிலைக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 வாக்கு வங்கி என்பது எல்லாக் கட்சிக்கும் உண்டு. 2004-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு சிறுபான்மை வாக்கு வங்கிதான் காரணம். குஜராத் வன்முறையால் சிறுபான்மை இன மக்கள் காங்கிரஸýக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதே நிலைதான் கடந்த மக்களவைத் தேர்தலிலும் எதிரொலித்தது.

 வாக்கு வங்கி அரசியல் என்பது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, சமாஜவாதி, ஆர்ஜேடி, எல்ஜேபி, பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், திரிணமூல் காங்கிரஸ், திமுக, அதிமுக என எல்லாப் பிராந்திய கட்சிகளுக்கும் பொருந்தும். அனைவருக்கும் சிறுபான்மை வாக்குத் தேவை. இந்த ஒருவிஷயம்தான் 2004-ம் ஆண்டுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிமைப்படுத்தப்பட்டதற்குக் காரணம்.

 நாமெல்லாம் சட்டத்தின் ஆட்சி பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எங்கே நடக்கிறது சட்டத்தின் ஆட்சி? பயங்கரவாதத் செயல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்! எத்தனையோ பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்! இந்த அக்கிரமங்களைச் செய்யும் பயங்கரவாதிகளுக்கு புகலிடமும் அடைக்கலமும் கொடுக்கும் கிரிமினல்களை நாம் என்ன செய்வது?

 பயங்கரவாதச் செயல்களுக்கு எதிரான வழக்குகள் பத்து, இருபது ஆண்டுகளுக்கு சாவகாசமாக நடத்தப்படுகின்றன. ஒரு தீர்ப்பு வந்த பிறகும், அதைச் செயல்படுத்துவதற்கு யோசனை செய்கிறோம். இது புத்திசாலித்தனமல்ல.

 இந்த நேரத்தில், பாதுகாப்புப் படையினர், போலீஸôர் நடத்தும் என்கவுன்ட்டர்களைப் பற்றியும் நாம் சொல்லியாக வேண்டும். இந்த மாநிலம், அந்த மாநிலம் என்கிற பேதமின்றி எல்லா மாநிலங்களிலும் என்கவுன்ட்டர்கள் நடக்கின்றன. நடத்தப்படும் முறைகள் வேண்டுமானால் வேறுபடலாம். ஆனால், எல்லாமே என்கவுன்டர்கள்தான். இதெல்லாம் தேவையா, வேண்டாமா என்பது பற்றி மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தினால் பரவாயில்லை. மக்கள் கருத்து தெரிந்தால் ஆட்சியாளர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

 ஆட்சியாளர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு மக்களுக்குக் கிடைப்பதில்லை. அப்படியிருக்கும்போது, நீதிநெறிகள் பற்றியும், சட்டத்தின் ஆட்சி பற்றியும் பிரசங்கம் செய்துவிட்டால் மட்டும் நல்லாட்சி நடத்துவதாக அர்த்தமாகிவிடாது.

 இந்த சந்தர்ப்பத்தில் "எ வெட்னெஸ்டே' என்கிற திரைப்படம் பார்த்தது நினைவுக்கு வருகிறது. திரைப்படம் முடிந்ததும் திரையரங்கில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் செய்து தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர். இதைப் பார்த்த எனக்கு ஒரே அதிர்ச்சி. இப்படியும் நடக்குமா என ஆச்சரியம்.

 அந்தப் படம் ஒரு சாமானியனைப் பற்றியது. அவன்தான் படத்தின் கதா நாயகன். நான்கு பயங்கரவாதிகள் கொண்ட ஒரு குழுவை அவன் எப்படி ஒழிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. முடிவில் நாட்டின் அமைப்புக்கு எதிரான தனது கருத்துகளைத் தெரிவிக்கிறான். இதற்குத்தான் பார்வையாளர்களின் கரகோஷம்.

 ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி வருவதை பென்டகனின் 96,000 ஆவணங்கள் மூலமாக "விக்கி லீக்ஸ்' இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது. இதனால் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவோரை நாம் சும்மா விட்டுவிடக்கூடாது. வரும் நாள்களில் இந்த விவகாரம் தொடர்பான வேறு பல விஷயங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.  

 குஜராத் போலி என்கவுன்ட்டர் விவகாரம் இப்போது பல திருப்பங்களைச் சந்தித்திருக்கிறது. இதில் மக்களின் கருத்து இரண்டு வகையாக இருக்கிறது.

சிபிஐயின் புலனாய்வு முடிந்து ஏதாவது ஒரு முடிவுக்கு வருவதற்கு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆகிவிடும் என்பது மட்டும் தெரிகிறது. இந்தக்கால அரசியல் சூழலில் ஆவணக் கசிவுகளுக்கும், ரகசியப் புலனாய்வுகளுக்கும் நடைமுறையில் என்ன மதிப்பு கிடைத்துவிடப் போகிறது?

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்