கொழும்பு, மே 17- உடனடியாக போர்நிறுத்தம் செய்ய இலங்கை அரசை உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தொடர்புத்துறையின் தலைவர் எஸ். பத்மநாதன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
இலங்கை ராணுவம் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதால் ஒரே நாளில் பொதுமக்களில் 3000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 25000 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவ உதவியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
முன்னேறி வரும் இலங்கை ராணுவத்தை எந்தவித உதவியுமின்றி எங்கள் மக்களின் ஆதரவுடன் எதிர்த்து போராடி வருகிறோம். குண்டுவீச்சிலும் பசியிலும் நோயிலும் எங்கள் மக்கள் உயிரிழப்பதை தடுக்க விரும்புகிறோம். அவர்களுக்காக ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளத் தயாராக உள்ளோம்.
எங்கள் கொள்கைக்காக போராடுவதையோ புலிகளின் பயமற்றதன்மையையோ யாரும் சந்தேகித்துவிட முடியாது. மூன்று தலைமுறைகளாக இலங்கை ராணுவத்தை எதிர்த்து போராடியுள்ளோம். தமிழ் மக்களை காப்பதற்காக ஆயுதம் வைத்துக்கொள்வது எங்கள் உரிமை ஆகும். எங்கள் மக்களுக்கு நீதி கிடைப்பதை எந்த படையும் தடுத்துவிட முடியாது.
இந்த நேரத்தில் உடனடி தேவை போர்நிறுத்தம் தான். அப்பாவி மக்கள் உயிரிழப்பதை காக்கும் பொருட்டு சர்வதேச சமூகம் இலங்கையை வலியுறுத்தி போர்நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விடுதலைப் புலிகள் தரப்பில் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.