ஆர்ஜெண்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் மாரடோனா நீக்கம்
First Published : 29 Jul 2010 04:59:25 AM IST
Last Updated :
பியூனஸ் அயர்ஸ், ஜூலை 28: ஆர்ஜெண்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மாரடோனா நீக்கப்பட்டுள்ளார். ஆர்ஜெண்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார் மாரடோனா. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கால் இறுதி ஆட்டத்தில் ஆர்ஜெண்டினா அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் படு மோசமாகத் தோற்றது. இதை அடுத்து மாரடோனா தோல்விக்கு பொறுப்பேற்று பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவரே முன் வந்து அறிவித்தார். அதை அப்போது ஆர்ஜெண்டினா கால்பந்து சம்மேளனம் ஏற்கவில்லை. இந்நிலையில் தான் பயிற்சியாளராக தொடர்ந்து நீடிக்க விரும்புவதாக அறிவித்தார் மாரடோனா. ஆனால் அதற்கு சில நிபந்தனைகளை அவர் விதித்தார். தன் விருப்பப்படிதான் தனது உதவியாளர்களை நியமிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை அவர் விதித்து இருந்தார். அவரது நிபந்தனைகளை ஏற்க முடியாது என அந்த நாட்டு கால்பந்து சம்மேளனம் அறிவித்தது. அவரை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது அந்த நாட்டு கால்பந்து சம்மேளனம். இதற்கான தீர்மானம் சம்மேளனத்தின் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சம்மேளனத்தின் தலைவர் ஜூலியா கிரோன்டோனா கூறினார். ஆர்ஜெண்டினா அணிக்கு 1986-ம் ஆண்டு உலகக் கோப்பையை பெற்றுத் தந்த மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரர் மாரடோனா. அவர் நீக்கப்பட்டிருப்பதற்கு அவரது ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.