சென்னை பல்கலை. முதுநிலை படிப்பு: உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
First Published : 02 Jul 2010 02:18:07 AM IST
Last Updated :
சென்னை, ஜூலை 1: சென்னை பல்கலைக்கழகத்தின் முதுநிலைப் பட்டப் படிப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.ஒரே ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் லியோ அலெக்சாண்டர் கூறியது:சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் உள்ள முதுநிலைப் படிப்புகளுக்கான பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டுத் தேர்வின் ஏப்ரல் பருவத் தேர்வில் ஒரே ஒரு படிப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடி தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் மாணவர்களிடம் இருந்து கட்டணம் எதுவும் பெறாமல் சென்னை பல்கலைக்கழகத்தின் விசாரணை மையத்தில் வழங்கப்படுகின்றன. எம்.பி.ஏ. படிப்புக்கான தேர்வுக் கட்டணம் ரூ.600. மற்றப் படிப்புகளுக்கான கட்டணம் ரூ.350.தேர்வுக் கட்டணத்தை பதிவாளர், சென்னை பல்கலைக்கழகம் என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி. மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து ஜூலை 5-ம் தேதிக்குள் சென்னை பல்கலைக்கழகத்தில் அளிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு www.ideunom.ac.in என்ற இணையத்தைப் பார்க்கவும்.