சுயநிதி எம்.பி.பி.எஸ்.: அனைத்து அரசு இடங்களும் நிரம்பின
First Published : 29 Jul 2010 12:00:00 AM IST
Last Updated :
சென்னை, ஜூலை 28: தமிழகத்தில் உள்ள ஏழு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து 542 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் கடந்த ஜூலை 23-ம் தேதி முதல் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்குக் கலந்தாய்வு நடைபெற்றது. மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி, கோவை பி.எஸ்.ஜி. உள்பட ஏழு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 542 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்குக் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ÷நடப்புக் கல்வி ஆண்டில் (2010-11) புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சென்னை வண்டலூர் தாகூர் மருத்துவக் கல்லூரியில், முற்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவருக்கு ஒரு இடம், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு நான்கு இடங்கள் என மொத்தம் 5 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் மட்டும் நீதிமன்ற உத்தரவுப்படி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.நடப்புக் கல்வி ஆண்டில் (2010-11) தொடங்கப்பட்ட திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த ஜூலை 26-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கின. விழுப்புரம், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர்ந்த மாணவர்களுக்கு வியாழக்கிழமை (ஜூலை 29) வகுப்புகள் தொடங்குகின்றன.அரசு-சுயநிதி பி.டி.எஸ்.: சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள அனைத்து 85 பி.டி.எஸ். இடங்களும் நிரம்பிவிட்டன. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில், 487 பி.டி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு வரும் 31-ம் தேதி வரை தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறுகிறது.