பாகிஸ்தானில் விமான விபத்து: 152 பேர் பலி
First Published : 29 Jul 2010 12:00:00 AM IST
Last Updated :
இஸ்லாமாபாத் அருகே புதன்கிழமை வனப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் யாராவது உயிர் பிழைத்திருப்பார்களா என தேடுகிறார் மீட்புப்பணியாளர்.
இஸ்லாமாபாத், ஜூலை 28: பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் அருகே தனியார் விமான நிறுவன விமானம் மலையில் மோதி துண்டு துண்டாக உடைந்து தீப்பற்றியது. இதில் 147 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உயிரிழந்தனர். ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை.விபத்து நடந்த இடத்திலிருந்து 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக முதலில் செய்திகள் வெளியாயின. பின்னர் அது தவறான தகவல் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.பலத்த மழை, மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.மிகப்பெரிய துயர சம்பவம் நிகழ்ந்துவிட்டது. விபத்துக்கு மோசமான வானிலை காரணம் என்று கருதப்பட்டாலும் தீவிரவாதிகளின் சதிவேலை காரணமாக இருக்குமா என்பதையும் விசாரிக்கும்படி மத்திய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்தார்.ஏர் ப்ளூ என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ-321 ஏர் பஸ் விமானம் கராச்சியிலிருந்து இஸ்லாமாபாதுக்கு காலை 7.50க்கு புறப்பட்டது. இஸ்லாமாபாதில் உள்ள பேநசீர் புட்டோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த நிலையில் அடர்ந்த காட்டுப்பகுதியான மர்கலா குன்றுப்பகுதியில் காலை 10 மணிக்கு திடீரென மலை மீது மோதி நொறுங்கியது. உடைந்த விமானத்தின் பாகங்கள் ஆங்காங்கே சிதறி விழுந்து கொழுந்துவிட்டு எரிந்தபடி இருந்த காட்சியை தொûலைக்காட்சிகள் வெளியிட்டன. புதர்களும் மரங்களும் கூட தீப்பிடித்தன. விபந்து நடந்த இடம் கரும் புகைமண்டலம் போல் மாறியிருந்தது.மலைப்பகுதி வழியாக சென்ற மீட்புப்பணியாளர்கள் சுமார் அரை மணி நேரம் அளவுக்கு நடந்து சென்றே விபத்து பகுதியை அடைய முடிந்தது. 5 குழந்தைகள், 29 பெண்கள், இரு அமெரிக்கர்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர், தேனிலவுக்காக இஸ்லாமாபாத் வந்த ஒரு புதுமண ஜோடி உள்ளிட்டோர் விபத்தில் பலியானவர்களில் அடங்குவர்.கராச்சியிலிருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் பயணம் செய்ய மொத்தம் 159 பேர் பதிவு செய்திருந்தனர். கடைசி நேரத்தில் 12 பேர் வரமுடியாமல் போனது. அதனால் அவர்கள் நல்லவேளையாக தப்பினர் என ஏர் ப்ளூ நிறுவன அதிகாரி நிருபர்களிடம் தெரிவித்தார்.சடலங்கள் அனைத்துமே அடையாளம் தெரியாத வகையில் கருகி சிதைந்து தலை ஒரு இடத்தில், கை ஒரு இடத்தில், கால்கள் ஒரு இடத்தில் என பிய்ந்து ஆங்காங்கே விழுந்து கிடந்தது நெஞ்சை பிளப்பதாக இருந்தது. ஒரு உடல் கூட சிதைவுபடாமல் கிடைக்கவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 98 சதவீத மீட்புப் பணி முடிந்துவிட்டது. சிதைந்து கிடந்த உடல்கள் பைகளில் அடைக்கப்பட்டு விபத்து நடந்த இடத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டது. இதற்காக பலதடவை ராணுவ ஹெலிகாப்டர்கள் அங்கு செல்லவேண்டிவந்தன என மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். 2600 அடி உயரத்தில் அது பறந்தபோது தரையிறங்க அனுமதி தரப்பட்டதாகவும் அதையடுத்து 3000 அடி உயரத்துக்கு சென்ற அந்த விமானம் ரேடார் திரையை விட்டு மறைந்து போனதாகவும் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்தார்.இந்தியா இரங்கல்பாகிஸ்தானில் நடந்த விமான விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ளது இந்தியா. விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு கடிதம் எழுதியுள்ளார். வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பாகிஸ்தான் அமைச்சர் குரேஷிக்கு கடிதம் எழுதியுள்ளார்.