காஷ்மீர் குறித்து இந்தியாவுடன் பேச்சு: கிலானி தகவல்
First Published : 25 Sep 2009 09:44:00 PM IST
Last Updated :
இஸ்லாமாபாத், செப். 24: பாகிஸ்தான்-இந்தியா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்னை குறித்து பேச இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானி தெரிவித்தார். தனது சொந்த ஊரான முல்தானில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கிலானி மேலும் கூறியதாவது : நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா.பொதுசபை கூட்டத்தில் பங்கேற்கும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், வெளியுறவுச் செயலர் ஆகிய இருவரும் இந்திய வெளியுறவு அமைச்சர், வெளியுறவுச் செயலர் ஆகியோரை செப்டம்பர் 26,27 தேதிகளில் சந்தித்துப் பேச உள்ளனர். இச்சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்னை, நதிநீர்ப் பங்கீடு உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணாதவரை அங்கு அமைதி நிலவுவது மிகவும் கடினம் என்றார் கிலானி. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை கடந்த ஜூலை மாதம் எகிப்து நாட்டில் நான் சந்தித்துப் பேசியபோது நியூயார்க்கில், பாகிஸ்தான்-இந்தியா சந்திப்புக்கு இசைவு தெரிவித்து முக்கிய பிரச்னைகள் குறித்துப் பேச்சு நடத்த ஒத்துக்கொண்டார் என்று கிலானி மேலும் தெரிவித்தார். தீவிரவாதம் குறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்துப் பேசுகையில் தீவிரவாதத்திற்கெதிராக பாகிஸ்தான் போராடி வருவதை உலக மக்கள் நன்கு அறிவர். தீவிரவாதிகள், பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் தங்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி வருகின்றனர் என்றார் கிலானி.